மணிப்பூர்: காவல்துறை - ராணுவம் முரண்பாடு ஏன்? வன்முறை தொடர அதுவும் ஒரு காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி நியூஸ்
மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரங்களுக்கு இடையில், அந்த மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரிடையே கருத்து வேறுபாடுகளும், பாகுபாடுகளும் நிலவுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய நிலவரங்களின்படி, அசாம் ரைஃபிள் படையினர் மீது மணிப்பூர் போலீசார் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அதில், அசாம் ரைஃபிள் படையினர் தங்களைப் பணி செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டுவதாகவும், சட்டவிரோதமாகச் செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அசாம் ரைஃபிள் படையின் 9வது பட்டாலியனை சேர்ந்தவர்கள் மீது விஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள ஃபூகாக்சாவ் இகாய் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முதல் தகவல் அறிக்கையில் அசாம் ரைஃபில்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலர், குகி சமூகத்தைச் சேர்ந்த கலவரக்காரர்களைப் பிடித்து வைத்த தங்களது நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தி, அவர்கள் பாதுகாப்பான பகுதிக்குத் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படையான அசாம் ரைஃபிள் படை வீரர்கள் இந்திய - மியான்மர் எல்லைப் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் அசாம் ரைஃபிள் படையினரின் பணி என்ன என்பது குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க இந்திய ராணுவம் மறுத்துவிட்டது.
இது குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள இந்திய ராணுவம், "கலவரங்கள் நடந்துகொண்டிருக்கும் களத்தில் கொந்தளிப்பை அதிகரிக்கும் வகையில் சில பாதுகாப்பு வீரர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டாலும், அது ராணுவத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலம் உடனடியாகச் சரி செய்யப்பட்டு வருகிறது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய புகார்கள் குறித்து கருத்து தெரிவித்த ராணுவம், அசாம் ரைஃபிள் படையினர், அவர்களுடைய படைப்பிரிவுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளின் அடிப்படையில் செயல்படுகின்றனர் என்று தெரிவித்தது.
மேலும், மெய்தேய் மற்றும் குகி பிரிவினரின் பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள அமைதி மண்டலங்களில் வன்முறைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர் என்றும் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 5ஆம் தேதியன்று காலை 6.30 மணிக்கு, குகி சமூகத்தைச் சேர்ந்த கலவரக்காரர்களைப் பிடிப்பதற்காக உள்ளூர் போலீசார் வக்டா வார்டு எண் 8 அருகே, ஃபோல்ஸாங் சாலைக்குச் சென்றுள்ளனர்.
அதற்குச் சில மணிநேரம் முன்பாக, அப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட மூன்று பேரை குகி சமூகத்தினர் கொலை செய்தனர்.
இந்தக் கொலையை குகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள் செய்திருக்கலாம் என்றும், அவர்கள் அங்கேயே பதுங்கியிருந்ததாகவும் போலீசார் சந்தேகித்தனர்.
மணிப்பூர் போலீசாருடைய தகவலின்படி, அங்குள்ள குதுப் வாலி மசூதியை போலீசார் நெருங்கியபோது, அசாம் ரைஃபிள் படையின் ஆயுதம் ஏந்திய வீரர்கள் அவர்களைத் தடுத்ததாகவும், அதன் மூலம் குகி சமூகத்தைச் சேர்ந்த கொலையாளிகள் பாதுகாப்பான பகுதிக்குத் தப்பிச் செல்ல உதவியதாகவும் தெரிய வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அதில், மணிப்பூர் போலீசாருக்கும், அசாம் ரைஃபிள் படையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஆயுதமேந்திய கலவரக்காரர்களுக்கு அசாம் ரைஃபிள் படையினர் உதவுவதாக மணிப்பூர் போலீசின் காவலர் ஒருவர் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இது முதல் முறையாக நடந்த மோதல் அல்ல
பாதுகாப்புப் படையின் இரு பிரிவுகளுக்கும் இடையே 5ஆம் தேதி நடந்த இந்த மோதல், முதல்முறையாக நடப்பது இல்லை. இந்த இரு பிரிவினருக்கும் இடையே ஏற்கெனவே பல முறை மோதல்கள் நடந்துள்ளன.
கடந்த ஜுன் மாதம் 2ஆம் தேதி, அசாம் ரைஃபிள் படையினரின் 37வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், சுகானு காவல் நிலையத்திற்குச் செல்லும் வழியை அடைத்து வைத்தது தொடர்பான காட்சிகள் வைரலாகப் பரவின.
அந்த காவல் நிலையத்தைச் சுற்றிலும் கவச வாகனங்களை நிறுத்தி அசாம் ரைஃபிள் படை வீரர்கள் வழியை அடைத்து வைத்திருந்த காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.
அதிலும் கூட, காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் அசாம் ரைஃபிள் வீரர்களுடன் வாக்குவாதம் நடத்திய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ஜுலையில், சுகானு காவல் நிலையத்திற்கு பிபிசி சென்றபோது, அசாம் ரைஃபிள் படையின் 37வது பட்டாலியன் வீரர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அங்கிருந்த காவலர் ஒருவர் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசியபோது தெரிவித்தார்.
காவல் துறையின் பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஆயுதங்களுடன் மிரட்டல் விடுத்தல், சட்டவிரோதத் தடையை ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காவல் நிலையத்தைத் தாக்குவதே அசாம் ரைஃபிள் படையின் நோக்கமாக இருந்தது என முதல் தகவல் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஏன் இதுபோல் நடந்தது என சுகானு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஒருவரிடம் நாங்கள் கேட்டபோது, "அசாம் ரைஃபிள் படையினரின் உண்மையான நோக்கம் என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், காவல் நிலையத்தைச் சுற்றி வளைத்து தடையை ஏற்படுத்தியது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அசாம் ரைஃபிள் படையை ஆதரிக்கும் இந்திய ராணுவம்
அசாம் ரைஃபிள் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராணுவம், சில விரோத சக்திகள் மத்திய பாதுகாப்புப் படைகளின், குறிப்பாக அசாம் ரைபிள் படையினரின் பங்கு, நோக்கங்கள் மற்றும் செயல்களை கேள்விக்குள்ளாக்க முயன்றுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
மேலும், "அசாம் ரைபிள் படையினர், உயிர்களைக் காப்பாற்றவும் அமைதியை மீட்டெடுக்கவும் மே 3 முதல் அயராது உழைத்துள்ளனர்," என்றும் தெரிவித்தது.
அதோடு, மணிப்பூரில் அவர்களது நேர்மையை கேள்விக்குட்படுத்தும் நோக்கில் சில முயற்சிகள் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன என இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "மணிப்பூரில் ஒரு சிக்கலான சூழ்நிலை நிலவுவதால் இது போல் ஏதாவது சில சம்பவங்கள் நடக்கும் நிலையையும் மறுக்க முடியாது. இருப்பினும், இதுபோல் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும்போது, ராணுவத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் அவற்றைச் சரிசெய்யும் முயற்சிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதுபோன்ற சிக்கல்களைக் கடந்து மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கே நாங்கள் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறோம்," எனத் தெரிவித்துள்ளது.
"அசாம் ரைஃபிள் படையினருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான இரண்டு சம்பவங்கள் கடந்த 24 மணிநேரத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன," எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
"முதல் சம்பவத்தில் பாதுகாப்பு மண்டலத்தில் பணியாற்றும் அசாம் ரைஃபிள் படையினர் தங்கள் உயரதிகாரிகளின் உத்தரவுகளை மட்டும் மிகக் கடுமையாக அமல்படுத்துவதாகவும், இரண்டாவது சம்பவத்தில் அவர்களுக்குத் தொடர்பில்லாத பகுதிகளுக்கும் சென்று குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது."
இரண்டாவது சம்பவமும் சமூக ஊடகங்களில் பரவும் ஒரு வீடியோவை அடிப்படையாகக் கொண்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வீடியோவில், ராணுவ சீருடையில் இருக்கும் ஒருவரின் காலில் விழுந்து பெண்கள் கதறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவில் இருக்கும் பெண்கள் குகி-ஸோ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. அவர்கள் அசாம் ரைபிள்ஸுக்கு பதிலாக மற்றொரு பாதுகாப்புப் படையை தங்கள் பகுதியில் பணியமர்த்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் ரைஃபிள் படையினரே அங்கு தொடர்ந்து பணியாற்றுமாறு கோரி கதறுகிறார்கள்.
கடந்த மே மாதம் மணிப்பூரில் வன்முறைகள் வெடித்தபின், அசாம் ரைஃபிள் படையினரை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திய பகுதிகளில் ராணுவத்தின் தரைப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
ஏற்கெனவே மோசமான சூழ்நிலை காணப்படும் நேரத்தில், அமைதியை மீண்டும் நிலைநாட்ட இந்திய ராணுவமும், அசாம் ரைஃபிள் படையினரும் உறுதியாகப் போராடுவார்கள் என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.
அசாம் ரைஃபிள் படையினர் மீது அதிகரிக்கும் வெறுப்பு
மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு எதிராக வன்முறைகள் வெடித்தபின் இதுவரை 152 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வீடுகளை விட்டு வெளியேறிய 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அசாம் ரைஃபிள் படையினரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் மலைப்பகுதியில் மியான்மர் நாட்டு எல்லைக்கு அருகே பாதுகாப்புப் பணியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர்.
மலைப்பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் குகி சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கே சில நேரங்களில் அசாம் ரைஃபிள் படையினர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், அவர்களுக்கும், குகி சமூக மக்களுக்கும் இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஜுலை 11ஆம் தேதி மணிப்பூரில் 31 சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் அசாம் ரைஃபிள் படையின் 9, 22 மற்றும் 37வது பட்டாலியன்களைத் திரும்பப் பெறுமாறும், அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் ராணுவத்தைப் பணியமர்த்துமாறும் கேட்டுக்கொண்டனர்.
அப்பகுதிகளை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் தான் இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.
அசாம் ரைஃபிள் படையினரின் சில பிரிவுகள் மணிப்பூரின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கடிதத்தில் கவலை தெரிவித்திருந்தனர்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதிக்கு மணிப்பூர் பாரதிய ஜனதா கட்சி எழுதிய குறிப்பில் அம்மாநிலம் முழுவதும் அசாம் ரைஃபிள் படையினருக்கு எதிரான கோபம் நிறைந்த விமர்சனங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அசாம் ரைஃபிள் படையினர் எப்போதும் பாகுபாட்டுடன் செயல்படுவதாகவும், அவர்களுடைய சமூகத்தினருக்குச் சாதகமான நிலையையே எடுப்பதாகவும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதனால் அசாம் ரைஃபிள் படையினரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வேறு படைப்பிரிவுகளை மணிப்பூரில் நிரந்தரமாக பணியில் ஈடுபடுத்துமாறு மாநில பாஜக, பிரதருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












