வி.கே. சசிகலா: 'அ.தி.மு.கவை உயிர் மூச்சு உள்ளவரை காப்பாற்றுவேன்' - தமிழ்நாடு அரசியல்

எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர்செல்வம் vs சசிகலா

பட மூலாதாரம், SASIKALA NATARAJAN

ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.கவை மீண்டும் தொண்டர்களின் இயக்கமாக மாற்றுவேன் என ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் வி.கே. சசிகலா, அ.தி.மு.க. என்றைக்குமே எளிய தொண்டர்களுக்கான இயக்கம் என்று கூறியிருக்கிறார். "அ.தி.மு.க. என்றைக்குமே எளிய தொண்டர்களுக்கான இயக்கமாகச் செயல்பட்டு, நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலைக்குச் சென்றது.

ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கும்போது இதற்காகவா இருபெரும் தலைவர்களும் தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி, ஓயாது உழைத்து இயக்கத்தைக் காப்பாற்றினார்கள் என்று ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சமும் குமுறுகிறது.

இயக்கத்திற்காக எத்தனையோ தன்னலமற்றவர்கள் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பும் தியாகமும் எங்கே வீணாகிப் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

என்றைக்கு தனி மனித இயக்கம் பயன்பட்டதோ, அன்றிலிருந்து மதிப்புக் குறைந்து ஏளனப் பேச்சுகளும் சிறுமைப்படுத்துதலும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எத்தனையோ பேர் கழகம் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டுமென்று தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது. நீங்கள் அனைவரும் சோர்ந்து போகாமல் தைரியமாக இருங்கள். ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிற நமது இயக்கத்தை சரிசெய்து மீண்டும் அதை தொண்டர்களுக்கான ஓர் இயக்கமாகவும் நம் தலைவர்கள் வகுத்த சட்டதிட்டங்களை அவர்கள் முன்னெடுத்துச் சென்ற அதே பாதையில் இயக்கத்தைக் கொண்டு செல்வோம்.

இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ்

பட மூலாதாரம், Aiadmk

அரசியல் எதிரிகளின் கனவுகளைத் தகர்த்து அவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக நமது இயக்கம் வெளிப்படவும் ஒவ்வொரு தொண்டனும் தான் அ.தி.மு.கவைச் சேர்ந்தவன் என பெருமையோடு சமூகத்தில் சொல்லிக்கொள்ளும் வகையில் இயக்கத்தை மாற்றிக் காட்டுவோம். அனைத்து அடிமட்ட கழகத் தொண்டர்களும் கவலையின்றி சந்தோஷமாக இருங்கள். உங்களோடு தோள்கொடுத்து உங்களுக்காக உழைக்க நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.

அண்மைக் காலத்தில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உதாசீனப்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கியவர்கள் அனைவரும் சிறிது காலம் பொறுத்திருங்கள். உங்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். விரைவில் அ.தி.மு.க. தலை நிமிரும். நிலை மாறும்.

எத்தனை இடர்பாடுகள், சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தைக் காத்து தொண்டர்களின் இயக்கமாக மாற்றும்வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன், ஓய்ந்துவிட மாட்டேன் என உறுதி கூறுகிறேன்" என்று சசிகலா குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்று நடந்து முடிந்த அ.தி.மு.கவின் செயற்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுச் செயலாளருக்கு இணையான பதவிகளைப் போல மாற்றி அ.தி.மு.கவின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில், வி.கே. சசிகலா இந்த அறிக்கையை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :