வேலூர் நகைக்கடையில் 16.5 கிலோ நகை கொள்ளை: திருச்சி கொள்ளை போலவே நடந்ததா?

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/getty
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 16 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி நகைக்கடை ஒன்றில் நடந்த இதைப் போன்ற துணிகரக் கொள்ளை நடந்த விதத்தைப் போலவே இதுவும் அமைந்துள்ளது.
திருச்சி கொள்ளையில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட கும்பலுக்கு வேலூர் கொள்ளையிலும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாநகரில் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15ம் தேதி இரவில், பின்பக்க சுவற்றை துளையிட்டு, இந்தக் கொள்ளை நடந்துள்ளது. இக்கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகளும், புகைப் படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. அக்காட்சியில், மெலிந்த உடல்வாகு உள்ள ஒரு நபர் உள்ளே நுழைகிறார்.
முகத்தை முழுவதும் மறைக்கும் வகையில் முகத்துக்கு சிங்க முக வடிவம் கொண்ட முகமூடி அணிந்துள்ளார். தலையில் நீளமான விக் அணிந்து, ஜெர்க்கின் அணிந்து, கை, கால்களில் உறை (சாக்ஸ்) அணிந்துள்ளார். சுற்றியும் நோட்டமிட்ட வாரே பூனை போல மெல்ல நடந்து செல்கிறார். பின்னர் தனது கையில் எடுத்து வந்திருந்த ஸ்பிரே பாட்டிலால் சிசிடிவி கேமிராக்கள் மீது ஸ்பிரே செய்த பிறகு கொள்ளையை தொடங்குகிறார். இது மாதிரி அங்கிருந்து மொத்தம் 12 சிசிடிவி கேமிராக்களை ஸ்பிரே அடித்து மறைத்துள்ளார். எந்தவித பதற்றமும் இல்லாமல் மிக சாவகாசமாக கொள்ளை அடித்துக் கொண்டு அவர் புறப்பட்டது சிசிடிவி பதிவில் தெரியவருகிறது.
கொள்ளை நடந்த நேரத்தில், அந்தக் கடையில் மொத்தம் 90 கிலோ தங்க, வைர நகைகள் இருப்பில் இருந்துள்ளன. இதில் 70 கிலோ நகைகளை கடை ஊழியர்கள் பணி முடித்து செல்லும் முன் லாக்கரில் வைத்து பூட்டியுள்ளனர். மீதம் இருந்த சுமார் 20 கிலோ நகைகள் ஷோ கேஸில் வைத்திருந்தனர். இந்த 20 கிலோவில் இருந்து தான் சுமார் 16 கிலோ தங்க நகைகளும், 500 கிராம் வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, கடை மேலாளர் பிரதீஷ் அளித்த புகாரில், வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 457, 380 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி சந்தோஷ் குமார், வேலூர் சரக டி.ஐ.ஜி ஏ.ஜி பாபு, விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், எஸ்.பி ராஜேஷ் கண்ணா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து, ஐ.ஜி சந்தோஷ் குமார் கூறுகையில், `இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில தடயங்கள் கிடைத்துள்ளன. இதனைக் கொண்டு விசாரணை தொடர்கிறது. விரைவில் குற்றவாளியை பிடிப்போம்" என்றார்.
திருவாரூர் முருகன் குழுவின் திட்டமா?
வேலூரில் தற்போது நடைபெற்றுள்ள கொள்ளை திருச்சி லலிதா ஜுவல்லரி, சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷ்னல் வங்கிக் கொள்ளைகள் போல் உள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் பின்பக்க சுவரை துளையிட்டு, விலங்கு உருவம் கொண்ட முகமூடி அணிந்தும் மெலிந்த தேகம் கொண்ட ஒருவர், மற்றொருவருடன் இணைந்து ஷோகேஸ்களில் இருந்த நகைகளை மெல்ல எடுத்து, கையோடு கொண்டு வந்த பையில் எடுத்து வைத்து செல்வார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் கும்பல் என்று காவல் துறையினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து முருகனின் அக்கா கனகவல்லி, வாடிப்பட்டி கணேசன், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய நபரான முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ் ஆகியோர் சரணடைந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன. முருகன் கடந்த ஆண்டு, பெங்களூர் சிறைக் காவலில் இருந்தபோது மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது அக்கா கனகவல்லி, வாடிப்பட்டி கணேசன், மணிகண்டன் ஆகியோர் பிணையில் வெளியில் வந்தனர். முருகனின் அக்கா மகன் சுரேஷ் மட்டும் தற்போது சிறையில் உள்ளார். லலிதா ஜூவல்லரி கொள்ளை குறித்த வழக்கு, திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த 13ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணயில், கனகவல்லி, கணேசன், மணிகண்டன் மூவரும் ஆஜராகவில்லை.

பட மூலாதாரம், Getty Images
வேலூரில் வடக்கு மண்டல ஐ.ஜி சந்தோஷ்குமார் கூறுகையில், `இது போன்ற பல வழக்குகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது` என்று தெரிவித்துள்ளார். திருவாரூர் முருகன் மீது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், சற்றேறக்குறைய 100 வழக்குகள் உள்ளன. முருகன் இறந்து, மற்ற அனைவரும் காவல் துறையின் கண்காணிப்பில் உள்ள நிலையில், மீண்டும் ஒரு மிகப்பெரிய கொள்ளை தமிழ்நாட்டில் நடந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனி படையினர் விரைந்துள்ளனர்.

பட மூலாதாரம், Ganesan
வேலூரில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை, பாதுகாப்பு & கண்காணிப்பில் குறைபாடுள்ளதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து, குற்றப்பிரிவு முன்னாள் உதவி ஆணையர் கணேசன் பிபிசியிடம் கூறுகையில், `திருச்சி, வேலூர் இரண்டு இடங்களிலும் மாநகர் பகுதியில் உள்ள கடையின், பின்பக்க சுவரை துளையிட்டு நடைபெற்றுள்ளன. முன்பக்கம் கொடுக்கும் பாதுகாப்பும் கண்காணிப்பும் பின்புறத்திலும் இல்லை என்பது தெளிவாகிறது. மேலும், இது போன்ற குற்றங்கள் பெரும்பாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தான் நடக்கின்றன. இந்த நேரத்தில் கூடுதல் விழிப்பு, காவல்துறையின் கண்காணிப்பு, ரோந்து அவசியம்.` என்கிறார்.
நேரத்தையும் இடைவெளியையும் பயன்படுத்தும் கொள்ளையர்கள்
சிசிடிவி, பாதுகாவலர்கள், காவல்துறையினர் கண்காணிப்பு எல்லாம் தொடர்ந்தாலும் அசரும் நேரத்தை பயன்படுத்தி கொள்ளையடித்து தப்பி விடுகின்றனர் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். இது குறித்து காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரும், குற்ற வழக்குகளை கையாள்வதில் சிறப்பிடம் பெற்றவருமான, பலுலுல்லா பிபிசியிடம் கூறுகையில், `இது போன்ற கொள்ளைகளை நீண்ட நாள் திட்டமிட்டு நடத்துகிறார்கள். நகை வாங்க வருவது போல் அடிக்கடி வருவார்கள். சிசிடிவி கேமராக்கள், அலாரம், பாதுகாப்பு குறைபாடுகளை நோட்டமிடுவார்கள். பாதுகாவலர்கள் அசரும் நேரம், காவல்துறை கண்காணிப்பு இல்லாத நேரத்தில் கொள்ளையடித்து, தப்பி விடுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள தொழில்நுட்ப வசதி மற்றும் காவல்துறையின் தொடர் முயற்சியால் நிச்சயம் சிக்கி விடுவார்கள்.` என்றார்.
காவல்துறையின் பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க, நகைக்கடையினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாவலர்களுக்கு உரிய ஓய்வு கொடுத்து, சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிக்க வேண்டும் என்றும் காவல் துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












