யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் 'முதல்வர் மகாராஜா' ஆக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தபோது மீண்டும் முதல்வர் ஆக யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி பதவியேற்றார்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் மக்கள் கவனத்தை அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் ஈர்த்திருக்கிறது.
"முதல்வர் யோகி ஆதித்யநாத் மகாராஜா" - மாநில தேர்தலுக்கு முன்புவரை முதல்வர் பதவி வகித்தபோது தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்கில் இப்படித்தான் தனது அடையாளத்தைக் கொண்டிருந்தார் யோகி ஆதித்யநாத். சரியாக சொல்வதென்றால், "முதல்வர் (உத்தர பிரதேசம்); கோராக்ஷ்பீடதீஸ்வர், ஶ்ரீ கோராக்ஷ்பீட், உறுப்பினர், சட்டசபை, உத்தர பிரதேசம்; முன்னாள் எம்.பி (மக்களவை - 5 முறை) கோரக்பூர், உத்தர பிரதேசம்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் மிகவும் அரிதாக, ஒரு மக்கள் பிரதிநிதி, அரசியல்சாசன பதவி வகிக்கும் போது, அவர் தமது மத சிம்மாசனத்தில் அமர்வது மட்டுமல்லாமல், ஆட்சியிலும் அதன் தடங்களை ஆழமாக பதிக்கிறார்.
மஹந்த் ஆதித்யநாத் யோகி உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்றதும், மதம் சார்ந்த பலத்துடன், அரசியல் பலமும் அவர் கையில் வந்தது. இதை தனது அடையாளத்தை உலகிற்கு தெரிவிக்க, 'முதல்வர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் ஜி மகாராஜா' என்ற அடையாளத்தை தேர்வு செய்தார்.
முதல்வரும், மகாராஜா ஆகிய பெயர்கள் அவருக்கான முகவரி மட்டுமல்ல, இது அவரது மதம், அரசியல் பயணத்தின் சிலரின் பார்வையில் அது அவருக்கு பலம், சிறப்பாகும். சிலரது பார்வையில் அது குறைபாடாக கருதப்படுகிறது.
பாதம் தொடும் வழக்கம்

பட மூலாதாரம், Getty Images
2017ஆம் ஆண்டு, யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு, கோரக்பூரின் பத்திரிகையாளர்கள் சங்கம் அவரை வரவேற்கும் நிகழ்ச்சியொன்றை நடத்தியது.
கோரக்பூரின் மூத்த பத்திரிகையாளரான மனோஜ் சிங் அந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்து, "முதல்வர் அங்கு வந்தவுடன், அரங்கில் பேசிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, "பாருங்கள், நம்முடைய முதல்வர் வந்து விட்டார்; நம்முடைய கடவுள் வந்துவிட்டார்", என்று கோஷமிட்டனர்," என்று கூறுகிறார்.
"அதன் பிறகு, முதல்வர் இருக்கையில் அவர் அமர்ந்தார். அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் அவரை ஒருவர் பின் ஒருவராக சந்தித்து, அவரது பாதத்தை தொட்டு வணங்கினர்."
"பெரியவர்களில் பாதத்தை தொட்டு வணங்குவது உத்தர பிரதேசத்தில் ஒரு வழக்கமே; ஆனால், அந்த கணத்தில் பாதத்தை தொட்டு வணங்க அவர் முதல்வரா அல்லது மஹ்ந்த் ஆக கருதப்பட்டாரா என கூறுவது கடினமானது."
"செய்தியாளர்கள் நாட்டை ஆளும் நபரின் காலில் விழுந்தால், செய்தியை எவ்வாறு எழுதுவார்கள்?"
எங்கும் காவி நிறம்
யோகி ஆதித்யநாத்தை அவரது இரண்டு அடையாளங்களிலிருந்து பிரிப்பது கடினம்; ஏனென்றால், அது அவர் தனக்காக உருவாக்கிக் கொண்டவை.
உத்தர பிரதேச மாநில அரசு ஆவணங்களில், அவரது பெயருடன் மஹந்த் (சமயகுரு) அல்லது மகாராஜா என்ற பட்டம் இணைக்கப்படவில்லை. முதல்வரான பிறகும், அவர் காவி உடையே அணிகிறார்.
லக்னெளவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் கல்ஹன்ஸ், "அவருக்கு என்ன பிடிக்கிறதோ, அதையே மக்களும் செய்கின்றனர். அவரது நாற்காலிக்கு பின்னால், வெள்ளை நிறத்திற்கு பதிலாக காவி நிறம் மாற்றப்பட்டது. கழிப்பறை திறப்பு விழாவுக்கு சென்றாலும், அச்சுவர்களில் காவி வண்ணம் பூசப்பட்டு இருக்கும்", என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை, கோரக்பூர் சென்று, அங்குள்ள கோயிலில் பூஜைகள், அர்ச்சனைகள், பண்டிகை கொண்டாட்டங்கள் ஆகியவற்றை யோகி ஆதித்யநாத் நடத்துவார். அவரது மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், அவர்களது சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அங்கு எங்கும் மத அடையாளங்கள் நிறைந்துள்ளன; காவல் நிலையங்களில் சிறிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கோரக்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையன்றும் ஹனுமான் பக்தி பாடல்களை வழக்கறிஞர்கள் பாடுவார்கள்.
மாட்டு அரசியலும் கைதும்
உத்தர பிரதேசத்தின் முதல்வராவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர், 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவர் கோரக்பூரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது அவர், ஊரடங்கு சமயத்தில், 'வகுப்புவாத பிரிவினையை தூண்டும் விதமாக பேசியதாக' கூறி கைது செய்யப்பட்டார்.
"அப்போதும், அந்த இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகள், அவரை கைது செய்வதற்கு முன்னர், அவரது பாதத்தை தொட்டு வணங்கினர்" என்று மனோஜ் சிங் கூறுகிறார்.
"அங்குள்ளவர்களின் விசுவாசம் எத்தகையது எனில், இந்தியின் முக்கிய பத்திரிகை ஒன்று, அவரது கைதுக்கு பின், கோரக்நாத் கோயிலுள்ள உள்ள மாட்டு தொழுவத்தில் ஒரு பசு அழுதது பற்றி விவரித்து எழுதியிருந்தனர்".

பட மூலாதாரம், Getty Images
யோகி ஆதித்யநாத்தின் மத சார்ந்த நடைமுறைகளும், தீவிர இந்துத்துவ அரசியலும், இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
மேலும், அன்டி- ரோமியோ ஸ்குவாட் (Anti-Romeo Squad), சட்டத்துக்கு புறம்பாக அங்குள்ள இறைச்சி கடைகள் மூடுவது, திருமணத்திற்காக மதம் மாறுவதற்கு மீதான சட்டங்கள், அவரது அமைச்சர்கள் அவர்களுடைய மொழி, நடத்தை ஆகியவை என எங்கும் ஒரே மாதிரியாக மாறுவதை பார்க்க முடிகிறது.
அவரது ஆட்சியில் கலப்பு திருமணங்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதனை அவர், "லவ்-ஜிகாத்" என்று அழைக்கிறார்.
இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமிய இளைஞர்கள் திருமணம் செய்து, அவர்களின் மதங்களை மாற்றுவதையே, 'லவ்-ஜிகாத்' என்ற சொல்லை பயன்படுத்தப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக போராட்டம் நடந்தபோது, யோகி அரசு, "அரசு உடைமைகளுக்கு தீங்கு விளைவித்ததாக" குற்றம் சாட்டி, சில போராட்டக்காரர்களின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் கொண்ட போஸ்டர்களை லக்னோவில் ஒட்டப்பட்டன. அதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களும், ஓய்வு பெற்ற அதிகாரிகளுமே.
இது தொடர்பாக, அலகாபாத் நீதிமன்றம், "இது தனி மனித உரிமை மீறல்", என்று கூறி இந்த போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், அதன் பிறகு, மீண்டும் அத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
நரேந்திர மோதி, அமித் ஷாவை தவிர்த்து, நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று பா.ஜ.கவின் கொள்கைகளை பரப்பும் தலைவர் யோகியே ஆவார். அவர் கேரளா சென்று, உத்தர பிரதேசத்தின் மாடல் பற்றி பிரசாரம் செய்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, உத்தர பிரதேச சட்டமன்றத்தில், " நான் ஒரு இந்து. அதனால் ஈகைப் பண்டிகையை கொண்டாடவில்லை. இதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.
எழுத்தாளர் சபா நக்வி எழுதிய 'ஷேட்ஸ் ஆப் சாப்பிரான்: ஃபார்ம் வாஜ்பாய் டூ மோதி" (Shades of Saffron: From Vajpayee To Modi) என்ற புத்தகத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு யோகி ஆதித்யநாத் அரசு காவி நிறத்தை கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"அவர் இந்துத்துவாவின் நிலைப்பாடு இஸ்லாம் மதம் மீதான வெறுப்பு என்ற நிலைக்கு மாறியிருக்கிறார். இது மிகவும் பயனுள்ள உத்தியாக கருதப்படுகிறது. இதனால், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் பிற மாநிலங்களின் மொழியும் கொள்கைகளும் இப்படியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன", என்று சபா நக்வி கூறுகிறார்.
மாணவ சங்கத்திலிருந்து அரசியலுக்கான பாதை
"யதா யதா ஹி யோகி" என்ற யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதியவர் விஜய் திரிவேதி. அவர் அப்புத்தகத்தில், கடந்த 1972ம் ஆண்டு, கட்வால் என்ற கிராமத்தில் பிறந்த அஜய் மோகன் பிஷ்ட்டுக்கு (யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயர்) ஆரம்பம் முதலே அரசியலில் நாட்டம் கொண்டிருந்தார் என்று எழுதியிருக்கிறார்.
மேலும், அவர் கல்லூரி நாட்களில், அஜய் நவநாகரிகமான, மின்னும் இறுக்கமான உடைகளும், கண்களில் எப்போதும் கருப்பு கண்ணாடியும் அணிந்திருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1994ம் ஆண்டு, அவர் தீட்சை பெற்ற பிறகு, யோகி ஆதித்யநாத்தாக மாறினார்.
கல்லூரி நாட்களில், மாணவ சங்கத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பினார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவ சங்கமாக, அகில இந்திய வித்யார்த்தி பரிஷ்த்தில், அவருக்கு வாய்ப்பு அளிக்கபடவில்லை. அவர் சுயேச்சையாக போட்டியிட்டார்; ஆனால், தோல்வியை சந்தித்தார்.
தோல்வியடைந்த சில மாதங்களுக்கு பிறகு, கடந்த 1992ம் ஆண்டு ஜனவரி மாதம், அவருடைய அறையில் ஒரு திருட்டு நடந்தது. அதில் அவரது எம்.எஸ்.சி மேற்படிப்பு சேர்க்கைக்கு தேவையான முக்கிய ஆவணங்களும் காணாமல் போகின. இது தொடர்பாக உதவி பெற, பிஷ்ட் மஹ்ந்த் அவைத்யநாத் என்ற குருவை முதல்முறையாக சந்தித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, அவர் அவைத்தநாத்திடம் தீட்சை மட்டும் பெறவில்லை; அவரது வாரசாக ஆனார்", என்று விஜய் திரிவேதி எழுதியிருக்கிறார்.
தீட்சை கிடைத்த பிறகு அவர் பெயரை மட்டும் மாற்றவில்லை; கடந்த கால வாழ்க்கை தொடர்புகளையும் அவர் துண்டித்துக் கொண்டார். 2020ஆம் ஆண்டு, அவரது தந்தை ஆனந்த பிஷ்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அப்போது முதல்வராக இருந்த ஆதித்யநாத் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், "கொரோனாவை எதிர்கொள்ளும் அரசு பணிகள், ஊரடங்கு வெற்றிகரமாக செயல்படுத்த நினைக்கும் காரணத்தால், அவரது இறுதி சடங்கிற்கு என்னால் கலந்து கொள்ள முடியாது", என்று தெரிவித்திருந்தார்.
நாத் பிரிவினரின் சனாதன முறை
வரலாற்று அடிப்படையில், நாத் பிரிவினருக்கு இந்து மற்றும் இஸ்லாம் மதங்களுக்கிடையே எந்த பிரிவினையும் இல்லை. அவர்கள் சிலை வழிபாட்டை பின்பற்றாதவர்கள். கடவுள் ஒருவரே என்ற கோட்பாட்டை பின்பற்றுபவர்கள்; மேலும் அதன் கோட்பாட்டில், அனைத்து உயிரினங்களும் சமம் என கருதுபவர்கள். ஆத்மாவும், தெய்வமும் வெவ்வேறானவை என்று அவர்கள் கருதமாட்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், "கோரக்பூரில் சனாதன முறையும், சிலை வழிபாடும், அரசியலும் மஹந்த் திக்விஜய் நாத் உதவியுடன் தொடங்கியது," என்று பத்திரிகையாளர் மனோஜ் சிங் கூறுகிறார்.
கோரக்பூரில் இருந்து முதல்வர் பதவி
1994ஆம் ஆண்டு, யோகி அவைத்யநாத்திடம் தீட்சை பெற்ற பிறகே, அவரது அரசியல் பயணம் உண்மையில் தொடங்கியது. அதன் பிறகு, அவர் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியானது.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, 26 வயதில், அவர் கோரக்பூரின் நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆனால், அப்போது அவர் வெறும் ஆறாயிரம் வாக்குகள் கொண்டு வெற்றி பெற்றார்.
"அப்போது பா.ஜ.கவை தாண்டி அவருக்கென ஓர் ஆதரவு குழுவை அமைக்க நினைத்தார். அப்படி தொடங்கப்பட்டதே இந்து யுவா வாஹினி. இது கலாச்சார அமைப்பாக கருதுவார்கள். ஆனால், அது உண்மையில், யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்களை கொண்ட குழு". என்று மனோஜ் சிங் கூறுகிறார்.
அவர் முதல்வராக பதவியேற்ற பிறகு, கட்சி முன்னிலையில், அவர் தனது கருத்துக்களை தயங்காமல் கூறுவார். இதுகுறித்து, சபா நக்வி கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ள கட்சியில், யோகி ஆதித்யநாத் தனது கருத்துகளை கூற முடியும். ஏனென்றால், அவர் எந்த தலைவரின் தயவிலும் இல்லை", என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"பல அரசு ஆளும் முதல்வர்களை அக்கட்சி எளிதாக பதவியிலிருந்து விலகி இருக்கிறது. ஆனால், இவரது விஷயத்தில் அப்படி செய்ய முடியவில்லை. ஏனென்றால், இவரை விலகிவிட்டு யாரை இவருக்கு பதிலாக நிறுத்த முடியும்?", என்று மனோஜ் சிங் கேட்கிறார்.
பத்திரிகையாளர் சித்தார்த் கல்ஹன்ஸ், "அவர் உயர்மட்ட பணிகளை தலைமை தாங்குபவராக இருக்கிறார். அரசுத்துறைக்களும் அவரது கட்டுப்பாட்டில்தான் பணி செய்ய வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டனர். இல்லையெனில், எந்த பணியும் நடக்காது." என்கிறார்.
பிரதமர் மோதியின் வாரிசா யோகி?
வருங்காலத்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு யோகி சக்திவாய்ந்த தலைவராகி விட்டாரா என்று அடிக்கடி விவாதிக்கப்படுகிறது.
சபா நக்வி அப்படி கருதவில்லை. அவரைப் பொறுத்தவரை, "ஒரு தலைவராக நரேந்திர மோதியின் முன் ஆதித்யநாத்தின் அந்தஸ்து மிகவும் சிறியது. அரசியலில் முன்னேற ஒருமித்த கருத்தை உருவாக்குவது, கார்ப்பரேட் உலகத்துடன் கலப்பது போன்ற தந்திரங்கள் கூட அவருக்குத் தெரியாது. மக்கள் மத்தியில் அவர் ஆதரவாளர்களை உருவாக்க முடிந்தாலும், முதல்வர் ஆதித்யநாத்தின் நிர்வாகப் பாணி பிரபலமாகவில்லை" என்கிறார்.
மாநிலத்தை ஆளும் பதவிக்கு வரும் முன், கோரக்நாத் கோவிலின் கீழ் பல பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர் தலைமை தாங்கினார்.
யோகி ஆதித்யநாத்தின் சிறப்பு
அப்படியெனில், கடந்த நான்கரை ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் என்ன மாற்றினார்? கோரக்பூரில் இருந்து எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், ஐந்து மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
பொது உரிமையியல் சட்டம், நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதில் இருந்து 'பாரத்' என்று அதிகாரபூர்வமாக மாற்றுதல், பசு வதைத் தடை, மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கோரக்பூர் அமர்வை நிறுவுதல் ஆகியவை இதில் அடங்கும்.
உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்ற பிறகு, மாநிலத்தில் பசு வதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கியதோடு, மத மாற்றத்துக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வந்தார் யோகி ஆதித்யநாத்.
இதுகுறித்து மனோஜ் சிங், "ஒரு மஹந்த் கூட இங்கு ஆட்சி செய்யலாம்; சட்டசபையிலும் அவரது கொள்கைகளையும், தீவிரமான கருத்துகளையும் கூறலாம் என்று இந்த ஆட்சி தெரியப்படுத்தியுள்ளது.
"உத்தர பிரதேசத்தில் காவல்துறை எப்போதும் சக்தி வாய்ந்தது. இவரது பதவிக்காலத்தில் அதற்கு மேலும் பலம் கிடைத்துள்ளது. இந்த அரசில், என்கவுன்ட்ண்டர் நடவடிக்கையை ஒரு சாதனையாக கருதி விளம்பரங்களில் குறிப்பிடுக்கின்றனர். மேலும், இந்த விளம்பரங்கள் முதல்வரின் பிம்பத்தை ஒரு கடுமையான நிர்வாகியாக முன்னெடுத்துச் செல்கின்றன".
அவரது நிர்வாக முறை சிறப்பாகி விட்டதாகவும், சட்ட அமைப்பு கடுமையாகி விட்டதாகவும் கருதுகின்றனர். ஆனால், அவை ஒரு சமூகத்திற்கு எதிராகவும் நடந்துள்ளது என்று விஜய் திரிவேதி கருதுகிறார்.
"யோகியின் கொள்கைகள் ஒரு குழுவுக்கு அதிருப்தியையும் மற்றொரு குழுவில் பிரபலத்தையும் அதிகரித்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.
ஆனால், ஜனநாயகத்தில், தேர்தல் முடிவுகளின் உண்மையான அளவுகோல், 30 சதவீத பேரின் தேர்வை 70 சதவீதம் பேர் ஏற்க வேண்டும், அது பிடிக்கவில்லை என்றால் நம் அரசமைப்பை 'மாற வேண்டும்'.
தனது நிலைப்பட்டை மாநிலத்தில் மிகவும் திறம்பட அரசு பரப்பப்பட்டு வருகிறது. சபா நக்வி கூறுகையில், "உள்ளூர் ஊடகவியலாளர்கள் வேறுவிதமாக எழுத முயற்சி செய்ததற்காக அவர்கள் மீது கடுமையான விதிகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது".
சித்தார்த் கல்ஹன்ஸ், "இப்போது மாநிலத்தில் போராட்டம் முன்பு போல் பொதுவெளியில் தெரியவில்லை, மறைமுக அரசியலில் உடன்படாதவர்கள், அமைதியாக இருக்கிறார்கள்," என்று கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












