வி.கே. சசிகலா பேட்டி: "அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்"

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

அடக்குமுறைக்கு தான் அடிபணியப் போவதில்லையென்றும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும் பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் வி.கே. சசிகலா தெரிவித்திருக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவின் தண்டனைக் காலம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், சில நாட்கள் கர்நாடக மாநிலத்திலேயே தங்கி சிகிச்சை பெற்றார்.

அதற்குப் பிறகு திங்கட்கிழமை காலையில் பெங்களூருக்கு அருகே உள்ள தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்டார் சசிகலா. வழிநெடுக அவரது ஆதரவாளர்களும் அ.ம.மு.க. தொண்டர்களும் அவருக்கு வரவேற்பளித்தனர்.

இந்த நிலையில், வாணியம்பாடி அருகில் வாகனத்தை நிறுத்திப் பேசிய சசிகலா, "அடக்கு முறைக்கு நான் அடிபணியப் போவதில்லை," என தெரிவித்தார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

"அன்புக்கு நான் அடிமை, தமிழக மக்களுக்கு நான் அடிமை. ஆனால், அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்" என்று சசிகலா பேசினார்.

இதற்குப் பிறகு, தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, "நிச்சயமாக" என்று அவர் பதிலளித்தார். அ.தி.மு.க அலுவலகத்திற்கு செல்வீர்களா என்று கேட்டபோது, 'பொறுத்திருந்து பாருங்கள்" என்றார் சசிகலா.

ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இதெல்லாம் எதைக் காட்டுகிறது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று தெரிவித்த சசிகலாவிடம், "அதிமுக கட்சியைக் கைப்பற்றுவீர்களா?" எனக் கேட்கப்பட்டது. அதற்கு, "விரைவில் எல்லோரையும் சந்திப்பேன். அப்போது விரிவாக பேசுகிறேன்" என்று பதிலளித்தார்.

பெங்களூரு முதல் சென்னை வரை சசிகலாவுக்கு 56 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், அவர் மெதுவாகவே பயணம் செய்து சென்னைக்கு இரவில் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"பொது எதிரிக்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டும்"

முன்னதாக, சசிகலா பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அவரது அடுத்த கட்ட நகர்வுக்கான திட்டமிடல் பற்றிய தகவல்கள் குறிப்பால் உணர்த்தப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

"என் உடல் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.தெய்வ அருளாலும், மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆசியாலும், நான் இந்த கொரோனாவிலிருந்து மிண்டு வந்திருக்கிறேன்உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடக அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்புரட்சித்தலைவி அம்மா சொன்னதுபோல், எனக்குப்பின்னாலும் இந்த அ.இ.அ.தி.மு.க இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தழைத்தோங்கி இருக்கும் என்ற அந்த நல்ல எண்ணத்தை தொடர என் வாழ்நாள் முழுவதும் கழகமே குடும்பம், குடும்பமே கழகமாக எஞ்சியிருக்கும் என் வாழ்நாளை கழக முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்பேன் அது இதய தெய்வம் புரட்சித்தலைவியின் பிள்ளைகள், என்றும் எனக்கும் பிள்ளைகள் தான்.கழகம் எத்தனையோ முறை சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவையாகக் கழகம் மீண்டெழுந்திருக்கிறது.அதேபோல், புரட்சித்தலைவரின் பொன்மொழிக்கேற்ப, புரட்சித்தலைவியின் வழிவந்த ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் ஒற்றுமையாக ஒரு அணியில் நின்று நமது பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம், என்னுடைய குறிக்கோள்.நம்முடைய அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பது நம் புரட்சித் தலைவியின் எண்ணம். அதைக் காப்பது நமது கடமை.

நம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் கட்டிக்காத்து நம் புரட்சித்தலைவியின் வழியில் வெற்றிநடையுடன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்புவெறுப்புகளால் சிதைந்துவிடக்கூடாது என்று உங்களுக்கெல்லாம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.என் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை அ.இ.அ.தி.மு.க என்னும் இந்த மாபெரும் இயக்கம் வளர ஏழை மக்களின் மனதில் என்றும் குடிகொண்டிருக்கும்.இந்த இயக்கம் வாழையடி வாழையாகத் தழைத்தோங்க என் இறுதி மூச்சு உள்ள வரை இந்த இயக்கத்திற்காக என்றும் உழைத்திருப்பேன்அம்மாவின் அன்புத்தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து, வரும் தேர்தலில் வெற்றிக்கனியை நமது புரட்சித்தலைவி அம்மாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க உறுதியேற்க வேண்டும் எத்தனை சோதனைகள் வந்தாலும், அதை புரட்சித்தலைவியின் ஆசிகொண்டு வெற்றி பெறுவோம்.புரட்சித்தலைவரின் பொன்மொழிகளுக்கேற்ப அன்புக்கு நான் அடிமை தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை கொண்ட கொள்கைக்கு நான் அடிமை தமிழக மக்களுக்கும், என் தொண்டர்களுக்கும் நான் அடிமை ஆனால் அடக்குமுறைகளுக்கு அஞ்ச மாட்டேன்,புரட்சித்தலைவர் நாமம் வாழ்க.. புரட்சித்தலைவி நாமம் வாழ்க வாழ்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வளர்க தமிழகம்! என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து 8 பேர் நீக்கம்

இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக துணைச் செயலாளர் டி. தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்பங்கி, ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் பி. சந்திரசேகர ரெட்டி, கழக மாவட்ட பிரதிநிதி ஜானகி ரவீந்திர ரெட்டி, கொம்மேபள்ளி ஊராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் ஆர். பிரசாந்தகுமார், ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை தலைவர் ஏ.வி. நாகராஜ், சிங்கிரிப்பள்ளி, சூளகிரி மேற்கு ஒன்றியத்தின் அதிமுக உறுப்பினர் வி. ஆனந்த் ஆகியோர், கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாகக் கூறி அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 8 பேரும் சசிகலாவை வரவேற்கச் சென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: