பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள்: அரசு செய்ய வேண்டியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தகாத முறையில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புகிற செய்தி பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் தெரிய வருகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்க தாமதமாவதாக உணர்ந்த மாணவர்கள் புகாருக்குள்ளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் கடந்த டிசம்பர் 24-ம் தேதி கோவை மாவட்டம் வெள்ளலூர் அரசுப் பள்ளியில் நிகழ்ந்தது.
சமீப காலங்களாக பள்ளிகளில் எழுகின்ற பாலியல் புகார்களில் இந்த நிகழ்வு பெரும் கவனம் பெற்றது. நீதி கேட்டு மாணவர்களே போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான ஆசிரியர் பதவிநீக்கம் செய்யப்பட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களே நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டது யாரும் எதிர்பாராதது என்கிறார், வெள்ளலூர் அரசுப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வீரமணி. வெள்ளலூர் அரசுப்பள்ளியில் நடந்ததை விவரித்தவர், ”புகார் அளித்து ஒரு வாரம் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை வர இருந்த நிலையில் தங்களின் புகார் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுவிடுமோ என்று மாணவர்கள் எண்ணியதால்தான் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது முக்கியமான புள்ளி என்றாலும் மாணவர்களை இந்தப் புள்ளிவரை தள்ளியிருக்கக்கூடாது” என்றார்.
கோவை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. கொரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இணைய வகுப்புகள் நடப்பதால் இணைய வழி குற்றங்களும் அதிகம் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் பாலியல் புகார்கள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் காப்பதற்கான சட்டத்தின் (போக்சோ சட்டம்) கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளிகளில் நிகழக்கூடிய குற்றங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளாக 7,293 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. பதிவான வழக்குகளில் 10% வழக்குகளில் மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிற வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும்.
மாநில குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பதிவாகும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. (2016 - 1583 2017 - 1587 2018 - 2039 2019 - 2396 2020 - 3090)
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கை பெற்றோர்களுக்கு வருகிற போது நிச்சயம் குற்றங்களை பதிவு செய்ய முன்வருவார்கள் என்கிறார் உளவியலாளரும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினருமான சரண்யா ஜெய்குமார்.
”போக்சோ என்கிற சட்டம் இருப்பதே தெரியவில்லை”

பட மூலாதாரம், Getty Images
மேலும் அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில் ”நம்மில் பலருக்கும் போக்சோ என்கிற சட்டம் இருப்பதே தெரியவில்லை. குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. குற்றங்கள் பதிவு செய்யப்படுவது தான் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய குறிப்பிட்ட கால அளவு இல்லை.
குற்றங்கள் எப்போது நடந்திருந்தாலும் வழக்குப் பதிவு செய்யலாம். பெற்றோர்கள் பலரும் அச்சத்தினால் தான் புகார் செய்ய முன்வர தயங்குகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய காலத்தில் தண்டனை பெற்றுத்தரப்பட்டால் நிச்சயம் எல்லாரும் புகார் செய்ய முன்வருவார்கள். போக்சோ குற்றங்களை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கும் காவல்துறையினருக்கும் உரிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. போக்சோ வழக்குகள் விரைவாக தீர்க்கப்படுவதை அரசும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கை குழந்தைகளிடம் ஏற்பட்டிருக்கிறது. இது நல்ல முன்னேற்றம் என்றாலும் அது போதாது என்கிறார் கல்வியாளரும், செயல்பட்டாருமான ப்ரின்ஸ் கஜேந்திர பாபு.
பிபிசி தமிழிடம் பேசிய அவர் ”குழந்தைகள் பேசத் தொடங்கினால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வெளிச்சத்திற்கு வரும். ஆனால் குழந்தைகள் மனம் திறந்து பேசுவதற்கான சூழல் இருப்பதில்லை. அதற்கு ஏதுவான சூழலை பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்தே உருவாக்க வேண்டும்.
இங்கே குற்றம் நிகழ்ந்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தைதான் முதலில் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. குழந்தைகளை நம்ப வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படும் குழுக்களும் பெயரளவில் செயல்படுவதாக இல்லாமல் அதன் செயல்பாடுகள் உரிய முறையில் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
மற்ற குற்றங்களைப் போல போக்சோ வழக்குகளை கையாள முடியாது. நாம் குழந்தைகளை கையாள்கிறோம். விழிப்புணர்வு, உளவியலாளர்கள் பயிற்சி என்பதைத் தாண்டி கலை நிகழ்ச்சிகள் மூலமும் குழந்தைகளிடம் உரையாட வேண்டும். குழந்தைகளுக்கு சட்டம், நடைமுறை எல்லாம் தெரியாது. அவர்களுடைய மொழியில்தான் அவர்களிடம் உரையாட வேண்டும்” என்றார்.
பள்ளிக்கல்வி துறை என்ன செய்கிறது?
பெற்றோர் உதவி இல்லாமல் பாலியல் குற்றங்களை தடுப்பது கடினம் என்கிறார் கோவை மாவட்ட தலைமை கல்வி அதிகாரி கீதா. பள்ளிக்கல்வி துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி பிபிசி தமிழிடம் விவரித்தவர், ”அனைத்து பள்ளிகளிலும் புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டு அதில் குழந்தைகளுக்கான உதவி எண் மற்றும் அருகில் உள்ள காவல்நிலையம், பெண் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வைக்கப்பட உள்ளன,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
தன்னார்வ நிறுவனங்கள், உளவியலாளர்கள் அமைந்த குழுக்களை உருவாக்கி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
குழந்தைகள் பெற்றோர்களிடம்தான் எதையும் சொல்வார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பக்குவத்துடன் பேசி புரிதலை உருவாக்க வேண்டும். ஏதேனும் குற்ற சம்பவம் நேர்ந்தாலும் தயக்கமில்லாமல் புகார் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.
குற்றம் நிகழ்ந்தது கூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு தெரிவதில்லை என்கிறார் பெற்றோரான கமலம். மேலும் அவர் பேசுகையில், ”குற்றத்தில் சிறிது, பெரிது என வேறுபாடு கிடையாது. குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே தொடுதல் தொடர்பான புரிதலை ஏற்படுத்த வேண்டும். பல்வேறு சமயங்கள் குற்றங்கள் நிகழ்ந்து பல வருடங்கள் கழித்து குழந்தைகள் அதை குற்றம் என்றே உணர்ந்திருக்கிறார்கள்.
குற்றம் நிகழ்ந்தால் அதை அவமானமாக கருதும் மனநிலை பெற்றோர்களிடம் இருப்பது உண்மை. இது குழந்தைகளையும் பாதிக்கிறது. குற்றத்தை புகார் செய்வதை அவமானமாக பார்க்கக்கூடாது. அதை குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். குற்றத்தை புகார் செய்வதுதான் குற்றத்தை தடுப்பதற்கான வழி” என்றார் கமலம்.
பிற செய்திகள்:
- அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்பு வெளிநாட்டு நிதி பெற இந்திய அரசு தடை
- சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள்: கேரளம், தமிழ்நாடு முதல் 2 இடம்; உ.பி. கடைசி இடம்
- "புழைச்சதே பெரிசு, ஒன்னும் மிஞ்சலை" - அப்பளம் போல நொறுங்கிய திருவொற்றியூர் கட்டடம் - கள நிலவரம்
- கொரோனா தடுப்பூசி: 15-18 வயதுடையோருக்கு எப்போது போடலாம்? - முக்கிய தகவல்கள்








