மழையின் துயரம் வடியாத செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் - களத்தில் பிபிசி

- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளசேதத்தில் இருந்து சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளால் மீண்டு வர முடியவில்லை. `தனிநபர்களாலும் கல்வி நிறுவனங்களாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை மீட்டால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும்' என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் முதல் தேதியில் இருந்தே வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்தது. இடையில் அவ்வப்போது மழை ஓய்ந்தாலும் தூறல் வடிவில் பெய்து கொண்டேயிருந்தது. இதையடுத்து, சென்னைக்கான முக்கிய நீர் ஆதாரங்களின் ஒன்றான செம்பரம்பாக்கத்தில் இருந்து படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
வெள்ள பாதிப்பில் இருந்து உடனடியாக மக்களை மீட்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளும் தீயணைப்புத் துறையினரும் களமிறங்கின. சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிகராக புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளும் கடும் பாதிப்பை எதிர்கொண்டன. அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் முழுதாக நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளானார்கள்.
நிரம்பி வழியும் ஏரிகள்
குறிப்பாக, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 133 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிவிட்டன. இவற்றில் செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர் என முக்கிய ஏரிகள் பலவும் நிரம்பி வழிகின்றன. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோலம்பாக்கம், புக்கத்துரை, பெரிய ஏரி, பட்டரைக் காலனி ஏரி என 134 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த நவம்பர் 30ஆம் தேதி நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம் பேசிய முடிச்சூர் பகுதி மக்கள், `ஒவ்வொரு வருடமும் மழையால் அதிக சிரமங்களை சந்திக்கிறோம். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும்' என வலியுறுத்தினர்.
`கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் ஆயிரம் மில்லிமீட்டர் மழை பெய்வது நான்காவது முறை' என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளதை அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், `இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து, முடிந்தவரை உடைமை சேதங்களைக் குறைத்து, பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு, நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இதற்குக் காரணம், கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான்' எனத் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் என்ன நிலவரம்?
தற்போது மழையின் தாக்கம் குறைந்துவிட்டாலும் சென்னைப் புறநகர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளின் நிலைமையை அறிய பிபிசி தமிழ் சார்பில் நேரடி விசிட் செய்தோம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்களின் முக்கிய இலக்காக இருக்கும் படூரில் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள படூரில் உள்ள பிரபல மருத்துவமனையின் வாயிலில் அருவிபோல நீர் வந்து கொண்டேயிருக்கிறது. அந்தப் பகுதியைக் கடப்பதற்குள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர். அங்கு சிகிச்சைக்காக வருகிறவர்களும் மிகுந்த சிரமப்பட்டே உள்ளே சென்றனர்.
படூர் ஊராட்சியில் 400 ஏக்கர் கொள்ளளவு உள்ள பெரிய ஏரி ஒன்று உள்ளது. இது புதுப்பாக்கத்தின் இணைப்பு ஏரியாகவும் 2.4 கி.மீட்டர் நீளமுள்ளதாகவும் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள ஏழு கிராமத்தின் நீரும் அருகில் உள்ள 5,000 ஏக்கர் காடுகளின் நீரும் இங்குதான் வந்து சேருகின்றன. பின்னர், இங்கிருந்து வங்காள விரிகுடாவில் சென்று இந்த நீர் கலக்கிறது.
மழை நின்றும் வடியாத துயரம்
படூர் ஊராட்சியில் நீரால் சூழப்பட்டுள்ள வீடுகளுக்குச் சென்றோம். அங்கிருந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான வசந்தியிடம் பேசினோம். இவரது வீடு முழுக்கவே நீரால் நிரம்பியுள்ளது. வீட்டு வேலைக்குச் செல்லும் வசந்தியால் கடந்த ஒரு மாதமாக வேலைக்குச் செல்லாமல் முடங்கியே இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Vijayanand
`` இதே இடத்துல 35 வருஷமாக குடியிருக்கிறோம். கடந்த 6 வருஷமாகத்தான் தண்ணீர் தேங்குகிறது. இந்த மழையால வீட்டில் இருந்த கிரைண்டர், மிக்சி எல்லாம் போய்விட்டது. டி.வி எரிந்து போய்விட்டது. மளிகைப் பொருள்கள், துணி எல்லாம் தண்ணியில அடிச்சுட்டுப் போயிருச்சு. குழந்தைகளுக்கு சரியா சாப்பாடுகூட போட முடியலை. ரொம்ப கஷ்டமான நிலையில இருக்கிறோம். அரசாங்கத்தோட சலுகை எதுவும் வரவில்லை'' என்கிறார் வசந்தி.
மின்சாரம் மட்டுமே மிச்சம்
அதே பகுதியைச் சேர்ந்த ராணி, பிபிசி தமிழிடம் பேசுகையில், `` இத்தனை வருஷத்துல இந்த வருஷம்தான் இவ்வளவு பாதிப்பு. வீட்டுல இருந்து எந்தப் பொருளையும் எடுக்க முடியலை. கரண்ட் மட்டும்தான் மிச்சம். துணி, பாத்திரம் எல்லாம் போயிருச்சு. எனக்கு 5 பெண் பிள்ளைகள். கடைசி பொண்ணு மட்டும் காலேஜ் போய்ட்டு இருக்கு. என் வீட்டுக்காரருக்கு சர்க்கரை நோய் இருக்கு. வீட்டுக்குள்ள தண்ணி நிறைஞ்சு இருக்கு.
மழை வடியும்னு நினைச்சு இங்கேயே இருந்தோம். இரவு 2 மணிக்கு மேல வெள்ளம் அதிகமானதால, பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல போய் தங்கிட்டோம். அரிசி, எண்ணெய் எதையும் எடுக்க முடியலை. இன்னையோட 25 நாள் ஆயிருச்சு. தொடக்கத்துல பிஸ்கெட், அரிசி எல்லாம் கொடுத்தாங்க. வீட்டுக்குள்ள வந்து பார்த்தா பாம்புகளோட எண்ணிக்கை அதிகமா இருக்கு'' என்கிறார் வேதனையுடன்.
இவர் வீட்டுக்கு எதிரில் உள்ள பொதுக்குழாய், வெள்ள நீரால் முழுமையாக மூழ்கிவிட்டதால் குடி தண்ணீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

`` படூரில் உள்ள ஈசா ஏரியை மிக முக்கியமான ஒன்றாக அரசு கவனிக்க வேண்டும்'' எனக் குறிப்பிடும் படூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர், மேலதிக தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
வீடுகளுக்குள் 3 அடி வெள்ளம்
`` இங்குள்ள கால்வாய்கள் எல்லாம் தனிநபர்களின் ஆக்ரமிப்பாலும் கல்வி நிறுவனங்களின் ஆக்ரமிப்பாலும் சூழப்பட்டுள்ளது. இதனால் கால்வாய்க்குள் ஓட வேண்டிய தண்ணீர் கிராமத்துக்குள் ஓடுகிறது. கடந்த 25 நாள்களாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களாக ஒவ்வொரு வீடுகளிலும் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் நிற்கிறது. இதனால் ஐநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரமும் பறிபோய்விட்டது.
இந்தப் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மக்களும் ஓரளவுக்கு பாதுகாப்பான நிலையில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஊராட்சி சார்பில் செய்து வருகிறோம். அடுத்த ஆண்டு இதேபோன்ற நிலை ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்கிறார்.

மேலும், `` படூரில் உள்ள ஏரியானது, 40 வருடங்களுக்கு முன்பு மக்கள் குளிக்கும் இடமாக இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்புகூட இந்த ஏரி நல்ல நிலையில் இருந்தது. இப்போது கால்நடைகளால்கூட இந்த நீரை குடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் வந்து சேருகிறது. இதனை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்'' என்கிறார்.
இதையடுத்து, தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் பகுதிக்குச் சென்றோம். அங்கு நம்மை சூழ்ந்து கொண்ட மக்கள் ஆண்டுதோறும் மழையால் ஏற்படும் துயரங்களைக் கொட்டித் தீர்த்தனர்.
பயந்து பயந்து சாகிறோம்
`` ஒவ்வொரு வருடமும் மழை வரும்போதெல்லாம் பயந்து பயந்து வாழ வேண்டியுள்ளது. 2015ஆம் ஆண்டு பெய்த மழையின்போது ஒவ்வொரு வீட்டிலும் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் தண்ணீரில் அடித்துக் கொண்டு போனது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையில் நான்கு அடிக்கு தண்ணீர் வந்துவிட்டது. அந்தத் தண்ணியும் படிப்படியாக வடிந்து கொண்டிருக்கிறது'' என வேதனைப்படுகிறார், பழனிவேல். இவர் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` வருடம்தோறும் இதே பாதிப்புகள்தான். அடையாறு கரையோரத்தை உயர்த்தினால் பாதிப்பை குறைக்க முடியும். மழைக்காலம் வரும்போதே செம்பரம்பாக்கத்தின் உள்ள நீரின் அளவைக் குறைத்தால் நன்றாக இருக்கும். இதனால் முடிச்சூர் பகுதிக்குள் நீர் வருவதை ஓரளவு தடுக்க முடியும். மழை வந்த பிறகு திறந்துவிடுவதால்தான் பாதிப்புகள் அதிகமாகின்றன. மழைக் காலம் வந்தாலே என் வீட்டில் உள்ளவர்கள் கோபித்துக் கொண்டு உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்'' என்கிறார்.

அடுத்து, முடிச்சூர் அமுதம் நகரை சேர்ந்த சந்திரகலா பேசுகையில், `` ரொம்ப வருஷம் நகரத்துலதான் இருந்தோம். இங்க நல்லாயிருக்கலாம்னுதான் புதிதாக வீடு வாங்கி குடிவந்தோம். இது வடிகால் பகுதி என்பது எங்களுக்குத் தெரியாது. 2015 ஆம் வருஷத்துக்குப் பிறகு ரோடு போட்டாங்க. அதன்பிறகுதான் பிரச்னையே அதிகமானது. வெள்ள நீரோட அளவு ஒவ்வொரு வருஷமும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இங்கு கொஞ்சம் காலி மனைகள் இருப்பதால் தண்ணீர் தேங்குகிறது. அவர்களும் வீட்டைக் கட்டிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
இங்கிருந்து தண்ணீர் வெளியே செல்லும் பாதை சரியானதாக இல்லை. முதல்வர் வந்து பார்த்தார். மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்துள்ளோம். இந்தமுறை சரிசெய்வார்கள் என நம்புகிறோம்'' என்கிறார்.
துயரங்களுக்கு எப்போது தீர்வு?
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இவர்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக, மத்திய குழுவுக்கு தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கையில், வெள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க 549.83 கோடியும் நிரந்தரமாக சீர்செய்ய ரூ.2,080 கோடியும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், `அடுத்து வரப்போகும் மழையின்போது, இப்படிப்பட்ட துயரங்கள் நீடிக்கக் கூடாது' என்பதே பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












