உ.பி தேர்தல்: ராமர் கோயில் கட்ட குவியும் நன்கொடைகள் - மற்ற பழங்கோயில்களின் நிலை என்ன? - கள நிலவரம்

அயோத்தி
    • எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவ்
    • பதவி, பிபிசி நிருபர்

ஒரு பனிக்கால காலையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் சரயு நதிக்கரையில் உள்ள ராமர் பாதம் என்னும் துறையில் மூழ்கி நீராடி உதயசூரியனை வணங்குகிறார்கள். பிறகு அவர்கள் நடந்தே நகரை நோக்கிச் செல்கிறார்கள்.

இங்கிருந்து சற்று தொலைவில் தான் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. அயோத்திக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வரிசையில் நின்று 'ராம்-லல்லா' என்ற குழந்தை ராமரைத் தரிசனம் செய்கின்றனர்.

ராம்-கி-பைடி என்றழைக்கப்படும் அந்த துறையில் இருக்கும் ஏராளமான கோயில்களில் ஒன்றான 'பிராச்சீன சரயு மந்திரில்' ஒரு பெண் ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார். ஆரத்தியை முடித்த பிறகு, மஹந்த் சுமன் பாதக்'" இன்றைய உலகில் கவர்ச்சி தான் விரும்பப்படுகிறது. மக்கள் ஆடம்பரத்தின் பின்னால் ஓடுகிறார்கள், கடவுளின் பின்னால் அல்ல," என்று கூறினார்

இந்த கோயிலை வழிபட்டுப் பராமரித்து வரும் இவரது குடும்பத்தில் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் சுமன். உண்மையில், சுமன் பாடக் சுட்டிக்காட்டும் 'பிரமாண்டம்', ராமர் பாதம் என்ற இடத்தில் தெரிகிறது. பல காலமாக இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று தீபோற்சவம் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில், லட்சக்கணக்கான தீபங்கள் சரயு நதியில் விடப்படுகின்றன.

அயோத்தி தாஸ், பாகல்பூர் கோவிலின் பூசாரி
படக்குறிப்பு, அயோத்தி தாஸ், பாகல்பூர் கோவிலின் பூசாரி

'பிரசாதம் இல்லையென்றால் தண்ணீர் அருந்தி விட்டுத் தூங்குவோம்'

ராமர் பாதத்திலிருந்து நகருக்குள் செல்லப் பல தெருக்கள் உள்ளன. ஒரு தெருவில் நுழையும் போது, ​​'பாகல்பூர் மந்திரின்' பிரதான வாயில் தெரிந்தது. பாழடைந்த நிலையில் இருந்த கதவைத் திறந்து உள்ளே வந்து, அயோத்திதாசர் என்ற பூசாரியைச் சந்தித்தோம். அவர் நம்மோடு பேசினார்.

"இது 150 ஆண்டுகள் பழமையான கோயில். முன்பெல்லாம் 200-300 பக்தர்கள் உள்பிரகாரத்தில் வந்து தங்கியிருந்தனர். ஆனால், இப்போது இந்த பாலைவனம் போன்ற வறண்ட கோயிலில் நாங்கள் மூவர் மட்டுமே இருக்கிறோம். கிணறும் வறண்டு விட்டது. சில இடங்களில் கூரை இடிந்து விழுகிறது. பக்தர்களே வராத நிலையில், ஏதோ கடவுள் விட்ட வழி என்று வாழ்க்கை நடத்தி வருகிறோம். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்கிறோம். நைவேத்தியத்திற்கு எதுவும் இல்லையென்றால் தண்ணீரைக் குடித்து விட்டுப் படுக்கிறோம்." என்றார் அவர்.

பாபர் மசூதி-ராம ஜென்மபூமி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து, அயோத்தியின் மையப்பகுதியில் ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது.

ராமர் கோயில்

பட மூலாதாரம், Ram Janmbhoomi Teerth Kshetra Trust

அயோத்தி ராமர் கோயிலுக்கு உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். ஆனால் இந்த அயோத்தியில் சுமார் 175 கோயில்கள் உள்ளன, அவை கவனிக்கப்படவில்லை, இந்தப் பழைய கோயில்களின் இடிபாடுகள் கூட இனி மிஞ்சாது என்று தோன்றுகிறது.

2018 ஆம் ஆண்டில், அயோத்தி மாநகராட்சி நகரின் 177 பழமையான மற்றும் பாழடைந்த கட்டடங்களை இடிக்க அல்லது மராமத்து செய்ய ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், பல பழமையான கோயில்களும் இடம்பெற்றுள்ளன என்பது அதிர்ச்சியளிக்கிறது.

அயோத்தி

ஆறாயிரம் கோயில்கள்

ராமாயணம் மற்றும் ராமரின் நகரம் என்று அழைக்கப்படும் அயோத்தி, இந்துக்களுக்கு மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அரசர்கள் முதல் நவாப்கள் வரை பலரும் இங்கு கோயில்களைக் கட்டியுள்ளனர்.

சுமார் இரண்டு தசாப்தங்களாக அயோத்தியில் ஆராய்ச்சி செய்து வரும் எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான யதீந்திர மிஸ்ரா இது பற்றி விரிவாகவே பேசினார்.

"ஸ்கந்த புராணத்தில் வரும் அயோத்தி மகாத்மியம் அல்லது பிரிட்டிஷ் அரசிதழைப் பார்த்தால், ​​அயோத்தியில் சுமார் ஆறாயிரம் கோயில்கள் இருப்பதாகத் தெரிகிறது. பல சாதியினர் மற்றும் பல அரசர்கள் கட்டிய கோயில்கள் உள்ளன.

ஒரு வீடு விட்டு ஒரு வீட்டில், ராமரை வழிபடும் தாக்கூர்பாரி இருக்கிறார்கள். பூசை விமரிசையாக நடைபெறுகிறது. இவை ஒவ்வொன்றும் பெரிய ஆடம்பரமான கோயிலாக இல்லாவிட்டாலும், ஒரு கூரையும் நான்கு சுவர்களும் இருந்து அங்கு நான்கு பேர் ராமர் சீதை விக்கிரகத்தை வைத்து அதைக் கோயிலாக்கி வழிபடுகின்றனர்."

இந்த நகரத்தின் ஆன்மிக நம்பிக்கை இன்றும் அசைக்க முடியாததாக இருந்தாலும், அதன் இதயம் உடைந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான கட்டடங்கள்-கோயில்கள் இன்று சிதிலமடையும் தருவாயில் உள்ளன. இது மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பது போலாகும்.

ராமர் பாதத்திலிருந்து சிறிது தொலைவில் 'நயா காட்' உள்ளது, அங்கு பல அகாடாக்கள் மற்றும் கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று கர்தாலியா பாபா ஆசிரமம், அதன் மஹந்த் ராம் தாஸ்.

"நோட்டீஸ் கொடுக்கப்பட்ட கோயில்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. சில இடங்களில் வாயிற்கதவு உடைந்துள்ளது, சில இடங்களில் மேற்கூரை உடைந்துள்ளது. அதனால், ஆசிரமங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அவை கவனிக்கப்படுவதில்லை. பராமரிப்பு இல்லை. பூச்சும் இல்லை. பொதுமக்களும் அதில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இனி அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இந்த இடத்தின் பழஞ்சிறப்பே இங்குள்ள மடங்கள் மற்றும் கோயில்களேயாகும்." என்கிறார் அவர்.

கர்தாலியா பாபா ஆசிரமத்தின் மஹந்த் ராம் தாஸ்
படக்குறிப்பு, கர்தாலியா பாபா ஆசிரமத்தின் மஹந்த் ராம் தாஸ்

கோடியில் புரளும் இராமர் சீதை

அயோத்தியில் உள்ள பெரும்பாலான கோயில்களின் துறவிகளும் பூசாரிகளும், கோயில்களைப் புனரமைப்புச் செய்ய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அந்த வரிசையில், சொர்க்கவாசலுக்கு அருகே காணப்பட்ட ஒரு கோயில் கவனிக்கத்தக்கது. அதன் இரண்டு தளங்களும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் இடிந்து சிதிலமடைந்துள்ளன. இதன் மஹந்த் கேசவ் தாஸ் ஜியை வாசலில் சந்திக்க முடிந்தது.

அவர் நம்மிடம் பேசியபோது, புதிதாகக் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ராமர் கோவிலை நோக்கிச் செல்லும் பக்தர்களை சுட்டிக்காட்டி, "கடவுள் எங்கும் ஒருவரே, ஆனால் கடவுள் அங்கு தான் அதிகமாகத் தெரிகிறார், மற்ற கடவுள்களுக்கு மதிப்பில்லை. கடவுள் ஒருவரே. அங்கு உள்ள ராமர் சீதை கோடிகளில் புரள்கிறார்கள். இங்குள்ள ராமர் சீதை சில்லறையில் புரள்கிறார்கள்." என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ராமர் கோயில் கட்டும் அவசரத்திலும், தீபோற்சவத்தின் பரபரப்பிலும், அயோத்தியின் அடையாளமாக விளங்கும் பல புராதன பாரம்பரியங்கள் வரலாற்றின் பக்கங்களில் காணாமலே போய்விடுவது குறித்து யாருக்கும் கவலையில்லை என்பது உள்ளூர் மக்களின் ஆதங்கம்.

மஹந்த் சுமன் பாடக், "இங்கு தீபோற்சவம் நடைபெறுகிறது, ஆனால் இந்த திருவிழா நடந்த இடத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதைக் காணவில்லை. இவை கோயில்கள் அல்லவா? நாங்கள் இந்த அயோத்தியில் வசிக்கவில்லையா? தீபோற்சவம் என்பது வெறும் பாசாங்கு தான். வாக்கு வங்கிக்காகச் செய்யப்படுகிறது." என்கிறார்.

அயோத்தி

பட மூலாதாரம், Nitin Srivastava/BBC

'நன்மைக்காகத் தியாகம் செய்யத் தான் வேண்டும்'

அயோத்தியின் உள்ளூர் நிர்வாகம் "பண்டைய பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் மக்களின் பாதுகாப்பும் அவசியம்" என்று கருதுகிறது என்கிறார் அயோத்தியின் உதவி நகராட்சி ஆணையர் அங்கிதா சுக்லா.

அவர் மேலும் கூறுகையில், "வளர்ச்சி ஏற்பட்டால் மாற்றங்களைக் கொண்டு வரத் தான் வேண்டும், அது அனைவருக்கும் நன்மை பயக்கும். இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான கோயில்கள், மக்களின் உயிருக்கு ஆபத்து. ஒரு நன்மை பெறவேண்டுமானால், சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அப்போது தான் மாற்றத்தின் பயன் அனைவருக்குமானதாக இருக்கும்." என்கிறார்.

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலை 'பொற்கால அத்தியாயம்' என்றும், 'வரலாற்று' வெற்றி என்றும் தற்போதைய மத்திய பிரதேச மற்றும் உத்தரபிரதேச பாஜக அரசுகள் கருதுகின்றன. ஆனால் அதே நேரத்தில், இந்த நகரத்திலிருந்து எழும் எதிர்ப்புக் குரல்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அயோத்தி

நவீனமயமாக்கலால் இடம் பெயரும் அச்சுறுத்தல்

சமீபத்தில், ராமர் கோயிலுக்குச் செல்லும் சாலைகளை 18 அடிக்கு அகலப்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டதால், அயோத்தியின் சீரமைப்பு முயற்சிகளுக்கு எதிர்ப்பு தொடர்கிறது.

அதாவது, அயோத்தி பழமையான மற்றும் மக்கள் அடர்த்தியான நகரமாக இருப்பதால், இங்குள்ள சாலைகளின் இருபுறமும் உள்ள சிறிய கடைகள் மற்றும் வீடுகள் அல்லது கோயில்களின் கதவுகள் இடிக்கப்படுகின்றன. இதற்காக மக்களுக்கு இழப்பீடு மற்றும் புதிய இடம் கிடைக்கும் என்றும் அரசு உத்தரவாதம் அளிக்கிறது.

ஆனால் இந்த இடப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்ட சுமார் 1,200 குடும்பங்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

52 வயதான ரம்பா தேவி அப்படிப்பட்ட ஒரு கோயிலின் வாயிலில் பூஜைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அவரது கடையை அகற்றவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

"இந்தக் கடை வருமானம் தான் எங்கள் வாழ்வாதாரம். இரண்டு குழந்தைகள் கூலி வேலை செய்கிறார்கள், இப்போது அரசாங்கம் வேறு எங்காவது இடம் தரும். அங்கு பக்தர்கள் எப்படி வருவார்கள். இனி வாழ்க்கை எப்படிப் போகும் என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

அயோத்தி

அரசின் கவனத்துக்குச் சென்ற மக்களின் கவலை

அயோத்தியில் உள்ள கோயில்கள் மற்றும் தர்மசாலைகளில் வசிக்கும் மக்களின் கவலைகள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டது. சந்த் சமாஜ் தவிர, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் சில இந்து அமைப்புகளும் இவர்களை காப்பாற்றுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சஞ்சய் சௌத்ரி கூறுகையில், "சுற்றுலா மிகப் பெரிய தொழில் என்பதால், பொருளாதார அடிப்படையிலான வளர்ச்சி இல்லாவிட்டால், அது எப்படி நடக்கும். அது வளரும்போது, ​​அதன் பலன் அயோத்தியையும் அடையும். இது ஆரம்பம் தான்.

அயோத்தி

அயோத்தி சிறப்பாக உள்ளது. ஹோட்டல்களை உருவாக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அரசு விருந்தினர் மாளிகைகளையும் கட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அயோத்தி செல்லும் சுற்றுலாப்பயணிகள் அங்கு சென்றால் அருகில் உள்ள கோயில்களுக்கும் செல்வார்கள். இதனால் வாழ்வு வளம் பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால், இனி வரும் நாட்களில் எப்படி வாழப் போகிறோம் என்ற அச்சம் அயோத்தி மக்களிடம் இருப்பது உண்மைதான். அதேசமயம், உணர்ச்சிப் பெருக்கில் உள்ள பக்தர்களால் அவர்களின் அச்சம் கவனிக்கப்படுவதில்லை.

நகரின் சரயு குஞ்ச் கோவிலின் மஹந்த் யுகல் சாஸ்திரி, "ராமர் கோவிலை நோக்கி கவனம் செலுத்துங்கள், ஆனால் ராமர் கோவிலின் பிரமாண்டத்தால் மற்றவர்கள் பட்டினியால் அவதிப்பட்டு, அந்தக் கோயில் வாசலில் பிச்சை எடுக்குமளவுக்கு விட்டு விடாதீர்கள்" என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறுகிறார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: