"சிறையில் இருந்தபோது வி.கே.சசிகலாவுக்கு படுக்கை, தனி சமையல்" - விசாரணையில் உறுதி

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

(இன்று 03.02.2022 வியாழக்கிழமை இந்திய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான வி.கே.சசிகலாவுக்கும் அவரது உறவினரான இளவரசிக்கும் பெங்களூரில் உள்ள அப்போதைய மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் டாக்டர் ஆர் அனிதா ஆகியோர் முன்னுரிமை அளித்தது, ஊழல் தடுப்புப் பிரிவு (ஏ.சி.பி) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக, 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்தபோது இந்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், "சசிகலா மற்ற குற்றவாளிகளிடம் இருந்து தனித்து வைக்கப்பட்டுள்ளார். ஐந்து சிறைகளுடன் கூடிய பெண்கள் பிரிவு அவருக்கு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் அவருக்கு உணவு தயாரிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். அவரை சந்திக்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. மேலும், ஒரு கட்டில் மற்றும் படுக்கை அவருக்கு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் கிருஷ்ண குமார் அறிந்திருந்தும், உயர் அதிகாரிகளிடமோ அல்லது அரசிடமோ அவர் தெரிவிக்கவில்லை.", என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விசாரணையில், அப்போதைய சிறைத்துறை டிஜிபியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி எச்.என் சத்தியநாராயண ராவ் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான தங்குமிடங்கள் - சமூக நீதி அமைச்சகம் அறிவிப்பு

"விளிம்புநிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கான ஆதரவை வழங்குவதற்காக ஸ்மைல் எனும் திட்டத்தை சமூக நீதி அமைச்சகம் வகுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பேசிய சமூக நீதித்துறை இணை அமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார் என்று 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவரின் விரிவான மறுவாழ்வுக்கான நல உதவி என்பது இதன் துணை திட்டமாக உள்ளது.

Transgender

பட மூலாதாரம், Getty Images

இந்த துணை திட்டத்தின் ஒரு பகுதியாக, 'கரிமா கிரஹ்' என்ற பெயரிலான 12 தங்குமிடங்களை மூன்றாம் பாலினத்தவர்களுக்காக அமைக்கும் பணியை அமைச்சகம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் பீகாரில் இந்த தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து தடுப்பதற்காக காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்பு மையத்தை அமைக்கவும் இந்த ஸ்மைல் திடடம் வழிவகை செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேட் 2022 தேர்வுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மனு - உச்ச நீதிமன்றம் அவசர விசாரணைக்கு ஏற்பு

கேட் 2022 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றம் அவசர விசாரணைக்கு ஏற்றுள்ளதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

Supreme court

பட மூலாதாரம், Getty Images

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி, கேட் தேர்வு நடைபெற உள்ளது. இதில், 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் தந்தே, டெல்லியைச் சேர்ந்த சச்சின் தன்வர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் 'கேட் 2022' தேர்வை நடத்தினால் அது மேலும் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசும், கரக்பூர் ஐ.ஐ.டி.யும் கருத்தில் கொள்ளவில்லை. மேலும், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களும், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்று பெறாதவர்களும் இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறியில்லாமல் கொரோனா பாதித்துள்ள மாணவர்களை கண்டறிவது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படவில்லை. எனவே இந்த பொதுநல மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை, கேட் 2022 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

அவர்களின் முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவசர விசாரணைக்கு வழக்கை பட்டியலிட ஒப்புதல் அளித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: