மாநாடு எடிட்டர் பிரவீன் பேட்டி: வெங்கட்பிரபு முதலில் என்னிடம் கதை சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது

மாநாடு

பட மூலாதாரம், Twitter/Suresh Kamatchi

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த வாரம் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலரது நடிப்பில் 'மாநாடு' படம் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. படத்தில் நடிகர்களுடைய நடிப்பு, இசை ஆகியவை கவனம் பெற்ற அளவிற்கு 'டைம்லூப்' என்ற களத்திற்குள் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன் செய்த எடிட்டிங் வேலையும் பரவலான கவனம் பெற்றது.

'மாநாடு' இவருக்கு 100வது படம். சிக்கலான இந்த கதையை எளிமையாக கொண்டு சேர்த்தது எப்படி, 'சென்னை-28'ல் ஆரம்பித்து 'மாநாடு' படம் வரையிலான படத்தொகுப்பு அனுபவம் என பிபிசி தமிழுடனான பேட்டியில் பேசியிருக்கிறார்.

ஒரு படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றாலே பொதுவாக அந்த படத்தின் இயக்குநர், நடிகர்கள், இசையமைப்பாளர் என இவர்கள் மீதுதான் பார்வையாளர்கள் கவனம் பெரும்பாலும் இருக்கும். அதைத்தாண்டி தற்போது வெளியாகி இருக்கும் 'மாநாடு' படத்தில் உங்களுடைய வேலையும் அதிகம் கவனம் பெற்றிருக்கிறது. இந்த வரவேற்பை எப்படி பார்க்கறீர்கள்?

"வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்திற்காக மட்டுமல்ல. இந்த படம் பட்ட கஷ்டத்திற்காகவும் சேர்த்துதான். படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியாவதற்கு முந்தின தினம் வரை நிறைய பிரச்சனைகள் இருந்தன. ஆனால், இப்போது 'அதெல்லாம் பிரச்சனைகளே இல்லை' என்ற அளவிற்கு பட்ட துயரங்கள் எல்லாமே மறக்க வைக்கும் அளவிற்கு இந்த வெற்றி அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பு என்பது பொதுவாகவே, மற்ற எதையும் விட குறைந்த அளவிற்கு பொது வெளியில் கவனம் பெற்று பாராட்டுகளை பெறும் ஒரு கலை. இன்னும் நிறைய பேருக்கு படத்தொகுப்பு என்பது என்னவென்றே தெரியாமல்கூட இருக்கும். குறிப்பாக நான் படத்தொகுப்பாளராக உள்ளே நுழையும்போது அப்போது எடிட்டர் என்றாலே 'எந்த பத்திரிக்கைக்கு?' என்ற அளவில்தான் இருந்தது. தற்போது ஒரு படத்தில் எடிட்டருடைய பணியும் மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருப்பது உண்மையில் மகிழ்ச்சியான ஒன்று. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல, அனைத்து படத்தொகுப்பாளர்களுக்கும் சேரும்".

உங்களை பற்றி சொல்லுங்கள்?

"சினிமாத்துறைக்குள் நான் மூன்றாவது தலைமுறை. என்னுடைய அப்பா, தாத்தா என இவர்கள் இயக்கம், தயாரிப்பு துறையில் இருந்தார்கள். இப்போது போல, அப்போது அவர்களுக்கு அதிக வேலை இருக்காது. ஆறு மாதம் வேலை பார்த்தால் ஆறு மாதம் வீட்டில் இருப்பார்கள். இதெல்லாம் பார்த்து விட்டுதான் இந்த துறைக்குள் வர வேண்டாம் என இருந்தேன். அதன் பிறகு டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராஃபி உள்ளிட்ட சில சேனல்களில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு வேலை செய்தேன். இப்படி போய் கொண்டிருக்கும்போது, சில பொது நண்பர்கள் மூலமாக இயக்குநர் வெங்கட்பிரபுவை சந்தித்தேன்.

பிரவீன்

பட மூலாதாரம், Facebook/Praveen KI

அப்போது தொலைக்காட்சி ஒன்றிற்காக அவர் எடுத்த பாடல் ஒன்றை நான் எடிட் செய்தேன். பிறகு அவர் தன்னுடைய படத்திற்கு எடிட் செய்து தரும்படி கேட்டார். எனக்கும் என்னுடைய வழக்கமான வேலைகளில் இருந்து ஒரு இடைவெளி தேவைப்பட்டது. அதனால், சென்னை சிங்கப்பூர் என மாறி மாறி சில காலம் படங்களில் வேலை பார்த்தேன். பிறகு, 'சரோஜா' திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிக்காக எனக்கு மாநில விருது கிடைத்தது. அதன் பிறகுதான் நமக்குள்ளும் எதோ இருக்கிறது என முடிவு செய்து சினிமாவுக்குள் முழுதாக வந்தேன்".

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை எடிட் செய்வதற்கும் திரைப்படங்களை எடிட் செய்வதற்கும் என்ன மாதிரியான வித்தியாசங்கள் இருக்கின்றன? ஆரம்பகாலத்தில் என்ன மாதிரியான சவால்களை சந்தித்தீர்கள்?

"என்னுடைய தாய்மொழி தெலுங்கு. ஆந்திராவில் இருக்கும் முன்னணி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரிந்திருந்தேன். பின்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கதை நேரம்' என்ற தொடரில் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு 21 வயது. அந்த வயதில் நமக்கு எல்லாமே தெரியும் என்றொரு ஆணவம் இருக்குமில்லையா? அதை எல்லாம் இரண்டே நாட்களில் பாலு மகேந்திரா உடைத்தார். 'உனக்கு ஒன்றும் தெரியாது' என நிரூபித்து அந்த இரண்டு வருடத்தில் அவர் கற்று கொடுத்ததுதான் இன்று வரை எனக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த சமயத்தில் இயக்குநர் வெற்றி மாறனும் நானும் அவருடன் இணைந்து பணி புரிந்தோம்"

இயக்குநர் வெங்கட்பிரபுவுடைய அனைத்து படங்களுக்குமே நீங்கள்தான் படத்தொகுப்பாளர். உங்கள் இருவருக்கும் இடையில் உள்ள நட்பு குறித்து சொல்லுங்கள்?

"இயக்குநர் வெங்கட்பிரபு என்னுடைய தொழில் ரீதியிலான நண்பர் என்பதை எல்லாம் நாங்கள் எங்களது இரண்டாவது படத்திலேயே கடந்து விட்டோம். இப்போது நாங்கள் இருவரும் சகோதரர்கள், குடும்ப நண்பர்கள் என்ற அளவில் எங்கள் உறவு இருக்கிறது. 'மாநாடு' படம் வெளியாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கூட இருவரும் கடுமையான சண்டை எல்லாம் போட்டு கொண்டோம். ஆனால், அது எல்லாம் அந்த நேரத்தில் மட்டும்தான்"

வெங்கட்பிரபு

பட மூலாதாரம், Instagram/Praveen KI

படக்குறிப்பு, 'இப்போது நாங்கள் இருவரும் சகோதரர்கள்.'

வெங்கட்பிரபுவின் மற்ற படங்களை விடவும் 'மாநாடு' வேறு மாதிரியான கதைக்களம். கதை கேட்டதும் உங்களுக்கு முதலில் தோன்றியது என்ன?

"கதை சொல்ல வேண்டும்' என ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் வீட்டில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 'மாநாடு' கதையை சொன்னார். அந்த சமயத்தில் இது 'டைம்லூப்' என்பது எனக்கு தெரியாது. 40 நிமிடத்தில் நாயகன் இறந்து விடுவான் என சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீதி கதையும் கேட்ட பிறகுதான் கதை அற்புதமாக இருந்தது. இதை சொன்னபடியே எடுத்தால் தமிழ் மட்டுமல்லாது ஐந்தாறு மொழிகளில் எடுக்கலாம் என அவரிடம் அப்போது சொன்னேன். அதன் பிறகு இருவரும் கதை குறித்து பேசி நிறைய மெருகேற்றி இறுதியாக ஒரு வடிவத்திற்கு வந்தது".

'டைம்லூப்' கதை என்றாலே எளிதில் பார்வையாளர்களுக்கு புரியாது, அதில் நகைச்சுவை இருக்காது என்பது போன்ற பிம்பத்தை உடைத்து பார்வையாளர்களுக்கு கதையை கொண்டு போய் சேர்ப்பதில் உங்களுக்கு இருந்த சிரமங்கள் என்னென்ன?

"இது எங்கள் அனைவருக்குமே 'ட்ரையல் அன்ட் எரர்'தான். டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு நிறைய படங்கள் வந்துவிட்டன. ஆனால், 'மாநாடு' கதையை போல டைம் லூப் கதை இதுவரை வந்ததில்லை. அதனால், நாங்கள்தான் இதை அசலாக உருவாக்க வேண்டியிருந்தது. அதனாலேயே இந்த படம் நன்றாக வந்திருக்கிறது என சொல்லலாம். எப்போதுமே ஒன்றை பார்த்து அதுபோலவே செய்தால் அது நன்றாக வராது என்பார்கள். அதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்.

சாதாரணமாக ஒரு படத்திற்கு எடிட்ங் செய்ய 60 நாட்கள் ஆகும் என்றால் இந்த படத்திற்கு 90 நாட்கள் ஆனது. 'கதை புரிகிறதா? புரியவில்லையா? ஏன் புரியவில்லை? புரிவதற்கு என்ன செய்யலாம்?' என எங்களுக்குள்ளேயே நிறைய உரையாடல்கள் நிகழும். படம் மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு இருந்தது. எடிட்டிங் முடிந்த பிறகு நீங்கள் பார்த்தது 2 மணி நேரம் 20 நிமிடங்கள் பக்கம் இருந்தது. முதல் லூப்பில் மட்டும்தான் முழு கதை இருக்கும். இரண்டாவது லூப்பில் முதலாவதுடைய 80% இருக்கும். மூன்றாவது லூப்பில் 60% இப்படி அடுத்தடுத்த லூப்பில் குறைந்து கொண்டே வரும். இடைவேளைக்கு முன்னர் வரும் காட்சிகளில் லூப் காட்சிகளே அப்போது வராது. ஏனெனில் அந்த நேரத்தில் கதை மக்களுக்கு புரிந்து விட்டது. அதற்கு மேல் அவர்களை சோதிக்க கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். அது இந்த படத்திற்கு நன்றாகவே பொருந்திப் போனது"

'மாநாடு' படத்தில் எந்த இடத்தில் படத்தொகுப்பில் நீங்கள் கதைச்சுருக்கம் செய்தீர்கள்?

"கதை 2.30 மணி நேரத்திற்கு மேல் இருக்க வேண்டாம் என்பதுதான் பொதுவாக நான் வெங்கட்பிரபுவிடம் சொல்வது. கதைக்கு தேவைப்பட்டால் ஒழிய இந்த நேரத்தை தாண்டுவது கதைக்கு பின்னடைவு என்றுதான் சொல்வேன். ஏனென்றால், பார்வையாளர்களையும் அது சோதிக்கும்.

இந்த கதையை பொருத்தவரை நாங்கள் எந்த இடத்தில் சுருக்கினோம் என்றால், இரண்டாம் பாதியில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு அந்த லூப் நடக்கும் விஷயம் முதலில் அவருடைய பார்வையிலும் பின்பு ரத்தம் கலப்பது, உஜ்ஜையினி என இயக்குநரது பார்வையிலும் விரியும். இதில் தனுஷ்கோடி கதாப்பாத்திரத்திற்கு எப்படி அந்த லூப் நடக்கிறது என்பது குறித்து எந்த கவலையும் இருக்காது. இந்த காட்சிகள் எல்லாம் 15 நிமிடத்திற்கு எடுத்திருந்தார்கள். ஆனால், அதை ஒரே நேர்கோடாக 6 நிமிடங்களுக்கு சுருக்கினேன்.

சிம்பு

பட மூலாதாரம், Twitter/Suresh Kamatchi

இதேபோல, இன்னொரு காட்சி சொல்ல வேண்டும் என்றால் அப்துல் காலிக்கை இருக்கையில் கட்டிப்போட்டு, தனுஷ்கோடி, பரந்தாமன் பேசிக்கொள்ளும் அந்த காட்சி. கிட்டத்தட்ட 23 நிமிடங்களுக்கு அற்புதமாக எடுத்திருந்தார்கள். அதில் 7 நிமிடம் சிம்பு ஒரே டேக்கில் நடித்திருப்பார். ஆனால், அந்த 23 நிமிட நீண்ட காட்சியை அப்படியே வைத்திருந்தால் பார்வையாளர்களுக்கு நிச்சயம் சோர்வாக அமைந்துவிடும். அதனால், அதை 11-13 நிமிடங்களுக்குள் படத்திற்காக சுருக்கினோம். இதில் நான் நிச்சயம் சிம்புவை பாராட்ட வேண்டும். அவர் அவ்வளவு நன்றாக நடித்திருந்தும் அது படத்தொகுப்பில் உட்காரவில்லை. ஆனால், இன்று வரை அதை ஏன் நீக்கினோம் என அவர் ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவருக்கு என்னுடைய நன்றி.

படத்தில் நான் மிகவும் விரும்பி எடிட் செய்தது என்றால் மண்டபத்தில் நடக்கும் அந்த சண்டை காட்சிதான்".

படத்தொகுப்பாளராக ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும்போது, எந்த விஷயத்தை கவனத்தில் வைத்திருப்பீர்கள்?

"படத்தின் கதை மட்டும்தான். அந்த கதைக்குள் நாம் என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்பேன். 'கபாலி' மாதிரியான பெரிய படங்கள் செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் 'ஒரு கிடாயின் கருணை மனு' மாதிரியான சிறிய பட்ஜெட் படங்களும் வந்தன. எனக்கு அந்த கதை பிடித்திருந்தது. அதனால், சம்பளம் குறித்து யோசிக்காமல் அந்த படத்தை எடிட் செய்ய ஒத்து கொண்டேன். கதை பிடித்திருந்தால் படத்தொகுப்பாளராக ஒரு படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல என்னால் என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்பேன்".

படத்தொகுப்பில் உங்களுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த 'ஆரண்ய காண்டம்' படத்தில் வேலை பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்

"வேலை பார்த்த அனைவருக்குமே நல்ல பெயர் வாங்கி கொடுத்த படம் அது. இயக்குநரை விடவும் அந்த கதை மீது தயாரிப்பாளர் எஸ்.பி. சரண் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். நீங்கள் பார்த்தது வெறும் 70% தான். தியாகராஜன் அப்போது கதை சொல்லும்போது அந்த படத்தின் மொழி இன்னும் வலுவாக வெளிப்படையாக இருந்தது. அந்த சமயத்தில் இதை பார்வையாளர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என எங்களுக்கே பயமாக இருந்தது. அதன் பிறகுதான் குமாரராஜா நீங்கள் பார்க்கும் கதையை அதன் மொழியில் மாற்றங்கள் செய்தார்.

ஆனால், படம் வெளியாகி ஒரு வாரத்தில் யாரும் படம் பார்க்கவில்லை, கவனம் பெறவில்லை என்ற வருத்தம் இருந்தது. பிறகு ஒரு வருடம் கழித்து படத்திற்கு தேசிய விருது கிடைத்ததும்தான் மக்களிடம் இந்த படம் குறித்தான பரவலான கவனம் அதிகம் கிடைத்தது".

படம் எடிட் செய்வது, பட முன்னோட்டம் எடிட் செய்வது எது கடினம் என நினைக்கிறீர்கள்?

"கடினம் என பார்த்தால் எதையும் செய்ய முடியாதே! ஆனால், படத்தை எடிட் செய்து விட்டால் டீசர், ட்ரைய்லர் எடிட் செய்வது சுலபம்தான். படத்தை எடிட் செய்யும்போது அந்த கதைக்குள்ளேயே இருப்பதால் எதை பட முன்னோட்டத்தில் வைத்தால் பார்வையாளர்களுக்கு பிடிக்கும் என்பது தெரியும். அதனால்தான் படம் முடித்த பிறகு அதன் முன்னோட்டத்தில் வேலை செய்யும் போது இன்னும் நன்றாக வரும்".

எந்த படத்தின் முன்னோட்டத்திற்கு வந்த பாராட்டு மறக்க முடியாதது?

"'ஆரண்ய காண்டம்' படத்தின் ட்ரைலரை கதா காலாட்சேபம் வடிவில் செய்திருப்போம். 'மங்காத்தா' முன்னோட்டத்தினால் படத்தின் வணிகமே பெரிதாக வந்தது என படக்குழுவில் சொன்னார்கள். 'கபாலி' டீசர் ஞாயிறன்று வந்தது என நினைக்கிறேன். அன்று மட்டும் நான்கு முறை சார்ஜ் செய்யும் அளவிற்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. பிறகு 'மாநாடு' படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :