கொரோனா வைரஸ்: இந்தியா தன் தடுப்பூசி இலக்கை தவறவிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஸ்ருதி மேனன்
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக்
2021-ம் ஆண்டின் இறுதிக்குள் 940 மில்லியன் (பெரியவர்கள்) மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போடவேண்டும் என்ற இலக்கை இந்தியா தவறவிட்டுவிட்டது.
கடந்த மே மாதத்தின் போது, மத்திய அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், இந்த இலக்கை முதலில் அறிவித்தார்.
அப்போது, "இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் டிசம்பர் 2021 இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்," என்று அவர் கூறினார்.
தடுப்பூசி திட்டம் எப்படிச் செயல்படுகிறது?
டிசம்பர் 30 நிலவரப்படி, இந்தியாவின் வயது வந்தோரில் 64% பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்கள். அதோடு கிட்டத்தட்ட 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
முழுமையாகத் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் இலக்கை அடைய நீண்ட காலம் எடுக்கும் என்று வல்லுநர்கள் கூறினர்.
தொற்றுநோயியல் வல்லுநரும் சுகாதார அமைப்பு வல்லுநருமான மருத்துவர் சந்திரகாந்த் லஹாரியா, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, "நடைமுறை சாத்தியமில்லாதது. ஏனெனில், எந்த நேரத்திலும் 100% தடுப்பூசி செலுத்தி முடிப்பது சாத்தியமில்லை," என்று கூறுகிறார்.
மேலும், "பல்வேறு காரணங்களுக்காக தடுப்பூசி போட விரும்பாத சிலர் எப்போதும் இருப்பார்கள்," என்றும் கூறினார்.
இந்தியாவின் தடுப்பூசி பலகையாகச் செயல்படும் கோவின் (CoWin)படி, டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து ஒரு வாரத்தில் செலுத்தப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அக்டோபர் மாத மத்தியிலிருந்து, முதல் டோஸ்களை விட இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளே அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, அடுத்த்டுத்த நாட்களில் தினசரி தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அன்றைய தினத்தில் இரண்டு கோடிக்கும் (20 மில்லியன்) அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆனால், அதன் பிறகு மீண்டும் அதே எண்ணிக்கையை அடைய முடியவில்லை.
செப்டம்பரில் மாதாந்திர சராசரி எண்ணிக்கை, ஒரு நாளைக்கு சுமார் 8.1 மில்லியன் டோஸ்களாக இருந்தது, அக்டோபர் மாதத்தில் 5.4 மில்லியனாகவும் நவம்பர் மாதத்தில் 5.7 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.
செப்டம்பர் மாதத்தில் இருந்த வேகத்தைத் தொடர்ந்திருந்தால், இந்தியா தன்னுடைய இலக்கை ஓரளவுக்கு நெருங்கியிருக்கலாம். ஆனாலும், தடுப்பூசியின் தேவை இறுதியில் வீழ்ச்சியடைந்திருக்கும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஜனவரியில் தொடங்கிய தடுப்பூசி இயக்கமானது, மூலப் பொருட்கள் பற்றாக்குறை, தளவாடச் சிக்கல்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இருக்கும் தயக்கம், விநியோகத் தடைகள் போன்ற சவால்களை எதிர்கொண்டது.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில், விநியோகத் தடைகள் சரிசெய்யப்பட்டன. இப்போது விநியோகத்தைவிட தேவையே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
"தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்குவதால் இப்போது தடுப்பூசி செலுத்தப்படுவது குறைந்துள்ளது," என்கிறார் மருத்துவர் லஹாரியா.
நவம்பர் 3-ம் தேதி, வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் அளவு முறையே, 6 மற்றும் 12 விழுக்காடு அதிகரித்தது.
ஒமிக்ரான் பரவல் தொடர்பான அச்சங்களுக்கு மத்தியில் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்குமாறு பிரதமர் மோதி சமீபத்தில் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டர்.
கடந்த சில மாதங்களாக, 100% இலக்கு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் எந்த செய்தியாளர் சந்திப்பிலும் குறிப்பிடப்படவில்லை.
இலக்கைத் தவறவிட்டது குறித்து அமைச்சகத்திடம் கேட்டோம். ஆனால், பதிளிக்கவில்லை.
இந்தியாவில் போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் உள்ளனவா?
இந்தியா தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளான கோவிஷீல்ட், கோவேக்சின், ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான, சீரம் நிறுவனம், ஆர்டர்கள் இல்லாததால், டிசம்பர் மாதத்தில் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவிப்பதற்கு ஒரு மாதம் முன்னர் வரை, 250 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்துகொண்டிருந்தது.
அது இப்போது ஒரு மாதத்திற்கு 125 முதல் 150 மில்லியன் டோஸ்களையே உற்பத்தி செய்கிறது.
கோவேக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஒரு மாதத்திற்கு 50 முதல் 60 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்கிறது.
சமீபத்தில் இந்தியாவின் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் பேசியபோது, டிசம்பர் 20-ம் தேதி வரை மாநிலங்களில் 170 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் இருப்பதாகக் கூறினார்.
தடுப்பூசி உற்பத்தி திறன் ஒரு மாதத்திற்கு 310 மில்லியன் டோஸ்களில் இருந்து அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு மாதத்திற்கு 450 மில்லியன் டோஸ்களாக உயரும் என்று அவர் கூறினார்.
இதில் பிற உற்பத்தியாளர்களிடம் இருந்து கிடைக்கும் தடுப்பூசிகளும் இருக்கலாம். இந்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் மருத்துவர் பாரதி பவார், "இரண்டு நிறுவனங்களும் (பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம்) தங்கள் உற்பத்தித் திறனில் 90 விழுக்காட்டை அடைந்துள்ளன," என்று கூறினார்.
15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பிற உடல் நலக்குறைவுப் பிரச்சனைகள் இருப்போருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை இந்த மாதம் முதல் அரசு அறிவித்துள்ளது.
அரசு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை அறிவித்தால், சீரம் நிறுவனத்திடம் 500 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக இந்த மாதத் தொடக்கத்தில், சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்தார்.
தடுப்பூசி திட்டம் தொடங்கியதிலிருந்து சுமார் 6.2 மில்லியன் டோஸ்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, வீணடிக்கப்படும் தடுப்பூசிகளின் அளவு குறித்து உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிடக் கணிசமாக குறைவு.
கோவிட் தொற்றுநோய்க்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிற தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், AFP
வேறு எந்த தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்தலாம்?
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நோவாவேக்ஸ், இந்தியாவில் கோவாவேக்ஸ் என்று பெயரிடப்பட்டு சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. மேலும், உலக சுகாதார நிறுவனத்தால் அவசரக்கால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகள் வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்துள்ளது.
சீரம் நிறுவனம் பிபிசியிடம், தற்போது இந்தத் தடுப்பூசிகளைச் சேமித்து வைத்திருப்பதாகவும் இந்தத் தடுப்பூசியை தயாரிப்பதற்கான திறன்கள் கோவிஷீல்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் திறன்களிலிருந்து வேறுபட்டது என்றும் கூறியுள்ளது.
பாரத் பயோடெக் அதன் மூக்கு வழியாகச் செலுத்தப்படும் இன்ட்ராநேசல் பூஸ்டர் தடுப்பு மருந்தை பரிசோதிக்க அனுமதி கோரியுள்ளது.
பயாலஜிக்கல்-இ மற்றும் கோவிட் பில் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கார்மெவேக்ஸ் இந்தியாவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியா ஜூன் மாதம் அவசரக்கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியது. ஆனால், இதுவரை இந்தியாவுக்கு அதன் தடுப்பூசிகள் அனுப்பப்படவில்லை.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை அதுவும்யாருக்கும் செலுத்தப்படவில்லை.
தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதால் எழும் சட்டப்பூர்வ உரிமைகோரல்களுக்கு எதிராக உற்பத்தியாளர்களின் பாதுகாப்பிற்கான விருப்பத்தின் மீது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் விநியோகங்கள் சட்டரீதியான தடைகளை எதிர்கொள்கின்றன - அப்படி தற்போது இந்தியாவில் எந்த தடுப்பூசி தயாரிப்பாளரும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
தடுப்பூசி ஏற்றுமதியின் நிலை என்ன?
இந்தியாவில் தடுப்பூசி தேவை குறைந்து, தினசரி நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், சீரம் நிறுவனம் நவம்பர் மாதத்தில் உலகளாவிய தடுப்பூசி பகிர்வுக்கான கோவேக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவால் ஏற்றுமதி நிறுத்தப்படுவதற்கு முன்பு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தடுப்பூசி திட்டங்களுக்கு உதவவிருந்த கோவேக்ஸ் திட்டம், சீரம் நிறுவன விநியோகத்தை பெரிதும் நம்பியிருந்தது.
ஆனால் ஏற்றுமதி தாமதமானதால், அப்போதிலிருந்து கோவேக்ஸ் திட்டம் மற்ற தடுப்பூசிகளைச் சார்ந்து செயல்படத் தொடங்கியது.
டிசம்பர் 14 வரை கோவேக்ஸ் மூலம் 144 நாடுகளுக்கு வழங்கப்பட்ட 700 மில்லியன் தடுப்பூசிகளில், சுமார் 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் சீரம் நிறுவனத்தால் வழங்கப்பட்டன.
கோவாக்ஸின் கூற்றுப்படி, 2021-ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு இடையில் சுமார் 28 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் சீரம் நிறுவனத்தால் வழங்கப்பட்டன.

பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரானை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் - அறிய வேண்டிய 15 தகவல்கள்
- 2022 புத்தாண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்கள் எவை?
- "2022இல் வெற்றி நிச்சயம்" ஒலிம்பிக் வரை தடம் பதித்த தமிழக வீராங்கனைகள்
- ஆரிய படையெடுப்பு கட்டுக்கதையா? கரக்பூர் ஐஐடி காலண்டரால் தீவிரமாகும் சர்ச்சை - முழு விவரம்
- இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












