சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"

சீன தூதுவர்

பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka

படக்குறிப்பு, சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்

''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது," என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கமாக உள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்நூலகம்

இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாணத்திற்கான பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழு, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர், முதலில் ஆசியாவிலேயே மிகப் பழைமை வாய்ந்த நூலகமாக விளங்கும் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளார்.

நூலகத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்களை சீனா அப்போது அளித்தது.

சீனத் தூதுவர், யாழ்ப்பாணம் நூலகத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், யாழ்ப்பாணம் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் கலந்து கொண்டிருந்தார்.

'சீன தூதுவர், தன்னுடன் எந்தவொரு விடயமும் கலந்துரையாடவில்லை' என யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.மாறாக தான் யாழ்ப்பாணம் நூலகத்தை காண்பிப்பதற்காகவே அங்கு சென்றதாகவும் அவர் கூறினார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன், சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தமிழ் சமூகத்தின் வாழ்வாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும், ஐந்து நீர் சுத்திகரிப்பு நடமாடும் ஆலைகளை சீன தூதுவர், நன்கொடையாக வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம், இந்த ஆலைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தியா எவ்வளவு தூரம்?

பருத்தித்துறை கடற்கரை பகுதிக்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுவர், இந்தியாவிற்கு எவ்வளவு தூரம் என அங்கிருந்த இராணுவ அதிகாரிகளிடம் வினவினார்.

அதற்கு பதிலளித்த இராணுவ அதிகாரி, 30 கிலோமீட்டர் என கூறினார்.

இதையடுத்து, பருத்தித்துறை பகுதியிலிருந்து ட்ரோன் கேமரா மூலம் குறித்த பகுதியை சீன தூதுவர் ஆராய்ந்துள்ளார்.

இந்த செய்தி காணொளியை நியூஸ் பெஸ்ட் வெளியிட்டிருந்தது.

சீன தூதுவர்

பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka

படக்குறிப்பு, யாழ்ப்பாணம் நூலகத்திற்கு வந்த சீன தூதுவர்

இந்து கலாசார ஆடையில் யாழ்ப்பாணம் சென்ற சீன தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள சீன தூதுவர், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்து கலாசார ஆடைகளை அணிந்தவாறு, அவர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

கடல் தொழிலாளர்களுக்கு உதவி

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சீனத் தூதர் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால், சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

13.75 மில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளையும், 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகளையும் சீனா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு கையளித்துள்ளது.

சீன தூதுவர் ஏன் யாழ்ப்பாணத்திற்கு திடீர் வருகை புரிந்தார்?

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் தொடர்ந்தும் காணப்பட்ட நல்லுறவு கடந்த சில காலமாக பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை உரத்தை, இலங்கை, நாட்டிற்குள் அனுமதிக்காதிருந்த சம்பவம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்தது.

இவ்வாறு சீன உரத்தை அனுமதிக்காத இலங்கை, இந்தியாவிடமிருந்து திரவ உரத்தை பெற்றுக்கொண்டிருந்தது.

சீன தூதுவர்

பட மூலாதாரம், Ministry Of Fisheries Media Unit

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்ட மின்சக்தி திட்டத்தை கைவிட சீனா அண்மையில் திடீரென தீர்மானித்திருந்தது.

மூன்றாவது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த மூன்று தீவுகளையும் சீனாவிற்கு வழங்குவதற்கு, இந்தியாவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.

தேசிய பாதுகாப்பு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, இந்தியா இந்த அழுத்தத்தை பிரயோகித்திருந்தது.

இவ்வாறான நிலையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, டிசம்பர் மாதம் முதல் தேதி இந்தியா பயணத்தார்.

பஷில் ராஜபக்ஷ, இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்திலேயே, யாழ்ப்பாணத்தை அண்மித்து செய்யவிருந்த மின்சார திட்டத்தை கைவிடுவதாக சீனா டிவிட்டரில் பதில் அறிவித்திருந்தது.

அதேவேளை, மாலத்தீவில் 12 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் சீன தூதரகம் அன்றைய தினமே அறிவித்திருந்தது.

மூத்த பத்திரிகையாளரின் பார்வை

இவ்வாறான பின்னணியில், சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீரென விஜயம் மேற்கொண்டமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

''இந்தியா, இலங்கையில் தங்களின் ராஜதந்திர முயற்சிகளில் வலுவிழந்திருப்பதையே, சீன தூதுவர், யாழ்ப்பாணத்திற்கு சென்று காண்பித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்குள் சீனா முழுமையாக ஊடுறுவியுள்ளது. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரை சந்தித்துள்ளார்கள். பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போது, இந்தியா அழுத்தங்களை பிரயோகித்தது. எனினும், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றார். சீனாவும் தற்போது யாழ்ப்பாணத்திற்குள் சென்றுள்ளது. நல்லூருக்கு சென்றமை மற்றும் மீனவர்களை சந்தித்தமை ஆகிய சீனாவின் ஆதிக்கம் வலுவாக இருக்கிறது என்பதையே காட்டுகின்றது." என பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

சீன தூதுவர்

பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka

இலங்கையின் வட பகுதியில், இந்திய பக்கமாக காணப்படுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மீனவ சமூகத்திற்கு மாத்திரம், முதற்கட்டமாக சீனா உதவிகளை வழங்கியமையானது, இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கான நோக்கமாக இருக்கலாமா? என பிபிசி தமிழ், மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம் வினவியது.

''இல்லை, வலுப்படுத்துவதற்கு இல்லை. மீனவர்களின் நல் அபிப்பிரயத்தை பெற்றுக் கொள்வதே சீனாவின் நோக்கம். ''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகின்றார்கள்" என்ற நல் அபிப்பிரயத்தை பெற முயற்சிக்கின்றார்கள். நல்லூர் ஆலயத்திற்கு கலாசார ரீதியில் சென்றமையானது, தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்கும் ஒரு செயல். மேலாடையை கழற்றி விட்டு நல்லூர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என கூறியமைக்காக, இந்திய தலைவர் ஒருவர் நல்லூர் ஆலயத்திற்கு செல்லவில்லை. ஆனால் சீனத் தூதர் நல்லூர் ஆலயத்திற்கு செல்வதற்கான அவசியம் கிடையாது. எனினும், கலாசார ரீதியில் சென்றார். ஏனெனில், தமிழர்களின் மனங்களில் இடம்பிடிப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. சிங்களவர்களின் மனங்களில் இடம்பிடித்து விட்டார்கள். இனி தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே சீன தூதுவர் யாழ்ப்பாணம் சென்றார். இந்திய மீனவர்கள் எம்மை அடிக்கின்றார்கள். சீனா எமக்கு உதவி செய்கின்றது என்றே வடபகுதி மீனவர்கள் எண்ணுவார்கள். வட பகுதி மீனவர்ளுக்கு இந்தியா இன்று வரை இவ்வாறான உதவிகளை செய்யவில்லை. சீன தூதுவர் மீனவரிடம் செல்வது மிக பெரிய விடயம். சாதாரண மக்களுக்கு இது பெரியதொரு விடயம்" எனவும் அவர் கூறினார்.

''நல்லூரிலிருந்து ஆரம்பமான சீனாவின் பயணம்" என்றே செய்திக்கு தலைப்பு இட வேண்டும்" எனவும் மூத்த பத்திரிகையாளர் குறிப்பிடுகின்றார்;.

அதானி மன்னாருக்கு விஜயம்

இந்தியாவை அண்மித்துள்ள மன்னார் வளை குடாவில் புதிய வர்த்தக திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில், அதானி நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது.

இதன்படி, இந்த திட்டம் குறித்து ஆராய்வதற்காக கடந்த அக்டோபர் மாதம், அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி குடும்ப உறுப்பினர்கள் மன்னார் சென்றிருந்தார்கள்.

சீன தூதுவர்

பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka

அதேபோன்று, யாழ்ப்பாணத்தை அண்மித்த மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டமானது, இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கோணத்தில், இந்தியாவினால்; விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த திட்டம் சீனாவிற்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த திட்டத்தை இந்தியா முன்னெடுக்கக் கோரியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அந்த திட்டத்தை இந்தியாவிற்கு வழங்க தீர்மானித்து வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் பிபிசிக்கு உறுதிப்படுத்தின.

இவ்வாறு இந்தியாவிற்கு அருகிலுள்ள மன்னார் வளைகுடா மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ள கருத்து வெளியாகிய இந்த நிலையில், சீன தூதுவர் உள்ளிட்ட குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடற்றொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கியமை பல்வேறு கேள்விகளை தோற்று வித்துள்ளது.

சீன தூதுவர்

பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka

இலங்கை அரசாங்கத்தின் பதில்

இவ்வாறு எழுந்த கேள்வி குறித்து, ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் பிபிசி தமிழ் வினவியது.

''அதே கண்ணாடியில் பார்ப்பவர்களுக்கு, அவ்வாறே தெரியும்" என அவர் பதிலளித்தார்.

''அந்த கண்ணாடியில பார்க்கின்றவர்களுக்கு, அவ்வாறான நோக்கம் தெரிகின்றது. இது எதிர்பாராமல் இடம்பெற்ற ஒரு சம்பவமாகவே நான் பார்க்கின்றேன். இந்திய நாடு என்பது எங்களுக்கு மிகவும் நெருங்கிய நாடு என்ற அடிப்படையில, வட பிராந்தியத்தில் கலாசார ரீதியில் தொடர்பு இருக்கிறது. பல மொழி ரீதியான தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையில நாங்கள் இன்னும் இணைந்து அவர்களோடு செயல்படுகிறோம். ஆனால், வேறு எந்தவொரு நாடும் வந்து உதவி செய்வதற்கு, யாரும் இல்லை என்று சொல்லப் போவதில்லை. ஆனால், மூன்று தீவுகளுக்கும் நடந்த விடயம் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இந்தியா என்கின்ற எங்களுடைய சகோதர நாடு, வேண்டாம் என்று சொன்னால், அதற்கான நடவடிக்கை எடுத்து, அதை இந்தியா ஊடாக செய்வதாக இருந்தால், அது நல்லது. இந்தியா ஓர் ஆஃபர் வழங்கியுள்ளது. அதைதான் எடுக்க போகிறார்கள் என்று நம்புகிறேன்" என அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கின்றார்.

ராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதர்

வட மாகாண விஜயத்தின் ஒரு பகுதியாக சீன தூதுவர், மன்னாருக்கு இன்று (17) விஜயம் மேற்கொண்டிருந்தார். மன்னார் - தாழ்வுபாடு பகுதி ஊடாக, இலங்கை கடற்படைக்கு சொந்தமான விரைவு படகில் சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் பாக் நீரிணை நோக்கி பயணத்தை தொடங்கினர்.

இதன்போது, ராமர் பாலம் என்று நம்பப்படும் மூன்றாவது மணல் திட்டை, சீன தூதுவர் பார்வையிட்டார். கடந்த சில தினங்களாகவே சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர், வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கினார்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலுள்ள மீனவ சமூகத்திற்கு சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகளை சீன தூதுவர் வழங்கி வைத்திருந்தார்.

அத்துடன், யாழ்ப்பாணம் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர், நூலகத்திலுள்ள இந்திய வளாகத்திற்கு சென்று விடயங்களை ஆராய்ந்தார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு சென்ற சீன தூதுவர், அங்கிருந்து ''இந்தியாவிற்கு எவ்வளவு தூரம்?'' என வினவியதுடன், அந்த இடத்தை ட்ரோன் கேமராக்களின் மூலம் கண்காணித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: