ஸ்விகி ஆர்டரில் பிரியாணி முதலிடம்: 6 கோடிக்கும் அதிகமான ஆர்டர் பெற்ற இந்திய உணவு

biryani

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 6 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரம் பிரியாணிகள் 'ஸ்விகி' உணவு டெலிவரி செயலி மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இந்தியர்கள் ஒரு நிமிடத்திற்கு 115 பிளேட் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர் என ஸ்விகியின் 6ஆவது ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதே போன்று நிமிடத்திற்கு நியூசிலாந்து நாட்டு மக்கள் தொகைக்கு சரிசமமான எண்ணிக்கையிலான சமோசாக்களை இந்தியர்கள் ஆர்டர் செய்துள்ளனர். ஸ்பெயினில் நடைபெறும் தக்காளி திருவிழாவில் 11 ஆண்டுகள் பயன்படுத்தும் அளவிற்கு தக்காளி சார்ந்த பொருள்களை ஆர்டர் செய்துள்ளனர்," என ஸ்விகி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று 2020ஆம் ஆண்டு ஒரு நிமிடத்திற்கு 90 பிளேட் பிரியாணிதான் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதுவே இந்த வருடம் 115 பிளேட் ஆக அதிகரித்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணி முதல் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் சிக்கன் பிரியாணி தனது முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

அதேபோன்று ஸ்விகியில் புதியதாக சேர்ந்த 4.25 லட்சம் வாடிக்கையாளர்கள் முதன்முறையாக பிரியாணியைதான் ஆர்டர் செய்துள்ளனர்.

போன வருடமும் முதல் முறையாக ஸ்விக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகம் பிரியாணியைதான் ஆர்டர் செய்துள்ளனர்.

திண்பண்டத்தை பொறுத்தவரை அதிகமான நபர்கள் சமோசாவை ஆர்டர் செய்துள்ளனர். இனிப்பில் சுமார் 21 லட்சம் பேர் குலாப் ஜாமூனை ஆர்டர் செய்துள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ஒருவர் 6000 ரூபாய் டிப்ஸ் வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஒருவரும், போபாலை சேர்ந்த ஒருவரும் தலா 5 ஆயிரம் ரூபாய் டிப்ஸாக வழங்கியதாக ஸ்விகி தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியல்; சிக்கன் பிரியாணி, சிக்கன் ப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா மற்றும் நெய் பொங்கல்.

சென்னை, கொல்கத்தா, லக்னவ், ஐதராபாத் ஆகிய நகரங்களில் சிக்கன் பிரியாணிதான் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பெங்களூருவை பொறுத்தவரை மசாலா தோசை அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக உள்ளது.

2021ஆம் ஆண்டை பொறுத்தவரை ஆரோக்கியமான உணவுக்கான தேடல் 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் அறிக்கை

சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ப்ரைட் ரைஸ் மற்றும் மட்டன் பிரியாணி இந்த ஐந்து உணவுகளைதான் 2020ஆம் ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்தனர் என ஸ்விகியின் ஐந்தாவது ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு சிக்கன் பிரியாணி வெஜிடபிள் பிரியாணியை காட்டிலும் 6 மடங்கு அதிகம் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.

அதே போன்று கடந்த ஆண்டு வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் அலுவலகங்களுக்கு ஆர்டர் வழங்கியதை காட்டிலும் வீடுகளுக்கே அதிக ஆர்டர்களை வழங்கியதாக ஸ்விகி தெரிவித்திருந்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: