எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுகிறாரா? - ஜடேஜாவை சிஎஸ்கே முன்னிலைப்படுத்த காரணம் என்ன?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
"எம்.எஸ்.தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸே இல்லை" - இது அண்மையில் சிஎஸ்கே அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் உதிர்த்த வார்த்தைகள்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தனிப்பெரும் அடையாளம் எம்.எஸ்.தோனி. இதுவரை 4 ஐபிஎல், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக வீர்ர்கள் தக்கவைப்பு பட்டியலில் நிச்சயம் தோனிக்கு இடமுண்டு என அணி நிர்வாகம் ஏற்கெனவே உறுதிபடத் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த இடம் என்பதில்தான் பெரிய வியப்பை தந்திருக்கிறது சிஎஸ்கே.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய முகமான எம்.எஸ்.தோனியை பின்னுக்குத் தள்ளி ரவீந்திர ஜடேஜா முதல் வீரராக ரூ.16 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.
தோனியை 2வது வீரராக ரூ.12 கோடிக்கு தக்க வைத்திருக்கிறது சென்னை அணி. 3வது வீரராக மொயீன் அலியும் 4வது வீரராக வருங்கால நட்சத்திரமாக அறியப்படும் ருதுராஜ் கெய்க்வாட்டும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
தோனியை விட ஜடேஜாவை முன்னிலைப்படுத்தியது ஏன்?

பட மூலாதாரம், @imjadeja
தன்னை தக்கவைக்க அதிக விலை கொடுக்க வேண்டாம் என்பதே தோனியின் விருப்பம் என அண்மையில் பேசியிருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன்.தோனிக்கு இப்போது வயது 40. கடந்த 2 சீசன்களில் தோனி வெளிப்படுத்திய ஆட்டமே அவரது இயலாமையை மெல்ல வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
இக்கட்டான தருணங்களில் அணியின் வெற்றிக்கு நல்ல முடிவுகளை தோனி வழங்கியிருந்தாலும் 'பெஸ்ட் ஃபினிஷர்' எனும் பட்டத்தை தோனியால் தக்க வைக்க முடியாமல் போனதற்கு அவரது வயதும் ஓர் காரணி.
தோனி கடந்த சீசனில் எடுத்த ரன்கள் 114 மட்டுமே. அவரது சராசரி 16.28. அதிகபட்ச ரன்கள் 18.
2020 ஐபிஎல் தொடரில் தோனி விளாசிய மொத்த ரன்கள் 200. அதிகபட்சம் 47. ஐபிஎல் வரலாற்றில் கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் இந்த அளவுக்கு தடுமாறுகிறார்.
இந்த நிலையில்தான் தோனியின் பெஸ்ட் ஃபினிஷர் பட்டத்தை மெல்ல மெல்ல ஜடேஜாவும் பங்கு கொண்டாட தொடங்கினார்.
ஜடேஜா பேட்டை சுழற்றினால் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும் என்ற அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே வல்லவராக வலம் வரும் ஜடேஜாவை தோனிக்குப் பிறகு அணியின் முகமாக கருதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
அதிக விலை கொடுத்து தன்னை தக்க வைக்க வேண்டாம் என தோனி வலியுறுத்தியதாலேயே சென்னை அணி ஜடேஜாவுக்கு முதன்மை இடத்தை வழங்கியிருக்கக்கூடும்.
"தோனியே கேப்டன்"
ஜடேஜாவை முதன்மைப்படுத்தியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
"இப்போதைக்கு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிதான்," என உறுதிபட கூறினார் காசி.
"தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஜடேஜாவை முதன்மைப்படுத்தியதும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டு பிளெசிஸை (Faf du Plessis) தக்க வைக்காததும் நிர்வாகத்தின் முடிவு. அது குறித்து எதுவும் சொல்ல முடியாது".
"ஏலப்பட்டியல் வெளியானதும் எந்தெந்த வீரர்களை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்," என காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
தோனிக்குப் பிறகு ஜடேஜா கேப்டன்?

பட மூலாதாரம், @imjadeja
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வியூகம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான கிஷோர் வைத்தியநாதன், "சென்னை அணியின் அடுத்த கேப்டன் ஜடேஜாதான்" என்றார்.
"எதிர்வரும் ஐபிஎல் தொடரோடு தோனி ஓய்வுபெறுவதற்கான வாய்ப்புள்ளது. அணியின் எதிர்காலம் கருதி சிறந்த ஆல் ரவுண்டரான ஜடேஜாவை கேப்டனாக்கும் திட்டத்தில்தான் அவரை முதன்மை வீரராக சென்னை அணி தக்க வைத்துள்ளது.
டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, டுவெய்ன் பிராவோ போன்ற நட்சத்திர வீரர்களை சென்னை அணி தக்க வைக்கவில்லை. வயது மூப்பு காரணமாக ஏலத்தில் சென்னை அணிக்காக விளையாடிய வீரர்களை இதர அணிகள் வாங்குவதற்கான வாய்ப்பு குறைவுதான். அப்படி நிகழும் பட்சத்தில் சென்னை அணியே அவர்களை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுத்துக்கொள்ளும்.
அதேசமயம் விக்கெட் டேக்கிங் பவுலரான தீபக் சாஹர் உள்ளிட்ட பவுலர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்க நிச்சயம் முனைப்பு காட்டும்," என கூறுகிறார் கிஷோர் வைத்தியநாதன்.
சென்னை அணி தக்கவைத்துள்ள 4 வீரர்களுமே முதல் 6 இடங்களில் ஆடக்கூடியவர்கள். அதனால் ஏலத்தில் பவுலர்கள் தான் சென்னை அணியின் இலக்காக இருக்கக்கூடும்.
சென்னையில்தான் எனது கடைசி ஆட்டம் அமையும் என அறிவித்திருந்தார் தோனி. அவரது விருப்பத்திற்கேற்ப எதிர்வரும் தொடருடன் தனது ஓய்வு முடிவை தோனி அறிவிக்கக்கூடும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கணிப்பு.
எது எப்படி இருந்தாலும், எம்.எஸ்.தோனி எனும் தனிப்பெரும் ஆளுமையை ஈடு செய்ய இனி எத்தனை ஜடேஜாக்கள் எழுந்து வந்தாலும் அவரது இடத்தை பிடிக்க முடியாது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












