பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ஆண்டுகளாக ஒலிக்கும் 'தலித்' குரல் - யார் இவர்?

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Manjula Pradeep

படக்குறிப்பு, மஞ்சுளா பிரதீப் தன்னை தலித் செயல்பாட்டாளராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

"நான் மஞ்சுளாவை சந்தித்தபோதுதான், என்னிடம் துப்பாக்கி இருந்தது, ஆனால் அதை சுட தோட்டாக்கள் இல்லை என்பதை உணர்ந்தேன்."

28 வயதான தலித் பெண் ஆர்வலரான பாவனா நர்கர் தமது வழிகாட்டியான மஞ்சுளா பிரதீப் (52) பற்றி விவரிக்கும்போது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு உதவ மஞ்சுளாவிடம் பயிற்சி பெறும் பல பெண்களில் பாவனாவும் ஒருவர். குறிப்பாக, வன்கொடுமைக்கு இலக்கான தலித் பெண்களின் நலன்களில் இவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

ஆழ்ந்த பாகுபாடு கொண்ட இந்து சாதி அமைப்பின் கீழ் மட்டத்தில் தலித்துகளை (முன்பு தீண்டத்தகாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள்) வைத்துள்ளனர். வரலாற்று ரீதியாக பின்தங்கிய குழுவாக இருந்த அவர்களின் உரிமைகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் தொடர்ந்து முறையான மற்றும் பரவலான வகையில் நீதிக்கு புறம்பாக வன்முறையை எதிர்கொள்கின்றனர்.

இந்திய பெண்களில் சுமார் 16% பேர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளில் பாலியல் வன்முறையும் அடங்கும். பெரும்பாலும் இவர்களின் சமூகத்தை தண்டிக்கவோ அவமானப்படுத்தவோ உயர் சாதி குழுக்கள், பாலியல் வன்புணர்வு செய்வதை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

இந்த பெண்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாக தலித் பெண்களின் உரிமைக்காக போராடி வரும் மஞ்சுளா பிரதீப், இந்த ஆண்டு 'தேசிய தலைவர்கள் தேசிய கவுன்சில்' என்ற அமைப்பை நிறுவினார்.

"தலித் சமூகத்தில் இருந்து பெண் தலைவர்களை உருவாக்குவது நீண்ட நாள் கனவு" என்று அவர் கூறினார்.

"கொரோனா பெருந்தொற்று காலத்தில் நான் பாலியல் வன்முறை வழக்குகளை ஆவணப்படுத்திக்கொண்டிருந்தபோது, இதற்காகவே ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டிய நேரம் இது என்று என்பதை உணர்ந்தேன் - பெண்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ உதவும் தலைவர்கள் என்பது அந்த அமைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்."

பாவனா நர்கர் மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வசிக்கிறார், இந்தியா முழுவதும் இருப்பதைப் போலவே, பாவனாவின் பகுதியிலும் ஏழை தலித் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சரியாகக் கிடைக்கவில்லை.

"பாலியல் வன்முறையை எதிர்கொள்ளும் போது பெண்கள் கோபப்படுகிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் அந்த பெண்கள் தங்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்குள் கூட தங்கள் குரலை உயர்த்துவது கடினம். ஏனென்றால் தங்களுடைய சொந்த உரிமைகள் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் பற்றிய அறிவை நாம் கொண்டிருப்பதில்லை," என்று பாவனா கூறினார்.

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்து மதத்தின் பாகுபாடு சாதி அமைப்பில் தலித்துகள் கீழ்நிலையில் உள்ளனர்

2020ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த தலித் பெண்களின் கூட்டத்தில் மஞ்சுளா பேசியதை கேட்டபோது, பாவனாவுக்கு அவரது பேச்சை வாழ்வின் திருப்பமாக அமைந்தது. தலித் பெண்களுக்கும் நீதி கிடைக்கும் தூரத்திலேயே இருக்கிறது என்ற உணர்வை அது ஏற்படுத்தியது.மஞ்சளா கனிவாக பேசினார். சட்ட அறிவுடன் கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளிப்பது உட்பட முறையான தடைகளை சமாளிக்கத் தேவையான உறுதியான யோசனைகளை அவர் கொண்டிருந்தார் என்கிறார் பாவனா.இது பற்றி மஞ்சுளா கூறு்போது, "நான் பாவனா போன் பெண்களை கள வழக்கறிஞர்கள் என அழைக்கிறேன், பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள் நீதி அமைப்பை அணுகவும் தங்களைச் சுற்றியுள்ள தடைகளை எதிர்த்துப் போராடவும் இதுபோன்ற பெண்களின் ஆதரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியம்," என்றார். "பல நேரங்களில் குற்றவியல் நீதி அமைப்பு முழுவதும் தலித் பெண்களுக்கு எதிராக பாரபட்சமாக உள்ளது போலத் தோன்றும். நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்ட பலர் கேவலப்படுத்தப்படுகிறார்கள். 'உயர் சாதியைச் சேர்ந்த ஆண்கள் ஏன் தலித் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வார்கள்? அவர்கள்தான் தீண்டத்தகாதவளாயிற்றே. பாலியல் உறவு கொள்ள அந்த பெண்கள்தான் அழைத்திருக்க வேண்டும்," என்றெல்லாம் சிலர் பேசுவார்கள்.இப்போது, சட்ட அமைப்பு முறையை அலசும் திறன் மற்றும் குற்றவாளிகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் திறனையும் பெற்றிருப்பதால், தாங்கள் அதிகாரம் பெற்றுள்ளவர்களாக பாவனா போன்ற பெண்கள் உணருகிறார்கள்.

இப்போது இவர் உள்ளூரில் ஒரு தலித் இயக்கத்தில் இறுப்பினராக சேர்ந்திருக்கிறார். தமது சுற்றுவட்டாரத்தில் எந்தவொரு தலித் பெண்ணுக்காவது ஏதாவது பாதிப்பு என்றால் முதல் குரலாக அங்கே பாவனாவின் குரல் ஒலிக்கிறது.

2014 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையில் கால கட்டத்தில் தலித் பெண்களின் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 50% அதிகரித்திருப்பதாக அரசாங்க தரவுகள் காட்டுகின்றன.

ஆனால் பெரும்பாலான தலித் பெண்களின் பாலியல் வன்கொடுமைகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமை மற்றும் உயர் சாதி ஆண்கள் மீது புகார்களைப் பதிவு செய்ய காவல்துறை காட்டும் தயக்கம் ஆகியவை பொதுவான தடங்கல்களாக பார்க்கப்படுகின்றன. எனவே தனது பயிற்சியின்போது மஞ்சுளா பிரதீப், பாதிக்கப்பட்ட பெண்ணிடையே மன உறுதியை அதிகரிக்கவும் விரிவான போலீஸ் புகாரின் அவசியத்தை அந்த பெண் புரிந்துகொள்ளவும் தேவையான அறிவுரைகளையும் யோசனைகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இந்த உள்ளுணர்வு எண்ணம், குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிய தமது சொந்த அனுபவத்திலிருந்தே கிடைத்ததாக பாவனா கூறுகிறார். அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது, பக்கத்தில் வசித்து வந்த நான்கு ஆண்களால் அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு தலித் பெண்ணின் மரணம் கடந்த ஆண்டு போராட்டங்களை தூண்டியது

"நான் அன்று ஒரு மஞ்சள் நிற ஃப்ராக் அணிந்திருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது," என்று அவர் கூறினார்.

"அவர்களின் முகங்கள் மற்றும் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த கற்பழிப்பு என்னை புரட்டிப்போட்டது. அது என்னை மிகவும் கூச்ச சுபாவமுள்ள மற்றும் பயமுறுத்தும் குழந்தையாக மாற்றியது. நான் அந்நியர்களுக்கு பயந்தேன், என் வீட்டிற்கு யாராவது வரும்போது ஒளிந்து கொள்வேன்."தனக்கு நேர்ந்த சம்பவத்தை ரகசியமாக வைத்திருந்ததாக கூறினார் மஞ்சுளா.

பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளவே மிகவும் பயந்ததாக அவர் தெரிவித்தார். என் அம்மா ஒரு இளம்பெண்ணாக இருந்தார். அவருக்கு அப்போது 14 வயதே இருக்கும். தன்னை விட 17 வயது மூத்தவருக்கு அவர் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தனது தந்தை மகிழ்ச்சியற்றவராக இருந்ததாகவும், அவர் தனக்கு மகனே பிறக்க வேண்டும் என விரும்பியதாகவும் பகிர்ந்தார் மஞ்சுளா. "என் தாயை என் தந்தை இழிவாக நடத்தினார். என்னை கேலி செய்தார். என்னை அசிங்கமாக அழைத்தார், அவர் என்னை தேவையற்றவராகவும் அன்பற்றவராகவும் உணர்ந்தார்," என்று அவர் கூறினார்."பின்னர் எனது தந்தை இறந்துவிட்டார், அவர் உத்தர பிரதேசத்தில் பிறந்தார், ஆனால் வேலைக்காக குஜராத்துக்கு சென்றார். மேலும் தனது புதிய வீட்டில், தனது தலித் அடையாளத்தையும் தனது கடைசி பெயரையும் மறைத்தார். அவர் தனது மனைவியையும் மகளையும் தனது முதல் பெயரான பிரதீப்பை எங்களுடைய கடைசி பெயராக்கினார் எனது தந்தை."

இப்போது தனது சாதி அடையாளம் மறைக்கப்படவில்லை. இருந்தாலும் வதோதரா போன்ற பெரிய நகரத்தில் கூட ஜாதிய பாகுபாடு பல்வேறு வடிவங்களை கொண்டிருந்தது என்கிறார் மஞ்சுளா."எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, ​​என் ஆசிரியர் மாணவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் சுத்தமாக இருப்பதன் அடையாளத்தை வைத்து வரிசைப்படுத்தச் செய்தார். அந்த வகுப்பில் மிகச்சிறந்த தூய்மையான மாணவிகளில் ஒருவராக இருந்தபோதும் நான் தலித் என்ற ஒரே காரணத்துக்காக கடைசியில் நிற்க வைக்கப்பட்டு மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன்," என்றார் மஞ்சுளா.

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, சமூகப் பணி மற்றும் சட்டத்தில் பட்டம் பெற இவர் முடிவு செய்தார்.

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Manjula Pradeep

படக்குறிப்பு, மஞ்சுளா பல தலித் பாலியல் பலாத்காரங்களில் தப்பிப்பிழைத்தவர்களுக்கு நீதி கேட்க உதவினார்

கிராமப்புறங்களில் இடைவிடாத மேற்கொண்ட பயணங்கள், தலித்துகளின் பிரச்னையை கையில் எடுக்க இவரைத் தூண்டியது. 1992ஆம் ஆண்டில், ஐந்து ஆண்களால் நிறுவப்பட்ட தலித் உரிமைகள் அமைப்பான நவ்சர்ஜனில் சேர்ந்த முதல் பெண் ஆனார் மஞ்சுளா.

அந்த அமைப்பின் சக ஊழியர் ஒருவர் உயர்சாதி ஆண்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அவர் அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக தேர்வானார். "ஒரு தலித் பெண் இந்த அளவுக்கு உயருவது அரிது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருடனும் இணைந்து செயல்படும் ஒரு அமைப்பை வழிநடத்த நான் நான்கு ஆண்களை தேர்தலில் தோற்க வேண்டியிருந்தது," என்று மஞ்சுளா பெருமிதத்ததுடன் கூறினார்.

தமது அமைப்பின் மிக முக்கிய நோக்கமாக, பாலியல் வல்லுறவில் இருந்து தப்பித்த பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி வருகிறார். இதுவரை 50க்கும் அதிகமான தலித் பெண்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகலுக்கு தண்டனை கிடைக்கவும் இவர் உதவியிருக்கிறார்.

தலித் பெண்களுக்கு தங்களுடைய சொந்த சமூகத்திற்குள் மரியாதைக்குரிய தலைவர்கள் ஆக மாற பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற மஞ்சுளாவின் நம்பிக்கை இப்போது வலுவடைந்துள்ளது. "எனக்கு இன்னொரு மஞ்சுளா வேண்டாம்" என்ற அவர், "இந்த பெண்கள் தங்கள் சொந்த அடையாளத்தையும் வளர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் என் நிழலின் இருக்காமல், சொந்தமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக திகழ வேண்டும்,"" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :