திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி; தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது

திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
திருநெல்வியில் டவுன் செல்லும் சாலையில் உள்ளது ஷாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்தாரர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் தங்களது சக மாணவர்கள் உயிரிழந்த கோபத்தில் பள்ளியில் கற்களை கொண்டு எறிந்தும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் அப்பள்ளி மாணவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் விபத்து நடந்த பள்ளியை நேரில் பார்வையிட்டார்.

இது குறித்து நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பள்ளியின் கழிப்பறை சுவர் கட்டப்பட்ட இடத்தில் அடித்தளம் இல்லை என தெரிகிறது, இதனாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது, மருத்துவமனையிலும் சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன்.
முதல் கட்டமாக அன்பழகன், விஸ்வரஞ்சன் ஆகிய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சஞ்சய் என்ற மாணவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். மேலும் அபுபக்கர், இசக்கிபிரகாஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று தெரிவித்தார்.
ஆனால் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் 7 மாணவர்கள் காயமடைந்து அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்த மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் பின்செய்தியாளர்களிடம் பேசியபோது, "தற்போது பள்ளியில் நடந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை யார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை இருப்பினும், தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.இதனிடையே நெல்லையில் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உறுதி தன்மை மற்றும் விபத்து எப்படி நடந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, முழு விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை டவுன் சாஃப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெல்லை வருவாய் ஆய்வாளர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்ய குழு
சிறப்புக்குழு அமைத்து நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கருத்து
இந்த சம்பவம் குறித்துப் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் 2700 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்குள் இருக்கும் சுகாதார வளாகத்திற்குள் மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது சுற்று சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியாகியுள்ளனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை உயரதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டிட பொறியாளர்கள், கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடடப்பட்டுள்ளது. இதே போல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையையும் ஆய்வு செய்ய உள்ளோம். கடந்த மாதம் நடைபெற்ற முதன்மை கல்வி மாவட்ட அலுவலர்கள் கூட்டத்தில், சேதமடைந்துள்ள பள்ளி கட்டடங்களில் குழந்தைகளை அனுமதிக்கூடாது என்று கண்டிப்பாக கூறியுள்ளோம். அதன்படிதான் செயல்பட்டு வருகின்றார்கள்.இன்று நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானது. இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
பிற செய்திகள்:
- தஞ்சாவூர் முதல் தான்சானியா வரை: தனி ஆளாக உலகம் சுற்றும் தமிழ் டிரெக்கர் யூடியூபர்
- பகத் சிங்: ஜேம்ஸ் ஸ்காட்டுக்கு பதிலாக ஜான் சாண்டர்ஸ் கொல்லப்பட்டது எப்படி?
- வன்னியர் 10.5 % உள் ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- கோவை: காணாமல்போன சிறுமியின் உடல் முட்புதரில் கை,கால் கட்டிய நிலையில் கண்டுபிடிப்பு
- செல்பேசிக்கு அடிமையாகி வழிமாறும் மாணவர்கள்: பெற்றோர், ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்?
- பிலிப்பின்ஸை தாக்கிய சூப்பர் புயல் ராய் - 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












