பகத் சிங்: ஜேம்ஸ் ஸ்காட்டுக்கு பதிலாக ஜான் சாண்டர்ஸ் கொல்லப்பட்டது எப்படி? அச்சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள்

பகத் சிங்
படக்குறிப்பு, பகத் சிங்
    • எழுதியவர், க சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

பகத் சிங், ஷிவராம் ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர், பிரிட்டிஷ் காவல்துறை மேலதிகாரியாக இருந்த ஜான் சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற நாள் 1928 டிசம்பர் 17. அவர்களுடைய உண்மையான நோக்கம், ஜேம்ஸ் ஸ்காட் என்ற காவல்துறை அதிகாரியைக் கொலை செய்வதாகத்தான் இருந்தது.

1927-ம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்காக, சைமன் கமிஷனை அமைத்தது. ஆனால், அதில் ஒரு இந்தியர் கூட இருக்கவில்லை. ஆகவே, இந்த கமிஷனை இந்தியா முழுவதும் இருந்த தேசியத் தலைவர்கள் எதிர்த்தனர்.

லாகூரில், லாலா லஜ்பதி ராய் அதற்கு எதிராக நடத்திய போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் காவல்துறை நடத்திய தடியடியில் காயமுற்று, 1928 நவம்பர் 17 அன்று உயிரிழந்தார். அந்தத் தடியடிக்கு உத்தரவு அளித்த அதிகாரியான ஜேம்ஸ் ஸ்காட்டை கொல்ல வேண்டுமென்பதே பகத் சிங் மற்றும் அவருடைய நண்பர்களின் நோக்கமாக இருந்தது.

பிறகு, 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதியன்று, லாகூர் சிறைச்சாலையில் பகத் சிங், ஷிவராம் ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும், காவல்துறை மேலதிகாரி ஜான் சாண்டர்ஸை சுட்டுக் கொன்றதற்காக, தூக்கிலிடப்பட்டார்கள்.

ஜான் சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னரும் பின்னரும் நடந்தவை குறித்த 10 தகவல்கள்.

1. 2001-ம் ஆண்டு வெளியான, தி டிரையல் ஆஃப் பகத் சிங், நீதியின் அரசியல் (The Trial of Bhagat Singh Polictics of Justice) என்ற நூலில், ஏ.ஜி.நுராணி குறிப்பிட்டுள்ள தகவலின்படி, "1928-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று, சந்திரசேகர ஆசாத், சுகதேவ், பகத் சிங், கிஷோரி லால், ஷிவ்ராம், மஹாபிர் சிங், ஜெய்கோபால் ஆகியோர் ஜேம்ஸ் ஸ்காட்டை சுட்டுக் கொல்வது குறித்து திட்டமிடுவதற்காக கூடின்ர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2. ஜெய்கோபால் ஸ்காட்டை டிசம்பர் 11 முதல் 15 வரை அவர் காவல் நிலையத்தில் என்ன செய்கிறார் என கண்காணித்து தகவல்களை, திரட்டி ஆசாத்திடம் தெரிவிக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டார். அவர்தான் டிசம்பர் 17-ம் தேதி ஸ்காட் கொலைக்கு நாள் குறித்ததாகவும் ஏ.ஜி. நுராணி தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

3. அப்ரூவராக மாறிய ஜெய்கோபால் மற்றும் ஹன்ஸ் ராஜ் வோராவுடைய வாக்குமூலங்களில், டிசம்பர் 15 அன்று, "இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மி" "ஸ்காட் இறந்துவிட்டார்," என்று குறிப்பிடப்பட்ட பலகைகளை பகத் சிங் அவர்களிடம் காட்டி, திட்டத்தை விவரித்ததாகக் கூறியுள்ளனர்.

பகத் சிங்
படக்குறிப்பு, லாகூர் தேசிய கல்லூரி புகைப்படத்தில் தலைப்பாகை கட்டி நிற்கும் பகத் சிங் (வலப்புறமிருந்து நான்காவதாக நிற்பவர்) (பேராசிரியர் சம்மன் லாலிடமிருந்து பெறப்பட்டது)

4. டிசம்பர் 17 அன்று மதியம் 2 மணிக்கு அவர்களுக்கிடையே ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆசாத் கையில் மௌசர் பிஸ்டல், பகத் சிங் கையில் ஆடோமேட்டிக் பிஸ்டல், ஷிவ்ராம் ராஜ்குரு கையில் ரிவால்வர். வழக்கம்போல, அன்றும் ஜெய்கோபால் காவல் நிலையத்திற்குச் சென்று கண்காணித்தார். அப்போது, சீருடையில் இருந்த ஒரு பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி காவல்நிலையத்திற்கு, சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்ததைக் கவனித்தார். அதைப் பார்த்தவர், ஸ்காட் அன்று காரில் வருவதற்குப் பதிலாக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக ஜெய்கோபால் தவறாகக் கருதினார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஜான் சாண்டர்ஸ்.

5. ஜெய்கோபாலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஒரே வேலை, காவல் நிலையத்தைக் கண்காணித்து ஸ்காட் வெளியே வரும்போது சமிக்ஞை கொடுக்கவேண்டும் என்பதுதான். சுகதேவ் இந்தத் திட்டத்தைத் தீட்டுவதில் முக்கியப் பங்கு வகித்திருந்தாலும் அவருக்கு இதில் எந்தப் பங்கையும் அவர்கள் வழங்கவில்லை. ஆகவே அப்போது அவர் அங்கு இருக்கவில்லை.

6. மாலை 4 மணியளவில் காவல்நிலையத்திலிருந்து சாண்டர்ஸ் வெளியே வந்தவுடன், அவர் ஸ்காட் எனக்கருதி சமிக்ஞை கொடுத்தார் ஜெய்கோபால்.

7. ராஜகுரு ரிவால்வரை கையில் எடுத்துக்கொண்டு, சாண்டர்ஸ் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அருகே வந்தவுடன் அவரைச் சுட்டார். தன் கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் நிலைகுலைந்து கீழே விழவே, சாண்டர்ஸ் அருகில் வந்த பகத் சிங் பல முறை தன்னுடைய ஆடோமேடிக் பிஸ்டலால் சுட்டுக் கொன்றார்.

பகத் சிங்

8. இதற்காக, 1929 ஏப்ரல் 8, அன்று பகத் சிங் கைது செய்யப்பட்டார். அவரைத் தப்பிக்க வைப்பதற்காக பக்வதி சரண் வோரா ஒரு திட்டம் தீட்டினார். அதுகுறித்த தகவல்களை, தி எக்ஸிக்யூஷன் ஆஃப் பகத் சிங் (The Execution of Bhagat Singh) என்கிற தன்னுடைய நூலில் சத்விந்தர் சிங் ஜஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பகத் சிங்கை மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டுவரும்போது அங்கு ஒரு குண்டுவெடிப்பை ஏற்படுத்தி, அந்தப் புகைமூட்டத்திற்கு நடுவே பகத் சிங்கை தப்பிக்க வைக்கவேண்டும் என்பதே திட்டம். ஆனால், அந்த குண்டு முதலில் வெடிக்கவேண்டும். அதற்காக அவர்கள் தயாரித்த வெடிகுண்டை, லாகூருக்கு வெளியே ரவி நதிக்கரையோரத்தில் 1930ஆம் ஆண்டு மே 28 அன்று பரிசோதித்தார்கள்.

ஆனால், அந்தப் பரிசோதனையின்போது ஏற்பட்ட வெடிகுண்டு தவறுதலாக முன்னமே வெடித்ததில் பக்வதி சரண் வோரா உயிரிழந்தார். அவருடைய மனைவி துர்காவதி தேவிதான், டிசம்பர் 17 அன்று இரவு ஜான் சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு, லாகூரிலிருந்து பகத் சிங் தப்பிக்க உதவினார்.

9. 1929 ஜூன் 15 அன்று சிறைச்சாலையில் பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத்தா, இருவரும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்கள். 20 நாட்களையும் கடந்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில், ஜூலை 5 அன்று அப்போதைய காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த ஜவஹர் லால் நேரு, அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.

அதில், "பகத் சிங் மற்றும் தத்தா இருவரும் மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வேதனையடைந்தேன். அந்த இரண்டு இளைஞர்களும் தவறு செய்திருக்கலாம், ஆனால் அவர்களுடைய துணிவைப் போற்றுவதைத் தவிர்க்க முடியாது. அவர்கள் சுயநல நோக்கத்தோடு உண்ணாவிரதம் இருக்கவில்லை. அரசியல் கைதிகளுடைய நிலைமை சிறைச்சாலையில் மோசமாக இருப்பதைக் கண்டித்தே போராடுகிறார்கள். அவர்கள் இருவரும் இந்தக் கடும் சோதனையிலிருந்து மீண்டு வருவார்கள் என நம்புவோம்," என்று கூறியிருந்தார்.

பகத் சிங்

பட மூலாதாரம், WWW.SUPREMECOURTOFINDIA.NIC.IN

படக்குறிப்பு, பகத் சிங் தீர்ப்பு எழுத பயன்பட்ட எழுதுகோல்

10. 1931 மார்ச் 23 அன்று, லாகூர் மத்திய சிறைச்சாலையில், மாலை 4 மணிக்கே சிறைக் கைதிகள் எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல் அவரவர் அறைகளுக்குள் அனுப்பப்பட்டார்கள். பகத் சிங், உட்பட மூவரையும் அன்று இரவு தூக்கிலிடப்போகிறார்கள் என சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் சென்று தகவல் கூறினார்.

நிலைமையை மாற்றமுடியாது என்றுணர்ந்த கைதிகள், தாங்களும் பகத் சிங்கோடு சிறை வாழ்க்கையை கழித்தவர்கள் என்று கூறிக்கொள்ள விரும்பினார்கள். அதற்காக, அவர் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற பொருள்கள் ஏதேனும் கிடைத்தால் பத்திரப்படுத்திக்கொள்ள விரும்பினார்கள். எதை எடுத்துக்கொள்வது என்பதில் போட்டி நிலவவே, இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்யப்பட்டது.

1931, மார்ச் 23 இரவு பகத் சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்கள். லாகூர் மத்திய சிறைச்சாலையில் நிகழ்ந்த அந்த வரலாற்று சோகத்தால், மொத்த சிறைச்சாலையும் மயான அமைதியில் மூழ்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: