இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பதில் என்ன சிக்கல்? தமிழ்நாடு அரசாணை சொல்வது சரியா?

சிறைவாசி - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறைவாசி - கோப்புப் படம்
    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

அண்ணா பிறந்தநாளையொட்டி முன்விடுதலை செய்யப்பட உள்ள சிறைவாசிகளின் பட்டியலில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

`சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க, முன்விடுதலையின்போது முஸ்லிம் சிறைவாசிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என நம்பினோம். இந்த அரசாணை ஏமாற்றமளிக்கிறது' என்கின்றன இஸ்லாமிய அமைப்புகள்.

ஆனால், இப்படி விடுதலை செய்வதில் மதரீதியான பாகுபாடு காட்டப்படவில்லை என்கிறார் சிறைத்துறை வழக்குகளைக் கையாளும் வழக்குரைஞர்.

17 வகையான குற்றங்கள்

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, `முன் விடுதலை' என்ற சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது.

அந்த ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்து பட்டியலை தயார் செய்வதற்கான சிறப்புக் குழு ஒன்றையும் அரசு அமைத்தது.

ஒவ்வோர் ஆண்டும் தலைவர்களின் பிறந்தநாளில் முன்விடுதலை தொடர்பான பேச்சுக்கள் எழும்போதெல்லாம் கோவை சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள், ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறைப்பட்டுள்ள ஏழு பேர், வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோரது விடுதலை குறித்தும் மனித உரிமை ஆர்வலர்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்தமுறையும் இவர்கள் முன்விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் தென்படாததால், இஸ்லாமிய அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கேள்விக்குறியாக்கிய அரசாணை

ஹாஜாகனி, தமுமுக செயலாலர்

பட மூலாதாரம், Hajakani, Facebook

படக்குறிப்பு, ஹாஜாகனி, தமுமுக செயலாலர்

சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை குறித்து முதல்வரை நேரடியாக சந்தித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக, த.மு.மு.க பொதுச் செயலாளர் முனைவர் ஹாஜாகனியிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, ``நாங்கள் சிறப்பு சலுகைகள் எதையும் கேட்கவில்லை. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு பாகுபாடு இல்லாத நிலை வர வேண்டும் என நினைக்கிறோம். அதைத்தான் முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்'' என்கிறார்.

இதுதொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ` பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும், இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

`தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது `குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதையாக' அவர்கள் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு புதிய அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.

இதேபோல, `தாங்கள்தான் சிறுபான்மையினரின் காவலன்' என்று கூறி, அந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலையையும் இந்த அரசாணையின் மூலம் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் உரிய விளக்கம் அளிப்பாரா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏன்?

சிறை கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறை கோப்புப் படம்

இததொடர்பாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன்விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளேன். அப்போது, `சாதி, மத வழக்கு பேதமின்றி பத்தாண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்' என்றேன். நான் பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினும் இதனை கவனித்து வந்தார்.

ஆனால், அ.தி.மு.க அரசு என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு, 90 சதவீத சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, முன்விடுதலையின்போது கோவை சிறையில் உள்ள 38 இஸ்லாமிய சிறைவாசிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று மிகவும் எதிர்பார்த்தார்கள். அப்படியில்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை என்பது மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``தருமபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளனர். அதேபோல், மதுரையில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த லீலாவதி படுகொலை வழக்கிலும் தண்டனை பெற்றவர்கள் முன்விடுதலை பெற்றுள்ளனர். தஞ்சை கீழவெண்மணி வழக்கில் சேர்க்கப்பட்ட பத்து பேரும், பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர். இது நாட்டையே அதிரவைத்த சம்பவம்.

60 வயதைக் கடந்த சிறைவாசிகள்

சிறை கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறை கோப்புப் படம்

இந்தநிலையில்தான், அண்ணா பிறந்தநாளையொட்டி முன்விடுதலை செய்யப்பட உள்ள பட்டியலில் கோவையில் உள்ள 38 முஸ்லிம் சிறைவாசிகளையும் சேர்க்குமாறு வலியுறுத்தினோம். இவர்கள் அனைவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்துவிட்டனர். தண்டனைனை அனுபவிக்காதவர்களை விடுவியுங்கள் என நாங்கள் கூறவில்லை.

