செல்பேசிக்கு அடிமையாகி வழிமாறும் மாணவர்களை தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி மீட்குமா?

Students using mobile phone

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழமையான அரசுப் பள்ளி அது. சுமார் 1,400 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களை எதிர்கொள்வதையே அப்பள்ளி ஆசிரியர்கள் பெரும் சவாலாக கருதுகின்றனர்.

வயதுக்கு மீறிய பேச்சுகள், வகுப்பறைகளிலேயே மொபைல் பயன்பாடு, கழிப்பறைகளில் போதைப் பொருள்கள் என அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அலைபேசியும் பணப்புழக்கமும்

`` ஒன்றரை வருடங்களாக மாணவர்கள் வீட்டிலேயே இருந்ததால் அடிப்படையான பாடப் புத்தக அறிவுகூட அவர்களிடம் இல்லை. அதிலும், கணித ஆசிரியராக இருப்பதால் பெரும் பிரச்னையாக உள்ளது. நாம் கண்டிப்புடன் கேள்வி கேட்டால் தற்கொலை முடிவை எடுப்பார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிப்பு வந்ததால், `இந்த ஆண்டும் ஆல்பாஸ் கிடைக்கும்' எனப் பேசிக் கொள்கின்றனர். அவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சமும் இல்லை. அவர்களிடம் இருந்து செல்போனை பிரிக்க முடியவில்லை'' என்கிறார், அப்பள்ளியின் ஆசிரியை.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசுகையில், `` கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகளில் இருந்ததால் கேமிங் செயலிகளுக்கு பலரும் அடிமையாகிவிட்டனர். இதனால் வகுப்பறையிலேயே செல்போனை மறைத்துவைத்து விளையாடுகின்றனர். இதனைக் கண்டறிந்து செல்போனை பறிமுதல் செய்கிறோம். வகுப்பில் ஆன்லைன் கிளாஸ் நடப்பதாக பெற்றோரை ஏமாற்றி போனை கொண்டு வருகின்றனர். கழிப்பறைகளில் போதைப் பொருள் பாக்கெட்டுகளை பார்க்க முடிகிறது. அவர்கள் மத்தியில் வரம்பு மீறிய பேச்சுக்களையும் காண முடிகிறது.

தற்போது வந்துள்ள தலைமை ஆசிரியர் சற்று கண்டிப்புடன் இருப்பதால் கண்காணிக்க முடிகிறது. கொரோனா காலத்தில் வருமானத்துக்காக மாணவர்கள் வேலைக்குச் சென்றதால், பெற்றோரும் அந்தப் பணத்தை நம்பியுள்ளனர். இதனால் பல மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க முடியவில்லை. எனது மாணவர் ஒருவர், தனது பிறந்தநாளுக்கு புதுத்துணி வாங்குவதற்காக இரவு நேர வேலைக்குச் சென்றுவிட்டு வகுப்புக்கு வந்தார். அவரால் வகுப்பறையில் பாடத்தைக் கவனிக்க முடியவில்லை. செல்போன், பணப்புழக்கம், தவறான செயல்கள் என மாணவர்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எப்படி மடைமாற்றுவது எனத் தெரியவில்லை" என மிகவும் வேதனைப்பட்டார்.

Social media

திருப்பூர் சம்பவம்

இது திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம். `18 வயதுக்குக்கீழ் உள்ள மாணவ, மாணவிகள் தங்களின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து வெளியேற வேண்டும்' அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று வலம் வந்தது. அந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரிகள், கல்வி அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இப்படியொரு நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் கூறப்பட்டது.

ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு காரணமாக ஆன்லைன் கல்விக்காக உள்ளே நுழைந்த மாணவர்கள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் மாணவிகள் தங்களின் புகைப்படங்களைப் பதிவிடுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால் அதனைக் களையும் நோக்கிலும் பாடப்புத்தகங்களில் மாணவர்கள் கவனம் செலுத்தும் வகையில் வகுப்பறைகளில் இப்படியொரு திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.

``இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா?'' என திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` அப்படி எந்தவொரு உத்தரவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிறப்பிக்கப்படவில்லை. அதேநேரம், தலைமை ஆசிரியர்கள் எதாவது கேள்விப்பட்டு மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம். மற்றபடி, பள்ளிகளுக்கு எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை'' என்றார்.

தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி

கொரோனா முதல் அலையின்போது களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. பொதுத் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டும் அவ்வப்போது வகுப்புகள் நடந்தன. அதிலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக கொடுக்கப்பட்ட ஆன்ட்ராய்டு போன்களால், மாணவர்கள் திசைமாறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். வகுப்பறைகளைவிடவும் பொழுதுபோக்குக்கு அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவதால் கல்வியின் நோக்கமே சிதைவதாகவும் வேதனைப்படுகின்றனர்.

இதனை உணர்ந்து பள்ளிகளில் ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டம்தோறும் மனநல பயிற்சிகளை அளிப்பதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக, `இணையத்தளத்துக்கு அடிமையான மாணவர்களை மீட்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மையங்கள் தொடங்கப்படும் (internet de-addiction clinics)' என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மாணவர்களை திசைமாற்றுகிறதா ஸ்மார்ட்போன் பயன்பாடு? - கலங்கும் பள்ளி ஆசிரியர்கள்

பட மூலாதாரம், BBC / நிகிதா தேஷ்பாண்டே

இதற்கான பணிகள் கடந்த 14 ஆம் தேதி தொடங்கிவிட்டதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக, ஆசிரியர்கள் மாணவர்களைக் கையாள வேண்டிய விதம் குறித்து மூத்த மனநல மருத்துவர் ஒருவர் தலைமையிலான குழுவினர், பயிற்சிக்கான பாடப்புத்தகங்களைத் தயாரித்து வருகின்றனர். மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து கீழ்பாக்கம் மனநல காப்பகம் இந்தப் பணிகளை முன்னெடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூகத் தணிக்கை நடத்தப்படுமா?

`` கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் வகுப்புகள் செயல்படத் தொடங்கின. ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் ஆன்லைனில் பாடங்களை கவனித்து வந்தனர். இதனால் மாணவர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக அதிகாரபூர்வ தரவுகள் எதுவும் வெளிவரவில்லை. செல்போன் மோகத்தில் உள்ள மாணவர்கள் குறித்தும் எந்தத் தகவலும் வெளிவரவில்லை. பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம், வருவாய், சமூக நலத்துறையோடு இணைந்து இதுதொடர்பாக சமூக தணிக்கையை நடத்த வேண்டும். அதில் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிவிக்க வேண்டும்" என்கிறார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

மேலும், `` நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதால் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளின் நடவடிக்கைக்கு தகுந்தார்போல அவர்களை வழிநடத்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை ஆசிரியர்கள் ஆராய வேண்டும். கற்றல் திறனை மட்டும் பார்க்காமல், உளவியல்ரீதியாக உள்ள சிக்கல்களைக் களைந்தாலே அந்தக் குழந்தை படிக்கத் தொடங்கிவிடும்" என்கிறார்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
படக்குறிப்பு, பிரின்ஸ் கஜேந்திர பாபு

``மாணவர்களின் மனநிலையில் மாற்றம் கொண்டு வருவதற்கான வழிகள் என்ன?" என புதுக்கோட்டை அரசு மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` புதிய புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது அதனைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதற்கான தேவைகளும் உள்ளன. அவற்றில் இருந்து நம்மால் முழுமையாக விலகிவிட முடியாது. ஆன்லைன் வகுப்புகளில் மொபைல் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை பயன்படும்விதத்தில் தொடர்ந்து கையாள வேண்டும்.

எழுதப்படாத ஒப்பந்தமே தீர்வு

குறிப்பாக, செல்போனில் `பெற்றோர் கட்டுப்பாட்டு செயலிகள்' (parent control app) உள்ளன. அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும். எவ்வளவு நேரம் செல்போனை பயன்படுத்தலாம் என்ற நேரக் கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும். பாடம் அல்லாத நேரங்களில் மணிக்கணக்கில் யூடியூபில் படம் பார்ப்பது தெரியவந்தால், அதற்காக சண்டை போடாமல் கலந்துரையாட வேண்டும். அரை மணிநேரம் அல்லது 1 மணிநேரம் பார்க்கலாம் என கட்டுப்பாடு விதிக்கலாம். இது எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்க வேண்டும்'' என்கிறார்.

மேலும், `` குழந்தைக்கு அறிவுரையை கூறிவிட்டு, சமூக வலைதளங்களில் பெற்றோர் ஆர்வம் காட்டினால் வேறுவிதமான விளைவுகள்தான் ஏற்படும். அவர்களும் தங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். ஒருநாள்விட்டு ஒருநாள்தான் பள்ளிகள் நடக்கின்றன. இடைப்பட்ட நாள்களில் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். குழந்தைகளை விளையாட்டு, நடனம், இசை என அவர்களுக்குப் பிடித்தவற்றைச் செய்ய அனுமதிக்க வேண்டும். அடிமைப்படுவது என்பது நமக்கு உற்சாகத்தைத் தடுக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அது இல்லாதபோது பதற்றம் ஏற்படுகிறது. அதனை மடைமாற்றும்போதுதான் நிலைமை சரியாகும்" என்கிறார்.

``பாடப்புத்தகங்களில் இருந்து மாணவர்களை வெளியே கொண்டு வருவதே தீர்வாக இருக்கும்" எனக் கூறும் கார்த்திக் தெய்வநாயகம், `` படிப்பைத் தவிர இதர வாய்ப்புகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் உற்சாகம் தரக் கூடிய ஒன்றைக் கண்டறிந்து அதனைக் கொடுப்பதன் மூலம் சிக்கலை உண்டாக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவதைத் தடுக்க முடியும்.

Karthik Deivanayagam

மேலும், பெற்றோரும் முன்மாதிரியாக செயல்பட வேண்டும். படுக்கை அறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் ஒன்றை செய்துவிட்டு குழந்தைகளை செய்யக் கூடாது எனக் கூறுவது சரியானதாக இருக்காது. பள்ளிகள் இல்லாவிட்டாலும் தினசரி தூக்கத்துக்கான நேரம், சாப்பாட்டுக்கான நேரம் ஆகியவற்றில் பழையபடி கவனம் செலுத்த வேண்டும். இதனை சரிவர செய்தாலே அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்" என்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை சொல்வது என்ன?

பள்ளிகளில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசுவதற்காக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்ஸை தொடர்பு கொண்டோம். அவரிடம் இருந்து பதில் வராததால், பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநர் ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

`` கோவிட் தொற்றுக்கு முன்பு வரையில் மாணவர்கள் செல்போனை பயன்படுத்தக் கூடாது எனக் கூறி வந்தோம். கோவிட் காரணமாக, ஆன்லைனில் வகுப்புகள் நடந்ததால் மாணவர்களுக்கான அசைன்மெண்ட் முதல் பாடங்கள் வரையில் அனைத்துக்கும் செல்போனை நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வகுப்புகள் தொடங்கினாலும் செல்போனின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` வகுப்பறை மற்றும் ஆசிரியர்கள் மூலமாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலைமை மாறி, கற்பதற்கான பாடத்திட்டங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. சக நண்பர்கள் மூலமாக மாணவர்கள் அதனைப் பெறுகின்ற வாய்ப்புகளும் உள்ளன. இதனை வாட்ஸ்அப் மூலமே பெறுகின்றனர். கல்வி மற்றும் பொழுதுபோக்கு என சரிபாதியாக இணையத்துக்கு நேரத்தைச் செலவிடுகின்றனர். செல்போன் கூடாது என கண்டிப்புடன் கூறினாலும் டைம் டேபிளையும் அசைன்மென்ட்டையும் வாட்ஸ்அப் மூலமாகத்தான் ஆசிரியர் அனுப்புகிறார். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் மாணவர்கள் மீது பெற்றோரின் கண்காணிப்பு அவசியம்'' என்கிறார்.

மேலும், `` ஜனவரி 3 முதல் முழுநேர வகுப்புகள் தொடங்க உள்ளன. ஒன்றரை ஆண்டுகள் செல்போனில் இருந்தததால் பலரும் அடிமையாகிவிட்டனர். தற்போது வளரிளம் பருவத்தில் மாணவர்கள் உள்ளதால் அதன் விளைவுகள் அவர்களுக்குத் தெரிவதில்லை. அதில் இருந்து அடிமையாகாத சூழலை உருவாக்குவதற்கு பெற்றோர், ஆசிரியர்கள் முன்வர வேண்டும். ஆசிரியர் நிலையில் இருந்துதான் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை சரிசெய்வதற்கான முயற்சிகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: