"சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனியே தொடர வேண்டும்": தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ms dhoni chennai super kings

பட மூலாதாரம், csk

எத்தனை சீஸன்கள் வந்தாலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகத் தொடர வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தனது கடைசி ஐ.பி.எல். போட்டி சென்னையில்தான் இருக்குமென சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்திருக்கிறார்.

2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல்லின் தலைவரான பிரிஜேஷ் பட்டேல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய மகேந்திர சிங் தோனி, தனது கடைசி ஐபிஎல் போட்டியில் சென்னையில்தான் இருக்குமெனத் தெரிவித்தார். "எந்த நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தார்கள். சென்னை மிகச் சிறந்த நினைவுகளை எனக்குத் தந்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடந்தாலும் சரி, ஐந்தாண்டு கழிந்து நடந்தாலும் சரி கடைசிப் போட்டி சென்னையில்தான் இருக்கும்" என்றார் தோனி.

கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம் என்றும், 2008ல் தன்னை சென்னை அணிக்குத் தேர்வுசெய்வார்கள் என எதிர்பார்க்கவில்லையென்றும் 2 ஆண்டுகள் சி.எஸ்.கே. சஸ்பென்ட் செய்யப்பட்டபோதும் அதிகம் பேசப்பட்ட அணியாக சென்னை அணியே இருந்தது என்றார் தோனி.

இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோனியின் ரசிகராக இந்த விழாவில் பங்கேற்பதாகத் தெரிவித்தார். "இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திட வேண்டும், முதலமைச்சராக வந்திட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். நான் முதலமைச்சராக வந்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் தோனியினுடைய ரசிகராக நான் வந்திருக்கிறேன். நான் மட்டும் வரவில்லை, என் பேரன், பேத்திகள் எல்லாம் வந்திருக்கிறார்கள். எல்லோரும் அவருடைய ரசிகர்கள். என் அப்பாவும் தோனியினுடைய ரசிகர்தான்," என்று தெரிவித்தார்.

ஐ.பி.எல் 2021 வெற்றிக் கோப்பையுடன் மகேந்திர சிங் தோனி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன்.

பட மூலாதாரம், csk

படக்குறிப்பு, ஐ.பி.எல் 2021 வெற்றிக் கோப்பையுடன் மகேந்திர சிங் தோனி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸன்

மேலும், "நான் இந்த விழாவிலே கலந்துகொண்டிருந்தாலும், முதலமைச்சர் என்கிற முறையில் என்னுடைய மனது கடந்த பத்து நாட்களாகப் பெய்துகொண்டிருக்கக்கூடிய மழையைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குரிய பாதுகாப்பை, நிவாரணப் பணிகளை எப்படி நடத்தவேண்டும் என்பதைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நேரத்தில் சிறிதுநேரம் கொஞ்சம் இளைப்பாறலாம் என்று இந்த விழாவில் நான் கலந்துகொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இப்போது அவர் கிட்டத்தட்ட சென்னைக்காரரைப் போலவே ஆகிவிட்டதாகக் கூறினார் மு.க. ஸ்டாலின் .

"தமிழர்கள் பச்சைத் தமிழர்கள் என்றால், தோனி அவர்கள் மஞ்சள் தமிழர். எத்தனை பரபரப்பு இருந்தாலும், எத்தனை நெருக்கடி இருந்தாலும், தலைவர் அவர்களும், தோனி அவர்களும் Coolஆக இருப்பார்கள். கேப்டன் தோனி அவர்கள் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் எழுந்திருக்கிறது. அதுதான் மிகமிக முக்கியமானது. தோனி அவர்கள் முதன்முதலாக களத்தில் குதித்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். நீளமான முடி - உருண்டு திரண்ட தோள்களோடு அவர் களத்தில் நின்ற போது அனைத்து ரசிகர்களும் அவர்மேல் அன்பு கொண்டார்கள், ஈர்ப்புக் கொண்டார்கள். அவர் விளாசிய சதங்கள், அதிரடியாக அவற்றை எட்டிய வேகம், ஸ்டைலாக அடித்த ஹெலிகாப்டர் ஷாட் மறக்கவே முடியாது யாராலும். அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடியவர். டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவில் கிரிக்கெட் என்றால் அது தோனிதான் எனும் நிலை உருவாகியிருக்கிறது" என்றார் மு.க. ஸ்டாலின்.

தான் சில திட்டங்களைப் அறிவித்தபோது, பல கிரிக்கெட் ரசிகர்கள் தினமும் ஒரு சிக்சர் அடிக்கிறேன் என சொல்லும்போதெல்லாம் தோனியை நினைத்துக்கொள்வதாக மு.க. ஸ்டாலின் கூறினார்.

இறுதியாக தனது பேச்சை நிறைவுசெய்யும்போது, மேலும் பல சீஸன்களுக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவராக தோனியே இருக்க வேண்டுமென மு.க. ஸ்டாலின் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :