இறைச்சி உணவு அதிகம் உண்டதால் சீன உணவகத்தால் தடை செய்யப்பட்ட நபர்

நெருப்பில் வாட்டப்பட்ட 'க்ரில்' இறைச்சி உணவுகளை வழங்கும் பஃபே உணவகம் ஒன்றால் தாம் தடை செய்யப்பட்டுள்ளதாக சீனாவை சேர்ந்த காணொளிப் பதிவர் ஒருவர் கூறியுள்ளார். தாம் அதிக அளவில் உணவு உண்பதைக் காணொளியாக இவர் வெளியிடுபவர்.
சாங்சா நகரிலுள்ள ஹண்டாடி சீஃபுட் பார்பிக்யூ பஃபே எனும் உணவகத்தில் இதற்கு முன்பு அவர் சில முறை தொடர்ச்சியாக உணவு உண்ட பின்பு இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக காங் என்று மட்டுமே அறியப்படும் இந்த நபர் ஹுனான் டிவி எனும் ஊடகத்தி தெரிவித்துள்ளார்.
இந்த உணவகத்துக்கு காங் முதல் முறை சென்ற பொழுது ஒன்றரை கிலோ பன்றி இறைச்சி சாப்பிட்டுள்ளார்.
அடுத்த முறை சென்ற பொழுது மூன்றரை கிலோவில் இருந்து நான்கு கிலோ எடை வரை உள்ள இறால் உணவையும் சாப்பிட்டுள்ளார்.
அதிக அளவில் உணவு உட்கொள்பவர்களை உணவகம் பாரபட்சத்துடன் நடத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
"என்னால் அதிக உணவு உண்ண முடியும். அது ஒரு தவறா? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் காங் தமது உணவகத்திற்கு வந்து உணவு உண்ணும் பொழுதெல்லாம் தமது பணம் வீணாகிறது என்று தெரிவித்துள்ளார் அந்த உணவகத்தின் உரிமையாளர்.
"ஒவ்வொரு முறையும் அவர் எனது உணவகத்துக்கு வரும் பொழுது நான் சில நூறு யுவான்களை இழக்கிறேன். "

பட மூலாதாரம், Getty Images
"அவர் சோயா பால் குடித்தால் கூட இருபதிலிருந்து முப்பது பாட்டில்கள் குடிக்கிறார். பன்றி இறைச்சி சாப்பிடும் பொழுது சமைக்கப்பட்ட அனைத்தையும் அவரே முடித்து விடுகிறார். இறால் வகை உணவுகளை உட்கொள்பவர்கள் பரிமாறும் இடுக்கியைப் பிடித்து உணவுகளை எடுப்பார்கள். ஆனால் இவரோ அந்த தட்டையே எடுத்துக் கொண்டு செல்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிக உணவு உட்கொண்டு காணொளி வெளியிடுபவர்கள் அனைவரையும் தமது உணவகத்தில் உண்பதற்குத் தாம் தடை விதித்துள்ளதாக அந்த உரிமையாளர் கூறுகிறார்.
இந்தத் தடை சீன சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. தங்களுக்கு இழப்பு நேரிடுகிறது என்று தோன்றினால் அந்த உணவகம் அனைத்தையும் உண்பதற்கான பஃபே முறையை கடைபிடிக்க கூடாது என்று அதை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இவ்வாறு உண்பவர்களால் அந்த உணவகத்திற்கு அதிகமான இழப்பு நேரிடுகிறது என்று கூறுபவர்களும் உள்ளனர்.
உணவுப் பழக்கம் தொடர்பான காணொளிகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு சீன அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
இத்தகைய காணொளிகள் நாடு முழுவதும் தடை செய்யப் படுவதற்கான சாத்தியமும் சீனாவில் நிலவுகிறது.
உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுப்பது மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்த கவலையை சீன அதிபர் ஷி ஜின்பிங் வெளியிட்ட பின்பு அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.
பிற செய்திகள்:
- 'ஆமைக்கறி, பூனைக்கறி': சீமான் பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி பேச்சால் சர்ச்சை
- "சென்னை அணியின் தலைவராக தோனியே தொடர வேண்டும்": மு.க. ஸ்டாலின்
- ஆப்கன் அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க ஒப்புக்கொண்ட தாலிபன்கள்
- பேக்கரியில் திண்பண்டம் திருடியதாக சிறுமி எரித்துக் கொலையா? வளர்ப்புத் தந்தை கைது
- டாஸ்மாக் வருமானம்: வெள்ளை அறிக்கை கேட்ட சங்கத் தலைவர், இடை நீக்கம் செய்த தமிழ்நாடு அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












