உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 2022: யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, மாயாவதி தேர்தலில் போட்டியிடுவார்களா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அனந்த் ஜானே
- பதவி, பிபிசி இந்தி
உத்தர பிரதேச தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்களுக்கும் ஒரு சுவாரசியமான சவால் உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தங்கள் பிரபலத்தை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, உத்தர பிரதேசத்தில் முதல்வராகப் பதவியேற்ற தலைவர்கள் அனைவருமே தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு வராமல், சட்ட மேலவை உறுப்பினர்களாக அதாவது எம்.எல்.சி.யாக இருந்துவந்தனர்.
இதன்காரணமாக 2022 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இந்த பெரிய தலைவர்கள் ஏன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தயங்குகிறார்கள் என்பதுதான் கேள்வி. இதற்காக பலரும் மேற்கு வங்க தேர்தல் உதாரணத்தை அளிக்கின்றனர். 2021 தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முன் எப்போதும் இருந்திராத பெரும்பான்மையைப் பெற்றபோதிலும்கூட மமதா பானர்ஜி தனது தொகுதியில் தோல்வி அடைந்தார். பின்னர் அவர் பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். ஏனெனில் எம்.எல்.சி.ஆகும் வாய்ப்பு அங்கு இல்லை. ஆனால் உத்தர பிரதேசத்தில் சமீப வருடங்களாக முதல்வர் பதவிக்கு வருபவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க அந்த வழியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடுவாரா யோகி ஆதித்யநாத்
2022 ஆம் ஆண்டின் முதல் நாளில், முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னெளவில் பத்திரிகையாளர்களை சாதாரணமுறையில் சந்தித்தார். தேர்தல் தொடர்பான பல விஷயங்கள் குறித்து அவர் பேசினார். பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஊடக அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட அவர், "சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். கட்சி என்னிடம் எங்கு நிற்கச்சொன்னாலும் அங்கிருந்து போட்டியிடுவேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
யோகி ஆதித்யநாத் மதுராவில் இருந்து போட்டியிட வேண்டும் என்று ஜனவரி 3 ஆம் தேதி பாஜக எம்பி ஹரிநாத் சிங் யாதவ் கனவு கண்டதாகவும், யோகி ஆதித்யநாத் மதுராவில் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஹரிநாத் சிங் யாதவ், "இரவில் இரண்டு முறை நான் கண்களைத் திறந்தேன். இரண்டு முறையும் யோகி ஜியின் படமும், கிருஷ்ணரின் படமும் என் முன் வந்தபோது, யோகி ஜி மதுராவில் போட்டியிட வேண்டும் என்றும், எனது தலைமையிடம் நான் பேச வேண்டும் என்று கிருஷ்ணர் எனக்கு அறிவுறுத்துவதாகவும் உணர்ந்தேன். அதனால்தான் நட்டாவுக்கு கடிதம் எழுதினேன். ஸ்ரீ கிருஷ்ணருக்கும் எனது தேசியத் தலைவருக்கும் இடையே நான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறேன். அதன் அடிப்படையில் கடிதம் எழுதினேன்,"என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இதற்கு முன், யோகி ஆதித்யநாத் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "மதுராவில் தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவும் இல்லை. கட்சி எங்கு சொன்னாலும் தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் மதுரா எனது புனித தலமாகும். இந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தால் மகிழ்ச்சிதான். நான் இந்தப்புனித தலத்திற்கு முதன்முறையாக வரவில்லை. இன்று டிசம்பர் 19ம்தேதி முறையாக இங்கு வந்துள்ளேன். ஏழு புனிதத்தலங்களில் மூன்று அதாவது அயோத்தி, மதுரா மற்றும் காசி, இந்த மாநிலத்தில் இருப்பது உத்தரபிரதேச மக்களின் அதிர்ஷ்டம். இந்தப்புனிததலங்களில் சில மேம்பாடுகளைச்செய்யும் பாக்கியத்தை பெற்றுள்ளேன். இதை விட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்," என்று குறிப்பிட்டார்.
வாதங்களும் கேள்விகளும்
கனவுகள் என்ற விஷயத்தை விட்டுவிட்டு, யோகி ஆதித்யநாத் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதுதான் உண்மையான கேள்வி, அவர் போட்டியிடுவார் என்றால், எங்கிருந்து?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"இந்த கேள்வியை முதல்வரிடம் கேட்டதற்கு, யார் தேர்தலில் போட்டியிடுவார்கள், யார் போட்டியிட மாட்டார்கள், அல்லது போட்டியிட்டால், அவர் எங்கிருந்து போட்டியிடுவார் என்பதை கட்சியின் தேர்தல் குழுவும், மத்திய நாடாளுமன்றக்குழுவும் முடிவெடுக்கும் என்று பதில் அளித்தார்.அவர் தேர்தலில் போட்டியிட்டாலும், அது பிரசாரத்தை பாதிக்காது. கட்சிக்கு அதனால் நன்மை ஏற்படும். ஆனால், போட்டியிடுவதா வேண்டாமா என்பதை கட்சிதான் இறுதியாக முடிவு செய்யும். 403 தொகுதிகளில் இருக்கும் கட்சித்தொண்டர்களும் தங்கள் தொகுதியில் இருந்து முதல்வர் போட்டியிடவேண்டும் என்று ஆவலுடன் இருக்கின்றனர்," என்று பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி தெரிவித்தார்.
"மாயாவதி வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அகிலேஷ் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறினால், மூன்று நாட்கள் விடுப்பில் இருக்கிறார். அவருக்கு பொதுமக்கள் மத்தியில் செல்ல தைரியம் இல்லை. மேலும் பிரியங்கா ட்வீட் மற்றும் ஃபேஸ்புக் மூலம் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவார்," என்று அவர் குற்றம் சாட்டினார்.
"யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊர் கோரக்பூர். தேவ் தீபாவளி கொண்டாடுவது போன்ற சில விஷயங்களை அவர் அயோத்தியில் செய்துள்ளார். பாஜகவின் மூன்று மையங்கள் அயோத்தி, மதுரா, காசி. ஆனால், நரேந்திர மோதி மற்றும் அமித்ஷா தலைமையிலான பாஜக இந்த மூன்று அதிகார மையங்களின் அடையாளமாக ஒரு புதிய தலைவர் வருவதை ஒருபோதும் விரும்பாது. ஏனென்றால் மதுரா, அயோத்தி மற்றும் காசியின் முடிவுகளை கொடுப்பவர் அல்லது ரிசல்ட் கொடுப்பவர் என்று நரேந்திர மோதியே அறியப்படுகிறார். அப்படியானால் ஒரு அதிகார மையத்தின் பெருமையை மற்றொருவர் எடுத்துச்செல்ல நரேந்திர மோதி எப்படி அனுமதிப்பார். பாஜக தனது அரசியலை அயோத்தி, காசி மற்றும் மதுராவுக்கு எடுத்துசெல்லவேண்டுமென்றால் அதை நரேந்திரமோதி தான் செய்வார், யோகி ஆதித்யநாத் அல்ல," என்று மதுராவில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவது குறித்து கருத்துத்தெரிவித்த உத்தர பிரதேசத்தின் மூத்த பத்திரிக்கையாளர் யோகேஷ் மிஷ்ரா குறிப்பிட்டார்.
மதுராவில் ஆதித்யநாத் போட்டியிடாததற்கு வேறு காரணங்களையும் யோகேஷ் மிஷ்ரா கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மதுராவில் யோகி ஆதித்யநாத் போட்டியிட்டால், அது பாஜகவுக்கு பிராமணர்- தாக்கூர் பிரச்னையை உருவாக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
"யோகி போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்கப்படும் மதுரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான ஸ்ரீகாந்த் ஷர்மா, மாநில கேபினட் அமைச்சரும் ஆவார். அவரது செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது. அவர் மத்தியிலிருந்து வந்து நேரடியாக எம்எல்ஏ ஆனார். பிறகு கேபினட் அமைச்சர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு உத்திரபிரதேசத்தில் 'மின்சாரம்' தேர்தல் விஷயமாக இல்லை. ஒவ்வொரு அரசுக்கும் மின்சாரம் எப்போதுமே பெரிய பிரச்னையாக இருந்து வந்தது. மின்சாரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை முன்வைத்து பல தேர்தல்கள் நடந்துள்ளன. நன்றாக செயல்படும் ஒரு அமைச்சரின் உறுப்பினர் பதவியை எப்படி காலி செய்வது என்ற கேள்வி எழுகிறது," என்று யோகேஷ் மிஷ்ரா தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் பிராமணருக்கும் தாக்கூருக்கும் இடையே தற்போது பிரச்னைகள் உள்ளன. அந்த நிலையில் ஒரு பிராமணரின் டிக்கெட்டை தாக்கூருக்கு கொடுக்க முடியாது. ஏனெனில் இது நடந்தால், அந்த மாவட்டத்தில் பிராமணர்- தாக்கூர் பதற்றம் அதிகரிக்கும், மேலும் பாஜக நிறைய இடங்களை இழக்கக்கூடும்.
அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிடுவாரா?
அகிலேஷ் யாதவுக்கும் முதல்வராக வேண்டும் என்ற கனவு இருந்தாலும், 2012 முதல் 2017 வரை உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மை அரசின் முதல்வராக இருந்த அவர், எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனதில்லை. அவர் எம்.எல்.சி யாகவே இருந்தார்.
ஊடக பேட்டிகளிலும், எல்லா பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா, போட்டியிடுவார் என்றால் எங்கிருந்து என்று அவரிடம் தொடர்ந்து கேள்வி கேட்கப்படுகிறது.
2022-ம் ஆண்டின் முதல் செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கேள்வியை அகிலேஷ் யாதவிடம் மீண்டும் கேட்டபோது, "தேர்தலில் கட்சி சொல்லும் இடத்திலிருந்து நான் போட்டியிடுவேன். சமாஜ்வாதி கட்சி எங்கிருந்து சொல்கிறதோ, அங்கிருந்து தேர்தலில் போட்டியிடுவேன்," என்று கூறினார்.
யோகி ஆதித்யநாத் தேர்தல் களத்தில் இறங்கினால், அகிலேஷ் மீதும் தேர்தலில் போட்டியிடும் நெருக்குதல் அதிகரிக்கும் என்பது வெளிப்படையானது.

பட மூலாதாரம், @YADAVAKHILESH
அப்படி நடந்தால் அவர் இட்டாவா, மெயின்புரி அல்லது ஆசம்கர் போன்ற யாதவர்கள் ஆதிக்கம் செலுத்தும் எந்த தொகுதியிலும் போட்டியிடக்கூடும். ஆனால் அகிலேஷ் யாதவ் இதை செய்வாரா, தேர்தலில் போட்டியிட அவர் தயங்குகிறாரா?
"அரசியல்வாதிகளிடம் இதுபற்றிக் கேட்கும்போதெல்லாம், ஒரு தொகுதியில் போட்டியிட்டால், அந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு அவர்களின் கவனமும், நேரமும், வளமும் அதிகம் செலவாகும் என்று பொதுவாகச் சொல்வார்கள். அதுவும் உண்மைதான். தேர்தலின் கவனம் தங்கள் இருக்கையின் மீது இருக்கக்கூடாது என்றும் அவர்கள் விரும்புகிறார்கள், குறிப்பாக ஊடகங்கள் அந்த குறிப்பிட்ட இடத்தின் சமன்பாடு மற்றும் அதில் இருந்து தோல்வி மற்றும் வெற்றி வாய்ப்புகளை பகுப்பாய்வு செய்கின்றன. தலைவர்கள் இதைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். தோல்வியின் அவமானத்தை தவிர்க்க அவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்புவதில்லை," என்று மூத்த பத்திரிக்கையாளர் ரத்தன் மணிலாவில் தெரிவித்தார்.
எந்தத் தொகுதியிலும் போட்டியிடும் திறன் அகிலேஷை ஒப்பிடும்போது யோகிக்கு அதிகம் இருப்பதாக ரத்தன் மணிலால் கருதுகிறார். "மாநிலம் முழுவதும் அவர் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். தான் ஒரு இந்துத்துவ தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். தேர்தலில் தன்னை எந்த இடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. மேலும் கோரக்பூரில் இருந்து பலமுறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், தேர்தலில் வெற்றி பெறும் கலையை நன்கு அறிந்தவர். இதுவும் ஒரு பெரிய காரணியாகும்," என்கிறார் அவர்.
இந்த சாத்தியக்கூறுகள் மற்றும் ஊகங்கள் குறித்து பேசிய சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹபீஸ் காந்தி ,"இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் கட்சி கேட்டுக்கொண்டால் நான் போட்டியிடுவேன் என்று அவரே கூறியுள்ளார். கட்சி கூறும்போது, அவர் எங்கிருந்து போட்டியிடுவார் என்பது முடிவாகும். அவர் கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டவர். எனவே அரசியலமைப்பு செயல்முறையின் கீழ் அவர் போட்டியிட வேண்டும் என்று முடிவானால் நிச்சயமாக போட்டியிடுவார். யோகி தேர்தலில் போட்டியிட்டால் அகிலேஷ் போட்டியிட வேண்டுமா என்பது ஒரு கற்பனையான கேள்வி," என்றார்.
பிரியங்கா காந்தி என்ன முடிவு எடுப்பார்?
"பிரியங்கா, நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா?" ஒவ்வொரு மக்களவை தேர்தலிலும் பிரியங்கா காந்தி ,தனது சகோதரர் ராகுல் காந்தி மற்றும் தாயார் சோனியா காந்திக்காக அமேத்தி மற்றும் ராய்பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்யும்போதும் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கான தேர்தல் அறிக்கையை பிரியங்கா காந்தி வெளியிட்டபோது, கட்சியின் 40 சதவிகித பெண் வேட்பாளர்களில் அவரது பெயரும் இருக்குமா என்று அவரிடம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரியங்கா, "இருக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள், முடிவு எடுக்கப்படும்போது உங்களுக்குத்தெரியவரும்,"என்று கூறினார்.
ஆனால் 2019 தேர்தலில் அமேத்தி தொகுதியில் ராகுல் காந்தி, பாஜக வின் ஸ்ம்ருதி இரானியிடம் தோற்ற பிறகு, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது ஆபத்தானதாக உள்ளது. அவர்களை தோற்கடிக்க பாஜக தனது முழு பலத்தையும் பிரயோகம் செய்கிறது.
அமேத்தியும் ராய்பரேலியும் காந்தி குடும்பத்தின் வலுக்கோட்டைகள்; பிரியங்கா தேர்தலில் போட்டியிட்டு எளிதில் வெற்றி பெற முடியும் என்று இப்போது யாராலும் உறுதியாகச் சொல்லமுடியாது.

பட மூலாதாரம், Getty Images
2022 ஆம் ஆண்டிற்கான காங்கிரஸ் கட்சியின் முழக்கம் "நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்" என்பதுதான். மேலும் இந்த முழக்கத்தின் துணையுடன் காங்கிரஸ் புதிய அரசியல் பரிசோதனையை மேற்கொள்ள இருக்கிறது. "காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் ஒருபோதும் சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்," என்று மூத்த பத்திரிகையாளர் யோகேஷ் மிஷ்ரா கூறுகிறார்.
"சட்டப்பேரவைத்தேர்தல் தங்கள் அந்தஸ்துக்கு தகுதியானதல்ல என்று காந்தி குடும்பம் நினைக்கிறது. சட்டப்பேரவையை மிக சிறிய விஷயமாக அவர்கள் கருதுகிறார்கள். நாம் முதல்வராகலாம், பிரதமராக்கலாம் என்று நினைக்கும் இந்தக்குடும்பம் ஏன் சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றும் கருதுகிறது. ஆனால் இவர்கள் போட்டியிட்டால் நல்ல பலன் கிடைக்கும்," என்கிறார் அவர்.
"தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்திக்கு தயக்கம் இருக்கலாம். ஏனெனில் அவர் இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. கூடவே கடந்த சில தேர்தல்களில் காங்கிரசுக்கு சாதகமான சூழல் அமையவில்லை. எனவே இந்தத் தேர்தலில் போட்டியிடுவது பிரியங்காவுக்கும் ஆபத்தாக அமையக்கூடும். மேலும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட்டு தோல்வியடைவது அவர்களுடையது மட்டுமல்லாமல் கட்சியின் மன உறுதியையும் பாதிக்கும். இன்றைய காலகட்டத்தில், கட்சியின் அதிருப்தி தலைவர்கள், கட்சியின் தலைமையின் திறனைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்," என்று ரத்தன் மணிலால் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஹிலால் நக்வி, "வேண்டுமானால் அவர் தேர்தலில் கட்டாயம் போட்டியிடலாம். அவர் இங்கிருந்து போட்டியிட்டு உத்தரபிரதேச முதல்வராக வேண்டும் என நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது, என்ன விரும்புகிறது? அதை கட்சிதான் முடிவுசெய்யும். தேர்தலில் தோல்வி மற்றும் அது தொடர்பான தயக்கத்தைப் பொருத்த வரையில், பிரியங்கா காந்தி இந்த நாட்டில் எங்கிருந்தும் போட்டியிட்டு அபார பெரும்பான்மையுடன் வெற்றி பெற முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
மாயாவதி கட்சி என்ன சொல்கிறது?
மாயாவதியும் உத்தர பிரதேச முதலமைச்சராக இருந்துள்ளார். எம்.எல்.சி மூலம் முதலமைச்சராக்கும் மரபை ஏற்படுத்தியவர் என்று சிலர் அவரை பாராட்டுகிறார்கள்.
உத்தர பிரதேச சட்டப் பேரவை செய்திகளை நீண்ட காலமாக அளித்துவருபவர் பத்திரிகையாளர் ஜெய்த் அகமது ஃபாரூக்கி. "1989-ம் ஆண்டு வரை யார் முதல்வர் பதவிக்கு வந்தார்களோ அவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிட்டு வந்தவர்கள். அதன் பிறகு சட்ட மேலவையில் இருந்து வருவது துவங்கியது. மாயாவதி இந்த பாரம்பரியத்தை நிரந்தரமாக்கினார். மாயாவதிக்கு பின் முலாயம் சிங்கும் எம்.எல்.சி.யாக இருந்து வந்தார். அதன் பின் மீண்டும் மாயாவதி, அகிலேஷ், யோகி ஆதித்யநாத் ஆகிய மூன்று பேரும் எம்.எல்.சி. மூலம் முதல்வரானார்கள். கடைசி முறையாக எம்எல்ஏவாக இருந்து உத்த ரபிரதேச முதல்வராக இருந்தவர், பாரபங்கி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான ராஜ்நாத் சிங். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஆனால் 2022 தேர்தலில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது ஒருபுறம் இருக்க, பிரசாரம் மற்றும் பேரணிகள் தொடர்பாகவும் மாயாவதி மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பிராமண சமூகத்தை சேர்ந்தவரான பிஎஸ்பி தேசிய பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ரா "பெஹன் ஜி( சகோதரி) வரப்போகிறார்" என்று ட்வீட் செய்துள்ளார். மாயாவதி தனது பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி முதல் கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என்றும் ஊகங்கள் நிலவுகின்றன.
அவர் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுவாரா? "சட்டப்பேரவைத்தேர்தலில் பெஹன்ஜி போட்டியிட மாட்டார். நாடு முழுவதும் அவர் கட்சியை வழிநடத்தி வருகிறார். ஆட்சி அமைக்கும் சூழல் வந்ததும், தேர்தலில் போட்டியிடுவதா அல்லது எம்.எல்சி ஆவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். அந்த நேரத்தில் ஒரு தொகுதியை காலி செய்து அங்கு போட்டியிடவேண்டும் என்று நினைத்தால் அப்படியும் செய்யப்படும்," என்று இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தரம்வீர் செளத்ரி தெரிவித்தார்.
அரசியலில் சம்பிரதாயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகும் விஷயத்தில் பத்திரிகையாளர் யோகேஷ் மிஷ்ரா ஜனநாயக மரபுகளை நினைவுபடுத்துகிறார். "ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால், மக்கள் மீது நம்பிக்கை இருந்தால், ஜனநாயகத்தின் கொடி மக்கள் கையில் இருக்கிறது என்று நீங்கள் நம்பினால், மக்கள் மத்தியில் சென்று நீங்கள் தேர்தலில் வெற்றிபெறவேண்டும். இப்படித்தான் உண்மையில் நடக்கவேண்டும். ஏனென்றால் நீங்கள் யாரை முதலமைச்சராக ஆக்க நினைக்கிறீர்களோ, அந்த முகத்தை மக்கள் முன்னிலையில் வையுங்கள். அந்த முகம் அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கிறது, எவ்வளவு பிடிக்கவில்லை என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












