குழந்தைகள் பாலியல் காணொளிகள் கொரோனா காலத்தில் அதிகரித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
2020 ஆம் ஆண்டு ஜூலையில், அசாம் மாநில காவல்துறைக்கு 'சந்தேகத்திற்கிடமான' ஃபேஸ்புக் பக்கம் தொடர்பாக புகார் வந்தது. அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் மூலம் இந்தப்புகார் கிடைத்தது.
இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளின் வீடியோக்கள் மற்றும் இடுகைகள் உள்ளன என்றும், அந்தப்பக்கம் சிறார் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் அல்லது CSAM (Child Sexual Abuse Material) ஐ ஊக்குவிப்பதாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கப்பட்டது.
இந்த விவகாரம் விசாரணைக்காக அஸ்ஸாம் சிஐடி யிடம் ஒப்படைக்கப்பட்டது.
குவஹாத்தியில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும், 28 வயது நபர் ஒருவர் இது தொடர்பாக செப்டம்பரில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அந்த முகநூல் பக்கத்தை ஆரம்பித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைலில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோக்கள் அதாவது CSAM இருந்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்த நபர் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
இந்தியாவின் கடுமையான சட்டங்களின் கீழ் குழந்தைகள் பாலியல் காட்சிகள் அல்லது அது தொடர்பான பதிவுகளை வெளியிடுவது, பரப்புவது மற்றும் வைத்திருப்பது சட்டவிரோதமானது.

"குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோக்களை நான் பதிவிறக்கம் செய்ததில்லை. நான் அவற்றைப் பகிரவில்லை, அவற்றை நான் பெறவும் இல்லை," என்று தனது வீட்டில் குடும்பத்தினர் சூழ அமர்ந்திருந்த அந்த நபர், பிபிசியிடம் கூறினார்.
இந்த முகநூல் பக்கத்தில் இருந்து பணம் சம்பாதிக்கவும், செயலிகளை பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் காட்சிகளை பரப்பவும் இந்த நபர் முயற்சி செய்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
ஃபேஸ்புக் பக்கத்தில் டெலிகிராம் செயலிக்கான இணைப்பு இருந்தது. அதை நீங்கள் கிளிக் செய்தால், டெலிகிராம் சேனலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
இங்கும் பிற செயலிகளிலும், குழந்தை பாலியல் வீடியோகள் பரிவர்த்தனை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த டெலிகிராம் சேனல் மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் இருந்தது. ஆனால் இது நடப்பதற்கு முன்பே இந்த நபர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் இந்த நபருக்கு பணம் எவ்வாறு சென்றடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
"வீடியோக்களை பார்த்துவிட்டு பல இரவுகள் என்னால் தூங்க முடியவில்லை," என்று இந்த வழக்கை விசாரித்து வரும் அஸ்ஸாம் சிஐடி பிரிவின் கூடுதல் எஸ்பி கீதாஞ்சலி டோலே தெரிவித்தார்.
இந்த ஃபேஸ்புக் பக்கம் இப்போது ஆன்லைனில் இல்லை. கூடவே இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையின் கீழ் உள்ளது.
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் (CSAM) அதிகரிப்பு

2018 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய்க்கு முன்பான காலகட்டத்தில், தினமும் 109 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் CSAMன் ஆன்லைன் தேவை மற்றும் பரவல் அதிகரித்துள்ளது என்று ஆர்வலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொற்றுநோய்களின் போது இந்த அதிகரிப்பு, 200 முதல் 300 சதவிகிதமாக இருந்தது என்று இந்தியாவின் இணைய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கேரள மாநில போலீஸ் சைபர்டோமின் தலைவர் மனோஜ் ஆப்ரகாம் தெரிவிக்கிறார்.
குழந்தைகளைக் கொண்ட ஆபாச காணொளிகள் மற்றும் பதிவுகளைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மற்ற மாநிலங்களின் சைபர் காவல்துறையை விட கேரளாவின் சைபர்டோம் மிகவும் முன்னிலையில் இருப்பதாக நிபுணர்கள் கூறுவதால் நாங்கள் அவர்களை தொடர்புகொண்டோம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குழந்தைகள் பாலியல் வீடியோக்கள் ஆன்லைனில் பரவுவது அதிகரித்துள்ளதாக மனோஜ் ஆப்ரகாம் கவலை தெரிவித்துள்ளார்.
"தொற்றுநோயின் போது, நாங்கள் நிறைய உள்ளூர் குழந்தைகள் பாலியல் காணொளிகளைப் பார்த்தோம், அதில் நீங்கள் மலையாள மனோரமா காலண்டரையோ, கேரளா அல்லது இந்தியாவின் தோற்றத்தை கொடுக்கும் பிற விஷயங்களையோ பார்க்கமுடிகிறது," என்று மனோஜ் ஆப்ரகாம் கூறுகிறார்,
அதாவது, குழந்தைகள் இருக்கும் பாலியல் வீடியோ கேரளாவில் அல்லது இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலோ படமாக்கப்பட்டது என்று தெரியவருகிறது.
இதில் கவலைதரும் விஷயம் என்னவென்றால், பல வீடியோக்கள் வீட்டிற்குள்ளேயே தயாரிக்கப்படுகின்றன.

" நீங்கள் (வீடியோவில்) வீட்டின் உட்புறத்தை பார்க்க முடிகிறது. எனவே மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒரு சிறுவன் அல்லது சிறுமிக்கு நெருக்கமான, வீட்டிற்குள் வசிக்கும் நபர்தான் இந்த வீடியோவை உருவாக்குகிறார்."என்று மனோஜ் ஆப்ரகாம் குறிப்பிட்டார்.
உண்மையில் குழந்தைகளுக்கான காவல்துறையின் உதவி, கோவிட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
" கோவிட் சமயத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் போலீசார் மிகவும் மும்முரமாக இருந்தனர். பல காவலர்களே கோவிட் நோயால் பாதிக்கப்பட்டனர்,"என்று குழந்தைகள் உரிமைகளுக்கான ஆர்வலர் மிகல் தாஸ் குய்ஹா கூறினார்.
உலகம் முழுவதும் உள்ள நிலைமை
"வெளியே செல்வதன் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்த ஆன்லைன் பயன்பாடு காரணமாக குழந்தைகளை பாலியல் செயல்களில் ஈடுபடுத்துபவர்கள் (பெடோஃபில்கள்)களின் ஆன்லைன் செயல்கள், சிறார் பாலியல் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மற்றும் சிறார் பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கங்களின் தயாரிப்பு மற்றும் விநியோகம் அதிகரிக்கலாம்," என்று 2020 ஏப்ரல் மாதத்தில் ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் எச்சரித்தனர்.
பெடோஃபில்களின் ஆன்லைன் செயல்களில் நட்பை உருவாக்குதல், பின்னர் உணர்ச்சிபூர்வமான உறவுகளை உருவாக்கி கேமரா முன் பாலியல் செயல்களைச் செய்யுமாறு ஆசைகாட்டுவது ஆகியன அடங்கும்.
2020 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த 'காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்தின் சைபர் டிப்லைனுக்கு' 2 கோடிக்கும் அதிகமான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற கோப்புகள் பற்றிய புகார்கள் கிடைத்தன. அவற்றில் CSAM மற்றும் அது தொடர்புடைய உள்ளடக்கம் இருந்தது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த அதிகரிப்பு 28 சதவிகிதம் என்று அறிக்கை கூறுகிறது.
இந்தப் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருந்தது. இந்த அதிகரிப்புக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல.
நீண்ட நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே இருப்பதால் குழந்தைகள் ஆன்லைனில் இருப்பது அதிகரித்துள்ளது. கூடவே பெடோஃபில்களின் ஆன்லைன் இருப்பும் அதிகரித்துள்ளது என்று ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள்சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆபத்தான சூழ்நிலை

ஆகஸ்ட் தொடக்கத்தில் மும்பையில் உள்ள ஆர்வலர் சித்தார்த் பிள்ளையிடம் ஒரு 16 வயதான சிறுவன் வந்தார்.
அவரது 10 வயது சகோதரி முதலில் கேமிங் செயலியிலும், பின்னர் சமூக ஊடக செயலியிலும் நட்புகொள்ளப்பட்டு இதற்காக தயார்செய்யப்பட்டது, மொபைல் சாட் மூலம் அவருக்குத்தெரியவந்தது.
"இத்தகைய விஷயங்கள் முதலில் ஹலோ, வணக்கம் என்று தொடங்குகிறது. நான் எப்போதும் உன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்பது போன்ற உரையாடல் நடத்தப்படும். பிறகு படிப்படியாக உரையாடல் வேறு வடிவம் பெறுகிறது,"என்று 'ஆரம்ப்' என்ற அரசு சாரா அமைப்பைச்சேர்ந்த சித்தார்த் பிள்ளை கூறுகிறார்,
"இது ஒரு உன்னதமான க்ரூமிங் உத்தியாகும், அங்கு க்ரூமர் குழந்தையின் கூர் உணர்வுத்திறனை குறைக்க அல்லது அகற்ற முயற்சிக்கிறார்," என்று அவர் கூறுகிறார்.
இந்திய குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் (ICPF), 2019 டிசம்பர் மற்றும் 2020 ஜூன் மாதத்திற்கு இடையே நடத்திய ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டவை:
- இந்தியாவில், சீசம் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துபவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆண்கள், ஒரு சதவிகிதம் பேர் பெண்கள், மற்றவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
- 'பள்ளி செக்ஸ் வீடியோக்கள்' மற்றும் 'டீன் செக்ஸ்' போன்ற குழந்தைகள் பாலியல் வீடியோக்களில் அதிகம் பேர் ஆர்வம் காட்டினர்.
- பெரும்பாலான மக்கள் தங்கள் இருப்பிடத்தை மறைக்கவும், அரசு சட்டங்களைத் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், VPN ஐப் பயன்படுத்தினர்.
ICPF மற்றும் அதன் தொழில்நுட்ப கூட்டாளிகள், CSAM இன் தேவையை புரிந்து கொள்ள 100 நகரங்களை இதற்காக ஆய்வு செய்தனர்.
CSAM பரவுவதைக் கண்டுபிடித்தல்

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலின் பல வீடியோக்கள் சமூக ஊடக தளங்கள், VPNகள், கோப்பு பகிர்வு பயன்பாடுகள் போன்றவற்றில் பகிரப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வர்த்தகத்திற்கு பிட்காயின் பயன்படுத்தப்படும் 'டார்க் வெப்பின்' மூடிய அரட்டை அறைகளிலும், நிறைய குழந்தைகள் வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
டார்க் வெப் என்பது பல சட்டவிரோத வணிகங்கள் இயங்கும், இணையத்தின் ஒரு ஆழ்நிலைப் பகுதியாகும்.
நாம் பயன்படுத்தும் இண்டர்நெட் என்பது, சர்ஃபேஸ் வெப் என்று அழைக்கப்படும் இணைய உலகின் மிகச் சிறிய பகுதியாகும். அதன் கீழ் மறைந்திருக்கும் இணையம் டீப் வெப் என்று அழைக்கப்படுகிறது. பயனர் தரவுத்தளம், ஸ்டேஜிங் லெவல் இணையதளம், பேமெண்ட் கேட்வே போன்ற பொதுவான தேடுபொறிகளால் கண்டுபிடிக்க முடியாத பக்கங்கள் டீப் வெப்பில் இருக்கும்.
டார்க் வெப் என்பது இந்த டீப் வெப்பின் ஒரு மூலையாகும். அங்கு ஆயிரக்கணக்கான வலைத்தளங்கள், பல வகையான கருப்புச் சந்தைகளை அனாமதேயமாக(anonymous) இயக்குகின்றன.
வாங்குபவர் யார் என்று விற்பவருக்குத் தெரியாது, அதேபோல் வாங்குபவருக்கு விற்பவர் யார் என்று தெரியாது.

பட மூலாதாரம், Getty Images
இவர்கள் மெசேஜிங் செயலிகளில் பாலியல் உள்ளடக்கத்தைப் பகிரும் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் என்றும், இது எந்த ஒரு கும்பலின் வேலையுமல்ல என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
"அதாவது ஒரு கும்பல் வந்து குழந்தைகளை கவர்ந்திழுத்து, அவர்களைக்கடத்தி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவதில்லை," என்கிறார் மனோஜ் ஆப்ரகாம்.
கேரள காவல்துறையின் சிறப்புப் பிரிவான, குழந்தை பாலியல் சுரண்டல் தடுப்பு மையத்தில் உள்ள மென்பொருள் Icacops, குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளின் ஐபி முகவரிகளைக் (IP address)கண்டறிய அதிகாரிகளுக்கு உதவுகிறது.
Icacops( Internet crimes against children and child online protective service) என்பது குழந்தைகளுக்கு எதிரான இணைய குற்றங்கள் மற்றும் குழந்தை ஆன்லைன் பாதுகாப்பு சேவைகள் ஆகும்.
இந்த மென்பொருள் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை சுமார் 1500 தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முந்நூற்று ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"ஒரு தந்தையாக இது மிகவும் வேதனை தரும் விஷயமாகும். நம் குழந்தைகளுக்கு இதுபோன்ற எதுவும் நடக்கக்கூடாது என்று நாம் நினைக்கிறோம். குழந்தைகளின் வீடியோக்கள், புகைப்படங்களை நாங்கள் பார்க்கும்போது, எங்கள் குழந்தைகள் நினைவிற்கு வருகிறார்கள்," என்று அந்த அதிகாரி கூறினார்.
"பாதிக்கப்பட்ட குழந்தையை அடையாளம் காண்பது எங்கள் முக்கிய நோக்கம். ஏனென்றால் உள்ளூர் குழந்தைகள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை எங்கள் தேடுதல் நடவடிக்கைகளின் போது நாங்கள் அறிந்தோம்."என்கிறார் அவர்.
நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மென்பொருளான 'க்ராப்நெல்' உம், இப்பணியில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மென்பொருள் ஹேக்கத்தானின் விளைவாக உருவாக்கப்பட்டது.
இந்த மென்பொருள் டார்க் வெப்பில் எதோ ஒன்றை தேடுவது போன்றது. அங்கு முக்கிய வார்த்தைகளை(key words) தட்டச்சு செய்யும் போது, குழந்தைகள் உள்ளடக்கம் எங்கு உள்ளதோ அத்தகைய இணைப்புகள் கிடைக்கும்.
அதன்பிறகு போலீசார் அந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
வருங்கால வழிகள்

குழந்தை பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம், மற்றும் பெடோஃபிலியா, இந்தியாவில் மக்கள் பேச வெட்கப்படும் விஷயமாக உள்ளது.
புனேவில் உள்ள அரசு சாரா KEM ஆராய்ச்சி அமைப்பின் மருத்துவர்கள் குழு, பெடோஃபிலியா பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், அதை ஒரு மனநல விஷயமாகப் பார்ப்பதற்கும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வருகிறது.
திரையரங்குகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் இது தொடர்பான பிரச்சாரங்களையும் அது நடத்தியது.
"பொதுமுடக்கம் என்பது எந்தவொரு நபருக்கும் தனிமை மற்றும் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்துகிறது. அதைச் சமாளிக்க அவர் பாலுணர்வை நாடுகிறார், குறிப்பாக அவரைச் சுற்றி ஆரோக்கியமான வேறு மாற்று வழிகள் இல்லாதபோது,"என்று குறிப்பிடுகிறார் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள, மனநல மருத்துவத் துறையின் தலைவரான டாக்டர் வாசுதேவ் பராலிகர்.
"(அத்தகைய சூழ்நிலைகளில்) ஒரு பெடோஃபிலுக்கு குழந்தைகள் மீதான பாலியல் ஆசை அதிகரிக்கலாம். இருப்பினும் (கோவிட் காலங்களில்) அவர்கள் அதிக குழந்தைகள் தொடர்பான ஆபாச உள்ளடக்கத்தை பார்க்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவரவில்லை,"என்கிறார் அவர்.
லாக்டவுன் மெதுவாக முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது, ஆனால் குழந்தைகளின் ஆன்லைன் பயன்பாடு குறையவில்லை.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். கூடவே இணையத்தில் எது பாதுகாப்பானது மற்றும் எது இல்லை என்பதை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்று மனோஜ் ஆப்ரகாம் வலியுறுத்துகிறார்.
மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் மற்றும் அவர்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதையும் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.
பிற செய்திகள்:
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம் - வலுக்கும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?
- இலங்கைச் சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
- சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பது எப்படி? சூழலியல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
- 'கடன் பொறியில் சிக்கிய' இலங்கைக்கு 'நச்சு' உரத்தை அனுப்பிய சீனா - பின்னணி என்ன?
- ரூ.300 கோடி அறிவிப்பு: இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்கள் எதிர்வினை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்









