இந்தியாவை புகழ்ந்த தாலிபன் - மேலும் உதவிகள் கேட்கும் ஆப்கன் அமைச்சர்

பட மூலாதாரம், @FMamundzay
தாலிபன் ஆட்சி அமைத்த பின், ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சுகாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா மனிதாபிமான அடிப்படையில், அந்நாட்டுக்கு முதல் கட்ட மருத்துவத் துறை உதவிகளை அனுப்பியுள்ளது.
இதன் மூலம், அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின், சனிக்கிழமையன்று ஆப்கானிஸ்தானுக்கு முதல் மருத்துவ உதவியை இந்தியா செய்துள்ளது.
டெல்லியிலிருந்து நேரடியாக காபூலுக்கு புறப்பட்ட 'காம் ஏர்' என்ற ஆப்கன் விமானம் மூலம் 1.6 மெட்ரிக் டன் மருத்துவ உதவிப் பொருட்களை, இந்தியா தாலிபன் ஆட்சியிலுள்ள ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.
இந்தியாவிடம் இருந்து கிடைத்துள்ள மருத்துவ உதவிக்கு ஆப்கானிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது. ஆனால், வருங்காலத்தில் சுகாதாரம் தொடர்பான நெருக்கடிகளை சமாளிக்க, மேலும் உதவிகள் தேவை என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அந்நாட்டில் மீண்டும் தாலிபன் ஆட்சி வந்த பிறகு, இந்தியாவிடமிருந்து மருத்துவ உதவி பெற்றது இதுவே முதல்முறை.
இது தொடர்பாக, 'டோலோ நியூஸ்' என்ற ஆப்கானிஸ்தானின் தேசிய செய்தித் தொலைக்காட்சியில் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜாவீத் அசீர் பேசினார். "உலக சுகாதார அமைப்பின் மூலமாக ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சகத்திடம் சில நாடுகள் மருத்துவ உதவிகள் செய்தன. நாங்கள் அதை பாராட்டுகிறோம். மற்ற நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.", என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர, ஆப்கானிஸ்தானுக்கு ஐந்து லட்சம் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி டோஸ்களை இந்தியா அளித்து உதவியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து, இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரான ஃபாரித் மமுன்தாசே ட்வீட் செய்து நன்றி தெரிவித்துள்ளார். அவர், "உங்கள் கருணையால் எங்களுக்கு உதவிகள் கிடைத்துள்ளன. இது விலை மதிக்க முடியாதது. தனக்கு தீங்கு செய்தவர்களுக்கு உதவி செய்வதே மகாத்மாவின் வழி.
இந்த கடினமான காலகட்டத்தில், ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கான சிகிச்சைக்கு உதவி செய்ததற்கு, இந்தியாவுக்கு மிக்க நன்றி.
இந்தியா-ஆப்கன் நட்பு என்றும் வளரட்டும் ", என்று ட்வீட் செய்துள்ளார்.
அவர் மேலும் ஒரு ட்வீட் செய்துள்ளார். "ஒரு சிறிய உதவி, ஒரு சிறு நம்பிக்கை மற்றும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க ஒருவர் இதுவே குழந்தைகள் அனைவரின் தேவை. இன்று காலை, இந்தியாவில் இருந்து காபூலுக்கு முதல் கட்ட மருத்துவ உதவிகள் வந்தடைந்தன. இந்த கடினமான காலகட்டத்தில் , உயிர் காக்கும் 1.6 மெட்ரிக் டன் மருந்துகள் பல குடும்பங்களுக்கு உதவும். இந்திய மக்களிடம் இருந்து வந்த பரிசு", என்று பதிவிட்டிருந்தார்.
தாலிபனை அங்கீகரிக்காத இந்தியா
இந்தியா செய்த இந்த உதவி மனிதாபிமான அடிப்படையிலானதே. ஆனால், தாலிபன் ஆட்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை. உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் மூலம் இந்தியா ஆப்கானிஸ்தானில் உள்ள மருத்துவமனைக்கு உதவி செய்தது.
'தி இந்து' ஆங்கில செய்தித்தாளில் வெளியான அறிக்கைப்படி, 'காம் ஏர்' விமானத்தில் 1.6 மெட்ரிக் டன் மருத்துவ உதவி பொருட்களுடன், இந்தியர்கள் 10 பேரும், ஆப்கானின் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 94 பேரும் பயணித்தனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சனிக்கிழமையன்று மேலும் ஓர் அறிக்கை வெளியிட்டது. "ஆப்கானிஸ்தானில் நிலவும் சவாலான சுகாதார நிலையைப் பார்த்து, தில்லியில் இருந்து காபூலுக்கு திரும்பும் விமானத்தில், மருத்துவ உதவிப் பொருட்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த மருந்துகள் காபூலிலுள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் , காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் இவற்றைக் கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படும்", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்தியாவிடமிருந்து பரிசு'
மனிதாபிமான அடிப்படையில் வழங்கிய உதவி பொருட்கள் அடங்கிய பெட்டிகளில் "இந்திய மக்களிடமிருந்து ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பரிசு" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. சனிக்கிழமையன்று அனுப்பப்பட்ட உதவியின் மூலம், தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பிய இரான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,

பட மூலாதாரம், Getty Images
துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
செப்டம்பர் 13ம் தேதியன்று, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆற்றிய உரையில், கடுமையான குளிர் காலத்தில், ஆப்கானிஸ்தானின் பொது மக்களுக்கு மருத்துவ உதவிப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக "ஆப்கானிஸ்தானுக்கு தங்கு தடையற்ற நேரடி அணுகுமுறைக்கு" அழைப்பு விடுத்தார். மருத்துவ பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் மாதம் இடைக்காலத்தில், மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல், காபூல் விமான நிலையத்தை இயக்கவும், நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கவும் சர்வதேச உதவியை தாலிபன் நாடியுள்ளது.
பாகிஸ்தான் மூலம் உதவவிருக்கும் இந்தியா
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியை வீழ்த்தி காபூலில் தனது அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா செய்த முதல் மருத்துவ உதவி இது.

பட மூலாதாரம், Getty Images
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனென்றால், வரும் நாட்களில், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மூலம் கிடைக்கும் மருத்துவ உதவிகள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானை அடைய உள்ளன.
இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை அனுப்ப உள்ளது. இதை வாகா எல்லையில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லைக்கு கொண்டு செல்ல ஆப்கானிஸ்தான் தனது டிரக்குகளை பயன்படுத்த பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா தனது டிரக் மூலமாகவோ அல்லது ஆப்கானிஸ்தான் டிரக் மூலமாகவோ கோதுமையை அனுப்ப வேண்டும் என்று இந்தியா நிபந்தனை விதித்துள்ளது. முன்னதாக, இதற்கு பாகிஸ்தான் தயாராக இல்லை. ஆனால் பின்னர், ஆப்கானிஸ்தான் டிரக் மூலம் அனுப்ப பாகிஸ்தான் அனுமதி வழங்கியது.
இந்தியா இந்த உதவியை வாகா எல்லை வழியாக பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிக்கு அனுப்பும். அதன் பிறகு, ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் உள்ள நங்கர்ஹார் எல்லையில் உள்ள கைபர் பக்துன்க்வாவில் டோர்காமுக்கு கொண்டு செல்லப்படும்.
இதற்கு முன், தாலிபன் நிர்வாகத்தை இந்தியா அங்கீகரிக்காது என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே மருத்துவம், கல்வி மற்றும் பிற வகையான பரிமாற்றங்கள் இருக்கக்கூடும் என்று இந்த செயல்பாடுகள் மூலம் தெரியவருகிறது.
ஆகஸ்ட் மாதம், தாலிபன் காபூலைக் கைப்பற்றியபோது, நாட்டில் நிலையற்ற தன்மை நிலவியபோது, இந்தியா ஆபரேஷன் 'தேவி சக்தி' என்ற நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் மொத்தம் 669 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது இந்தியா. இவர்களில் 448 பேர் பல்வேறு திட்டங்களில் பணி புரிந்த இந்தியர்கள். அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 206 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- "உன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதே" ஆப்கன் பள்ளி மாணவிக்கு மலாலா எழுதிய கடிதம்
- ஓமிக்ரான்: ஜனவரியில் அடுத்த கொரோனா அலையைக் கொண்டுவருமா?
- நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து துரத்தப்பட்டாரா? நடந்தது என்ன?
- ரஜினிகாந்த் பிறந்தநாள்: விரும்பி ஏற்ற கதாப்பாத்திரம் முதல் கடைசி என அறிவித்த படம் வரை
- இலங்கையில் வாகன இறக்குமதி தடை 2022 இறுதி வரை தொடரும்: பொருளாதாரத்தை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












