வேலூரில் தொடர்ந்து உணரப்படும் நில அதிர்வுகளுக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 29, 23 ஆகிய தேதிகளில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் சனிக்கிழமை மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. எனவே ஒரே மாதத்தில் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியது. இந்த நில அதிர்வு வேலூருக்கு தெற்கு - தென்மேற்கில் 59.4 கி.மீ., தொலைவிலும், 25 கி.மீ., ஆழத்திலும் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வேலூரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டது. அது குறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறும்போது, "வேலூரில் இருந்து சுமார் 50 கி.மீ., தொலைவில் டிசம்பர் 23ஆம் தேதி பிற்பகல் 3.14 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு 3.5 ஆக பதிவாகியிருந்தது. இந்த நில அதிர்வு வேலூருக்கு மேற்கு - வடமேற்கில் 50 கி.மீ., தொலைவிலும், 10 கி.மீ., ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது," என குறிப்பிட்டது.
இந்த நிலையில் வேலூர் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு பகுதியில் சனிக்கிழமை(டிசம்பர் 25) காலை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்தனர். 5 நிமிட இடைவெளியில் இருமுறை நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23 ஆம் தேதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. எனவே, ஒரே மாதத்தில் அப்பகுதியில் நில அதிர்வு ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை
வேலூரில் உணரப்படும் தொடர் நில அதிர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேலை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது பேசியது. அப்போது விளக்கமளித்த அவர், "மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொது மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ளோம். பழைய வீடுகளில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேறி கவனமாக இருக்க சொல்லியுள்ளோம். முன்னதாக இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர் நில அதிர்வு குறித்து மாநில பேரிடர் மேலாண்மைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மேலும் மத்திய நிலநடுக்கவியல் அமைப்பிடம் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சொல்ல இருக்கிறோம். வல்லுநர்கள் ஆய்வு செய்த பின்னரே இந்த தொடர் நில அதிர்வு பற்றி முழுமையாக தெரிய வரும்," எனத் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கவியல் வல்லுநர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Professor Ganapathy - Siesmalogy - VIT
இந்த தொடர் நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் தணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் கணபதி கூறுகையில், "தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்வை ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்தக்கூடாது. கடந்த மாதம் 29 தேதி உணரப்பட்ட நில அதிர்வு, கடந்த 23ஆம் தேதி சித்தூரில் வந்த நில அதிர்வு இவை இரண்டு மட்டுமேரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதைத் தவிர்த்து மற்ற இதற்கு முன்பு மற்றும் நேற்று வந்த அதிர்வுகள் எதுவுமே பதிவாகவில்லை. ஆகவே தற்போது வந்த அதிர்வை நில நடுக்கத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது. இது நில நடுக்கம் இல்லை.
இந்த சூழலில், நேற்று பேரணாம்பட்டு மற்றும் அதற்கு முன்பு சில நாட்கள் முன்பு வந்த நில அதிர்வுகள் என்பது பொதுவாக உள்ளூர் புவியியல் மாற்றத்தில் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு.
இந்த நிகழ்வு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய சென்றோம். நாங்கள் அங்கு சென்ற சமயத்தில் இரு முறை அந்த சத்தம் மற்றும் அதிர்வை உணர முடிந்தது. ஆனால் அது நில நடுக்கம் இல்லை. அவற்றில் இதைச் சேர்க்க முடியாது. அப்படியிருந்தால் பதிவாகியிருக்கும் ஆனால் அவை பதிவாகவில்லை. நில அதிர்வு ஒரு அளவுக்கு வந்தாலே அவை பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார் அவர்.
இவை இயற்கையாக பூமிக்கு அடியில் நிகழக்கூடிய ஒரு மாற்றம் என்றும் இந்த மாற்றம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடும் என்றும் பேராசிரியர் கணபதி கூறுகிறார்.
"அவ்வாறு இல்லையெனில், இந்த மாற்றம் ஏற்படும் பகுதிகள் வறண்டு இருக்கலாம். இதையடுத்து அந்த பகுதியில் நீர் வரத்தால் மீண்டும் அவைகள் நிரம்புகிறது. அப்போது பூமிக்கு அடியில் போகும் போது அங்கிருக்கும் நீர்நிலை தாங்கும் நில வெடிப்பு கோடுகள் இருக்கும். இந்த நில வெடிப்பு கோடுகள் நீர் வரத்தால் நிரம்பிவிடும். பிறகு நீரின் அளவு குறையக் குறைய மீண்டும் நில வெடிப்பு கோடுகளில் இடைவெளி ஏற்படும். அப்போது இதுபோன்ற சத்தம் அல்லது அதிர்வு ஏற்படும்.
இது நில நடுக்கமாக இருந்தால் ஒரு பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள நிறைய இடங்களில் உணரப்பட்டு இருக்கும். தற்போது ஏற்பட்ட இந்த நிகழ்வு தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இதில் பூமிக்கு அடியில் நில வெடிப்பு கோடுகள் உள்ளதா? இப்பகுதியில் எத்தனை போர்வெல்கள் போடப்பட்டது. அந்த போர்வெல்களில் தண்ணீர் எவ்வளவு உள்ளது?
முன்பு இருந்த தண்ணீரில் அளவு என்ன? என்பனவற்றை ஆய்வு செய்ய வேண்டும். இவை எல்லாம் ஆய்வு செய்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதைக் கண்டறிந்த பிறகு நில அதிர்வு கருவியை (seismography instrument) கொண்டு அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவை எல்லாம் ஆய்வு செய்த பின்னரே அப்பகுதியில் உள்ள சில பிரச்னையால் இந்த நிகழ்வு ஏற்பட்டதா? அல்லது சிறிய சிறிய நில நடுக்கம் ஏற்பட்டது அதனால் இவ்வாறு ஏற்படுகிறதா என்பதை துல்லியமாக கண்டறிய முடியும்," என நிலநடுக்கவியல் வல்லுநர் பேராசிரியர் கணபதி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் தடுப்பூசி: சிறுவர்களுக்கு முதல் டோஸ், முதியோருக்கு 3ஆவது டோஸ் எப்போது?
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- உணவுப் பஞ்சம்: வீட்டிலேயே விவசாயம் செய்யச் சொல்லும் இலங்கை அமைச்சர்
- நரேந்திர மோதி அரசு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













