ஒமிக்ரான்: தமிழ்நாட்டில் ஒருவருக்கு தொற்று உறுதி

tamilnadu

பட மூலாதாரம், Getty Images

நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களுக்குச் செய்யப்பட்ட நவீன பரிசோதனையில் "எஸ் ஜீன் டிராப்" இருப்பது கண்டறியப்பட்டது.

அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் 'எஸ் ஜீன் டிராப்' இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தமாக இந்த ஏழு பேருக்குமே சிறிய அளவில்தான் பாதிப்பு இருந்தது. இதையடுத்து இவர்கள் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டு, கிங் இன்ஸ்ட்டிடியூட்டில் சேர்க்கப்பட்டார்கள். அதற்குப் பிறகு, இவர்களோடு தொடர்பில் இருந்த ஒருவர் வளசரவாக்கத்தில் இருந்தார். அவருக்கும் 'எஸ் ஜீன் டிராப்' இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே, பெங்களூர், ஹைதராபாதில் உள்ள சோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டன.

இதில் செய்யப்பட்ட சோதனையில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. குடும்பத்தார் ஆறு பேருக்கும் வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் லேசான பாதிப்புகள் மட்டுமே உள்ளன. இருந்தபோதும் மருத்துவமனையில் தீவிர கவனிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு மேல் விமான நிலையத்தில் தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

உலகில் 12 நாடுகள் தீவிர கொரோனா பாதிப்புள்ள நாடுகளாக கருதப்படுகின்றன. அங்கிருந்து வருபவர்கள் எல்லோருக்கும் சோதனைகல் செய்யப்படுகின்றன. சோதனையில் 'நெகடிவ்' என்றால் வீட்டில் 7 நாள் தனிமைப்படுத்த சொல்கிறோம். நோய் இருந்தால் மருத்துவமனையில் சேர்த்து விடுகிறோம்.

ரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கும் அறிகுறிகள் தென்படுபவர்களுக்கும் சோதனைகள் செய்கிறோம். இதுவரை வந்த எல்லோருக்கும் டெல்டா பாதிப்புதான் இருந்தது. இப்போதுதான் முதல் முறையாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியனும் மருத்துவத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணனும் தெரிவித்தனர்.

ஒமிக்ரான்

ஆக்ஸிஜன் கையிருப்பைப் பொறுத்தவரை 1,400 மெட்ரிக் டன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த அளவு வெறும் 220 மெட்ரிக் டன்னாகவே இருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 82 சதவீதம் பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் 52 சதவீதம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் வரும் வார இறுதியில் 15வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் இதில் ஐம்பதாயிரம் முகாம்கள் செயல்படுமென்றும் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :