சசிகலா, இளவரசி மீதான ஊழல் வழக்கு: "முன்னாள் டிஜிபியை சேர்க்காவிட்டால் நீதிமன்றம் செல்வேன்" - ஐஜி ரூபா

சசிகலா
படக்குறிப்பு, சசிகலா நடராஜன்
    • எழுதியவர், பரணிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

கர்நாடகாவின் பரப்பன அக்ரஹாரா சிறையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறை விதிகளை மீறி வசதிகளை பெற அங்குள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் ஆஜராகி முறையிடுவேன் என்று கர்நாடகாவைச் சேர்ந்த ஐபிஎஸ் உயரதிகாரி ரூபா மோட்கில் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க தாம் இவ்வாறு செய்ய உள்ளதாக பிபிசி தமிழ் உடனான பிரத்யேக உரையாடலில் அவர் தெரிவித்தார்.

ரூபா சிறைத்துறை டிஐஜி-ஆக பதவி வகித்தபோது சசிகலா உள்ளிட்ட கைதிகளுக்கு விதிகளை மீறி வசதிகளை செய்து கொடுக்க கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு உதவியதாக அப்போதைய சிறைத்துறை டிஜிபி மீது புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சிறைத்துறை அதிகாரிகள் உள்பட ஆறு பேருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா, வழக்கு தொடர்பான சில முக்கிய தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விவரம்:

"சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், உதவி கண்காணிப்பாளர் அனிதா மற்றும் இரு அலுவலர்களுக்கு எதிராக மட்டுமின்றி, அவர்களுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின்பேரில் சசிகலா, இளவரசி மற்றும் ஓர் அரசியல் பிரமுகர் ஆகியோரது பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்."

டிஜிபி பெயரை தவிர்த்த லஞ்ச ஒழிப்புத்துறை

ரூபா மோட்கில்
படக்குறிப்பு, ரூபா மோட்கில்

"ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால், லஞ்சம் வாங்கியவர் மட்டுமின்றி அவருக்கு இணையாக லஞ்சம் கொடுத்தவர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களாக நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், சிறையில் பலனை அடைந்ததாக என்னால் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் இயல்பாகவே இந்த வழக்கில் முதலாவது மற்றும் இரண்டாவது குற்றம்சாட்டப்பட்ட நபர்களாக சேர்க்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன்," என்று ரூபா கூறினார்.

அவர் குறிப்பிட்ட அந்த விவகாரத்தில் 2017இல் சிறைத்துறை தலைமை இயக்குநராக இருந்த டிஜிபி ஹெச்.என்.ஆர் என்ற ஹெச். சத்யநாராயண ராவ் மீதும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை.

இது குறித்து ரூபாவிடம் கேட்டபோது, "அதற்கான காரணம் எனக்கு முழுமையாக தெரியவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அவர் ஐபிஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் ஐபிஎஸ் பணியில் இருந்தபோது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்பதால் அவர் மீதான நடவடிக்கைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை முறையான அனுமதி கேட்டுள்ளதாகவும் அந்த அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்றும் அறிகிறேன்," என்கிறார் ரூபா.

"வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் சிறைத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட இளநிலை அதிகாரிகள் மீதான சட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கும் துறை வேறு. ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் வழங்கும் துறை வேறு," என்று அவர் கூறினார்.

"அந்த வகையில், முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஹெச். சத்யநாராயண ராவ் மீதான நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதில் சில தாமதம் ஏற்பட்டிருக்கலாம்," என்று ரூபா தெரிவித்தார்.

டிஜிபி மீது புகார் கொடுத்த டிஐஜி

ரூபா மோட்கில்
படக்குறிப்பு, ஹெச். சத்யநாராயண ராவ், முன்னாள் டிஜிபி

சத்யநாராயண ராவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறாவிட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டோம்.

"இந்த வழக்கின் நலன் கருதியும் நீதியை காக்கவும் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரைவில் அனுமதி வழங்குமாறு கர்நாடக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ஆக நான் பதவி வகித்தபோது கைதிகளுக்கு விதிகளை மீறி வசதிகளை செய்து கொடுக்க கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு உதவியதாக அப்போதைய சிறைத்துறை டிஜிபி அந்தஸ்தில் இருந்த சத்யநாராயண ராவ் மீது புகார் மற்றும் அறிக்கையை அளித்திருந்தேன்.

உண்மையை வெளிக்கொண்டு வந்ததால் எனக்கு எதிராக அவர் சிவில் அவதூறு வழக்கையும், குற்றவியல் அவதூறு வழக்கையும் தொடுத்தார். அதன் மூலம் எனக்கு அவர் தொல்லை கொடுக்க முயன்றார். எனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என அறிந்தபோதும் அந்த ஆபத்தை பொருட்படுத்தாமல் நான் கடமையை செய்தேன்.

இத்தகைய சூழலில் குற்றம் செய்தவர்கள் தொல்லை கொடுக்க முயல்வார்களேயானால், உண்மையை வெளிக்கொண்டு வந்த நான் ஏன் அமைதி காக்க வேண்டும். அதனால்தான் இப்போது உங்களிடம் இந்த விஷயத்தை வெளிப்படுத்துகிறேன்," என்றார் ரூபா.

சசிகலா இளவரசி

பட மூலாதாரம், UNCONFIRMED SOURCE

சசிகலா, இளவரசி தொடர்புடைய சிறை வசதிகள் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் விசாரணை செய்தாரே என கேட்டதற்கு, "இந்த வழக்கில் நான் அளித்த அறிக்கை மற்றும் ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் ஆகியோர் அளித்த அறிக்கைகள் அடிப்படையிலேயே கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் நான் 2017ஆம் ஆண்டு ஜூலை 1, 15 ஆகிய இரு தேதிகளில் இரண்டு அறிக்கைகளை அளித்திருந்தேன்.

அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யும் முன்பாகவே நான் அத்துறைக்கு எழுதிய கடிதத்தில், எனது அறிக்கையை வழக்கில் நான் தெரிவிக்கும் வாக்குமூலமாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். அதை அத்துறை கவனத்தில் கொண்டுள்ளது. அதனால் இதுவரை என்னை அவர்கள் நேரில் விசாரணைக்கு அழைக்கவில்லை.

அந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் எனக்கு அலுவல்பூர்வமாக இன்னும் கிடைக்கவில்லை," என்றார் ரூபா.

மேலும் அவர், "தற்போதைக்கு சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் பிறரின் பெயர்கள் உரிய அனுமதி பெறப்பட்டு குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அவர்கள் லஞ்சம் வாங்கியதற்கான முகாந்திரத்தை விசாரணை அமைப்பான லஞ்ச ஒழிப்புத்துறை கண்டிருப்பதாகவே அர்த்தம்.

அதிகாரம் செலுத்தியதாக சசிகலா மீது குற்றச்சாட்டு

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

அதுவும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தி மற்றும் அதிகாரத்தை தன் வசம் வைத்திருந்த சசிகலா சிறையில் இருந்தாலும், வெளியில் இருப்பவர்களை வழிநடத்திக் கொண்டிருந்த கட்டத்தில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த வகையில், சிறைத்துறையில் வெறும் இளநிலை பதவியில் இருந்தவர்களால் மட்டும் சசிகலா, இளவரசிக்கு சிறைக்குள் வசதிகளையோ சலுகைகளையோ செய்து கொடுத்திருக்க முடியாது. நிச்சயமாக அவர்களுக்கு சிறைத்துறை டிஜிபி உதவியிருக்கிறார் என்றுதான் எனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த விஷயத்தில் சத்யநாராயண ராவின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படாமல் போனால், நிச்சயமாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது நான் முறையிட்டு எனது கடமையை நிறைவேற்றுவேன். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க கடைசி வரை போராடுவேன் என்கிறார் ரூபா மோட்கில்.

இந்த விவகாரத்தில் ரூபா மோட்கில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை ஆரம்பம் முதலே முன்னாள் டிஜிபி சத்யநாராயண ராவ் மறுத்து வருகிறார்.

சிறைக்கு சென்ற மறுவருடமே புது வழக்கு

சசிகலா வழக்கு ரூபா மோட்கில்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா, உறவினர்கள் வி.என். சுதாகாரன், இளவரசி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி உறுதிப்படுத்தியது.

இந்த வழக்கில் ஜெயலலிதா உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் முன்பே இறந்து விட்டார். இதையடுத்து தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட மற்ற மூவரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தபிறகு 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். வி.என். சுதாகரன் பின்னர் விடுதலையானார்.

முன்னதாக, சசிகலா, இளவரசி சிறையில் இருந்தபோது, விதிகளை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தேவைக்கு அதிகமான சலுகைகள் மற்றும் வசதிகளை பெற்றதாக சிறைத்துறையில் துணைத் தலைவர் (டிஐஜி) ஆக இருந்த ரூபா மோட்கில் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி கண்டுபிடித்தார்.

காணொளிக் குறிப்பு, சிறையில் சாதாரண உடையில் சசிகலா நடமாடுகிறாரா?

இந்த தகவல் வெளிவரும் முன்பு சசிகலா, இளவரசி சிறைக்கு வெளியே சாதாரண உடையில் வெளியே சென்று விட்டு மீண்டும் சிறைக்கு உள்ளே இயல்பாக நுழைவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்தது.

அந்த காணொளியின் உண்மைத்தன்மை, அதை வெளியிட்டது யார் போன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், சிறைத்துறையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது இந்த உண்மை தனக்கு தெரிய வந்ததாகவும் தமது சோதனை நடவடிக்கைக்கு சிறைத்துறையின் கீழ் பணியாற்றிய பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் ரூபா மோட்கில் புகார் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சிறைத்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஆக இருந்த ஹெச். சத்யநாராயண ராவ் மீதும் அவர் எழுத்துபூர்வ புகார் அளித்திருந்தார்.

கர்நாடகா சிறைத்துறை

பட மூலாதாரம், BENGALURU PRISON DEPT

முதலாவது புகாரை சத்யநாராயண ராவிடமே அளித்த ரூபா, அதன் நகலை காவல்துறை தலைமை இயக்குநர், அரசின் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பி வைத்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதையடுத்து சிறைத்துறையில் இருந்து போக்குவரத்துப் பிரிவுக்கும் பிறகு உள்துறைக்கும் ரூபா மோட்கில் மாற்றப்பட்டார்.

இதேவேளை அவர் அளித்த அறிக்கை உயிர்ப்புடன் இருந்தது. அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் ஒரு குழுமை கர்நாடகா அரசு நியமித்தது. அந்த குழு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை அரசுக்கு அளித்திருந்தது.

இந்த நிலையில், ரூபா மோட்கில் மற்றும் வினய் குமார் அளித்த 295 பக்க அறிக்கை அடிப்படையில் சிறைத்துறையினர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தனியாக வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதற்கிடையே, ஹெச்.சத்யநாராயண ராவ் காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

எப்படி வெளிவந்தது இந்த வழக்கு?

சசிகலா வழக்கு ரூபா மோட்கில்

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகள் தாமதமாக இருப்பதாக சென்னையில் வசித்து வரும் கல்வியாளரும் சமூக சேவகியுமான ஜி.எல். கீதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தோழியாக இருந்தார்.

அவரது சார்பில், "சசிகலா, இளவரசி தொடர்புடைய வழக்கு 2018இல் பதிவு செய்யப்பட்டபோதும் விசாரணை தாமதமாக நடக்கிறது. சம்பந்தப்பட்ட துறைக்கு வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிடுங்கள்," என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், இந்த வழக்கை இரண்டு மாதங்களில் விசாரித்து நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

அனுமதி பெறுவதில் தாமதம்

கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை

இருப்பினும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அரசு ஊழியர்களாக இருப்பதால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பாக துறை ரீதியிலான அனுமதியை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் கூறியது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கை மீது முடிவெடுக்காமல் மாநில அரசு தாமதம் செய்வதாக நீதிமன்றம் கவலை வெளியிட்டது.

இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக இந்த வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அதன் தலைமை நீதிபதி ரீது ராஜ் அவஸ்தி, நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.என். மன்மோகன், இந்த வழக்கில் சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார், உதவி கண்காணிப்பாளர் ஆர். அனிதா, பி. சுரேஷ், கஜராஜ மகநூரு, சசிகலா, இளவரசி ஆகியோ ஆறு பேருக்கு எதிராக கடந்த ஜனவரி 7ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 465, 468, 471, 120B மற்றும் 109 பிரிவுகளின்படியும் ஊழஸ் தடுப்புச் சட்டம் 13(1)(c) and 13(2) ஆகிய பிரிவுகளின்படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா, மீண்டும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பேன் என்று கூறியிருப்பதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி ரூபா மோட்கில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஜி ஆக பதவி உயர்வு பெற்ற நிலையில், தற்போது அவரை கைவினை பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக போலீஸ் அல்லாத பணியில் நியமித்திருக்கிறது கர்நாடக அரசு.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: