காதலுக்காக எல்லை தாண்டி வந்து இந்தியராக வாழ்ந்த பாகிஸ்தானியர்

- எழுதியவர், நியாஸ் ஃபரூக்கி
- பதவி, பிபிசி உருது
குல்சார் மற்றும் தௌலத்தின் காதல் கதை, சினிமாக்களில் வருவதுபோல, ஒரு தவறான தொலைபேசி அழைப்பில் தொடங்கியது.
சீமா ஹைதர் மற்றும் அஞ்சு ஆகியவர்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை தாண்டிய காதல் கதைகள் விவாதப் பொருளாகியிருக்கும் சமயத்தில், ஆந்திராவில் இவர்களது எல்லை தாண்டிய காதல் கதை தெரியவந்துள்ளது.
இந்தக் கதையில் இரண்டு பாத்திரங்கள் உள்ளனர்: பாகிஸ்தானைச் சேர்ந்த குல்சார் கான் மற்றும் இந்தியாவின் தௌலத் பி. இருவரும் திருமணம் செய்துகொண்டு இப்போது ஆந்திராவில் உள்ள நந்தியால் மாவட்டத்தில், காடி வெமுலா என்ற கிராமத்தில் ஐந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
குல்சார் கான் 2011-ல் இந்தியாவுக்கு வந்தார், ஆனால் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம், தெலங்கானா உயர் நீதிமன்றம், குல்சாரை நாடு கடத்துவது குறித்து முடிவெடுக்கும் வரை அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது.
‘போனில் பேசியபோது குல்சார் நல்லவராகத் தெரிந்தார்’
குல்சார் கான் மற்றும் தௌலத் பியின் காதல் கதை 2009-ல் தொடங்கியது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரைச் சேர்ந்த குல்சார், அப்போது சௌதி அரேபியாவில் பெயிண்டிங் ஒப்பந்ததாரராக பணிபுரிந்துகொண்டிருந்தார்.
அப்போது விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றிருந்த தனது இந்திய நண்பரை தான் தொலைபேசியில் அழைக்க முயற்சித்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் தவறான எண்ணுக்கு அழைத்திருக்கலம் என்று நினைத்து அதே போன்ற வேறு சில எண்களுக்கு அழைக்க முயன்றார்.
அப்படித்தான் அவர் இந்தியாவில் ஒரு பள்ளியில் பணிபுரியும் தௌலத் பி-யைத் தொடர்பு கொண்டார்.
குல்சார், தௌலத் பி-யை அழைத்து தனது பெயர் குல்சார் கான் என்றும் அவர் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்றும் கூறினார். தற்செயலாக நடந்த இந்த உரையாடல் விரைவில் காதலாக மாறியது.
மூன்று வருடங்கள் இருவரும் தொடர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர், அதன் பிறகு குல்சார் தௌலத்திடம் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
மன அழுத்தத்தில் இருந்த தௌலத்
ஆனால் அந்த நேரத்தில் தௌலத் மன அழுத்தத்தில் இருந்தார்.
"நான் அவரிடம், எனக்கு ஒரு கணவர் இருக்கிறார், நான்கு குழந்தைகள் உள்ளனர் என்று பொய் சொன்னேன். ஆனால் அவர் என் கணவர் மற்றும் குழந்தைகளைப் பற்றிக் கேட்டர்," என்கிறார் தௌலத்.
ஆனால் உண்மை என்னவெனில், தௌலத் பி-யின் கணவர் சில காலத்திற்கு முன்பு இறந்து போயிருந்தார். அவரைப் பொறுத்தவரை, அவர் குல்சாரை ஒரு நல்ல மனிதராகப் பார்த்தார். படிப்படியாக அவரை துணைவராகப் பார்க்கத் தொடங்கினார்.
"மக்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். நான் பேசாமல் செத்துப் போய் விடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் அப்படிச் செய்து விடாதே என்று சொன்னார். எப்படியும் என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்," என்று கூறினார்.
இதற்குப் பிறகு குல்சார் செய்தது சட்டவிரோதமானது. இதை அவரும் ஏற்றுக் கொள்கிறார்.
திருமணத்திற்காக இந்தியாவிற்கு விசா பெற பலமுறை முயற்சித்தும் தோல்வியடைந்ததாக குல்சார் கூறுகிறார்.

குல்சார் எப்படி இந்தியா வந்தார்?
தனக்குத் தெரிந்த ஒரு இந்தியக் குடிமகனின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டதாக குல்சார் கூறுகிறார். அந்த அட்டையை எடுத்துக்கொண்டு சௌதி காவல்துறையிடம் சென்று தான் இந்தியக் குடிமகன் என்று கூறியதாகக் கூறுகிறார்.
"நான் ஒரு இந்தியன். இங்கு வேலை செய்ய வந்தேன். வந்த இடத்தில் எனது பாஸ்போர்ட்டைத் தொலைந்துவிட்டேன். இது எனது அடையாள அட்டை. நான் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்,” என்று போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்.
சௌதி போலீசார் அவரை பன்னிரண்டு நாட்கள் சிறையில் அடைத்ததாகவும், சௌதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் அவருக்குத் தற்காலிக பாஸ்போர்ட்டை வழங்கியதாகவும், சுமார் 160 பேருடன் மும்பைக்கு அனுப்பியதாகவும் குல்சார் கூறுகிறார்.
இதற்கு முன்புன், சில இந்தியர்கள் ‘விசிட் விசா’வில் பாகிஸ்தானுக்குச் செல்வதைக் கண்டிருக்கிறார் குல்சார். அதனால் இந்தியா வருவதற்கு ஆர்வமாக இருந்தார். ஆனால் அவர் தனது கனவை நிறைவேற்றிய விதம், அவரைச் சிக்கலில் மாட்ட வைத்தது.
குல்சார் போலி ஆவணங்கள் மூலம் இந்தியா வந்ததாக இந்தியப் போலீசார் கூறுகின்றனர். குல்சார் முகமது ஆதில் என்பவருக்கு சொந்தமான ஆவணங்களைப் போலியாக தயாரித்ததாக அரசு கூறுகிறது. இந்தப் போலி ஆவணத்தைப் பயன்படுத்தி, தற்காலிகப் பாஸ்போர்ட் பெற்று, அவர் 2011-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி அன்று இந்தியா வந்தடைந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை குல்சார் மறுக்கவில்லை.

'நான் ஒரு இந்தியனாக நினைக்க ஆரம்பித்தேன்'
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, குல்சார், தௌலத் பி-யின் வீட்டிற்கு அருகில் இருந்த பெரிய நகரமான ஹைதராபாத் நகருக்கு ரயிலில் சென்றார்.
அப்போது அவர் கையில் 150 ரியால்கள் மட்டுமே இருந்ததாகக் கூறுகிறார். ,
அதை மும்பை விமான நிலையத்தில் இந்திய ரூபாயாக மாற்றிக்கொண்டார். "நான் தௌலத் பி-யின் வீட்டை அடைந்தபோது, என்னிடம் சுமார் 500 இந்திய ரூபாய் இருந்தது,” என்கிறார்.
குல்சார் இந்தியா வந்த இரண்டு வாரங்களில் தௌலத் பி-யை மணந்தார். முன்னதாக, தௌலத் பி-யின் உறவினர்களின் புகாரின் பேரில் குல்சாரிடம் போலீசார் ஒருமுறை விசாரணை நடத்தினர். ஆனால் அதன் பிறகு வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்தத் திருமணம் தான் தௌலத் பி-யின் வாழ்வில் வெகு நாட்களுக்குப் பின் நடந்த ஒரு சந்தோஷமான விஷயம். தௌலத்தின் பெற்றோர், கணவர், மற்றும் மூத்த சகோதரர் ஒருவர் பின் ஒருவராக இறந்த நிலையில், மனநலம் குன்றிய அவரது இளைய சகோதரர் காணாமல் போயிருந்தார்.
தௌலத் பி-யின் கூற்றுப்படி, குல்சார் ஒரு சிறந்த கணவராக இருந்தார். அவரது முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளை தனது குழந்தைகளாகவே கருதினார்.
நாட்கள் கடந்தன, குல்சார் அந்த இடத்தோடு ஒன்றிப்போனார். மேலும் அவருக்கும் தௌலத் பி-க்கும் நான்கு குழந்தைகள் பிறந்தனர். தெலுங்கு மொழியையும் சிறிது கற்றுக்கொண்டார். உள்ளூரில் மீண்டும் பெயிண்டராக வேலை செய்யத் தொடங்கினார்.
குல்சார் தன்னையே தான் ஒரு ‘இந்தியனாக நினைக்கத் தொடங்கியதாகக்’ கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுக்குச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்ட குல்சார்
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வசிக்கும் குல்சாரின் மூத்த சகோதரி ஷீலா லால், தனது சகோதரர் பல ஆண்டுகளாகக் குடும்பத்துடனான தொடர்பை துண்டித்துவிட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
அண்ணன் என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும், அவருக்கு ஏதேனும் விபத்து நேர்ந்திருக்குமோ என்று பயந்ததாகவும் கூறினார்.
குல்சார் சௌதி அரேபியாவில் இருப்பதாகவே அவரது குடும்பத்தினர் நினைத்ததாகவும், அதனால் அவரை சௌதியில் தேடிக்கொண்டிருந்ததாகவும் கூறினார். அவரது கூற்றுப்படி, குல்சாரைக் கண்டுபிடிக்க தனது மற்றொரு சகோதரர்களில் ஒருவரை சௌதி அரேபியாவுக்கு அனுப்பினார், ஆனால் அவர் தகவல் ஏதும் கிடைக்காமல் திரும்பி வந்தார்.
ஆனால் திடீரென்று ஒரு நாள் குல்சார் பாகிஸ்தானில் உள்ள தனது தாய் மற்றும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தான் இந்தியாவில் இருப்பதாகக் கூறினார்.
பல வருடங்கள் கழித்து குல்சாருக்குத் தனது வீட்டின் நினைவு வரத் துவங்கியது. தனது குடும்பத்துடன் தான் பேசியதோடு, தனது மனைவியையும் குழந்தைகளையும் பேச வைத்தார். அவர் தனது புதிய குடும்பத்துடன் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பினார்.
2019-ல் குல்சார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாகிஸ்தான் செல்லும் நோக்கத்துடன் டெல்லிக்கு புறப்பட்டார். ஆனால் தெலங்கானா போலீசார் தனக்காக ஹைதராபாத் ரயில் நிலையத்தில் காத்திருப்பது அவருக்குத் தெரியாது. குல்சார் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார் பிபிசியுடன் பேச மறுத்துவிட்டனர். ஆனால் 'தி வீக்' இணையதளத்தின் படி, உளவுத்துறை அமைப்புகள் அவர் பாகிஸ்தானுக்குச் செய்த தொலைபேசி அழைப்புகளை கண்காணித்துக் கொண்டிருந்தன.
காவல்துறைக் கட்டுப்பாட்டில், அவரிடம், அவரது நாட்டைப் பற்றிய கேள்விகளை போலீசார் கேட்டனர். அவர் ஒரு பாகிஸ்தான் குடிமகன் என்று ஒப்புக்கொண்டார்.
"நான் அவர்களிடம் எல்லா உண்மையையும் சொன்னேன். அவர்கள் என்னை நம்பாதபோது, நான் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது நீங்கள் என் குடும்பத்தைச் சுற்றி வளைத்ததைப் பார்த்தேன். நான் ஏதாவது தவறு செய்ய நினைத்திருந்தால் அங்கிருந்து ஓடியிருப்பேன். நான் என் சொந்த விருப்பத்தின் பேரிலேயே உங்களிடம் வந்தேன்," என்று சொன்னதாகக் கூறினார்.
காதலுக்குத் தான் இத்தனையும் செய்ததாகவும், என்ன நடந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்றும் அவர் எண்ணியதாகக் கூறினார்.

கணவரின் உண்மையான அடையாளத்தை அறிந்த தௌலத்
போலி ஆதார் அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளைப் பெற்றதற்காக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குல்சார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, நான் தவறு செய்தேன், அதற்காக தண்டனை பெற்றேன்," என்கிறார் குல்சார்.
இதன்போது, தௌலத்திடம் அவரது கணவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால், வர் பஞ்சாம் காரர் என்று போலீசாரிடம் அவர் வாக்குவாதம் செய்ததாகக் கூறுகிறார் தௌலத். “பிறகு போலீஸ்காரர்கள், பாகிஸ்தானிலும் ஒரு பஞ்சாப் இருக்கிறது, குல்சார் அங்கிருந்து வந்தவர்," என்று தன்னிடம் கூறியதாகக் கூறுகிறார் தௌலத்.
அப்போது, குல்சார் உண்மையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சியால்கோட் மாவட்டத்தில் உள்ள கொலுவால் என்ற கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியைச் சேர்ந்தவர் என்பது அவருக்குத் தெரியவந்தது.
தௌலத்துக்கு அவர் முஸ்லிம் இல்லை என்பது அப்போதுதான் தெரிய வந்தது. குல்சார் தனது குடும்பப்பெயரை கான் என்று பொய்யாகச் சொல்லியிருந்தார். அதனால் அவரை ஒரு முஸ்லீம் என்று அவர் நினைத்தார். ஆனால் உண்மையில் குல்சாரின் குடும்பப் பெயர் ‘குல்சார் மசிஹ்’.
‘குடும்பத்தோடு பாகிஸ்தான் செல்ல விருப்பம்’
குல்சாரின் சகோதரி ஷீலா, பிபிசியிடம், குல்சார் மீது இந்தியாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது, அவர் பாகிஸ்தான் அரசை அணுகியதாகவும், அவர்கள் இந்த விவகாரத்தை விசாரிப்பதாகக் கூறியதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.
அதே சமயம் இந்தியாவில் தௌலத்தும் வீடு திரும்பினார். மற்றும் குல்சாரின் ஜாமீனுக்காக அவரது கிராம மக்களிடமிருந்து 1.5 லட்சம் ரூபாய் திரட்டினார்.
குல்சார் ஜாமீன் பெற்றார். ஆனால் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊடுருவல்களுக்கு எதிரான பிரச்சாரத்தின் போது மீண்டும் கைது செய்யப்பட்டார். தௌலத் தன் கணவரை விடுவிக்க மீண்டும் சுமார் 80 ஆயிரம் டெபாசிட் செய்தார்.
குல்சார் மீண்டும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இப்போது குல்சார் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், தன் மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












