கொங்கு மண்டலம்: உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுகவின் வியூகம் என்ன? - தமிழ்நாடு அரசியல்

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம், UDHAYANIDHI STALIN FACEBOOK PAGE

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக அரசியலில் அதிமுக என்கிற கட்சி உதயமானதிலிருந்தே திமுகவிற்கு எட்டாக்கனியாக இருப்பது கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது.

மிக நெருக்கமான போட்டியாக இருந்த கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதில் கொங்கு மண்டலத்தின் பங்கு முக்கியமானது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கொங்கு மண்டலத்தில் பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றது. திமுக கூட்டணி ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

இதனால் திமுக கொங்கு மண்டலத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையிலே தொடர்ந்து முகாமிட்டுள்ளார்.

சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உறுப்பினர் சேர்ப்பு மற்றும் திமுக பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை வந்திருந்தார். அப்போது பேசியவர், `கோவை மக்கள் குசும்பு மட்டுமல்ல, ஏமாற்றமும் அளித்துள்ளார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஐந்து இடங்களிலாவது வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஒவ்வொருவரும் குறைந்தது 10 பேரை திமுகவில் இணைக்கவேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவீதம் வெற்றி பெறவேண்டும்` என இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இந்த நிலையில் "தொகுதிக்கு குறைந்தபட்சம் 25,000 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கவேண்டும் என திமுக தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் புதிதாக மூன்று லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களையும் இளைஞர்களையும் அதிகமாகக் கட்சியில் இணைக்கவேண்டும் என்றும் திமுக தலைமை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கோவையில் மட்டும் தான் முழு கவனம் செலுத்தி வேலை பார்த்தது. குறிப்பாக பல தொகுதிகளில் திமுக வெற்றி பெற முடியாமல் போனதற்கு மக்கள் நீதி மய்யமும் முக்கியக் காரணம். அப்போது மக்கள் நீதி மய்யத்தில் இருந்த மகேந்திரன் தற்போது திமுகவில் இணைந்திருப்பது கூடுதல் பலம்," என்கிறார் கோவை மாவட்ட மூத்த திமுக நிர்வாகி ஒருவர்.

கார்த்திகேய சிவசேனாபதி

பட மூலாதாரம், KARTHIKEYA SIVASENATHIPATHI FACEBOOK PAGE

படக்குறிப்பு, கார்த்திகேய சிவசேனாபதி

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, "சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் 1% வாக்கு வித்தியாசம் தான். ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருந்ததும் எங்கள் கட்சிக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததும் தான் நாங்கள் வெற்றி பெறாமல் போனதற்கான காரணங்கள்.

எனவே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மேயர் பதவியைக் கைப்பற்றவேண்டும் என்பது தான் ஒரே இலக்கு. அதே சமயம் தேர்தல் வெற்றியோடு நின்றுவிடக்கூடாது. கோவை மாவட்டத்தில் திமுக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது தான் நீண்ட காலத்திற்குப் பலன் தரும். அதற்கான வேலைகளையும் செய்து வருகிறோம். குறிப்பாக இளைஞர்களை திமுகவில் அதிகமாக இணைத்து வருகிறோம்," என்றார்.

கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு இருப்பதைப் போல வலுவான உள்ளூர் முகங்கள் திமுகவிற்கு அதிகமாக இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை பொறுப்பாளராக இருந்தாலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனால் கட்சிப் பணிகளிலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளதே என்கிற கேள்வியை முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்தவர், "இதில் உண்மை இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு சிறந்த நிர்வாகி. தனது சொந்த மாவட்டத்தில் சாதித்துக் காட்டியவர். அவர் கோவை மாவட்ட பொறுப்பாளராக இருப்பது திமுகவிற்குத் தான் பலம். எந்த ஊரைச் சேர்ந்த யாராக இருந்தாலும் அவர் திமுகவைச் சேர்ந்தவர் தான். கொங்கு மண்டலத்தில் முக்கியமான மாவட்டமான கோவையில் திமுகவை வளர்ப்பதற்குத் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட அனைவரும் வேலை செய்கிறோம்," என்றார்.

2 கோடி உறுப்பினர்கள்

மு க ஸ்டாலினுடன் கார்த்திக்

பட மூலாதாரம், N KARTHICK FACEBOOK PAGE

படக்குறிப்பு, மு க ஸ்டாலினுடன் கார்த்திக்

இது தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் பிபிசி தமிழிடம் பேசுகையில், "சமீபத்தில் தான் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் எங்களுடைய இலக்கல்ல. நீண்ட கால நோக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு தலைமை பொறுப்பாளர் அவருக்குக் கீழ் பத்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை திமுக உறுப்பினராக இணைக்கவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1-ம் தேதிக்குள் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு கோடியாக உயர்த்தவேண்டும் என தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அந்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. கோவையிலும் இந்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன."

`சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கோவையில் வார்டு வாரியாக மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு 1,44,000 பெறப்பட்டு அவற்றில் 25,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகத் தீர்வு காணப்படும்"

கிரிக்கெட் போட்டி, வேலைவாய்ப்பு முகாம்

"கோவை ஒரு தொழில் நகரம். இங்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முக்கியமான தேவையாக உள்ளது. எனவே தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளன. இளைஞர்களுக்கென சமீபத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் 342 அணிகள் கலந்து கொண்டன. மேலும் கோவையிலிருந்து பிற ஊர்கள், பிற மாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படுகின்றன"

"மகளிருக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என்பதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுய உதவிக் குழுக்கள் கடன் உதவி பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பெண்கள், இளைஞர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் திமுகவுக்கு உள்ளது," என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: