தமிழ்நாடு மழை வெள்ளம்: சென்னை, தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்கள் தத்தளிப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
"இனிவரும் நாள்களில் மழை பெய்யவில்லை என்றாலும்கூட தேவைக்கு அதிகமான மழை பெய்துவிட்டது. வரும் 30 ஆம் தேதி வரையில் மழை நீடிக்கவே வாய்ப்பு உள்ளது" என்கிறார், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவழை தீவிரம் அடைந்து வருவதால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பல பகுதிகளில் அதி கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். அதேநேரம், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், செவ்வாய்க்கிழமையன்று அந்தமான் கடற்பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அதற்கு அடுத்து வரக் கூடிய 48 மணிநேரத்தில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகும் எனத் தெரிவித்திருந்தது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான பிறகு அது வடமேற்கு திசையும் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பினை வெளியிட்டிருந்தது.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
இந்நிலையில், தொடர் கனமழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவி செய்யும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் களமிறங்கியுள்ளன. கடந்த நவம்பர் முதல் வாரத்தில் இருந்தே மழை நீடித்து வருவதால் வெள்ளம் தேங்கக் கூடிய பகுதிகளில் எல்லாம் தற்காலிகமாக வெள்ளம் வடியக் கூடிய நிலையை உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் தேங்கக் கூடிய பகுதிகளில் எல்லாம் ஓரளவுக்கு தண்ணீர் வரத்து சற்று தணிந்தே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அதேநேரம், சென்னையில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மிதக்கின்றன. இதனை சரிசெய்யும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்பட அமைச்சர்கள் சிலர் நேரடியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
நானும் உங்களோடு நிற்கிறேன்: ஸ்டாலின்
தொடர் மழையால் ஏற்பட்டுள்ள துயரம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ` சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மில்லி மீட்டர் மழை பதிவாவது நான்காவது முறை என வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து, முடிந்தவரை உடைமை சேதங்களைக் குறைத்து, நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழு முதற்காரணம், கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளால்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், @MK Stalin
மேலும், `அடுத்த சில நாள்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியின் துயரநிலை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் போலவே தூத்துக்குடி மாவட்டமும் கனமழையால் அதிக துயரத்தைச் சந்தித்துள்ளது. அங்கு கடந்த 25ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியால் விரிவாக்கப்பட்ட பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. அங்கு நான்கு கடந்தும் வெள்ளம் வடியாததால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் படகுகள் மற்றும் அரசு வாகனங்கள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமையன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலும் தொடர் கனமழையின் காரணமாக முக்கியமான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான தூசூர் ஏரி நிரம்பியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனக் கூறப்பட்டதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எப்போது மழை தணியும்?
``மழையின் தாக்கம் எப்போது தணியும்?" என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்தப் பருவகாலம் நல்லபடியாகவே சென்ற கொண்டிருக்கிறது. இனிவரும் நாள்களில் மழை பெய்யவில்லை என்றாலும்கூட இது தேவைக்கு அதிகமான மழைதான். அதாவது இயல்புக்கு மிஞ்சிய மழை என்பதில் சந்தேகம் இல்லை. 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்து கொண்டிருக்கின்ற மழை என்கின்றனர். அப்படிப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை" என்கிறார்.
மேலும், ``ஐப்பசி கனமழை, கார்த்திகை கனமழை என்பது நமது பாரம்பரியத்தில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருபவை. இவையெல்லாம் நமக்கு நல்லபடியாக மழை பெய்யக்கூடிய மாதங்கள்தான். அதற்கேற்ப தற்போது கார்த்திகை கனமழை பெய்துள்ளது" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
``இடைவிடாது மழை பெய்வதால் மக்கள் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதே?" என்றோம். ``உண்மைதான். ஒரு மழைக்கும் இன்னொரு மழைக்கும் இடைவெளி இருந்தால் நன்றாக இருக்கும். கடந்த சில வாரங்களில் சில நாள்கள் மட்டும்தான் மழை இல்லாமல் இருந்தது. தூறல் என்ற அளவிலும் மழை நீடித்தது. தண்ணீர் சரியாக செல்லாததுதான் பிரச்னை. தண்ணீர் தேங்காமல் செல்லக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும்" என்கிறார்.
`` அடுத்தடுத்த நாள்கள் எப்படியிருக்கும்?" எனக் கேட்டபோது, `` இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. அது மேற்கு நோக்கிச் செல்ல வேண்டும் அல்லது அதனை வலுவிலக்கச் செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் வங்கக்கடல், தென்சீனக் கடல் பகுதியில் ஒரு புதிய நிகழ்வு வரவுள்ளது. அது தாய்லாந்தை கடந்து 30 ஆம் தேதி அந்தமான் கடற்பகுதிக்கு வரும். அப்படி வரும்போதுதான் மழை அளவு குறையும்.
கடந்த 3 மாதங்களின் மழையைத்தான் வடகிழக்குப் பருவமழை என்கிறோம். வறட்சி, புயல் அல்லது எதுவாக இருந்தாலும் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். தொடர் மழையால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். வரும் காலங்களுக்கு ஏற்ப தயாரானால் எந்தவொரு சூழல் வந்தாலும் நம்மால் எதிர்கொள்ள முடியும்" என்கிறார்.
பிற செய்திகள்:
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












