பாஜகவுக்கு ரூ.100 கோடி கொடுத்தாரா `லாட்டரி' மார்ட்டின்? காங்கிரஸ் குற்றச்சாட்டின் பின்னணி

கே.எஸ்.அழகிரி

பட மூலாதாரம், K.S.Alagiri/Facebook

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது பா.ஜ.கவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின், 100 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சுமத்தியுள்ளார். `சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் நிதி பெற்றிருந்தால் அதனைக் கேள்வியெழுப்பலாம்' என்கிறது பா.ஜ.க. என்ன நடந்தது?

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் வரவு, செலவு கணக்குகளை ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள சில பெரிய நிறுவனங்கள், தங்களின் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி திரட்டித் தருகின்றன. அந்தவகையில் டாடாவால் நிர்வகிக்கப்படும் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை (Progressive Electoral Trust) நிறுவனம், கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 356 கோடி ரூபாய் வரையில் பா.ஜ.கவுக்கு நிதி திரட்டித் தந்துள்ளது.

அதேநேரம், இந்தியாவின் புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளை நிறுவனம் இதே காலகட்டத்தில் 54.25 கோடி ரூபாயை அளித்ததாக பா.ஜ.க தெரிவித்திருந்தது. பார்தி குழுமம், ஓரியண்ட் சிமெண்ட், டி.எல்.எஃப், ஜே.கே.டயர் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதரவில் புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் 245.7 கோடி ரூபாயை புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளையிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன.

இந்தத் தொகையில் பா.ஜ.கவுக்கு மட்டும் 83 சதவிகிதம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவ்வாறு நிதி வழங்கிய நிறுவனங்களில் கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் 100 கோடி ரூபாயை புரூடன்ட் தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடையாகக் கொடுத்ததாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தகவலில், மேகா இன்ஜினீயரிங் அண்ட் இன்ஃபிராஸ்ட்ரக்சர், பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ரா டெல், பிலிப்ஸ் கார்பன் பிளாக், டோரண்ட் குரூப் ஆகிய நிறுவனங்களிடம் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய ஜனதா தளம் 25 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின், அரசியல் பலம் மற்றும் அரசை ஏமாற்றியதன் மூலம் 7,000 கோடி மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். கடந்த 2019 ஏப்ரல் 30 ஆம் தேதி இவரது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் நான்கு நாட்கள் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 5.8 கோடி ரொக்கமும் 24 கோடி மதிப்புள்ள தங்கம், வைரமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் மார்ட்டினுடன் தொடர்புடைய 70 இடங்களில் சோதனை நடைபெற்றது.

மார்ட்டினிடம் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர் ஒருவர், குளம் ஒன்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தந்தையின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து அவரது மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக

பட மூலாதாரம், Getty Images

"2011 ஆம் ஆண்டு மார்ட்டின் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் மீது 30 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்ததது" என்று குறிப்பிடும் கே.எஸ்.அழகிரி, "சிக்கிம் அரசை 4,500 கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றியதாக வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. மார்ட்டின் ஜாமீனில் வந்தாலும் அவர் மீதான சி.பி.ஐ வழக்குகள் நிலுவையில்தான் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழும் மார்ட்டின் அடைக்கப்பட்டார். இப்படிப்பட்ட நபரிடம்தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது 100 கோடி ரூபாயை பா.ஜ.க நன்கொடையாகப் பெற்றுள்ளது. புரூடெண்ட் என்ற தேர்தல் நிதி அறக்கட்டளை, கட்சிகள் பெற்ற நிதி விவரங்களை கடந்த 20 ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது," என்கிறார்.

`` கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் மொத்தம் 245.7 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளன. இந்தத் தொகையில் பா.ஜ.கவுக்கு மட்டும் 83 சதவிகிதம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரிச்சோதனை நடத்தப்பட்ட நிலையில், மார்ட்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீஸ் நிறுவனம் மூலம் பா.ஜ.கவுக்கு 100 கோடி ரூபாயை நன்கொடை அளித்திருப்பது புருடெண்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளது. மார்ட்டினிடம் 100 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை பெற்றுள்ள நிலையில், அவருக்கு மோதி அரசு எத்தகைய உறுதியை அளித்துள்ளது? இதுதொடர்பாக நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்," எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

`` அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வருவது என்பது இயல்பானதுதானே?'' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` ஆமாம். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கப்படுவது என்பது புதிதல்ல. ஆனால், அதற்கென்று ஒரு வரம்பு உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொழிலபதிபர், 100 கோடி ரூபாயை தமிழ்நாடு பா.ஜ.கவின் வளர்ச்சிக்காக கொடுக்கிறார் என்றால் அந்தத் தொகை ஏன் கொடுக்கப்படுகிறது, அதனைப் பெற்றவர்களின் நோக்கம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்'' என்றார்.

மேலும், `` மிகுந்த சர்ச்சைக்குரிய தொழிலதிபராக மார்ட்டின் இருக்கிறார். சி.பி.ஐ அமைப்பால் அவரது வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டது. இந்தநிலையில், அவரது மகன் பா.ஜ.கவில் இணைந்தார். லாட்டரி மோசடியில் 4,500 கோடி ரூபாயை ஏமாற்றியதாக சிக்கிம் மாநில அரசு, மார்ட்டின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இப்படிப்பட்ட ஒருவரிடம், மத்தியில் ஆளும் பா.ஜ.க நிதி பெற்றுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் குற்றம் செய்தவர்கள், பா.ஜ.கவுக்கு நன்கொடை கொடுத்தால் போதும் என்றால் அமலாக்கத்துறையும் சி.பி.ஐயும் தேவையில்லை'' என்கிறார்.

காங்கிரஸ் எழுப்பும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கணக்கில் வருகிற பணம் என்ற அடிப்படையில் சட்டத்துக்கு உட்பட்டு ஓர் அரசியல் கட்சி பெற்றிருந்தால் அதுகுறித்துப் பேசுவதற்கு யாருக்கும் எந்தத் தகுதியும் இல்லை. தமிழ்நாடு பா.ஜ.கவுக்கு கொடுக்கப்பட்டது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அழகிரி பேசுகிறார் எனத் தெரியவில்லை. முதலில், தனது முகத்தை கே.எஸ்.அழகிரி கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும். கல்லூரியை நடத்தி நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் அவர் விளையாடியிருக்கிறார். இந்த விவகாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக எதாவது நடந்திருந்தால் நாம் பேசலாம்'' என்றதோடு முடித்துக் கொண்டார்.

காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் வழக்கறிஞர் சங்கரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``தொழில்முறையில் அவர்களது வழக்குகளை நடத்தி வருகிறேன். இதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரிய வாய்ப்பில்லை'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: