"பொழச்சதே பெரிசு, ஒன்னும் மிஞ்சலை" - அப்பளம் போல நொறுங்கிய திருவொற்றியூர் கட்டடம் - கள நிலவரம்

திருவொற்றியூர் கட்டடம்

பட மூலாதாரம், @kuppan_karthik

படக்குறிப்பு, திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் தரைமட்டமான குடியிருப்புக் கட்டடம்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான கட்டடம் முழுமையாக சரிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால், பல குடும்பங்கள் உடைமைகள், முக்கிய ஆவணங்களை சம்பவ பகுதியில் இழந்தன. அங்கு என்ன நடந்தது என்பதை பிபிசி தமிழின் விஜயானந்த் நேரில் பார்வையிட்டு வழங்கும் சிறப்புச் செய்தி இது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. அங்குள்ள நான்கு பிளாக்குகளில் 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை டி பிளாக் அதிகாலை 5 மணியளவில் கட்டடத்தில் விரிசல் இருப்பதாக குடியிருப்புவாசிகள் உணர்ந்தனர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் ஒருவர் பின் ஒருவராக அச்சம் காரணமாக கட்டடத்தை விட்டு வெளியே வந்துள்ளனர்.

அனைவரும் முழுமையாக வெளியேறிய சிறிது நேரத்தில் கட்டடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கட்டடம் இடிந்த பகுதிக்கு வந்தனர்.

திருவொற்றியூர் கட்டடம்

பட மூலாதாரம், @idhaliyan

குடியிருப்புகளில் இருந்து அனைவரும் வெளியேறியதாக கூறப்பட்டாலும், யாராவது இடிபாடுகளுக்குள் உள்ளார்களா என்று அதிகாரிகள் தேடுதல் பணியை முடுக்கி விட்டனர். ஆனால், நல்வாய்ப்பாக உயிர்தேசம் ஏற்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

சம்பவ பகுதியில் உள்ள நிலவரத்தை பிபிசி தமிழின் செய்தியாளர்கள் குழு நேரில் பார்வையிட்டது.

சி-பிளாக்கில் வசித்து வருபவரும் உள்ளூர் மகளிர் குழு உறுப்பினருமான ஒரு பெண்மணி சம்பவத்தை விவரித்தார்.

காணொளிக் குறிப்பு, திருவொற்றியூர் கட்டடம்: "வெளியே வந்த ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட்டது!"

"அதிகாலை 5.30 மணியளவில் கட்டடம் குலுங்குவதை உணர்ந்தோம். டி பிளாக்கில் எங்களுடைய மாமா வசித்து வந்தார். அவரும் கட்டடம் குலுங்குவதாகக் கூறி வெளியே வந்திருந்தார். எங்களுடைய பகுதியில் தனிப்பட்ட அளவில் தலைவரோ பிரதிநிதியோ கிடையாது. அதனால் கன்னியரசிடம் தெரிவித்தோம். ஆனால், காலை 9 மணிவரை அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை," என்றார்.

"பிறகு குடியிருப்புவாசிகளே அரசுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு முறையிட்டோம். கட்டடத்தில் விரிசல் அதிகமானதால் அதில் வசித்த அனைத்து குடியிருப்புவாசிகளும் வெளியே வந்தனர். கட்டடத்துக்கு லேசான சேதம் ஏற்படும் என்றுதான் முதலில் நினைத்தோம். கட்டடமே சரியும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்று அந்த பெண்மணி தெரிவித்தார்.

கட்டடம் விழுந்த சம்பவம் காரணமாக, அருகே உள்ள வளாகத்தில் பலவீனமான குடியிருப்புகளில் இருப்பவர்களையும் வெளியேறுமாறு உள்ளூர் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அதில் ஒரு பெண்மணி, "சரியாக காலை 9.30 மணியளவில் கதவை தாழிட முடியவில்லை. ஸ்லாப் உடைகிறது என்று பலரும் கூறினார்கள். நல்லவேளையாக அனைத்து குடியிருப்புவாசுகளும் வெளியே வந்த ஒரு சில நிமிடங்களில் கட்டடம் அப்பளம் போல சரிந்து நொறுங்கியது," என்று கூறினார்.

"ஏற்கெனவே மழை பெய்தபோதும் கட்டடம் வலுவிழந்த நிலையில் இருப்பதாக கூறினோம். ஆனால், அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே குடிசைமாற்று குடியிருப்பில் சேதம் இருந்ததால் எந்தெந்த வீடுகளில் சேதம் உள்ளன என்று அதிகாரிகள் வந்து கேட்டனர். அதன் அடிப்படையில் நாங்கள் பிரச்னைகளை எழுத்துபூர்வமாக தெரிவித்தோம். பிறகு கதவு, வெளிப்புற விரிசல்களில் பூச்சுவேலை செய்தனர். ஆனால், வீட்டுக்குள் இருந்த நிலை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை," என்று வீட்டை பறிகொடுத்த ஒரு குடியிருப்புவாசி கூறினார்.

திருவொற்றியூர் கட்டடம்
படக்குறிப்பு, கட்டடம் இடிந்த பகுதியில் வீடுகளை இழந்து வீதியில் வாழும் குடியிருப்புவாசிகள்

கட்டடம் இடிந்த பகுதியில் அந்தந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடுத்திய உடையுடன் மட்டுமே வெளியே வந்துள்ளனர். அவர்களின் பொருட்களைக் கூட வெளியே எடுக்க நேரம் இருக்கவில்லை என்று பலரும் தெரிவித்தனர்.

அருகே உள்ள வளாகத்தில் நான்காவது மாடியில் வசிக்கும் ஒரு பெண்மணி, "22 வருடங்களாக இங்கேயே வாழ்ந்து வருகிறோம். 2012இல் வெள்ளம் வந்தபோது எல்லா வீடுகளிலும் மேற்கூரை பாதிக்கப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட கூரைகளில் ஓடுகளை புதுப்பித்துக் கொடுத்து விட்டு சென்றனர். குடிசை மாற்று வாரியத்தில் இருந்து ஆய்வுக்காக வந்தபோது சுவர் பலவீனம் அடைந்து விட்டதை சுட்டிக்காட்டினோம். எல்லா வீடுகள் பற்றியும் குறிப்பெடுத்து வருகிறோம். அறிக்கை அடிப்படையில் துறை ரீதியாக முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், ஜன்னல் கூரைகள் மட்டுமே பூச்சு வேலைக்கு உட்படுத்தப்பட்டன," என்றார்.

திருவொற்றியூர் கட்டடம்

"இப்போது நாங்கள் சாலையில்தான் இருக்கிறோம். 18 வருடங்களாக இந்த பகுதியில்தான் இருக்கிறோம். சாப்பிட உணவு மட்டும் கொடுத்தால் போதுமா.... இப்படியே சாலையில் இருக்க முடியுமா? குழந்தைகளுடன் எப்படி இங்கேயே வாழ்வது? என்று கேட்கிறார் மற்றொரு பெண்மணி.

இதற்கிடையே, சம்பவ பகுதியை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் 23 ஆயிரம் வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் 40 முதல் 50 வருடங்கள் பழமையானவை. அவை முற்றிலும் பலவீனமான நிலையில் உள்ளன என்று அனைத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளையும் ஆய்வு செய்த தரக்கட்டுப்பாட்டு நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

திருவொற்றியூர் கட்டடம்
படக்குறிப்பு, தரைமட்டமான கட்டடம்

திருவொற்றியூரில் இடிந்த கட்டடம் 1993-ல் கட்டப்பட்டவை. மோசமான சூழலில் இருக்கும் வீடுகளைக் கட்ட ரூ. 1.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 7500 கட்டிடங்களை 2,500 கோடி ரூபாய் செலவில் கட்ட உள்ளோம். அந்த பணிகளின் ஒரு பகுதியாக கோட்டூர்புரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிப்பில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ. 8 ஆயிரம் இடம்பெயர்வதற்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டது. அந்த தொகை தற்போது ரூ. 24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

பாதிக்கப்பட்ட மக்களை எங்கு தங்க வைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தருகிறோம் என்று அரசு கூறியிருக்கிறது.

கடைசியாக வந்த தகவலின்படி, கட்டடம் சரிந்த சம்பவத்தில் வீட்டை பறிகொடுத்தவர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், கட்டடம் வலுவிழந்த நிலையில் இருக்கும் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் நடந்த சம்பவத்துக்கு பிறகு வீடுகளுக்குள் செல்ல அஞ்சுகிறார்கள்.

வலுவிழந்த கட்டடத்துக்கு மாற்றாக ஒரு கட்டடத்தை கட்டித் தர வேண்டும், குடியிருப்புவாசிகளின் உயிர்களை காக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.

காணொளி, படங்கள்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: