உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர் - தொழில்நுட்ப அதிசயம்

புதிய தொழில்நுட்பத்தால் நடப்பது சாத்தியமான மைக்கேல் ரோக்கட்டி
படக்குறிப்பு, புதிய தொழில்நுட்பத்தால் நடப்பது சாத்தியமான மைக்கேல் ரோக்கட்டி
    • எழுதியவர், பல்லப் கோஷ்
    • பதவி, அறிவியல் நிருபர், லாசனே

தண்டுவடத்தின் இடையே வெட்டுப்பட்டு துண்டாகிப் போனதால் பாதிக்கப்பட்டு, செயலற்றுப் போன ஒருவர், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டு, உடலுக்குள் உட்பொருத்தப்பட்ட கருவியால் மீண்டும் நடப்பது சாத்தியமாகியுள்ளது.

வெட்டுப்பட்ட முதுகுத்தண்டால் செயலற்றுப்போன ஒருவர் மீண்டும் நடப்பது இதுவே முதல்முறை.

இதே மாதிரி பாதிக்கப்பட்ட மற்றொரு நபருக்கு, இத்தொழில்நுட்பம் மூலம், அவர் தந்தையாகும் அளவுக்கு அவரது உடல்நலம் மேம்பட்டது.

'நேச்சர் மெடிசின்' இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன் நடந்த மோட்டார் வாகன விபத்தில் மைக்கேல் ரோக்கட்டி செயலற்று முடங்கினார். அவரது முதுகுத்தண்டு முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால், அவருடைய கால்களில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது.

ஆனால், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட மின்னணு கருவியால், அவர் இப்போது நடக்க முடியும்.

முதுகுத்தண்டில் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டோரால், முன்பு இப்படி நடக்க முடியாது.

இந்த தொழில்நுட்பம் முதுகுத்தண்டு பாதிப்புக்கு முழுமையான தீர்வு அல்ல எனவும், இதனை தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவது மிகவும் சிக்கலானது எனவும் கூறும் ஆய்வாளர்கள், எனினும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக இது பாராட்டப்படுகிறது என்கின்றனர்.

இந்த கருவி உருவாக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில் நான் மைக்கேலை சந்தித்தேன். இந்த தொழில்நுட்பம் "எனக்கு பரிசு" என அவர் என்னிடம் தெரிவித்தார்.

"என்னால் எழுந்து, நான் எங்கு செல்ல விரும்புகிறேனோ அங்கு என்னால் நடக்க முடியும், என்னால் படிகளில் ஏற முடியும், இது கிட்டத்தட்ட வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பியது போன்றது" என்றார்.

மைக்கேல் குணமடைந்ததற்கு இந்த தொழில்நுட்பம் மட்டுமே காரணம் அல்ல. இளம் இத்தாலியரான அவரிடம் ஓர் உறுதி இருந்தது. தனக்கு விபத்து ஏற்பட்டதிலிருந்து தன்னால் முடிந்தவரை முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக அவர் என்னிடம் கூறினார்.

"உடற்பயிற்சிக் கூடத்தில் நான் பாக்ஸ், ஓட்டம், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வேன். ஆனால், விபத்து நிகழ்ந்ததற்கு பின், நான் விரும்பியவற்றை என்னால் செய்ய முடியவில்லை. ஆனால், நான் என் மனநிலையை குறைக்க விடவில்லை. நான் என் மறுவாழ்வை நிறுத்த விரும்பவில்லை. இந்த பிரச்னையை நான் தீர்க்க விரும்பினேன்" என்றார்.

இக்கருவியை உட்பொருத்தி, தனிப்பட்ட நரம்பு இழைகளில் திறமையாக மின்முனைகளை இணைத்த, எல்.என்.டி.எம் எனப்படும் நரம்பியல் சிகிச்சைகள் மற்றும் நியூரோமோடுலேஷன் ஆய்வகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ஜோஸ்லின் ப்ளாச்சை, மைக்கேலின் குணமடையும் வேகம் வியப்பளித்தது.

"நான் மிகவும் வியப்படைந்தேன்" என அவர் என்னிடம் தெரிவித்தார். "மைக்கேல் முழுவதும் நம்ப முடியாதவராக உள்ளார். அவர் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பாக முன்னேற வேண்டும்" என்றார்.

ஷெப்பீல்டில் உள்ள நார்தர்ன் பொது மருத்துவமனையின் ஆலோசகரான டாக்டர் ராம் ஹரிஹரன் இந்த ஆய்வுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

""[முழுமையாக முதுகுத் தண்டு துண்டிக்கப்பட்ட நோயாளிக்கு] கருவியை உட்பொருத்தி, தசை அசைவுகள் மற்றும் சமநிலையை மேம்படுத்தி, நிற்கவும் நடக்கவும் போதுமானதாக இருக்கும் எந்த ஆய்வையும் நான் கேள்விப்பட்டதில்லை" என்றார் அவர்.

ஆனால், இது ஒரு பயனுள்ள சிகிச்சை என்று அவர் நம்புவதற்கு முன் மேலும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

" இது முதலில் பாதுகாப்பானது மற்றும் அது அவர்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்துகிறது என்பதைக் காட்ட அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் தேவை. அப்போதுதான் அதை முன்னெடுத்துச் செல்ல முடியும்." என்றார்.

முதுகெலும்பில் உள்ள நரம்புகள் மூளையில் இருந்து கால்களுக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன. காயத்தால் நரம்புகள் சேதமடையும் போது சிலர் செயலிழக்கிறார்கள்.

மைக்கேலின் விஷயத்தில், முதுகுத் தண்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், அவரது கால்களுக்கு எந்த சமிக்ஞையும் இல்லை. ஆனால் உட்பொருத்தப்பட்ட கருவி அவரது கால்களுக்கு நேரடியாக சிக்னல்களை அனுப்புகிறது, இது அவர் நடக்க உதவுகிறது, ஆனால், இது அக்கருவி இயக்கத்தில் இருக்கும்போது மட்டுமே நடக்கும்.

இதுவரை ஒன்பது பேர் இதனால் மீண்டும் நடக்கக்கூடிய திறனை பெற்றுள்ளனர். அவர்கள் யாரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்க உதவுவதற்கு அதைப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், இந்த நிலையில் அது மிகவும் சிக்கலானது. அதற்கு பதிலாக, தாங்கள் நடப்பதற்கு பயிற்சி செய்ய இதனை பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் தசைக்கு உடற்பயிற்சியாகவும், அவர்களின் உடல்நலனை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. அடிக்கடி சிறிது இயக்கத்தை மீட்டெடுக்கிறது.

இந்த சிகிச்சையை பெற்ற முதல் நோயாளிகளுள் டேவிட் மெஸ்ஸியும் ஒருவர். மைக்கேலைப் போலவே, அவர் வாக்கரைப் பயன்படுத்தும் போது நடக்க முடிந்தது. தனது துணை ஜானினுடன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் அளவுக்கு, டேவிட்டின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இது 2010இல் அவரது விபத்துக்குப் பிறகு சாத்தியமாகாத ஒன்று.

தன் மகளுடன் டேவிட்

அவரது மகள் சோவுக்கு தற்போது ஒரு வயதாகிறது. நான் அவர்களுடன் இருந்தபோது, அவள் தன்னுடைய சிறிய வாக்கரில் தன் அப்பாவுடன் ஓடி, அவரை அடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.

"இது மிகவும் அழகாக இருக்கிறது!" என, அவர் தந்தையின் பெருமையுடன் பிரகாசித்தார்.

"இது பெரும் வேடிக்கையாக உள்ளது. அவள் அவளுடைய வாக்கருடனும், நான் என் வாக்கருடனும் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை" என்றார்.

ஒரு குடும்பத்தில் இருப்பது டேவிட்டிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. மற்றும் இந்த சிகிச்சை அவருக்கு நுட்பமான, ஆனால் முக்கியமான வழிகளில் உதவியது.

"இது உயர் ரத்த அழுத்தத்தில் உதவுகிறது. நான் நீண்ட காலமாக அதனால் பாதிக்கப்பட்டிருந்தேன். முதலில் எனக்கு அது இருப்பதை உணரவில்லை. நான் அவ்வப்போது மிகவும் சோர்வாக இருந்தேன்.

"இந்த கருவி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று நாங்கள் கண்டுபிடித்தவுடன், 'வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்!' என்பது போன்று இருந்தது"

"இந்த சிறிய விஷயங்கள்தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன" என அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஈகோல் பாலிடெக்னிக் பெடெரேல் டி லசான் எனும் ஆய்வு மையத்தில் இந்தத் (École Polytechnique Fédérale de Lausanne) இல் தொழில்நுட்பத்தை உருவாக்கிய குழுவை வழிநடத்திய பேராசிரியர் கிரெகோயர் கோர்டைன் கூற்றுப்படி, செயலிழந்த மக்கள் நடக்க உதவும் தொழில்நுட்பத்தை வழக்கமாகப் பயன்படுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

"இது முதுகுத் தண்டு பாதிப்புக்கு மருந்தல்ல. ஆனால், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இது ஒரு முக்கியமான படியாகும். மக்களுக்கு அதிகாரம் அளிக்கப் போகிறோம். அவர்களுக்கு நிற்கும் திறனையும், சில படிகளை எடுத்து வைக்கும் திறனையும் நாங்கள் வழங்குகிறோம். இது போதாது, ஆனால், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" என்றார் .

ஒரு சிகிச்சைக்கு முதுகுத் தண்டின் மீளுருவாக்கம் தேவைப்படும், ஒருவேளை ஸ்டெம் செல் சிகிச்சைகள் மூலம், அவை இன்னும் ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இந்த தொழில்நுட்பம் தயாரானவுடன் நரம்பு மீளுருவாக்கம் சிகிச்சைகளுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் கோர்டைன் நம்புகிறார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: