இலங்கை உணவுப் பஞ்சம்: வீட்டிலேயே விவசாயம் செய்யச் சொல்லும் அமைச்சர் பந்துல குணவர்தன

BANDULA GUNAWARDANA

பட மூலாதாரம், BANDULA GUNAWARDANA'S FB

    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நடந்த ஊடகச் சந்திப்பு ஒன்றின் மூலம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இது நிரந்தரமான மற்றும் முழுமையான தீர்வுகளைத் தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வீட்டில் போதுமான அளவுக்கு விளைவிக்க முடியாத அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு இலங்கையில் இப்போது கடுமையான தட்டுப்பாடு உள்ளது. வீட்டிலேயே வளர்க்கக்கூடிய மரக்கறிகளுக்கான விதைகள் கிடைப்பதும் தற்போதைய சூழலில் அனைவருக்கும் எளிதாக இல்லை.

என்ன சொன்னார் அமைச்சர்?

நாடு முழுவதும் உடனடியாக விவசாய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன, அனைத்து வீட்டுத் தோட்டங்களிலும் மிளகாய், கத்தரிக்காய், கீரை வகைகள் போன்ற குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய விவசாயத்தை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்தாவது செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டாவது உலகப் போரின் போது, இவ்வாறான பாரிய சிக்கல்கள் இல்லாத போதிலும், பாரிய உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

இலங்கையில் எதிர்வரும் ஆண்டு பாரிய உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் அச்சம் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

பட மூலாதாரம், MAHINDANANDA AKLUTHGAMAGE'S FACEBOOK

படக்குறிப்பு, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

எனினும், எதிர்வரும் ஆண்டு எந்த விதத்திலும் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தான் உறுதியாகக் கூறுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

'காலம் கடந்த ஞானம்'

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் இந்த அறிவிப்பானது, காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளதாகவே தன்னால் அவதானிக்க முடிகின்றது என இலங்கையில் உள்ள மூத்த தமிழ் ஊடகவியலாளர் அழகன் கனகராஜ் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

அழகன் கனகராஜ்
படக்குறிப்பு, அழகன் கனகராஜ்

வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டும் என்பதை தானும் ஏற்றுக்கொள்வதாக கூறிய அவர், இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரின் இந்த அறிவிப்பானது தற்காலிகத் தீர்வுக்கான ஓர் அறிவிப்பாக உள்ளது எனவும் கூறுகின்றார்.

"வீட்டுத் தோட்டங்களை சேதன பசளைகளை வைத்தே செய்ய முடியும். அது சிறிய குடும்பங்களுக்கு போதுமானதாக இருக்கும். ஆனால், அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்றே இன்று பெரிதும் அச்சப்படுகின்றது. சந்தையில் இன்று தானிய வகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. அரிசி மற்றும் தானிய வகைகயை வீட்டுத் தோட்டங்களில் உற்பத்தி செய்ய முடியாது" என அவர் கூறினார்.

மரக்கறி வகைகளே நாட்டில் இல்லாத போது, அதற்கான விதைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

"அரசாங்கம் மக்கள் மீதான சுமையை குறைப்பதற்கு, மக்கள் மீது ஏற்றப்படும் இன்னொரு சுமை இது. நாட்டில் மூலப் பொருட்களுக்கு தட்டுபாடு நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு வீட்டுத் தோட்டங்களை அமைப்பது? சந்தைகளில் விதைகள் இல்லை. நாட்டில் மரக்கறி வகைகளை இல்லாத போது, எவ்வாறு அதற்கான விதைகளை பெற்றுக்கொள்ள முடியும்," என அழகன் கனகராஜ் கேள்வி எழுப்புகிறார்.

விண்ணை முட்டும் விலைவாசி - இலங்கையில் என்ன நடக்கிறது?

விலைவாசி - இலங்கை

பட மூலாதாரம், Empics

கோவிட் வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் பாரிய எதிர்நிலை சவாலை நோக்கி நகர்ந்து வருகிறது.

இலங்கையின் கையிருப்பிலுள்ள அந்நிய செலாவணி தொகை வெகுவாக குறைவடைந்து வருவதை அடுத்து, பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் தற்போது பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அதேவேளை, ஏனைய பொருட்களுக்கான விலை பெருமளவு அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.

இலங்கையில் ஏற்கனவே பொருட்களுக்கான விலைகள், கட்டுப்பாட்டை இழந்து அதிகரித்திருந்த நிலையில், எரிபொருள் விலையேற்றத்துடன் மீண்டும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: