'நிதி ஆயோக்' சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள் பட்டியல்: கேரளம், தமிழ்நாடு முதல் இரு இடம்; உத்தர பிரதேசம் கடைசி இடம்

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறந்த சுகாதார வசதியுடைய மாநிலங்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

சிறப்பான சுகாதார செயல்பாட்டில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக 'நிதி ஆயோக்' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளம் முதல் இடத்திலும், உத்தர பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன என்கிறது தினத்தந்தி செய்தி. இந்தச் செய்தி இன்று பெரும்பாலான இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

2019-2020 ஆண்டில் ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை தரவரிசைப்படுத்தி, இந்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பு பட்டியல் தயாரித்துள்ளது.

சுகாதார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவுகோல்கள் அடிப்படையில் நான்காவது ஆண்டாக இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்தும், உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடனும் பட்டியல் தயாராகி உள்ளது.

இந்த பட்டியலில், பெரிய மாநிலங்களிடையே ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டில், தொடர்ந்து 4-வது ஆண்டாக கேரளம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. தெலங்கானா மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது.

ஆனால், 2018-2019 ஆண்டில் இருந்து சுகாதார செயல்பாட்டை அதிகரித்தவகையில் பெரிய மாநிலங்களிடையே கேரளம் 12-வது இடத்துக்கும், தமிழ்நாடு 8-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. பிகார், மத்திய பிரதேசம் ஆகியவை கடைசிக்கு முந்தைய 2 இடங்களில் உள்ளன என்கிறது தினத்தந்தியின் செய்தி.

'மதம் மாற்ற தடைச் சட்டம்' - கர்நாடகாவில் அரசியல் சர்ச்சை

சித்தராமையா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தராமையா

2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், அந்த மாநில அரசால் முன்மொழியப்பட்டுள்ள மத மாற்ற தடைச் சட்டம் திரும்பபெறப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா 2021-ஐ சட்டமாக்க கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கட்டாயப்படுத்தியோ, தூண்டுதலின் பெயரிலோ மதம் மாற்றுவதை காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கிறது. ஆனால், கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, கொடூரமானது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் - தேர்தல் ஆணையம் ஆலோசனை

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், Eci

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொண்டது என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

கோவா, பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் சட்டப்பேரவைகளின் 5 ஆண்டு காலம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடையவுள்ளது. உத்தர பிரதேச சட்டப்பேரவையின் 5 ஆண்டு காலம் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, அந்த மாநிலங்களில் பேரவைத் தோ்தலை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள தோ்தல் ஆணையம், ஜனவரி மாதம் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று எதிா்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தோ்தல் ஆணையம் திங்கட்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஐந்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது என்று தினமணி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: