தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன? அதிமுகவில் என்ன நடக்கும்?

சசிகலா

பட மூலாதாரம், Twiter

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய சசிகலா, அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அந்த திட்டங்களில் ஒன்றுதான், தமிழகம் முழுவதும் சசிகலாவின் சுற்றுப்பயணம்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலையானார். அதற்கு முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படவே, பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜனவரி 31 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை காரணமாக தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன் காரணமாக, பெங்களூரு புறநகர்ப் பகுதியான தேவனஹள்ளி அருகே உள்ள கோடாகுருக்கி என்ற பண்ணை வீட்டில் ஓய்வெடுத்தார். இந்த ஒரு வாரமும் மருத்துவ குழுவினர் சசிகலா உடல்நிலையை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், அ.தி.மு.க கொடி கட்டிய காரில் இன்று தமிழகம் திரும்பியுள்ளார் சசிகலா. அ.தி.மு.க கொடி கட்டிய காரில் அவர் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

`அ.தி.மு.க உறுப்பினரின் காரை பயன்படுத்துவதால் கொடி கட்டியதில் தவறு இல்லை' என அ.ம.மு.கவினர் விளக்கம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், ஓசூரை நெருங்கியதும் வேறு காரில் சசிகலா பயணிக்கத் தொடங்கினார். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வருகை, பட்டாசு, மேளதாளங்கள் என சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பின்னர், சசிகலாவின் அண்ணன் மகளான கிருஷ்ண ப்ரியாவின் தியாகராய நகர் வீட்டில் சசிகலா தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பழிபோட நடக்கும் சதி?

முன்னதாக, `வி.கே.சசிகலா வருகையால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்' என தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் காவல்துறைத் தலைவர் ஜே.கே.திரிபாதியிடம் மனு கொடுத்திருந்தனர். இதுகுறித்து ட்விட்டர் பதிவிட்ட அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன், `அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும் டி.ஜி.பி-யிடம் மீண்டும் மீண்டும் தரும் பொய்ப் புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ``வி.கே.சசிகலா வருகையால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது?" என அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் காசிநாத பாரதியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். ``அமைச்சர்களிடம் உள்ள பதற்றமே, சசிகலா வருகையால் ஏற்படப் போகும் மாற்றத்தைத் தெரிவிக்கிறது. அ.தி.மு.க-வின் 40 சதவிகிதத் தொண்டர்கள் சசிகலா பக்கம் உள்ளனர். நாங்கள் விசாரித்த வரையில் பல மாவட்டங்களில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரிடம் நேரடியாகவே, சசிகலாவை சந்திக்கப் போவதாகக் கூறி விட்டனர். உதாரணமாக, நாகை மாவட்டத்தில் மாவட்டப் பிரதிநிதியாக இருக்கும் நிர்வாகி ஒருவர், அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் சென்று `நான் சின்னம்மா பக்கம் போகப் போகிறேன்' என கூறிவிட்டார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

சசிகலா நிலையான தலைமையா?

அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்களும், ` சின்னம்மா இருக்கும் இடம்தான் நிலையான தலைமையாக இருக்கும். அமைச்சர்கள் அதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்' எனப் பேசி வருகின்றனர். ஒரு சட்ட அமைச்சராக இருக்கக் கூடியவர், சசிகலா வருகையையொட்டி காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் வரவழைத்துப் புகார் கொடுக்காமல், நேரடியாகச் சென்று புகார் மனு கொடுத்தது ஏன்? அரசியலமைப்புச் சட்டரீதியாக தனக்குள்ள அதிகாரம் என்னவென்றுகூட சட்ட அமைச்சருக்குத் தெரியவில்லை. அரசமைப்புப் பதவிக்கான விழுமியங்கள் என்னவென்று அறியாதவர்கள்தான் அமைச்சர்களாக உள்ளனர்" என்றவர், தொடர்ந்து பேசினார்.

``சட்டவிதிகளின்படி சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் உரிமை உள்ளது. சிவில் வழக்கு 857/2018-ன்படி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில், `அ.தி.மு.க கணக்கு வழக்குகளை சசிகலா சரிபார்க்கலாம்' என்றொரு இடைக்கால உத்தரவு உள்ளது. அவருக்கு உரிமை இல்லையென்றால் ஏன் இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்? கழகத்தின் பொதுச் செயலாளர் சிறைக்குச் சென்றபிறகு பொதுக்குழுவைக் கூட்டக் கூடிய அதிகாரம் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரனுக்கு மட்டுமே உள்ளது. தற்காலிக ஏற்பாடாகத்தான் அ.ம.மு.க தொடங்கப்பட்டது. விரைவில் சசிகலா பக்கம் அ.தி.மு.க தொண்டர்கள் வருவார்கள் " என்றார்.

சசிகலா

பட மூலாதாரம், Twitter

2 அழுத்தங்கள்?

``சசிகலாவின் அடுத்தகட்டம் திட்டம் என்ன?" என்று அவரிடம் கேட்டோம்.

``மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் முடிவில் சசிகலா இருக்கிறார். இந்தப் பயணத்தின்போது தொண்டர்களைச் சந்திப்பார். மக்களிடம் நியாயம் கேட்கும் வகையில் அவருடைய இந்தப் பயணம் அமையும். அம்மா உருவாக்கிக் கொடுத்த அ.தி.மு.க-வை நல்லபடியாக வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே சசிகலாவுக்கு உள்ளது. அவருக்கு அரசியல் ரீதியாக இரண்டு முறை அழுத்தம் வந்தபோதும் அம்மாவுக்கு துணையாக இருந்தார். 96-ல் தி.மு.க அரசு, `அப்ரூவராக மாறிவிடுங்கள், ஜெயலலிதாவை மட்டும் உள்ளே அனுப்பிவிடுகிறோம்' என அழுத்தம் கொடுத்தபோது, `எந்த சூழலிலும் அக்காவுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்' என உறுதியாக இருந்ததால்தானே 4 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது?

இரண்டாவது, ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு 11 எம்.எல்.ஏ-க்களைப் பிரித்துக் கொண்டு போனபோது சசிகலா அமைதியாக இருந்திருந்தால் இந்த ஆட்சி கலைந்திருக்கும். 11 பேரோடு இன்னும் ஒரு 10 பேர் சென்றிருந்தால்கூட ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், ஆட்சியை உறுதி செய்துவிட்டுத்தான் சிறைக்குச் சென்றார். அடிமையாகப் பதவியில் அமர்கிறவர்களை எதிர்த்து நிற்பது அகில இந்திய அரசியலில் பலமுறை நடந்துள்ளது. அடுத்ததாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் சசிகலா தயாராகி வருகிறார். நான்கு ஆண்டு சிறைவாசம் அதற்கு இடையூறாக இருக்காது. இதற்கு உதாரணமாக, பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. அ.தி.மு.கவை அடமானம் வைத்துவிட்டு பினாமி கட்சியாக செயல்படுவதை மீட்டெடுப்பதுதான் சசிகலாவின் நோக்கம்" என்கிறார் அவர்.

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

சசிகலா தரப்பின் பலவீனம்!

அதேநேரம், ``சசிகலா வருகையால் எந்த மாற்றமும் ஏற்படாது. கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி அதன்மூலம் சிலர் தடுமாற்றம் அடைவார்கள் என இவர்கள் நம்புகிறார்கள்" என பிபிசி தமிழிடம் விவரிக்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார். தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ``எப்படியாவது அ.தி.மு.கவைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் சசிகலா தரப்பினர் உள்ளனர். எந்தப் பதவியும் இல்லாமல் சஞ்சலத்தில் உள்ள சிலர், அந்தப் பக்கம் போனால் பதவி கிடைக்கும் என நம்புகின்றனர். ஆனால், என்ன முயற்சியை எடுத்தாலும் கட்சியின் அமைப்பில் மாற்றம் வருவதற்கு உடனடியாக வாய்ப்பில்லை" என்றவரிடம், ``டிஜிபியிடம் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மனு கொடுத்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?" என்றோம்.

`` காவல்துறை தலைமை இயக்குநரை, ஒரு கட்சியின் பிரச்னைக்காக நேரடியாக அழைத்துப் பேசினால் அது சட்டப்படி தவறானது? அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று அர்த்தம். தன்னுடைய கட்சிக்காக ஒரு கோரிக்கையை வைக்கும்போது டிஜிபியை எப்படி நேரில் அழைத்துப் பேச முடியும்? தொண்டர்களின் உணர்வுகளைத்தான் அவர் கோரிக்கையாக முன்வைத்தார். இதில் தவறு இல்லை. சொல்லப் போனால் சசிகலா தரப்பினர் தங்களுடைய பலவீனத்தை மறைப்பதற்கான வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்கள் நினைத்தது எதுவும் கைகூடவில்லை. தினகரனை நம்பி சசிகலா இந்தக் கட்சியைக் கொடுத்துவிட்டுப் போனார். அந்த தினகரனே இந்தக் கட்சி வேண்டாம் என வேறு கட்சியைத் தொடங்கிவிட்டார்.

தினகரனே தோற்றுப் போன உத்தி!

அப்படியிருக்கும்போது யாரை வைத்து இந்தக் கட்சியைக் கைப்பற்ற முடியும். கட்சியில் இருந்து வெளியேறிவர்களை வைத்து இந்த கட்சியை கைப்பற்ற முடியுமா என்ன? அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்துவது தேர்தல் ஆணையம்தான். நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தை மீறி எதுவும் செய்வதற்கு வாய்ப்பில்லை. சசிகலா இன்று மேற்கொள்ளும் முயற்சிகளை எல்லாம் தினகரன் ஏற்கெனவே பரீட்சித்துப் பார்த்து தோல்வியைத் தழுவினார் என்பதுதான் உண்மை" என்கிறார் இயல்பாக.

`` சசிகலா வருகையால் அ.தி.மு.கவில் சலசலப்பு ஏற்படும் என்பது உண்மை. அதன்மூலமாக அவர்கள் கட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள் என்பது நடக்கக் கூடிய விஷயமல்ல" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.

பிபிசி தமிழுக்காக தொடர்ந்து பேசிய அவர், `` அ.தி.மு.க தற்போது அதிகாரத்தில் உள்ளது. அதை அனுபவித்தவர்கள் அதனை விட்டு வெளியே வர மாட்டார்கள். அ.தி.மு.கவில் பிளவுபட்டுள்ளது போன்ற சூழலை உருவாக்குவது தேர்தல் நேரத்தில் அ.தி.மு.கவுக்கு பாதிப்பைக் கொடுக்கும். அதேநேரம், சசிகலா போன்ற ஒரு தலைவிக்கான தேவை தற்போது தமிழகத்துக்கு இல்லை. அடுத்ததாக, தேர்தலில் பிரிந்து நின்று தோல்வியை சந்தித்தால் அ.தி.மு.கவில் `ஜெ அணி', `ஜா அணி' ஏற்பட்டதைப் போன்ற பழைய நிலைமை வரலாம். ஆனால், பெரிய விளைவை ஏற்படுத்துவார்கள் என்பதை ஏற்க முடியவில்லை" என்கிறார்.

யாருக்கு சாதகம்?

மேலும், ``சசிகலாவிடம் அமைச்சர்கள் பேசுவதாகச் சொல்வதெல்லாம் நிரூபிக்கப்படாத உண்மைகள். ஏற்கெனவே `ஸ்லீப்பர் செல்கள்' இருப்பதாகக் கூறினார்கள். அதுவும் நிரூபிக்கப்படவில்லை. அ.ம.மு.க பொதுச் செயலாளராகவும் தினகரனின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அவர் தான் போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் செலவழித்து வெற்றி பெற்றார். அவருக்காகப் பதவியை இழந்த 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர்கூட இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லை.

தினகரன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன. அதேநேரம், தஞ்சை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சசிகலாவின் சொந்த சமூக வாக்குகள், தங்களுக்குப் பலன் கொடுக்கும் என அங்குள்ள அமைச்சர்கள் சிலர் நம்புகின்றனர். அதையொட்டியே சில ஆதரவுப் பேச்சுகள் வெளிப்பட்டன. அந்த வாக்குகள் முழுமையாக அ.தி.மு.க பக்கம் வரும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. அதேநேரம், அ.தி.மு.க வாக்குகளை சசிகலா பிரிப்பதன் மூலம் தி.மு.கவுக்கு சாதகமாக முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க பெற்ற 5.5 சதவிகித வாக்குகளும் தொடருமா என்பது கேள்விக்குறிதான்" என்கிறார்.

`சசிகலா தலைமையேற்க யார் யாரெல்லாம் ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்?' என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்று கவனித்து வருகின்றனர். சசிகலா வருகைக்காக சுவரொட்டி ஒட்டியவர்களைக் கட்சியில் இருந்தே நீக்கியது போன்ற சம்பவங்கள், வரும் நாள்களில் தொடரலாம் என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: