இரானில் தண்ணீர் தட்டுப்பாடு: மனிதர்களை தாக்கும் முதலைகள் - அதிர்ச்சித்தகவல்

Iran water crisis
படக்குறிப்பு, ஆடு மேய்ப்பவரான சியாஹூக், ஒரு குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்தபோது, அவர் தாக்கப்பட்டார்.
    • எழுதியவர், சர்பாஸ் நசரி
    • பதவி, பிபிசி நியூஸ்

எளிமையான வீட்டு தரையில் படுத்திருந்த சியாஹூக், தனது வலது கையில் ஏற்பட்ட காயத்தால் கடுமையான வலியில் இருக்கிறார். இது ஒரு பயங்கரமான சம்பவத்தின் விளைவு. இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு கடும் வெப்பமான ஆகஸ்ட் மதிய வேளையில், பலவீனமான 70 வயதான இந்த மேய்ப்பன் ஒரு குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றார், அப்போது இரானின் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு சதுப்பு நில முதலை (உள்ளூர் பெயர் காண்டோ) அவர் மீது பாய்ந்தது.

"அது வருவதை நான் பார்க்கவில்லை," என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார். அவரது கண்களில் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் தெளிவாகத் தெரிந்தது..

அதன் தாடைகளுக்கு இடையில் ஒரு நெகிழி [தண்ணீர்] பாட்டிலை அழுத் முடிந்த பிறகு தான் சியாஹூக்கால் தப்ப முடிந்தது. அவர் தனது சிறிய முகத்தை சுருக்கம் நிறைந்த இடது கையால் தடவிப்படி அந்த சம்பவத்தை நினைவுகூர்கிறார்.

சியாஹூக்குவுக்கு அதிக ரத்தம் வெளியேறியதால் அரை மணி நேரம் சுயநினைவை இழந்தார். அவரது சிறிய கிராமமான டோம்பாக்கில் யாருமில்லாத ஆட்டு மந்தையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

ஒரு கொடிய கூட்டுவாழ்வு

நடந்த சம்பவம் பல பாதிக்கப்பட்டவர்களை சியாஹூக்கு நினைவுபடுத்தியது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். பலூச்சி குழந்தைகள் மோசமான காயங்களால் பாதிக்கப்படுவது இரானிய ஊடங்களில் தலைப்பு செய்திகளாயின. ஆனால், அவை விரைவில் மக்கள் ஞாபகத்தில் இருந்து மறைந்துவிடும்.

2016ஆம் ஆண்டில், ஒன்பது வயது அலிரேசாவை அத்தகைய முதலை ஒன்று 2019ஆம் ஆண்டு தாக்கியது. அதேபோல பத்து வயதான ஹாவாவின் வலது கையை முதலை தாக்கியது. துணி துவைப்பதற்காக சென்ற அவர், முதலையால் கிட்டத்தட்ட இழுத்துச் செல்லப்பட்டார். பின், தன் நண்பர்களால் ஹாவா காப்பாற்றப்ட்டார்.

Iran water crisis 2
படக்குறிப்பு, சதுப்பு நில முதலைகளால் தாக்கப்பட்டவர்களில் பலரும் குழந்தைகள்

இரான் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில், இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இதன் விளைவாக, இயற்கை வாழ்விடங்கள் வேகமாக சுருங்கிவிட்டன. இதனால், சதுப்பு நில முதலைகளின் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்படுள்ளது. பட்டினியால் வாடும் இந்த விலங்குகள் தங்கள் எல்லையை நெருங்கும் மனிதர்களை இரையாகவோ அழிந்துவரும் தங்களின் வளங்களுக்கு அச்சுறுத்தலாகவோ கருதுகின்றன.

இரான் மற்றும் இந்திய துணை கண்டம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் சதுப்பு நில முதலைகள் அகன்ற மூக்கு கொண்டவை. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் ( International Union for Conservation of Nature/IUCN) "பாதிக்கப்படக்கூடியவை" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இரானில் 400 உயிரினங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 5% உயிரினங்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. சதுப்பு நில முதலைகளின் பாதுகாப்பதற்கும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகக் இரானின் சுற்றுச்சூழல் துறை கூறுகிறது.

A gando crocodile peers out of the River Bahu-Kalat
படக்குறிப்பு, பஹு-கலாத் நதியிலிருந்து வெளியே தலை காட்டும் சதுப்பு நிலை முதலை

சமீப ஆண்டுகளில் துயரச் சம்பவங்கள் நடந்தபோதிலும், அதற்கான மாற்றை செயல்படுத்த சிறிய அறிகுறி கூட இல்லை. இரானில் சதுப்பு நில முதலைகளின் முக்கிய வசிப்பிடமான பஹு-கலாத் நதியின் ஓரத்தில் பயணிக்கும்போது, அதனால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் பலகைகள் எதுவும் இல்லை.

முறையான அரசின் செயல்திட்டங்கள் இல்லாத நிலையில், தன்னார்வலர்கள் இந்த உயிரினங்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்கள் அதன் தாகத்தைத் தணித்து, பசியைப் போக்குகின்றனர்.

 டோம்பாக்கிலிருந்து ஒரு அழுக்கான பாதையில், ஓர் ஆற்றின் பெயரைக் கொண்ட பாஹு-கலாத் என்ற கிராமத்தில், மலேக்-தினாருடன் நான் அமர்ந்தேன். அவர் பல ஆண்டுகளாக சதுப்பு நில முதலைகளுடன் அங்கு வாழ்கிறார்.

"இந்த உயிரினங்களுக்கு தண்ணீர் வேண்டும் என என் தோட்டத்தையே நான் அழித்தேன்", என்று கூறுகிறார். தனது நிலம் ஒரு காலத்தில், வாழைப்பழங்கள், எலுமிச்சை மற்றும் மாம்பழங்களால் செழித்து இருந்தன என்று அவர் கூறுகிறார்.

Malek-Dinar feeds gandos in the river near his home because their typical prey has become scarce
படக்குறிப்பு, மாலெக்-தினார் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றில் சதுப்பு நில முதலைக்களுக்கு உணவளிக்கிறார்; ஏனெனில், அவற்றின் வழக்கமான இரை அரிதாகிவிட்டது.

அருகில் உள்ள ஆற்றில், அவர் தொடர்ந்து கோழி கறிகளை உணவளிக்கும் பல முதலைகளுக்கு அது இருப்பிடமாக உள்ளது. ஏனெனில் "கடுமையான வெப்பத்தால் தவளைகளும், அவற்றின் வழக்கமான இரைகளும் தட்டுப்பாடாக உள்ளது".

"வாருங்கள், இங்கே வாருங்கள்," என்று முதலைகளை மீண்டும் மீண்டும் வரவழைக்கிறார் மாலேக்-தினார். அதே நேரத்தில், பாதுகாப்பான தூரத்தை வைத்திருக்கும்படியும் என்னிடம் கூறுகிறார். கண் இமைக்கும் நேரத்தில், இரண்டு முதலைகள் தோன்றி, பரிச்சயமான வெள்ளை வாளியில் இருந்து தங்களின் பங்கான கோழியின் உணவுக்காக காத்திருக்கின்றன.

'தண்ணீர் இல்லாமல் யார் வாழ முடியும்?'

இரானின் தண்ணீர் பற்றாக்குறை பலூசிஸ்தானில் மட்டும் இல்லை. கடந்த ஜூலை மாதம் , எண்ணெய் வளம் மிக்க தென்மேற்கு குஜெஸ்தான் மாகாணத்தில் கடுமையான போராட்டங்கள் வெடித்தன. மேலும், கடந்த நவம்பர் மாதம் பிற்பகுதியில், மத்திய நகரமான இஸ்ஃபஹானில் போராட்டத்தைத் தடுக்கும் காவல்துறை, ஜயந்தே-ரவுட் ஆற்றின் வறண்ட படுக்கையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை எச்சரிக்கும் வகையில் வானை நோக்கி சுட்டனர்.

இரானில் ஏற்கனவே புவி வெப்பமையமாதல் அதன் கொடூர முகத்தைக் காட்டும் நிலையில், பல தசாப்தங்களாக நீர் மேலாண்மையின்மையுடன் பலூசிஸ்தான் பேரழிவை சந்திக்க கூடும்.

புழுதிப் புயலில் இருந்து தஞ்சம் அடைய ஷீர்-முகமது பஜாரில் வந்த பிறகு, திறந்த வெளியில் சலவை செய்யும் பெண்களை நான் சந்தித்தேன்.

Iran has suffered water shortages due to climate change and poor resource management
படக்குறிப்பு, பருவநிலை மாற்றம், மோசமான வள மேலாண்மை காரணமாக இரான் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளது.

" இங்கு குழாய் உள்கட்டமைப்பு உள்ளது. ஆனால் தண்ணீர் இல்லை", என்று 35 வயதான மாலெக்-நாஸ் என்னிடம் கூறுகிறார். குளியல் குறித்த என்னுடைய கேள்வியைப் கேட்டு அவரது கணவர், உஸ்மான், சிரித்தார். அருகில், ஒரு பெண் தன் மகனை உப்புத் தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் குளிப்பாட்டுவதை சுட்டிக்காட்டுகிறார்.

ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான உஸ்மானும், அவரது உறவினர் நௌஷெர்வனும் இந்த உரையாடலில் இணைகின்றனர். பக்கத்து நாடான பாகிஸ்தானுக்கு பெட்ரோலைக் கொண்டு செல்வதை தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அங்கு இரானை விட அதிகமாக விலைக்கு விற்கலாம்.

"அதில் பல அபாயங்கள் உள்ளன," என்று நௌஷெர்வன் ஒரு எதிர்மறையான தொனியில் ஒப்புக்கொள்கிறார். "ஆனால், வேலை இல்லாத போது, இந்த வேலையாவது இருக்கட்டும்." 

அந்த அபாயம் உண்மையானது. கடந்த பிப்ரவரியில், இரானின் எல்லைக் காவலர்கள் "எரிபொருள் கடத்தல்" குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

இரானின் அடுத்தடுத்த அரசு பாதுகாப்பு குறித்து கவலைப்படும் நிலையில், முக்கிய எல்லைப் பகுதியில் இதுபோன்ற அடக்குமுறைகள் நடப்பது வழக்கமானவை.

The Baluchistan region is one of the least developed and poorest parts of Iran
படக்குறிப்பு, இரானின் மிகவும் குறைந்த அளவில் வளர்ந்த, ஏழ்மையான பகுதிகளில் ஒன்று, பலுசிஸ்தான் பகுதி.

"அவர்கள் வேண்டுமென்றே எங்கள் வேதனையை கண்மூடித்தனமாக கையாளுகின்றனர். நம்புங்கள்! நாங்கள் அரசுக்கு எதிரி இல்லை," என்று உஸ்மான் கூறுகிறார். இதனை அவரும், ஏமாற்றமடைந்த பலுச்சிகள் பலரும் சமூகத்தின் "திட்டமிட்ட புறக்கணிப்பு" என்று அவர் விவரிக்கிறார்.

இருப்பினும், அவருக்கும் இன்னும் பல பலுச்சிகளுக்கும், வேலையின்மை என்பது தண்ணீர் பற்றாக்குறையை விட மிகக் குறைவான சவாலாக உள்ளது. அவர்கள் ஒரு காலத்தில் அமைதியாக இணைந்து வாழ்ந்த உயிரினமான சதுப்பு நில முதலைகளையும் அவர்களுக்கு எதிராக திருப்பியுள்ளது.

"நாங்கள் எந்த அரசிடமும் உதவியை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எங்களுக்கு வேலைகளை ஒரு தட்டில் வைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்கிறார் நௌஷர்வன். "நாங்கள் பலுச்சிகள் பாலைவனத்தில் ரொட்டித் துண்டுகளுடன் உயிர்வாழ முடியும். ஆனால் தண்ணீர்தான் வாழ்க்கையின் ஆதாரம். அது இல்லாமல் நாங்கள் வாழ மாட்டோம், யார் அப்படி இருப்பார்கள்?".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: