'எமோஷனலாக சத்தம் போட்டுவிட்டேன்' - தூத்துக்குடி சோலார் பேனல் கம்பெனியோடு மோதிய தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்

markandeyan MLA

பட மூலாதாரம், markandeyan MLA Facebook page

தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பணிகளை தடுத்து நிறுத்தும் வகையில் தி.மு.க எம்.எல்.ஏ நடந்து கொண்டவிதம், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ''மக்களின் புகார்களை அந்த நிறுவனம் சரிசெய்யாததால் சற்று கோபப்பட்டுவிட்டேன்'' என்கிறார் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன். என்ன நடந்தது?

அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், எம்.எல்.ஏவின் செயல்பாட்டில் உள்நோக்கம் உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை என்றும் சோலார் பேனல் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஜி.ஆர்.டி நிறுவனம் கூறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தனியார் நிறுவனம் ஒன்று சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதியைப் பெற்ற அந்த நிறுவனம் கோவில்பட்டியில் உள்ள புங்கவர்நத்தம், ஆத்திக்கிணறு, முள்ளுப்பட்டி, சோழபுரம், ஈராச்சி உள்பட பத்து ஊராட்சிகளில் உள்ள நிலங்களை கையகப்படுத்தியது.

400 ஏக்கரில் சூரிய சக்தி மின்சாரம்

சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பணிகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.கவினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதுதொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். மேலும், சோலார் பேனல் அமைப்பதற்காக நீர்வரத்து ஓடைகளையும் அந்த நிறுவனம் சேதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

எம்.எல்.ஏ நடத்திய போராட்டம்

இதன் தொடர்ச்சியாக விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தலைமையிலான தி.மு.கவினர், சோலார் பேனல் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தினர். மேலும், தனியார் நிறுவனத்தில் பணிகள் நடக்கும் இடத்துக்குச் சென்ற எம்.எல்.ஏ, அங்கிருந்த பணியாளர்களை வசைபாடிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சோலார் பேனல் அமைக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் நிறுத்தியது.

தூத்துக்குடி சோலார் பேனல் கம்பெனியோடு மோதிய தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்

இந்த விவகாரத்தில் ஆளும்கட்சி எம்.எல்.ஏவே நேரடியாக களமிறங்கியதை தனியார் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனம் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரத்தை நேரடியாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணை நடத்தியதையடுத்து, எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அமைதியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மார்க்கண்டேயன் சொல்வது என்ன?

``என்ன நடந்தது?'' என விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``சோலார் பேனல் அமைப்பதற்காக மத்திய அரசிடம் அவர்கள் அனுமதி வாங்கியுள்ளனர். இதற்காக நிறைய இடங்களில் வேலை செய்தாலும், அந்தப் பணிகளை அவர்கள் சரியாகச் செய்யவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் நான் நேரடியாக சென்று இரண்டு முறை பேசியும் அவர்கள் அதனைச் சரிசெய்யவில்லை. அதனால் சற்று கோபப்பட்டுவிட்டேன். அவர்கள் மாநில அரசிடம் முறைப்படி அனுமதி வாங்கிவிட்டுச் செய்யட்டும். அனுமதியைப் பெறுவதற்கு பத்து நாள்கள் ஆகும். அவ்வாறு அனுமதி வாங்காமல் செய்வதால் மக்களுக்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறினேன்'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``100, 200 ஏக்கர் என நிலங்களை அந்த நிறுவனம் வாங்குவதில் தரகர்கள் சில தவறுகளைச் செய்துள்ளனர். இதனை சரிசெய்ய வேண்டும் எனவும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் கூறினேன். இதனை முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம்'' என்றார்.

செந்தில்பாலாஜியின் விசாரணை

``மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணை நடத்தியதாகச் சொல்கிறார்களே?'' என்றோம். `` ஆமாம். அவர் விசாரணை நடத்தினார். குறைகளை சரிசெய்து தருவதாக கம்பெனி தரப்பிலும் உறுதியளித்துள்ளனர்'' என்றார்.

தூத்துக்குடி சோலார் பேனல் கம்பெனியோடு மோதிய தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்

``ஆளும்கட்சி எம்.எல்.ஏ நேரடியாக களமிறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?'' என்றோம். `` இரண்டு மாதகாலமாக இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. வடகிழக்குப் பருவமழை காலத்தில் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சிலவற்றைச் செய்யுமாறு கூறினோம். இங்குள்ள அனைத்துமே சிறிய சிறிய கிராமங்கள். நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை. என்னுடைய நோக்கம், அனைத்தையும் நன்றாகச் செய்ய வேண்டும் என்பதுதான். நான் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை''என்றார்.

`` அதற்காக, யாராக இருந்தாலும் என்னுடைய தொகுதிக்குள் அனுமதிக்க மாட்டேன் என நீங்கள் கூறியதாகத் தகவல் வெளியானதே?'' என்றோம். `` ஆமாம். நான் மக்களின் பிரதிநிதி. அவர்களுக்கும் நாம் ஆதரவாக இருக்க வேண்டும். ஊர் மக்கள் புகார்களைச் சொல்கிறார்கள். அதனை சரிசெய்து கொடுக்க வேண்டும். நான் அவர்களை திட்டியதை வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டார்கள். நான் கூறிய பிறகும் அவர்கள் என் பேச்சைக் கேட்காததால் சற்று எமோஷனலாக சத்தம் போட்டுவிட்டேன்'' என்றார்.

இதுதொடர்பாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவனிடம் பேசுவதற்காக பிபிசி தமிழ் சார்பில் தொடர்பு கொண்டோம். ``உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் இருக்கிறார். விரைவில் உங்களிடம் பேசுவார்'' என்று மட்டும் அவரது உதவியாளர் ஆல்பர்ட் பதில் அளித்தார்.

இதுதொடர்பாக, சோலார் பேனல் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஜி.ஆர்.டி நிறுவனத்தின் கள மேலாளரும் பொறியாளருமான பவித்திரனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக சனிக்கிழமையே கூறிவிட்டனர். தற்போது பணிகள் தொடர்ந்து வருகின்றன. எம்.எல்.ஏவின் செயல்பாட்டில் உள்நோக்கம் உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. இப்போது பிரச்னை எதுவும் இல்லை'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: