நீட் தேர்வு: மாணவன் தற்கொலையால் சோகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் சென்னையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகர். புகைப்படக் கலைஞரான இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19) பல்லாவரத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்பை முடித்தார். 12ஆம் வகுப்பில் 424 மதிப்பெண்களைப் பெற்றார்.
மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக நீட் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் ஜெகதீஸ்வரன். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால், இந்த ஆண்டும் அந்தத் தேர்வை எழுதினார். இந்த ஆண்டும் அவருக்குப் போதுமான மதிப்பெண்கள் கிடைக்கவில்லை.
இருந்தபோதும் அடுத்த ஆண்டு தேர்வை எழுதப் போவதாகக் கூறியிருந்தார். பயிற்சி மையத்திற்கான கட்டணத்தையும் செலுத்தியிருந்தார்.
ஆனால், இவருடன் படித்த மாணவர்கள் இருவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். சிலர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
இதனால் மனமுடைந்த ஜெகதீஸ்வரன் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
தந்தையும் தற்கொலை

பட மூலாதாரம், UGC
செல்வசேகரின் மனைவி பிரிந்துவிட்ட நிலையில், தனி ஆளாக அவர் மகனை வளர்த்து வந்தார். இந்த நிலையில், ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டது அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெகதீஸ்வரனின் மரணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை எதிர்த்துப் போராடத் தயாராக இருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே நீட்டை நீக்க வேண்டும் என்று போராடத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தனது மகனின் இறுதிச் சடங்குகளை முடித்த பிறகு, திங்கட்கிழமை அதிகாலையில் அவரும் தற்கொலைசெய்துகொண்டார். நீட் தேர்வில் தேர்ச்சியடையாத மகன், அவருடைய தந்தை ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'நீட்' தற்கொலைகள்

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் தேசியத் தகுதித் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து தமிழ்நாடு அதை எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணம் நீட் தேர்வுக்கு எதிரான உணர்வுகளைத் தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைத்தது.
இதற்கு அடுத்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்களை மட்டுமே பெற்றதால் தற்கொலை செய்துகொண்டார்.
இதற்குப் பிறகு திருச்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி, திருப்பூரைச் சேர்ந்த ரிது ஸ்ரீ, மரக்காணம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த மோனிஷா, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஸ்யா, திருநெல்வேலியைச் சேர்ந்த தனலட்சுமி, கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ, மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா, செந்துறையைச் சேர்ந்த விக்னேஷ், தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால், மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டம் துலாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி, வேலூர் மாவட்டம் தலையாரம்பட்டுவைச் சேர்ந்த செளந்தர்யா என 16க்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை முன்வைத்து உயிரிழந்துள்ளனர்.
நீட் மசோதா

பட மூலாதாரம், Getty Images
நீட் தேர்வை நீக்க தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.
பிறகு, தி.மு.க. அரசு பதவியேற்றதும் மீண்டும் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பினார். பிறகு மீண்டும் அதே மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது. அந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது.
சர்ச்சையான ஆளுநர் சந்திப்பு

பட மூலாதாரம், RAJ BHAVAN
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அப்போது ஒரு மாணவரின் தந்தை எழுந்து, நீட் தேர்வுக்கு எப்போது விலக்களிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தமிழக ஆளுநர், கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் தனக்கு இருந்தாலும், விலக்கு அளிக்க மாட்டேன் என்றும் பேசினார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிகக் காட்டமாகக் கேள்வியெழுப்பிய பெற்றோரை, உட்காருங்கள் என்று மிகவும் சப்தமாகக் கூறினார் ஆளுநர் ரவி. மேலும், நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த நிகழ்வு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
முதலமைச்சர் கண்டனம்

இதற்கு அடுத்த நாளே மாணவர் ஒருவர் மரணமடைந்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தை - மகன் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக ஆளுநரைக் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
"ஒரு முறையல்ல, இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். முதலில் அனுப்பி வைக்கும்போது காலம் கடத்தினார். பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம்.
இரண்டாவது முறை அனுப்பி வைத்தால் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். எங்காவது போய் அந்த மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பது தான் ஆளுநர் ரவியின் மோசமான எண்ணம்.
நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படித்தால் வெற்றி பெறக்கூடிய தேர்வு முறையாக இருக்கிறது. அப்படி பணம் கட்டிப் படிக்க முடியாதவர்கள் தோற்றுப் போகிறார்கள். பணம் கட்டி இரண்டு, மூன்று ஆண்டுகள் படிக்க பணம் வைத்திருப்பவர்களால் வெற்றி பெற முடிகிறது.
குறைவான மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி என்ற தகுதியைப் பெற்றுவிட்டவர்களும், பணம் வைத்திருந்தால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலைமை உள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது பணம் படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.
அதை மீறி இதனுள் நுழையும் ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டால் சேர்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இது எதுவும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தெரியவில்லை; புரிந்துகொள்ள மறுக்கிறார். அல்லது பயிற்சி நிறுவங்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்குக் கையெழுத்து போடாமல் இருந்த நேரத்தில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே சந்தித்தார். இப்போது ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு நாள்தோறும் மாணவர்களை வரவழைத்து பயிற்சி மையங்களைப் போல பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவரிடம் நேருக்கு நேராகவே சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி கேட்டார். அதற்கு ஆளுநரால் பதிலளிக்க முடியவில்லை. 'நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்துப் போடமாட்டேன்' என்று ஆளுநர் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அவரது அறியாமைதான் தெரிகிறது.
அவரது கையெழுத்துக்காக இந்த மசோதா காத்திருக்கவில்லை. அது குடியரசுத் தலைவரிடம்தான் நிற்கிறது. இந்த சட்டத்தைப் பொறுத்தவரையில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை.
இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும்போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். 'கையெழுத்து போடமாட்டேன்' என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்" என்று கூறியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளனர்.
ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்துக்கு புறக்கணிப்பு
நாட்டின் 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரனின் தற்கொலையும் அதைத்தொடர்ந்து அவரது தந்தை தற்கொலை செய்துகொண்டதும், விடுதலை எல்லோருக்குமானதா என்ற கேள்வியை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

அதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவர்களின் உயிர்களை நீட் தேர்வு முறைக்கு நாம் இழந்திருக்கிறோம். இவர்களது மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள் நமது மனசாட்சியை உலுக்கி வருகிறது.
ஆனால், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கனவுகளை, எதிர்கால வாய்ப்புகளை இழந்து வரும் அவர்களின் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டின் ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார்.
‘அதிகாரம் எனக்கு இருந்தால், நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன், ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டேன்’ என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது மாணவர்களையும் இளைஞர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பின்றிப் பேசுவதாகக் குற்றம் சாட்டியதோடு, “தமிழ்நாட்டு மாணவர்கள், பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்,” என்றும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தீர்வல்ல
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












