கருக்கலைப்பு செய்த போது உயிருடன் பிறந்த குழந்தை - எப்படி இருக்கிறது? யார் வளர்ப்பது?

பட மூலாதாரம், GETTY IMAGES
- எழுதியவர், சுசீலா சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
குழந்தையின் வருகை என்பது உலகில் உள்ள எந்தவொரு குடும்பத்தினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியான தருணமாக தான் இருக்க முடியும்.
ஆனால் சில காரணங்களுக்காக, கர்ப்பிணி ஒருவருக்கு ஆறு மாதங்களில் கருக்கலைப்பு செய்யப்படும் போது, கரு உயிருடன் பிறந்தால் அந்த அசாதாரணமான சூழலை ஒரு குடும்பம் எப்படி எதிர்கொள்ளும்?
இதை படிக்கும் போது நீங்கள் அதிர்ச்சியோ, குழப்பமோ அடையலாம். ஆனால் இது கதையல்ல; உண்மை சம்பவம்.
நாளிதழ்களில் வெளியான செய்திகளின்படி, கடந்த இரண்டு, மூன்று மாதங்களில், மும்பையில் கர்ப்பம் தரித்த பெண்களில் மூன்று பேர் சில காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்ய முற்பட்டபோது உயிருள்ள கருவை பெற்றெடுத்துள்ளனர்.
திருத்தி அமைக்கப்பட்ட கருக்கலைப்பு சட்டம்
கடந்த 1971இல் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி, 20 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதி அளித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்த நிலையில், மருத்துவக் கருக்கலைப்பு திருத்த சட்டம், (Medical Termination of Pregnancy Act) 2021 இல் இந்தியாவில் அமலுக்கு வந்தது. அதன்படி, சில சூழ்நிலைகளில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ காலம் 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது ஆனால் மேலும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் 24 வாரங்களுக்கு பிறகும் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கருக்கலைப்புக்கான மூன்று நிலைகள்
நிலை 1: 0-20 வாரங்கள்
ஒரு பெண் தாயாக மாற தயாராக இல்லை அல்லது கருத்தடைக்கான தற்காப்பு நடவடிக்கைகளில் தோல்வியுறுதல் போன்ற காரணங்களுக்காக, குறிப்பிட்ட இந்தக் காலத்தில் கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.
நிலை 2: 20 -24 வாரங்கள்
பேறு காலத்தின் போது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த நிலையில் கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு மருத்துவரின் அனுமதி அவசியம்
நிலை 3: 24 வாரங்களுக்கு பிறகு
*கர்ப்பிணி பாலியல் பாதிப்புக்கு ஆளாவார் என்ற நிலை
*கர்ப்ப காலத்தில் ஒரு பெண் விவாகரத்து பெறுதல் அல்லது விதவை ஆவது
*குழந்தையை பெற்றெடுக்கும் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு உடல் தகுதி இல்லாத சூழல்
*வளரும் கருவின் அசாதாரண நிலை மற்றும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்திருப்பது
*கர்ப்பம் ஒரு பெண்ணின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைதல் போன்ற சூழ்நிலைகளில் மருத்துவக் கருக்கலைப்பு (திருத்தச் சட்டத்தின் கீழ் (MTP) ஒருவருக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், GETTY IMAGES
உயிருள்ள சிசுவின் வழக்கு
இந்த நிலையில்தான், 27 வாரங்களுக்கு பிறகு கருச்சிதைவு ஏற்பட்ட போதும். அந்தக் கரு உயிருடன் பிறந்த சம்பவம் சமீபத்தில் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
மும்பை பார்லே பகுதியில் இயங்கி வரும் கேஇஎம் மருத்துவமனையில் அவசர கருக்கலைப்பு மூலம் அண்மையில் பிறந்த குழந்தையை வெளியே எடுக்க கூடாது என்று, இதுதொடர்பான வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “இவ்வாறு பிறந்த குழந்தையை உரிய மருத்துவ ஆலோசனைகள் இன்றி, மருத்துவமனையில் இருந்து வெளியே எடுக்க கூடாது” என்று உத்தரவிட்டிருந்தார்.
உண்மையில் நடந்தது என்ன?
தாதர் மற்றும் நாகர் ஹவேலி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கடந்த மார்ச் மாதம் தெரிய வந்தது.
ஆனால் ஜூலை மாதம் அவருக்கு கடுமையான இருமல் இருந்துள்ளது. அதன் காரணமாக மூச்சுவிடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அந்தப் பெண்ணின் இதயத்தில் 20 மில்லி மீட்டர் அளவுக்கு ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறும், இதற்காக இதயநோய் நிபுணரிடம் ஆலோசனை பெறுமாறும் மருத்துவர் அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக வெளியான செய்திகளின்படி, உள்ளூர் மருத்துவரின் அறிவுறுத்தலை அடுத்து, தம்பதியர் மும்பை பார்லேயில் உள்ள கேஇஎம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினர். அத்துடன் பெண்ணுக்கு எம்டிபி (Medical Termination of Pregnancy) மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அம்மருத்துவமனையின் மருத்துவ வாரியம் பரிந்துரைத்தது. மேலும் அதற்கு சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒப்புதல் வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

பட மூலாதாரம், GETTY IMAGES
கருக்கலைப்புக்கு அனுமதி
இந்த நிலையில் தான், கருக்கலைப்புக்கு அனுமதி கோரி, இத்தம்பதியர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
எம்டிபி நடைமுறைக்கு முன் தம்பதியரின் ஒப்புதல் அவசியம் என்று வழக்கு விசாரணையின்போது தெரிவித்த நீதிமன்றம், 27 வாரங்களில் கருக்கலைப்பு செய்ய அனுமதித்தது.
இதுதொடர்பாக கேஇஎம் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச பிபிசி முயன்றது. ஆனால் மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை.
ஆனால் வெளியான செய்திகளின்படி, இந்த விவகாரம் குறித்து அம் மருத்துவமனை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கபட்டிருந்தது.
அதில், சம்பந்தப்பட்ட கர்ப்பிணியின் உடல் நிலை குறித்த தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கருக்கலைப்பின் போது குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதய நோய் நிபுணரின் கருத்தையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தது.

‘இது ஒன்றும் புதிதல்ல’
கருக்கலைப்பின் போது கரு உயிருடன் பிறக்கும் சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல என்று கூறுகிறார் மும்பை மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர். நிகில் டி.தாதர்.
“கர்ப்பிணி ஒருவருக்கு மூன்றாம் நிலை கருச்சிதைவு ஏற்பட்டால், அப்போது என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது அரசு அல்லது ஜிஆரின் (கருக்கலைப்பின் போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள்) முடிவுக்கு உட்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற சூழலில் கரு உயிருடன் பிறக்க வேண்டியதில்லை. மேலும் இது தொடர்பான மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி அவர்கள் அறிந்திருக்க வேண்டும்” என்றும் கூறுகிறார் டாக்டர்.நிகில்.
MTP சட்டம் 2021 இல் சில மாற்றங்களை செய்ய உத்தரவிட வேண்டி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, “24 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு நிகழும்போது, சில நேரம் கரு உயிருடன் பிறக்கிறது. ஆனால் எம்டிபி செய்யப்படும்போது கருவின் இதயம் ஒரு ஊசி மூலம் நிறுத்தப்படும். இது உலகம் முழுவதும் உள்ள ஏற்பாடு” என்கிறார் நிகில்.
அத்துடன், மாநிலங்களில் நிரந்தர மருத்துவ வாரியம் அமைப்பது குறித்தும் ஜிஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் 2017இல், மைனர் சிறுமி ஒருவரின் பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநிலங்களில் நிரந்தர மருத்துவ வாரியங்களை அமைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
மேலும், மைனர் அல்லது ஒரு பெண் தங்களது கர்ப்ப காலத்தின் மூன்றாம் நிலையில் இருக்கும் போது, கருக்கலைப்புக்கு அனுமதி கோரி வழக்கு தொடுத்தால், அப்போது மருத்துவ வாரியம் தரப்பில் பிரதிநிதிகள் ஆஜராகி, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை, கருவின் நிலை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
அதையடுத்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து ஜிஆர்யை தயார் செய்தது.
அதில், மாநிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தர மருத்துவ வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், கரு மருத்துவம், மனநல மருத்துவம், இதயவியல் மற்றும் நரம்பியல் நிபுணர்கள், கதிரியக்கவியல் வல்லுநர், மருத்துவ நிர்வாக பிரதிநிதி என்று துறை நிபுணர்கள் இந்த வாரியத்தின் குழுவில் இடம்பெற்றிருப்பது அவசியம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், ANUBHA RASTOGI
கருக்கலைப்பு குறித்து ஜி.ஆர் சொல்வது என்ன?
கருக்கலைப்பின் போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்த உள்ளடக்க தகவல்கள் தான் ஜி.ஆர் எனப்படுகிறது.
“ஒரு இளம்பெண் அல்லது பெண் கர்ப்பத்தின் மூன்றாம் கட்டத்தில் இருக்கும்போது கருச்சிதைவு ஏற்பட்டால், GR இல் குறிப்பிட்டுள்ளபடி, மகப்பேறு மருத்துவர் இரண்டு அல்லது மூன்று மில்லி (15%) பொட்டாசியம் குளோரைடை கருவின் இதயத்தில் செலுத்த வேண்டும்” என்று கூறுகிறார் டாக்டர் நிகில்.
அதேநேரம் கருவின் இதய துடிப்பு நின்றுவிட்டதா என்பதை சோனோகிராஃபி பரிசோதனையின் மூலம் உறுதி செய்த பின்பே, கருக்கலைப்பு செய்ய வேண்டும்.
இந்த விஷயங்கள் அனைத்தும் ஜிஆரில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்கிறார் டாக்டர் நிகில் தாதர்.
“இது சட்டப் பிரச்னை அல்ல; மருத்துவ ரீதியான பிரச்னை. ஒரு கர்ப்பிணி மூன்றாவது நிலையில் கரு கலைப்பு செய்ய விரும்பினால், கருவுக்கு ஊசி போடும் முறையை மருத்துவர் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் இதுபோன்ற விஷயம் நீதிமன்றத்துக்கு வராமல் தடுக்கப்படும்” என்கிறார் பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக பணியாற்றி வருகிறார் வழக்கறிஞர் அனுபா ராஸ்தோகி.
அவரை பொருத்தவரை, இதுபோன்ற விஷயங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், மருத்துவருக்கும் இடையே விவாதித்து முடிவெடுக்கப்பட வேண்டும். மாறாக அவை நீதிமன்றம் வரை வரக்கூடாது.
இதுபோன்ற விஷயங்கள் நீதிமன்றத்துக்கு வராமல் தடுக்க, சுகாதார அமைச்சகத்தின் விதிகளின்படி, மருத்துவ வாரியங்கள் செயல்படுவது மிகவும் முக்கியம் என்கிறார்
மனித உரிமைகள் மற்றும் எம்பிடி சட்டத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் அதிதி சக்சேனா.
அதே நேரத்தில், இதுபோன்ற சிக்கலான பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ வாரியங்கள் உள்ளனவா என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