இவர்களில் பலர் 60 வயதைக் கடந்தவர்களாகவும் நோயாளிகளாகவும் உள்ளனர். சிறையில் இருந்து வந்தாலும் நல்ல உடல்நலனோடு அவர்கள் வாழ முடியாது. அவர்களது எஞ்சிய வாழ்நாளையாவது குடும்பத்துடன் செலவிட விரும்புகிறார்கள். இவர்கள் விஷயத்தில் மனிதாபிமானத்துடன் அரசு செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்'' என்கிறார்.

மேலும், ``ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் முன்விடுதலைப் பட்டியலில் இணைக்க வேண்டும். அரசியல் சாசன சட்டம் 161ஆவது பிரிவின்படி, மாநில அரசுக்கு விடுதலை செய்யக் கூடிய அதிகாரம் உள்ளது. பல்வேறு விவகாரங்களில் மாநில உரிமைகளைப் பிரதிபலிக்கக் கூடிய அரசாக இது உள்ளது. எனவே, ஜனநாயகக் கடமையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என நம்புகிறோம்'' என்கிறார்.

விடுதலை செய்வதில் என்ன சிக்கல்?

சிறை கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறை கோப்புப் படம்

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் என்ன சிக்கல்? என அரசு வழக்குரைஞரும் சிறைத்துறை வழக்குகளைக் கையாண்டு வருகிறவருமான வீ.கண்ணதாசனிடம் கேட்டோம். ``கோவை சிறையில் இருக்கும் பூரி கமல் உள்ளிட்டவர்களுக்கும் இதே விதிகள் பொருந்துகின்றன. இந்த விவகாரத்தில் மதத்தை அடிப்படையாக வைத்து எந்த முடிவையும் எடுப்பதில்லை. மத அடிப்படையிலான விஷயங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுகின்றன. `இதுபோல் தவறு செய்தால் வெளியில் வந்துவிடலாம்' என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதும் முக்கியமான காரணமாக உள்து'' என்கிறார்.

மேலும், ``இஸ்லாமிய அமைப்புகள் இதுதொடர்பாக முதலமைச்சரிடம் முறையிட்டுள்ளன. அதையொட்டி மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. அதனால் அவசரப்பட்டு அவர்கள் போராட்டம் நடத்த வேண்டியதில்லை. இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவுரைக் குழு ஒன்று உள்ளது. அந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி ஆகியோர் உள்ளனர். அவர்களின் கருத்துகளைப் பெற்றும் அரசு விடுதலை செய்யலாம். இதற்கான அதிகாரம் ஆளுநருக்கு மட்டும் இல்லை, அரசுக்கும் உள்ளது'' என்கிறார்.

பழைய அரசாணையை அப்படியே பயன்படுத்துவதாகச் சொல்கிறார்களே? என்றோம். ``ஆட்சிகள் மாறினாலும் அரசாணைகள் மாறாது. நீதிமன்றங்களும் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன. உதாரணமாக, கொலைக் குற்றம் என இருந்ததை, `ஒரு கொலைக்கு மேல் இருந்தால் விடுதலை இல்லை' என்கிறது. அதையெல்லாம் புதிதாக சேர்த்துள்ளனர். ஆந்திராவில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆட்சியில் இருந்தபோது மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஒருவரை விடுதலை செய்தனர். இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. நீதிமன்றங்களின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் கருத்துகளைப் பெறுவதன் அடிப்படையிலும்தான் அரசு முடிவெடுக்கிறது.

இதில், சிறைக் கைதிகளை விடுவிப்பதில் நன்னடத்தை அலுவலரின் கருத்து, அவர்கள் குடும்பத்தினரின் கருத்து ஆகியவற்றை கேட்கின்றனர். உதாரணமாக, சேலம் சிறையில் ஒருவர் 23 ஆண்டுகளாக இருக்கிறார். அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை ஏற்க மறுக்கின்றனர். அதனால் வெளியே செல்ல முடியாமல் இருக்கிறார். இதுதொடர்பாக கைதியிடம் பேசியபோது, ` என்னுடைய தம்பியை, என் மனைவி திருமணம் செய்துகொண்டார். நான் வெளியே வந்தால் சிக்கல் என நினைக்கின்றனர்' என்கிறார். இதுபோன்ற சம்பவங்களுக்கு சில சட்டத் திருத்தங்களும் அவசியமாக உள்ளன'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :