தேர்தல் பத்திரங்கள்: பாஜகவுக்கு 2,500 கோடி ரூபாய் நன்கொடை, கேள்விக்குள்ளாகும் தேர்தல் பத்திர விவகாரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தேர்தல் ஆணையத்தின் முன்வைக்கப்பட்ட வருடாந்திர தணிக்கை அறிக்கையில், 2019 - 20 நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சி சுமார் 2.5 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. இந்த வருமானம் 2018 - 19 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அக்கட்சி ஈட்டிய ரூ.1,450 கோடியை விட 76 சதவீதம் அதிகம்.
கிடைத்த தகவல்களின்படி, 2019-20 நிதியாண்டில், 18 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மொத்தம் சுமார் 3 ஆயிரத்து 441 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்றன. அந்த மொத்தத் தொகையில் 75 சதவீம் பாஜகவின் கணக்கில் வந்திருக்கிறது.
பாஜகவின் நன்கொடை வருவாய் பன்மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், 2019-20 நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரசுக்கு ரூ. 318 கோடி மட்டுமே கிடைத்தது. இந்தத் தொகை 2018-19ல் கட்சிக்கு கிடைத்த ரூ .383 கோடியை விட 17 சதவீதம் குறைவானது. மேலும், 2019-20 ஆம் ஆண்டின் மொத்த அரசியல் நன்கொடையில் காங்கிரஸ் பெற்றது வெறும் 9 சதவிகிதம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற எதிர்க்கட்சிகளின் விவரங்களைப் பார்த்தால், 2019-20 நிதியாண்டில், திரிணாமுல் காங்கிரஸ் 100 கோடி, திமுக 45 கோடி, சிவசேனா 41 கோடி, தேசியவாத காங்கிரஸ் 20 கோடி, ஆம் ஆத்மி 17 கோடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2.5 கோடி நன்கொடையை இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அரசு சாரா அமைப்பான ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் படி, 2017-18 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கு இடையில், தேர்தல் பத்திரங்களில் இருந்து மொத்தம் ஆறாயிரத்து இருநூறு கோடிக்கும் அதிகமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இந்த மொத்தத் தொகையில் சுமார் 68 சதவிகிதம் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைத்தது, அதாவது 4,500 கோடிக்கும் மேல்.
இதனால், தேர்தல் பத்திரத் திட்டம் ஆளும் பாஜகவுக்குப் பயனளிக்கும் நோக்கத்துடன் தான் கொண்டுவரப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது?
தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான வழிமுறையாகும். இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து இந்தப் பத்திரத்தை வாங்கி, அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் பெயர் வெளியிடாமல் நன்கொடை அளிக்கலாம்.
தேர்தல் பத்திரத் திட்டம் 2017 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பூர்வமாக 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், பாரத ஸ்டேட் வங்கி அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்க பத்திரங்களை வழங்கலாம். KYC என்றழைக்கப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் கிடைக்கும் வங்கிக் கணக்கை வைத்திருக்கும் எந்தவொரு நன்கொடையாளரும் இதை வாங்கலாம்.
ஒரு கட்சிக்கு கொடுக்கப்படும் நன்கொடைகள், நன்கொடையாளரின் விவரங்களை வெளிப்படுத்தாமலே கணக்கில் காட்டப்படுவதை உறுதி செய்வதே தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் என மத்திய அரசு கூறுகிறது.
தேர்தல் பத்திரங்கள், கருப்புப் பணத்தை தேர்தல் நிதிக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒரு வழிமுறை என்றும் அரசாங்கம் கூறியது. தேர்தல் பத்திரங்கள் இல்லாத போது, நன்கொடையாளர்கள் தங்கள் வணிகத்தின் மூலம் ஈட்டும் வருவாயிலிருந்து ரொக்கமாக மட்டுமே நன்கொடை வழங்க முடியும் என்ற நிலை இருந்தது என்பது அரசின் வாதம்.
இந்தத் திட்டத்தைத் தொடங்குகையில், அரசியல் நிதியை முறையாகப் பெற்று பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக மட்டுமே நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன என்று அரசாங்கம் கூறியது.
ஏன் விமர்சிக்கப்படுகிறது?

பட மூலாதாரம், Hindustan Times
நன்கொடையாளரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதால், அது கருப்புப் பண வரவை ஊக்குவிக்கும் என்பது இதை எதிர்ப்பவர்களின் வாதம். இந்த திட்டம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணம் கொடுக்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டது என்கிற விமர்சனமும் உள்ளது.
இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்கள், இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், சட்ட அமைச்சகம் மற்றும் பல எம்.பி.க்களும் இதை எதிர்த்துப் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்படும் நன்கொடைகள் 'பணமோசடி'யின் ஒரு வடிவம் என்று கூட விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அரசின் நிலைப்பாடு என்ன?
ஜூன் 2019 ல், அப்போதைய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரான பி.கே. ஹரிபிரசாத், அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற பெருநிறுவன நன்கொடைகளையும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வெளிப்படுத்தப்படாத நிதியுதவியையும் வரவேற்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதா? என கேள்வி எழுப்புகிறார். இந்திய ஜனநாயகத்திற்கு இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
இதற்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாடிக்கையாளர்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் மட்டுமே பத்திரங்களை வாங்கும் வகையில் தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்று கூறினார்.
இந்தப் பத்திரங்களில் நன்கொடையாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கியும் அவரது அடையாளத்தை ரகசியமாக வைத்திருந்தாலும், இந்த அடையாளத்தை ஒரு நீதிமன்ற வழக்கின் மூலமாகவோ அல்லது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டாலோ வெளிப்படுத்தலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும், இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போதே, இதுபோன்ற அச்சங்களுக்கு எதிராகத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறியிருந்தார்.
"ஜனநாயகத்திற்கும் வெளிப்படைத் தன்மைக்கும் முற்றிலும் விரோதமானது"

பட மூலாதாரம், EPA
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான ஏடிஆர் அமைப்பு நிறுவனர் மற்றும் அறங்காவலர் பேராசிரியர் ஜெகதீப் சோகர், தேர்தல் பத்திரத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று கூறுகிறார்.
"தேர்தல் பத்திரம் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது. பட்ஜெட் நிதி மசோதா என்பதால், மாநிலங்களவையால் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. பட்ஜெட் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு விவாதத்திற்கு மட்டுமே செல்கிறது.
மாநிலங்களவைக்கு அதை நிறுத்தவோ அல்லது மாற்றவோ உரிமை இல்லை. அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பதால், இந்த விஷயத்தை நிதி மசோதாவில் சேர்த்துவிட்டனர்.
அரசியலமைப்பின் படி, நிதி மசோதா என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து செலவழிக்கப்படுவது. ஆனால் தேர்தல் பத்திரத்திற்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியோடு எந்தத் தொடர்பும் இல்லை." என்று இவர் கருத்து தெரிவிக்கிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியும், இந்திய தேர்தல் ஆணையமும் இந்தத் திட்டத்தை எதிர்த்ததாகவும் ஆனால் அந்த எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டதாகவும் பேராசிரியர் சோகர் கூறுகிறார்.
அரசியல் கட்சிகளுக்கு கறுப்புப் பணம் செல்வதற்கான வழியை இது திறக்கும் என்றும் இதில் வெளிநாட்டு பணம் மற்றும் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களில் இருந்து வரும் பணமும் அடக்கம் என்று ரிசர்வ் வங்கியும் தேர்தல் ஆணையமும் கூறின என்று இவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், EPA
"இந்தத் திட்டம் அனைத்து எதிர்க்கட்சிகளுக்குமான நிதியுதவியைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி இந்த பத்திரங்களை விற்று, வாங்குபவர்களின் அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்கிறது. இந்த தகவலை வங்கி வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாது என்று நம்புவது சிறுபிள்ளைத்தனமானது"
ஸ்டேட் வங்கி ஒரு அரசு வங்கி என்பதால், ரிசர்வ் வங்கி அதனிடம் கோரும் தகவலைத் தர அது மறுக்க முடியாது என்றும் நிதி அமைச்சகம் இந்தத் தகவலை மிக எளிதாகப் பெற முடியும் என்றும் அது அரசியல் கட்சிக்குச் செல்வதையும் தடுக்க முடியாது என்றும் இவர் எச்சரிக்கிறார்.
தேர்தல் பத்திரத்தை யாராவது வாங்கும் போதெல்லாம், ஆளுங்கட்சிக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும், ஆளும் கட்சி அவர்கள் பத்திரங்கள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பணம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய நன்கொடையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்றும் பேராசிரியர் சோகர் கருதுகிறார்.
"வேறு எந்த அரசியல் கட்சிக்கும் பணம் சென்று விடாமல் தடுக்கும் திறன் தேர்தல் பத்திரங்களுக்கு உள்ளது. மேலும் இது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக ரூ. 212 கோடியில், ரூ. 200 கோடி பாஜகவுக்கு சென்றது."
"தேர்தல் பத்திரங்கள் பெயர் வெளியிடப்படாத ஒன்று என்று சொல்வது தவறு. ஒரு அரசியல் கட்சிக்குப் பத்திரங்கள் வடிவில் பணம் கிடைக்கும் ஆனால் யார் கொடுத்தது என்று தெரியாதா? இது அபத்தமானது. ஒரே விஷயத்தில் எப்படி ரகசியமும் வெளிப்படைத்தன்மையும் இணைந்து இருக்கும்? பெயர் வெளியிடாமை வெளிப்படைத் தன்மைக்கு எதிரானதல்லவா" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
உச்ச நீதிமன்றத்தில் மனு

பட மூலாதாரம், Getty Images
இந்தத் தேர்தல் பத்திரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏடிஆர் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், உச்சநீதிமன்றம் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்யத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
அப்போதைய தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே தலைமையிலான அமர்வு, தனது தீர்ப்பில், இந்தத் திட்டம் 2018 இல் தொடங்கி 2019 மற்றும் 2020 இல் எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்தது என்றும் தேர்தல் பத்திரங்களை விற்பதை நிறுத்த நீதிமன்றத்திற்கு எந்த காரணமும் தென்படவில்லை என்றும் கூறியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தேர்தல் பத்திரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிற செய்திகள்:
- உலகத்தால் கைவிடப்படும் ஆப்கானிஸ்தான் - போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை
- நயன்தாராவின் நெற்றிக்கண் படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
- முக்கிய சீனத் துறைமுகத்தில் கோவிட்-19 தொற்று கண்டுபிடிப்பு: உலக வணிகத்துக்கு அச்சுறுத்தல்
- இது செல்போனா? கீ செயினா? மடக்கும் வசதி ஸ்மார்ட்ஃபோன்களோடு களமிறங்கும் சாம்சங்
- இலங்கையில் கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல முடியாது: அரசு அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












