புதுக்கோட்டை சிறுவன் தலையில் இருந்த தோட்டா அகற்றம் - உடல்நிலை எப்படி உள்ளது?

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்த துப்பாக்கி தோட்டா, நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அகற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தோட்டாவை அகற்றினர். இருப்பினும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவன் புகழேந்தியின் உடல்நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்துகுப் பிறகே தெரிவிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
துப்பாக்கி தோட்டா பாய்ந்த விவகாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்) மீது புதுக்கோட்டை வெள்ளனூர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.
இங்கு மாநில காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் உள்ளது. இங்கு இன்று காலை காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பகுதி மைதானத்தில் துப்பாக்கியொன்றில் இருந்து பாய்ந்த தோட்டா, மலையடிவாரத்தில் உள்ள வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி (11) தலையில் பாய்ந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர்.
இதற்கிடையே, சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிராமப் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள அரசு துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் விசாரணை

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சம்பவ பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும். அது போல் தான் இந்த இடமும் உள்ளது. ஆனால் ஏதோ தவறுதலாக இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பசுமலைபட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது," என்று கூறினார்.
தொடரும் சம்பவங்கள் - கந்தரவகோட்டை எம்எல்ஏ
இந்த சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழ் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரையிடம் பேசியபோது, இதுபோன்ற சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளது என்று கூறினார். "ஏற்கெனவே ஒரு பஞ்சாயத்து செயலர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டபோது பெரும் பிரச்னை கிளம்பியது. இந்த பயிற்சி மையம் வேண்டாம் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், பிரச்னை ஏற்படும் சமயங்களில் மட்டும் கோரிக்கை வைப்பதும் பின்னர் மறந்து விடுவதுமாக உள்ளது. இப்போது 11 வயது சிறுவனுக்கு இப்படி நடந்துள்ளது," என்று கூறினார்."சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை டீனுடன் பேசியபோது, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டேன். ஆனால், டீன் அங்கு இல்லை. பொறுப்பு டீன் ராஜ்மோகன் தலைமையில் ஒரு மருத்துவர் குழு அந்தப் பையனுக்கு சிகிச்சை அளித்தது," என்று சின்னச்சாமி தெரிவித்தார்."முன்பே சம்பவம் நடந்தபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்று கேட்டதற்கு, "இது குறித்து நான் மாவட்ட ஆட்சியரிடமும் பேசினேன். இந்த பயிற்சி மையத்தை ஆள் நடமாட்டமில்லாத வேறு ஒரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். நான், தற்போது பெரம்பலூரில் ஒரு கூட்டத்துக்காக வந்துள்ளேன். மாலை மருத்துவமனைக்குச் சென்று விடுவேன்" என்று தெரிவித்தார்.
பயிற்சி தளத்துக்கு ஆட்சியர் தடை
இந்த நிலையில், புதுக்கோட்டை பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் செயல்படுவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் பாதுகாப்புடன் உள்ளதா? என ஆய்வு செய்யப்படும். அந்த மையம், துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு உகந்ததுதானா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கி சுடும் பயிற்சித்தளத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா, 600 மீட்டர் தூரம் பாயும் தன்மையைக் கொண்டது. அந்த பயிற்சி தளத்தில் இருந்து சிறுவன் இருக்கும் இடம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அந்த தோட்டா எப்படி இத்தனை தூரம் கடந்து சிறுவனின் தலைக்குள் பாய்ந்தது என்பது புதிராக உள்ளது. இது குறித்த விசாரணையையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
பிற செய்திகள்:
- விண்வெளியில் 312 நாட்கள்: சோவியத்தின் 'கடைசி குடிமகன்' பூமி திரும்பியதும் சந்தித்த அதிர்ச்சி
- இரானில் தண்ணீர் தட்டுப்பாடு: முதலைகளிடம் இருந்து தப்பிக்கும் மனிதர்கள் - அதிர்ச்சித்தகவல்
- 2021ல் இந்திய கிரிக்கெட் - இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை
- தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? - கூட்டுறவுத்துறை அறிவிப்பு
- 15 - 18 வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது 'அறிவியல்பூர்வமற்றதா'? வல்லுநர்கள் சொல்வது என்ன?
- ஜிஹாதிகளுக்கு ஆதரவாக மதப் பிரசங்கம் செய்ததாக பிரான்ஸில் மூடப்பட்ட மசூதி
- 'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்
- புத்தாண்டு 2022: 2021இல் பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திய அசாதாரண வானிலை நிகழ்வுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












