உ.பி.தேர்தல் 2022: தலித் வாக்குகளைப் பெறும் போட்டியில் பாஜகவின் நிலை என்ன?

பட மூலாதாரம், NurPhoto
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சில நாட்களுக்கு முன்பு பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தார். அவரை வரவேற்பதற்காக கட்சியின் நிறத்தில் பலூன்களும் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
பட்டியலினத்தவர் அதிகமாக வாழும் ஆக்ரா பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த உத்தராகண்ட் முன்னாள் ஆளுநர் பேபி ராணி மவுரியாவை பாரதிய ஜனதா கட்சி களமிறக்கியிருக்கிறது. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியின் ஜாதவ் பிரிவைச் சேர்ந்தவர்.
பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்படாத தொகுதிகளிலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்துவதன் மூலம் அந்தச் சமூக வாக்குகளைப் பெறும் முயற்சியையும் பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலிலேயே மாயாவதியின் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்த 13 பேரை களமிறக்கியிருக்கிறது.
அண்மைக் காலமாக உத்தரப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா அரசு பட்டியலின மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக இதுபோன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இவையெல்லாம் பாஜகவுக்கு ஆதரவாக பெரும்பான்மையளவில் பட்டியலின மக்களைத் திருப்பிவிடாது என்கிறார் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் எஸ். சாந்தினிபீ.
அப்படியெனில் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பட்டியலின மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள்?
தலித் 'வாக்கு வங்கியின்' முக்கியத்துவம்
403 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 21 சதவிகிதம் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் ஜாதவ் பிரிவைச் சேர்ந்தவர்கள். பொதுவாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஜாட், இஸ்லாமியர், பிராமணர்கள் போன்றோரின் வாக்குகளைப் பற்றியே அதிகம் பேசப்பட்டாலும், பட்டியலினத்தவரின் வாக்குகளும் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.
"கன்ஷி ராம் காலத்தில் இருந்து தலித் மக்கள் பொதுவாக முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாகவே வாக்களித்து வருகின்றனர்" என்கிறார் தேர்தலை உற்று நோக்கி வரும் மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரி பிரேம்நாத்.

உத்தரப் பிரதேசத்தில் 60க்கும் மேற்பட்ட பட்டியலினப் பிரிவுகள் உள்ளன. ஆயினும் இஸ்லாமியர்களைப் போன்றே இவர்களும் ஒரே மாதிரியாகவே வாக்களித்து வருவதை கடந்த தேர்தல்களில் பார்க்க முடிந்திருக்கிறது. வி.பி.சிங் காலம் வரை இவர்களில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து வந்திருக்கின்றனர்.
ஆனால் 1984-ஆம் ஆண்டில் கன்ஷி ராம் பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கிய பின், சில ஆண்டுகளில் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். அதன் பிறகு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வலுவான வாக்கு வங்கியாகவே பட்டியலினத்தவர் உருவெடுத்துள்ளனர்.
2022இல் நடக்கும் உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் 86 இடங்கள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு இடங்கள் மட்டும் பழங்குடியினருக்கானவை. எனினும், இந்த இடங்களில் பெரும்பாலானவற்றை ஆட்சியமைக்கும் கட்சிகளே கைப்பற்றியிருக்கின்றன என்பதையே கடந்த கால புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தலித் மக்கள் முழுமையாக மாயாவதியை ஆதரிப்பார்களா?
தலித் வாக்குகளை நம்பியிருந்தாலும் 2007-ஆம் ஆண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார் மாயாவதி. பட்டியலின வாக்குகளையும் தாண்டி முற்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட பிற சமூகத்தினரின் வாக்குகளையும் பெற முடிந்ததே இதற்குக் காரணம். ஆனால் அதன் பிறகு அந்தக் கட்சியால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.
கடந்த முறை சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் இந்த முறை மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. கூட்டணிகள் மூலம் பிற சமூகத்தினரின் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைக்காது என்பதே இதற்குக் காரணம் என்று விளக்குகிறார் பிரேம்நாத்.
உதாரணத்துக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைத்துக் கொண்டாலும்கூட பகுஜன் சமாஜ் கட்சியின் பட்டியலின வாக்கு வங்கியை சமாஜ்வாதி கட்சியால் கவர முடியவில்லை, அதேபோல சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கி பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போகவில்லை என்று பிரேம்நாத் சுட்டிக்காட்டுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
உத்தரப் பிரதேச அரசியலில் பிரபலமாகி இருக்கும் "பீம் ஆர்மி" இந்த முறை மாயாவதியின் வாக்கு வங்கியைப் பிரிக்கும் என்ற கருத்தும் இருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர ஆஸாத் களமிறங்கியிருப்பதன் மூலம் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
"பீம் ஆர்மி தலித் வாக்குகளைப் பிரிக்கும் என்பதைத் தாண்டி, இஸ்லாமியர் மற்றும் ஒட்டுமொத்தமாக இளைஞர்களின் வாக்குகளைப் பெறும் என்பதே சரி. இளைஞர்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் பீம் ஆர்மிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்" என்கிறார் பிரேம்நாத்.
தலித் வாக்குகளை பாஜக பெற முடியுமா?
பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் இன்றும் உத்தரப் பிரதேசத்தில் பரவலாக நடந்து கொண்டே இருக்கின்றன. இதைத் தடுப்பதற்கு யோகி ஆதித்யநாத்தின் பாரதிய ஜனதா அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என்கிறார் அலிகார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாந்தினிபீ.

"இன்று உத்தரப் பிரதேச தலித் மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் தங்களிடம் வேலை செய்யும் அல்லது தங்களது ஊரில் வசிக்கும் தலித் மக்களை கொடுமைப்படுத்தும் காணொளிகளை சிலர் வெளியிட்டு வருகின்றனர். பட்டியலினத்தவருக்கு எதிரான எச்சரிக்கையாக இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இதைத் தடுப்பதற்கு அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொடுமையில் ஈடுபடுவோர் தங்களுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாகவே கருதுகிறார்கள். கொரோனா கால பொதுமுடக்கம் போன்றவையும் மிகக் கடுமையாக தலித் மக்களைப் பாதித்திருக்கிறது." என்கிறார் சாந்தினிபீ.
இவற்றுக்கு இடையே தங்களை நோக்கி பட்டியலின மக்களை இழுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நிசாத் கட்சியை தன்பக்கம் இழுத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. கூட்டணியில் 16 தொகுதிகளையும் இந்தக் கட்சிக்கு வழங்கியிருக்கிறது.
தலித் மக்களிடையே கல்வியறிவு குறைவு, ஏழ்மை போன்ற காரணங்களும் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என தேர்தல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதனால் பண விநியோகம் மூலம் வாக்குகளைக் கவரவும் கட்சிகள் முயற்சி செய்யக் கூடும் என்று கருதப்படுகிறது.
"இந்தத் தேர்தலில் தலித் வாக்குகள் மூன்றாகப் பிரிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும் பகுதி பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஒரு பகுதி பீம் ஆர்மிக்கும் செல்லும். மேலும் ஒரு சிறு பகுதி பாரதிய ஜனதா கட்சிக்கும் செல்லக்கூடும்," என்கிறார் சாந்தினிபீ.
பிற செய்திகள்:
- தேர்தலில் களமிறங்காமல் முதல்வர் பதவிக்கு வரும் உத்தர பிரதேச அரசியல்வாதிகள்
- அயோத்தியில் 251 மீட்டர் ராமர் சிலை: நிலம் வழங்க கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகார்
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












