தமிழ்நாடு கல்வியில் உயரஉயர சாதியமும் வளர்வது எப்படி? அரசு, பள்ளிகள் தவறுவது எங்கே?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி செய்தியாளர்
அக்டோபர் 11, 2019. மதுரை மாவட்டம் பாலமேட்டிற்கு அருகில் உள்ள மறவப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு மாணவன், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவனின் முதுகில் பிளேடால் கிழித்தார். சாதியின் பெயரைச் சொல்லி திட்டியே தனது முதுகில் மாணவன் பிளேடால் கிழித்ததாக பாதிக்கப்பட்ட மாணவன் தரப்பில் கூறப்பட்டது.
ஏப்ரல் 25, 2022. திருநெல்வேலி மாவட்டம், பள்ளக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவருக்கும் 11ஆம் வகுப்பு மாணவருக்கும் கையில் சாதிக் கயிறு கட்டியிருப்பது தொடர்பாகத் தகராறு ஏற்படுகிறது.
இதில் 11ஆம் வகுப்பு மாணவர் தாக்கியதில் காயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி ஏப்ரல் 29ஆம் தேதி உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 9, 2023. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெருந்தெருவில் வசிக்கும் 17 வயது மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
வள்ளியூரில் உள்ள பள்ளியில் அவனுடன் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் வீட்டினுள் புகுந்து அவனையும் அவனது சகோதரியையும் வெட்டியுள்ளனர்.
தற்போது இருவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியிலும் சாதி இருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பள்ளி மாணவர்கள் இடையிலான சாதிய மோதல்கள் தொடர்பாக சமூகத்தில் கவனம் பெற்ற சம்பவங்கள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோல் வெகுஜன மக்களின் கவனத்திற்கு வராத இன்னும் பல நூறு சம்பவங்கள் இருக்கலாம்.
சாதிப் பற்று என்பது வயதில் பெரியவர்களுக்குத்தான் இருக்கும் என்ற பிம்பத்தை தவிடுபொடியாக்கும் விதமாக தற்போது 13, 14 வயது சிறுவர்களிடம்கூட சாதி மீதான பிடிப்புகளைக் காண முடிகிறது.
சமூகரீதியாக வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு கூறப்பட்டு வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் இடையே காணப்படும் இத்தகைய சாதிய முரண்பாடுகள், அதன் காரணமாக அரங்கேறும் குற்றச் செயல்கள் போன்றவை எதைக் காட்டுகின்றன?
பள்ளி மாணவர்கள் சமூகத்தில் இருந்து வேறுபட்டவர்களா?
பள்ளி மாணவர்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் இத்தகைய நிகழ்வுகளை அடைக்க முடியாது. சமூகத்தின் ஓர் அங்கம்தான் அவர்கள், சமூகத்தில் நிகழ்பவையே அவர்களிடமும் பிரதிபலிக்கிறது என்று கூறுகிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
“ஒரு மாணவன் சமூகத்தில் இருந்து வரும்போது அவனை அப்படியே வெளியே அனுப்பாமல் மாற்றி அமைக்கும் வேலையை கல்வி செய்ய வேண்டும். ஆனால், நீண்ட நாட்களாகவே கல்வி அந்த வேலையைச் செய்வதில்லை.
ஒருவன் படித்துவிட்டால் சாதியில் இருந்து வெளியே வந்துவிடுவான் என்று கூறப்படுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ்நாட்டில் கல்வி கற்றவர்களின் சதவீதம் உயர்ந்து வரும் அளவுக்கு சாதிய கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன,” என்கிறார் அவர்.
முந்தைய காலங்களில் வெளிப்படையாக இருந்த சாதிய கொடுமைகள் தற்போது மறைமுகமாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
“என்னைத் தொடக்கூடாது என்று தற்போது யாரும் நேரிடையாக சாதிய தீண்டாமை கொடுமையில் ஈடுபடுவதில்லை. ஆனால், தேர்தல், வேலைவாய்ப்பு போன்றவற்றில் கண்ணுக்குத் தெரியாத ஆதிக்கமாக சாதி மாறியுள்ளது.
படிப்பின் வழியாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பு, ஊதியம் போன்றவை சாதிய பாகுபாட்டை குறைப்பதற்குப் பதிலாக சாதியை வளர்க்க பயன்படுகிறது,” என்றும் ஸ்டாலின் ராஜாங்கம் வருத்தத்துடன் கூறினார்.

பட மூலாதாரம், PRINCE GAJENDRABABU
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் இதையே கூறுகிறார்.
“பல்வேறு பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில் இருந்து பல்வேறு சிக்கல்களுடன் குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கு வருகிறார்கள். 10, 12 ஆண்டுகள் ஒரு பள்ளியில் படித்துவிட்டு மாணவன் வெளியே செல்லும்போது இந்த சிக்கல்களை உணர்ந்தானா? அதைத் தீர்ப்பதற்கான நம்பிக்கைகளைப் பெற்றானா?
அதுதான் உண்மையான மதிப்பீடு. ஆனால் அத்தகைய மதிப்பீடுகளுக்குள் செல்ல அரசு முயற்சி செய்வது இல்லை.
வாழ்வின் அனைத்து பரிணாமங்களையும் ஒரு குழந்தை அறிந்து நடக்கக்கூடிய வாய்ப்பை கற்றுத்தரும் இடமாக மேற்கு நாடுகளில் பள்ளிகள் பார்க்கப்படுகின்றன.
ஆனால், இங்கே, வெறும் அணா, ஆவண்ணா கற்றுக்கொடுக்கும் இடமாகவே பள்ளிகள் பார்க்கப்படுகின்றன. சமூக வாழ்வுக்கு மாணவனை தயார்படுத்தும் இடம்தான் பள்ளிக்கூடம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவை,” எனத் தெரிவித்தார்.
வெறும் பாடப்புத்தகத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படாது
அத்தகைய மாற்றங்களை பாடநூல்களை மட்டுமே படிப்பதால் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட முடியாது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
"சமூகத்தில் அவர்கள் பார்க்கும் தலைவர்கள், குடும்பங்கள், ஊடகங்கள் போன்றவைதான் அவர்களின் சித்தாந்தத்தை தீர்மானிக்கிறது.
வீட்டில் சாதி இருக்கிறது, சமூகத்தில் சாதி இருக்கிறது. அப்படி இருக்கும்போது பாடப்புத்தகத்தில் இருந்து மட்டும் சாதியை நீக்குவதால் மாணவனிடம் எத்தகைய தாக்கம் ஏற்பட்டுவிட போகிறது?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
இதனால், ஒரு கட்டத்தில் பாடப்புத்தகம் என்பது வெறும் வேலைக்குச் செல்ல மட்டுமே உதவும் என்ற எண்ணம் மாணவரிடம் ஏற்பட்டுவிடும் என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அரசியல் கட்சிகளின் தவறு என்ன?
காந்தியைப் போல், பெரியாரைப் போல் மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் சொல்லக்கூடிய தலைவர் ஒருவரும் தற்போது இல்லை என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
இன்று இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இத்தகைய கொடுமைகள் நடந்த பிறகு மட்டுமே எதிர்வினையாற்றுவதாகவும் தெரிவிக்கும் அவர், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சமூகத்தில் அவர்களும், அவர்களின் இயக்கங்களும் என்ன செய்கின்றன எனவும் கேள்வி எழுப்புகிறார்.
“அரசியல் கட்சிகள் சாதிரீதியாகத்தான் செயல்படுகின்றன. ஒவ்வொரு சாதியையும் தனித்தனியாக திருப்திப்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன. எதைப் பற்றியும் கவலைப்படாமல், எதிர்த்து பேசும் இயக்கங்கள் இன்று இல்லை.
தற்போது உள்ள அரசியல் கட்சிகளிடையே ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லை. அவர்களின் எண்ணம் அதிகாரம் குறித்ததாக உள்ளது. இதற்காக சாதியையே, மதத்தையோ சார்ந்தே அவர்கள் இயங்குகின்றனர்.
தனக்கு வாக்கே கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று இந்த சாதி, மத அரசியலை உடைத்து வெளியே வருவதற்கு எந்த கட்சிகளும் ரிஸ்க் எடுப்பதில்லை,” என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைக்கிறார்.
சாதி கொடுமைகளுக்கு எதிராக தேர்தல் நிர்பந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டமைப்பு தற்போது தேவையாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Stalin Rajangam
சம்பவங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம் - தீர்வுகளில் அல்ல
"பொதுவாக இதுபோன்று ஒரு சம்பவம் நிகழும்போது, அது குறித்து மட்டுமே சில நாட்களுக்கு பரபரப்பாகப் பேசிவிட்டு அதைக் கடந்து விடுகிறோம்.
முக்கிய பிரச்னை குறித்து நாம் விவாதிப்பதும் இல்லை, அதைக் களைவது எப்படி என்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் இல்லை," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
“சில ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலியில் தன் அக்காவை காதலித்தார் என்பதற்காக 27 வயது நபர் ஒருவரை பள்ளி மாணவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்றார். சாதியின் பெயரில் வன்முறையை கையில் எடுக்கும் இந்த தைரியம் எங்கிருந்து மாணவர்களுக்கு வருகிறது?
வீட்டில் சாதியை ஊட்டி வளர்க்கிறார்கள். சாதி என்பது மாணவர்களுக்கு சமூகத்தில் இருந்து கற்பிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது சமூக ரீதியிலும் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். சாதிக்காக உறவினர்கள் வன்முறையில் ஈடுபடுவதைப் பார்த்து வளரும் குழந்தைகள் அவர்களும் சாதியத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்,” என்கிறார் அவர்.
இதுபோன்ற விவகாரங்களில் உடனடியாக ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று மட்டுமே அரசு நினைக்கிறது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
“தற்போதுகூட கல்வித்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட மாணவனை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாரே தவிர பள்ளி மாணவர்களிடையே உள்ள சாதிய பிரச்னையைக் களைவது குறித்து எதுவும் பேசவில்லை.
நிவாரணங்களோ, நடவடிக்கையோ ஒரு பிரச்னையை முடிவுக்கு கொண்டுவராது. கிராமங்களில் நிகழும் சாதிய கொடுமைகளுக்கு அந்த வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதிகளே காரணமாக இருக்கின்றன. எனவே, தேர்தல் நேரத்தில் அவர்களுடன் கூட்டணி சேர்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
திருந்துவதற்கான வழியாக தண்டனைகள் இருக்க வேண்டும்
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு சாதி குறித்த புரிதல்கள்கூட முழுமையாக இருப்பதில்லை என்று கூறுகிறார் பாளையங்கோட்டை மத்திய சிறையின் முன்னாள் மனநல ஆலோசகரான வழக்கறிஞர் கே. ஆர். ராஜா.
“பாளையங்கோட்டை சிறையில் நான் மனநல ஆலோசகராக இருந்தபோது, பலரும் அவர்களின் உடல்களில் தங்களின் சாதித் தலைவர்களின் புகைப்படத்தை பச்சை குத்தியிருந்ததைப் பார்த்தேன். அவர்களை பற்றிக் கேட்கும்போது ஒன்றிரண்டு வரிகளைக்கூட அவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை. அந்த அளவுக்குத்தான் அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.”
சாதி இல்லை என்று நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம், ஆனால் அதை எந்தளவு பாடத்தில் கொண்டு வருகிறோம் என்பதை பார்க்கவேண்டும். ஒரு சில இடங்களில் ஆசிரியர்களே சாதியரீதியாக நடந்துகொள்கிறார்கள்.
நடைமுறை இப்படி முரணாக இருக்கும்போது, இந்தப் பிரச்னையின் வேரைக் கண்டறிந்து அதை அணுகுவதே சரி என்று கூறும் வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா, “குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் அவர்கள் திருந்துவதற்கான வழியாக தண்டனை இருக்க வேண்டுமே தவிர, என் சாதிக்காக தான் சிறைக்கு சென்றேன் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
இதுபோன்ற விவகாரங்களில், "சிறார்களுக்கு தண்டனை கொடுப்பதைப்போல் சம்பந்தப்பட்ட ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். குழந்தைகள் மனதில் சாதிய எண்ணங்களை தூண்டிவிடுவதே அவர்கள்தான்," என்றார்.

பட மூலாதாரம், Collector Tirunelveli
பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு
நாங்குநேரியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் தொடர்புகொண்டு பேசியது.
“ஒரு வாரத்துக்கு முன்புகூட தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி இதுபோன்ற உணர்வுப்பூர்வ விஷயங்களை எவ்வாறு கையாள்வது என விவாதித்தோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவனுக்குத் துணையாகவே இருந்துள்ளனர்.
தற்போது தொகுதிவாரியாக ஒரு குழுவை அமைத்துள்ளோம். இணை ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர், கல்வித்துறையில் இருந்து மாவட்ட அளவிலான அதிகாரி, காவல்துறை அதிகாரி, வருவாய் அதிகாரி, குழந்தை பாதுகாப்பில் இருந்து ஓர் உறுப்பினர் என ஐந்து பேர் இந்த குழுவில் இருப்பார்கள்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சாதிய பதற்றமுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேவைப்படும்பட்சத்தில் குழந்தைகள் மனநல ஆலோசகர் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழல்களை எப்படிக் கையாள்வது என்று ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. அடுத்த வாரத்தில் இந்த முயற்சி செயல்படுத்தப்படும்,” என்று தெரிவித்தார்.
ஆசிரியர்கள் உடனான கூட்டம், பெற்றோர்கள் உடனான கூட்டம், மாணவர்கள் உடனான கூட்டம் ஆகியவை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
நாங்குநரி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் தற்போது ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் நாங்குநேரி சம்பவம் குறித்து மட்டும் அறிக்கை தாக்கல் செய்யாமல் இதுபோல் இனி நிகழாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் கல்வியாளர் பிரன்ஸ் கஜேந்திரன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












