நான்கு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று

கொரோனா தடுப்பூசி - மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி - மாதிரிப் படம்

(இன்று 31.12.2021 வெள்ளிகிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

இரு வெவ்வேறு தடுப்பூசிகளை முறையே இரு டோஸ் (மொத்தம் நான்கு டோஸ்) தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்திலிருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் ஒருவர் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக அந்த பெண் இந்தியா வந்துள்ளார்.

அந்த பெண் ஏற்கனவே இரு நாடுகளில் இரண்டு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளின் 4 டோஸ்களையும் செலுத்தியுள்ளார். ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான இடைவெளியில் அந்த பெண் சீனாவின் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மஹவ் நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இந்தூரிலிருந்து விமானம் மூலம் துபாய் செல்ல அந்த பெண் திட்டமிட்டிருந்தார். இதற்காக, பயண நாளான நேற்று அவர் இந்தூர் விமான நிலையம் வந்தார். விமானத்தில் பயணிப்பதற்கு முன்னர் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 4 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணின் விமானப்பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்ற ஆணை மூலம் மனைவியைக் கட்டாயப்படுத்த முடியாது: குஜராத் உயா்நீதிமன்றம்

நீதிமன்றம் - மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீதிமன்றம் - மாதிரிப் படம்

நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தாலும்கூட, ஒரு பெண்ணை கணவருடன் சோ்ந்து வாழ கட்டாயப்படுத்த முடியாது என குஜராத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக குடும்பநல நீதிமன்றம் ஒன்று பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்து, மேற்கூரிய உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பித்தது.

குஜராத் மாநிலம், பனாஸ்கந்தா மாவட்டத்தைச் சோ்ந்த இஸ்லாமிய தம்பதிக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்று, 2015-ஆம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது.

செவிலியரான அவரை ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மருத்துவமனையில் பணியில் சேருமாறு கணவரும், கணவரின் வீட்டாரும் கட்டாயப்படுத்தியுள்ளனா். இதில் அதிருப்தி அடைந்த அந்தப் பெண் தன் குழந்தையுடன் கணவரின் வீட்டைவிட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியேறியுள்ளாா்.

மனைவியை திரும்ப அழைத்து வர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, மனைவியை தன்னுடன் சோ்ந்து வாழ உத்தரவிடக் கோரி கணவரின் வீட்டாா் சாா்பில் குஜராத் பனாஸ்கந்தா மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவருக்கு சாதகமாக கடந்த ஜூலை மாதம் தீா்ப்பளித்தது. அதாவது, அந்தப் பெண்ணை கணவரின் வீட்டுக்கு திரும்பச் சென்று சோ்ந்து வாழ உத்தரவிட்டது.

அதனை எதிா்த்து அந்தப் பெண் சாா்பில் குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, நிரல் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

அதில் "இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமிய சட்டம், பலதார மணத்தை அனுமதிக்கிறது. ஆனால், அந்த நடைமுறையை ஊக்குவிக்கவில்லை. மேலும், எந்தவொரு பெண்ணையும் அவருடைய கணவரின் மற்ற மனைவிகளுடன் எத்தகைய சூழ்நிலையிலும் கூட்டாக சோ்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்றும் அந்தச் சட்டம் கட்டாயப்படுத்தவில்லை.

டெல்லி உயா்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது போல, இந்தியாவில் ஒரே மாதிரியான சிவில் (உரிமையியல்) சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நம்பிக்கையாக மட்டும் இருந்துவிடக் கூடாது.

திருமண உரிமைகள் என்பது முழுவதுமாக கணவரின் உரிமையைச் சாா்ந்ததாக இருக்கக் கூடாது. அந்த வகையில், கணவருடன் வாழ மனைவியை வற்புறுத்துவது ஏற்புடையதுதானா என்பதை குடும்பநல நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.

எந்தவொரு பெண்ணையும் கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்ற உத்தரவு மூலம் கட்டாயப்படுத்த முடியாது. அதற்கான சட்ட விதிகளும் இல்லை. மேலும், நமது நாட்டின் சட்டங்களை நவீன சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்" என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஷரியா சட்டத்துக்காக கனவு காண்போர் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் - உத்தர பிரதேசத்தில் பாஜக எம்.பி பேச்சு

பாரதிய ஜனதா கட்சி - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரதிய ஜனதா கட்சி - கோப்புப் படம்

சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, அயோத்தியில் கோயில் கட்டியது, காசியில் கோயிலை புனரமைத்தது, மதுராவில் கோயில் கட்டவுள்ளது போன்ற காரணங்களுக்காக பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது என கனோஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளதாக இந்து தமிழ்த் திசையில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக தொடர் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) கனோஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரத் பதக் "நலத்திட்டங்களை நிறைவேற்றும் போது பாஜக ஒருபோதும் யாருடைய மதத்தையும் அறிந்து செய்ததில்லை. யாருடைய சாதியையும் கேட்டதில்லை. 100 வீடுகள் ஒதுக்கப்பட்டால் அதில் 30 வீடுகள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.

வளர்ச்சிப் பணிகளில் பாரபட்சம் காட்டாவிட்டாலும் கூட பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, அயோத்தியில் கோயில் கட்டியது, காசியில் கோயில் புனரமைத்தது, மதுராவில் கோயில் கட்டவுள்ளது போன்ற காரணங்களுக்காக பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது" என அவர் கூறியுள்ளார்.

அதேபோல், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள், ஷரியா சட்டத்திற்காக கனவு காண்பவர்களின் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: