நரேந்திர மோதி அரசு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் பேச்சு சமீபத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சனிக்கிழமையன்று நாக்பூரில் வேளாண் தொழில் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய தோமர், "வரும் காலத்தில், மோதி அரசு சில மாற்றங்களுடன் வேளாண் சட்டத்தை கொண்டு வரலாம் என்று தெரிகிறது, " என கூறினார்.
"நாங்கள் வேளாண் சட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால், சிலர் அதை விரும்பவில்லை. ஆனால், இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் கழித்து ஏற்படும் பெரும் முன்னேற்றம் இது. நரேந்திர மோதி தலைமையில் இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அரசு ஏமாற்றமடையவில்லை. நாங்கள் ஓர் அடி பின்வாங்கினோம்; மீண்டும் முன்னேறுவோம். ஏனெனில், விவசாயிகள் இந்திய நாட்டின் முதுகெலும்பு. நம் முதுகெலும்பு வலுவாக இருந்தால் மட்டுமே, நம் நாடு வலுவடையும்", என்று நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் உடன் இருந்தார். வேளாண் துறையில் பெரும் அளவிலான முதலீடு தேவை என்றும் தோமர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "மற்ற துறைகளில் தனியார் முதலீடுகள் வந்துவிட்டன, இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகின. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்தொழில்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. வேளாண் துறையும் பெரும் துறையே; ஆனால், அத்தகைய வாய்ப்பு இன்னும் இத்துறைக்கு கிடைக்கவில்லை", என்று தெரிவித்தார்.
வேளாண் துறையில் தனியார் முதலீடுகள் தேவை இருக்கிறது; இதனால், கிராமங்களில் கிடங்குகளையும், குளிரூட்டப்பட்ட சேமிப்புக்கு வசதிகளையும் உருவாக்க முடியும் என்று நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
நரேந்திர சிங் தோமரின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், " நாட்டின் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர மோதியின் மன்னிப்பை அவமதித்துள்ளார் - இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மீண்டும் விவசாயத்திற்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுத்தால், மீண்டும் விவசாயங்களின் சத்தியாகிரகம் தொடங்கும். முன்பும் ஆணவத்தை தோற்கடித்தோம்; மீண்டும் தோற்கடிப்போம்," என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சூரஜ்வாலாவும் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர் சந்திப்பில் பேசியது விவசாயிகளுக்கு எதிரான சதி என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து சூரஜ்வாலா கூறுகையில், "விவசாயத்திற்கு எதிரான நரேந்திர மோதி அரசின் சதி திட்டம் இறுதியாக அம்பலமாகியுள்ளது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகு, இந்த மூன்று கருப்பு வேளாண் சட்டங்களையும் மீண்டும் கொண்டு வர மோதி அரசு சதி திட்டம் தீட்டுவது தெளிவாக தெரிகிறது. முதலாளித்துவ தலைமைகளின் அழுத்தத்தின் கீழ், இந்த கருப்பு சட்டங்களை மீண்டும் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வர நினைக்கும் ஆணவமிக்க அரசையும், சதிகார பிரதமரின் பொய்யையும், அவரது கொள்கை அரசியலையும் முற்றிலுமாக தோற்கடிப்போம்", என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "ஐந்து மாநிலங்களில் பா.ஜ.க அழிக்கப்படுவதன் மூலமே, விவசாயத்திற்கு எதிரான மூன்று சட்டங்களும், திருட்டுத்தனமான நுழையும் கதவை மூடமுடியும் . நரேந்திர மோதி அரசின் தோல்வியில்தான் விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்தது. இந்த கருப்பு சட்டங்களை மீண்டும் கொண்டு வர சதி செய்யும் நரேந்திர மோதி அரசின் முயற்சிக்கு பதில் பிரதமர்தான் கூற வேண்டும்," என்றார்.
முன்னதாக, நவம்பர் 21ம் தேதியன்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவும், பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜும் விவசாய சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று கூறியதாகவும், இப்போது இதை வேளாண் அமைச்சரே உறுதி செய்துள்ளதாகவும் சூரஜ்வாலா கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 19ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோதி மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது அனைவரையும் வியப்படைய செய்தது. கடந்த நவம்பர் 29ம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் வாபஸ் பெறும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, வேளாண் அமைச்சரும், மோதி அமைச்சரவையில் உள்ள பிற அமைச்சர்களும் போராட்டங்களில் ஈடுப்பட்டிருந்த விவசாயிகளை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாய அமைச்சரில் அறிவிப்பை புறக்கணிக்க முடியாது. ஒருபுறம், மோதி மன்னிப்பு கேட்டாலும், மறுபுறம் அவரது மறைமுகமான திட்டம் வெளியில் வந்துவிட்டது. தேர்தலை முன்னிட்டு, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, ஓர் அடி பின் வாங்கியிருக்கிறார். தேர்தலுக்கு பின், தன் நண்பர்களுக்காக, விவசாயிகளுக்கு எதிராகப் பல நடவடிக்கைகள் எடுப்பார் என்று பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சை வலுவடைந்த நிலையில், இதுகுறித்து நரேந்திர சிங் தோமரும் விளக்கம் அளித்தார். "இந்திய அரசு நல்ல சட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அது வாபஸ் பெறப்பட்டது. இந்திய அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகவே தொடர்ந்து பாடுபடும்", என்று தோமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
"ஓர் அடி பின்வாங்கிவிட்டீர்கள், ஆனால் முன்னேறி செல்வோம் என்று நீங்கள் கூறினீர்கள், புதிய மசோதா வருமா," என்று செய்தி முகமையான ஏ.என்.ஐ வேளாண் அமைச்சரிடம் ஒரு கேள்வி கேட்டது. அதற்குப் பதிலளித்த தோமர், "இல்லை, இல்லை, நான் அப்படி கூறவில்லை. இது முற்றிலும் பொய்யான பிரசாரம்", என்றார்.
உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நவம்பர் 19ம் தேதியன்று மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.
நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், "இன்று முழு நாட்டிற்கும் நான் ஓர் அறிவிப்பை கூற வந்துள்ளேன், மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். இம்மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான செயல்முறையை நிறைவேற்றுவோம்," என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "விவசாயிகளின் நலனுக்காகவும், குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காகவும், நாட்டின் விவசாய துறையின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், கிராமங்களில் வாழும் ஏழைகளின் எதிர் காலத்திற்காகவும் எங்கள் அரசு உள்ளது. விவசாயிகள் மீதுள்ள உண்மையான உணர்வுடனும், அர்ப்பணிப்புடனும், நல்ல நோக்கத்துடன், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது", என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
பிற செய்திகள்:
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- 7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?
- "இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது": அண்ணாமலை
- ஸ்விகி அறிக்கை சுவாரசியம்: 6 கோடி பிரியாணி ஆர்டர்; அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் டிப்ஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












