கிராமத்தில் இருந்து ஒலிம்பிக் வரை: 2021இல் தடம் பதித்த தமிழக வீராங்கனைகள்

பட மூலாதாரம், Suba Venkatesan
- எழுதியவர், ஜோ. மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
கிராமப்புற, எளிய பின்னணியில் இருந்து தடைகளைத் தாண்டி ஒலிம்பிக் வரை சென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள் தனலட்சுமி, சுபா, ரேவதி ஆகிய மூவரும் 2021 ஆம் ஆண்டில் பலரின் கவனத்தை ஈர்த்தனர்.
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், நாகநாதர் பாண்டி, ரேவதி, சுபா, தனலட்சுமி அகிய 5 பேர் இடம்பெற்றனர். இவர்கள் அனைவருமே கிராமப்புற பின்னணியைக் கொண்டவர்கள்.
ஏழ்மை எதற்கும் தடையில்லை என, திறமை, விடா முயற்சியால் உள்ளூர் களத்தில் தொடங்கி, உலக விளையாட்டு அரங்கமான ஒலிம்பிக் வரை ஓடலாம் என்று நிருபித்துள்ளவர்கள்.

பட மூலாதாரம், Suba Venkatesan
குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற தனலட்சுமி, சுபா, ரேவதி ஆகிய மூவரும், 2022 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்காக தயாராகி வருகிறார்கள்.
இதற்காக மூவரும் தற்போது திருவனந்தபுரத்தில் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சிக்கிடையே பிபிசி தமிழிடம் மூவரும் உற்சாகமாக பேசினர்.

பட மூலாதாரம், Suba
காயம், தோல்வி தடையல்ல
தடகளத்தில் இந்தியாவிற்காக, உலக அளவில் மீண்டும் களம் இறங்கும் இவர்களில் திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த சுபா, "என்னுடைய அப்பா வெங்கடேசன் கட்டுமான சென்ட்ரிங் பணி செய்கிறார். அம்மா இல்லத்தரசி. சாதாரண குடும்பத்தில் இருந்தாலும், பெற்றோரின் தொடர் ஊக்கத்தால்தான் நான் ஒலிம்பிக் வரை செல்ல முடிந்தது.
இப்போது உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகி வருகிறோம். காயம், பின்னடைவுகளால் சோர்ந்து விடக் கூடாது. தொடர்ந்து பயிற்சி எடுத்து, முயற்சி செய்தால் எல்லாரும் சாதிக்க முடியும். அதற்கேற்ப வாய்ப்புகளும் வசதிகளும் இங்குள்ளன. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." என்கிறார்.
தந்தையை இழந்தும் தளராத தன்னம்பிக்கை

பட மூலாதாரம், Dhanalaxmi
திருச்சி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, "சின்ன வயதில் ஊக்கப்படுத்திய தந்தை சேகர் இறந்து விட்டார். ஆனால், தாய் உஷா கூலி வேலைக்கு சென்று என்னை போட்டிகளுக்கு அனுப்பினார். பின்னர் பயிற்சியாளர் மூலம் கிடைத்த ஸ்பான்சர்களின் உதவியால் தேசிய போட்டிகளுக்கு சென்றேன்.
2021-ல் தேசிய தடகளப் போட்டியில் டூட்டிச் சந்தை பின்னுக்குத் தள்ளி, தங்கப் பதக்கம் வென்றது பெரிய நம்பிக்கைகை கொடுத்தது. ஒலிம்பிக் வரை சென்றாலும், அடுத்தடுத்து தயாராக பொருளாதார வசதியில்லாமல் இருந்தேன். அண்மையில், தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் பணி நியமனம் பெற்றது பெரும் துணையாக இருக்கிறது. நிச்சயம் 2022-ல் முத்திரை பதிப்போம்." என்கிறார்.
பாட்டியால் பெற்ற ஊக்கம்

பட மூலாதாரம், Revathi
தாய், தந்தை இருவரையும் சிறு வயதில் இழந்தும் சாதனை புரிந்துள்ளார் மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி. பாட்டி ஆரம்மாள் அரவணைப்பில் வளர்ந்து வருபவர்.
"பெற்றோரை இழந்த என்னை 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க வேண்டாம் என்று பலரும் என் பாட்டியிடம் சொன்னார்கள். ஆனால், அவர்களின் பேச்சை சட்டை செய்யாமல், என் விருப்பத்திற்கு இடம் கொடுத்தார். அவரது ஊக்கத்தால்தான், தேசிய அளவில் 20 பதக்கங்களைப் பெற்றேன். தொடர்ந்து சர்வதேச அளவிலும் பல பதக்கங்களைப் பெற்றுள்ளேன். ஒலிம்பிக்கில் ஓடும் போதும் பாட்டியின் முகம்தான் என் கண்முன் வந்தது. நமக்கு திறமை இருக்கு, ஆர்வம் இருக்கு என்றால், எதிர்மறை விமர்சனங்களை புறந்தள்ளி விட வேண்டும். இலக்கை நோக்கி ஓட வேண்டும். கடந்த ஒலிம்பிக்கில் என்னால் முடிந்த பங்களிப்பை அளித்தேன். அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் இன்னும் சாதிப்பேன்," என்று நம்பிக்கையளிக்கிறார் ரேவதி.
எண்ணிக்கை நீளும்
ஒலிம்பிக் வரை சென்ற இவர்களோடு கோயம்புத்தூர் மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யாவும் தற்போது பயிற்சியில் உள்ளார். சர்வதேச அளவில் 2021-ல் தடம் பதித்த தமிழ்நாட்டை தடகள மங்கைகள் மூவர், 2022 இல் நால்வராக களமிறங்கவுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












