வீரப்பன்: விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர விரும்பியவர் காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

ஆபரேஷன் குக்கூன்

பட மூலாதாரம், SIVASUBRAMANIAM

படக்குறிப்பு, தமிழ் நாடு அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜய்குமாரும், அதிரடிப்படையில் உளவுப்பிரிவு சிறப்பு எஸ்.பி.,யாக இருந்த செந்தாமரைக்கண்ணனும் ‘ஆபரேஷன் குக்கூன்’க்கு மூளையாக இருந்து செயல்பட்டனர்
    • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
    • பதவி, பிபிசி தமிழ்

“வீரப்பன் காட்டிற்குள்ளேயே இருந்திருந்தால், அவரை வீழ்த்தியிருக்க முடியாது.”

இப்படிச் சொல்பவர், வீரப்பனின் கூட்டாளி இல்லை. வீரப்பனை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படையில் முக்கியப் பங்காற்றிய அப்போதைய காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன்.

“அவருக்கு எந்த பலவீனமும் இல்லை. அவருக்கு மதுப்பழக்கமும் கிடையாது. பெண்களுடனும் பழக்கம் கிடையாது. கடவுளுக்குப் பயப்படுபவர். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். தனக்கு தோன்றுவதை செய்பவர். அவரது வாழ்க்கையில் நிறைய ரத்தம் பார்த்திருக்கிறார். அவர் கோழையோ அல்லது எதன் மீதும் பயம் கொண்டவரோ இல்லை,” இப்படித்தான் வீரப்பனை வர்ணிக்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த தமிழ் நாடு போலீசுக்கு அக்டோபர் 18, 2004 ஆம் தேதி மறக்க முடியாத நாளாக அமைந்தது.

வீரப்பன்

பட மூலாதாரம், SIVASUBRAMANIAM

படக்குறிப்பு, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த தமிழ் நாடு காவல்துறைக்கு அக்டோபர் 18, 2004 ஆம் தேதி மறக்க முடியாத நாளாக அமைந்தது.

ஆபரேஷன் ‘குக்கூன்’

காட்டிற்குள் இருந்து முதல் முறையாக வெளியே வந்த வீரப்பனை, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வைத்து, தமிழ்நாடு அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

தமிழ்நாடு அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜய்குமாரும், அதிரடிப்படையில் உளவுப்பிரிவு சிறப்பு எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக்கண்ணனும் ‘ஆபரேஷன் குக்கூன்’க்கு மூளையாக இருந்து செயல்பட்டனர்.

இந்நிலையில், சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துகொண்டே இருந்தாலும், அதிரடிப்படையினர் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

ஊகங்கள் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்தபோது, 2017-ல் விஜயக்குமார் ஐபிஎஸ் எழுதிய ‘சேசிங் தி ப்ரிகேண்ட்’ (Chasing the Brigand) என்ற புத்தகத்தில் முதன்முதலில் ‘ஆபரேஷன் குக்கூன்’ல் என்ன நடந்தது என்பதை அந்த ஆப்ரேஷனுக்கு தலைமை வகித்தவரே எழுதியிருந்தார்.

அப்போதே அதில் வீரப்பன் கொல்லப்பட்ட விதம் குறித்து அவர் எழுதியிருந்தது, உண்மைக்கு புறம்பானவை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், Netflix-ல் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 4) வெளியான ‘தி ஹன்ட் பார் வீரப்பன்’ (The Hunt for Veerappan) ஆவணத்தொடரில் வீரப்பனின் இறுதி நாட்கள் குறித்த முன்னாள் எஸ்.பி செந்தாமரைக்கண்ணன் கூறியுள்ளவற்றுக்கும், விஜய்குமார் எழுதியுள்ள புத்தகத்தில் இருப்பவைக்கும் சில முரண்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

வீரப்பன் தனது கண் பார்வைக் கோளறுக்காக சிகிச்சை பெற்றுவிட்டு, இலங்கைக்கு சென்று விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைவதற்கான முயற்சியில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட விஜய்குமார் மற்றும் செந்தாமரைக்கண்ணன், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தத் திட்டமிட்டனர். அப்படித்தீட்டப்பட்ட திட்டம்தான் ‘ஆபரேஷன் குக்கூன்’, அப்படித்தான் வீரப்பனை சுட்டுக்கொன்றதாக விஜய்குமாரும், செந்தாமரைக்கண்ணனும் சொல்கிறார்கள்.

அதிரடிப்படையில் வீரப்பனுடன் தொடர்பில் இருந்தவர் யார் ?

பட மூலாதாரம், SIVASUBRAMANIAM

படக்குறிப்பு, வார இதழில் பணியாற்றிய சிவசுப்பிரமணியம் தான் வீரப்பனை முதன் முதலில் புகைப்படம் எடுத்தவர்

அதிரடிப்படையில் வீரப்பனுடன் தொடர்பில் இருந்தவர் யார் ?

“அதில்தான் சந்தேகம் வருகிறது. வீரப்பன் கொல்லப்பட்டதில் இருந்து, அவரை எப்படிக்கொன்றார்கள் என்ற மர்மம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இருவரும் தெளிவாக சொல்லவில்லை. அவர் புத்தகத்திலும் நிறைய மறைத்திருக்கிறார், செந்தாமரைக்கண்ணன் பேசியதிலும் நிறைய மறைக்கிறார். ஏன், வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து அவர்கள் இருவர் சொல்வதுமே ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது,” என கேள்வி எழுப்புகிறார் சிவசுப்பிரமணியம்.

வார இதழில் பணியாற்றிய சிவசுப்பிரமணியம்தான் வீரப்பனை முதன் முதலில் புகைப்படம் எடுத்தவர். வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் பிணை வைக்கப்பட்டிருந்தபோது தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்காக அனுப்பப்பட்டிருந்த குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

இருவர் சொல்வதிலும் உள்ள முரண்கள் குறித்து பிபிசியிடம் விரிவாக பேசினார் சிவசுப்பிரமணியம்.

“வீரப்பன் தனது கண் பார்வைக்காக சிகிச்சை பெற வேண்டும், விடுதலைப்புலிகளுடன் இணைய வேண்டும், ஆயுதங்கள் வேண்டும் என கேட்டபோது, அவரிடம் விடுதலைப்புலிகளை சேர்ந்தவராக அறிமுகப்படுத்தப்பட அழைத்து செல்லப்பட்டவர் உதவி ஆய்வாளர் வெள்ளத்துரைதான். அவர்தான், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவராக வீரப்பனின் ஆட்களிடம் அறிமுகம் செய்யப்பட்டவர் என்கிறார் விஜய்குமார். ஆனால், ஆவணத்தொடரில் பேசியுள்ள செந்தாமரைக்கண்ணன், தானே வீரப்பனிடம் உரையாடலில் இருந்ததாக கூறுகிறார். இவை இரண்டில் எது உண்மை, இதை யார் விளக்குவார்கள்,” என கேள்வி எழுப்பினார் சிவசுப்பிரமணியம்.

வீரப்பனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஜன்னலை உள்ளிருந்து திறக்க முடியாதா ?

வீரப்பன் பயணித்த ஆம்புலன்ஸ்

பட மூலாதாரம், KATHIRAVAN

படக்குறிப்பு, ஆம்புலன்ஸ் குறித்து விஜய்குமார் கூறுவதிலும், செந்தாமரைக்கண்ணன் கூறுவதிலும் முரண் இருப்பதாகக் கூறுகிறார் வீரப்பன் மகள் வித்யா

வீரப்பன் மகள் வித்யாவும் இதே கேள்வியை முன்வைத்தார். மேலும், வீரப்பன் இறுதியாக பயணித்த ஆம்புலன்ஸ் வாகனம் குறித்தும் இருவர் கருத்திலும் முரண்கள் இருப்பதாக பிபிசியிடம் கூறினார்.

“விஜய்குமாரின் புத்தகத்தில், அப்பாவை (வீரப்பனை) அழைத்து வந்த ஆம்புலன்ஸில் கதவுகள் உற்பகுதியில் இருந்து திறக்க முடியாத வகையில் வாகனம் மறு சீரமைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களை அப்படியேதான் சுட்டதாகவும் குறிப்பிடுகிறார். ஆனால், ஆம்புலன்ஸ் நின்றபோது அப்பா தலையை வெளியே எட்டிப்பார்த்தார் என்கிறார் செந்தாமரைக்கண்ணன், இவற்றில் எது உண்மை. இரண்டுமே உண்மை இல்லை. அப்பாவை இவர்கள் உயிரோடுதான் பிடித்திருக்கிறார்கள். பின்னர் அவரது நகங்களை பிடுங்கி சித்ரவதை செய்துதான் கொன்றிருக்கிறார்கள்,” என்கிறார் வித்யா வீரப்பன்.

தொடர்ந்து பேசிய அவர், முன்பு காவல்துறை அதிகாரிகள் மீது தனக்கு மரியாதை இருந்ததாகவும், தற்போது தன் அப்பாவின் இறப்பு குறித்து முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் கூறுவதால், அந்த மரியாதை போய்விட்டதாக கூறுகிறார் வித்யா.

“அவர் ஒரு அதிகாரியாக இருந்து என் அப்பாவை கொன்றிருக்கலாம். அது அவரது பணி. அதற்காக வெகுமதி வாங்குகிறார், தன் வாழ்நாள் சாதனையாகத் தூக்கிப்பிடிக்கிறார். ஆனால், ஒரு மனிதன் எப்படி இறந்தார் என்று மறைத்துவிட்டு, ஏன் புத்தகம் எழுத வேண்டும். முழுக்க முழுக்க நாடகம் நடத்தி, அதில் நிறைய மறைத்து, எப்படி புத்தகம் எழுத தோன்றுகிறது. செய்ததை சொல்லும் நேர்மை இல்லாதவர், தனது பணியில் எப்படி நேர்மையாக இருந்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது," என்கிறார்.

மேலும் பேசிய அவர், "என் அப்பாவும் அம்மாவும் காவல்துறையினரால் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எதுவும் தெரியாது. போலீசார் மீது எனக்கு மரியாதை இருந்தது. ஆனால், போலீசார் செய்த கொடூரங்களை எல்லாம் மறைந்து அப்பா செய்ததை மட்டும் ஊர் முழுக்க அவர்கள் சொல்லி வருவது அவர்கள் மீதான நம்பிக்கையையும் மரியாதையையும் குறைத்துவிட்டது," என்றார்.

"அம்மாவைத்தவிர, உண்மையாகவே காவல்துறையின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ‘வொர்க் ஷாப்’பில் உயிரிழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சதாசிவம் கமிஷன் அறிக்கைப்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் எதுவும் இதுவரை அம்மக்களுக்கு சென்று சேரவில்லை,” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் வித்யா.

இதேபோல் நம்மிடம் தொலைபேசியில் பேசிய வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி, "ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ள ஆவணப்படத்தில் நான் பேசியதை முழுமையாக காட்டவில்லை. அவர்களுக்குத் விரும்பியது போல் எடிட் செய்துள்ளனர். நான் பேசியதை முழுமையாக ஒளிபரப்பியிருந்தால் உண்மை மக்களுக்கு புரியவரும்." என்று கூறினார்.

ஆம்புலன்ஸ்

பட மூலாதாரம், KATHIRAVAN

படக்குறிப்பு, பிபிசியிடம் பேசிய செந்தாமரைக்கண்ணன், வீரப்பன் அப்படிக் கொல்லப்பட வேண்டிய நபர் அல்ல என்கிறார்

என்ன சொல்கிறார் செந்தாமரைக்கண்ணன்?

வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து எழும் கேள்விகள் மற்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் பேசிய செந்தாமரைக்கண்ணன், வீரப்பன் அப்படிக் கொல்லப்பட வேண்டிய நபர் அல்ல என்கிறார்.

“உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அப்படி பேசுவார்கள். உண்மையில், ஒருவரை அப்படி பிடித்து வைத்து, அவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்தெல்லாம் கொன்றால், அது பெரிய சட்டசிக்கல் ஏற்படும். அதைவிட, வீரப்பன் ஒன்றும் கொல்லப்பட வேண்டிய ஆள் இல்லையே. ஆனால், அவரை விட்டால் பிடிக்க முடியாது என்ற சூழல்தான் இருந்ததே தவிர, அவரை உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் நோக்கமாக இருந்தது,” என்கிறார்.

இந்த விஷயத்தில் தொடர்ந்து முன்வைக்கப்படும் முரண்கள் குறித்து பேசியவர், “வாகனம் இந்த ஆபரேஷனுக்காகவே பிரத்யேகமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜன்னல் மற்றும் பின் கதவை உற்புறம் இருந்து திறக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. வாகனத்தின் முன்புறமாக ஓட்டுநர் சரவணனும், துரையும் இருந்ததால், அவர்களின் பாதுகாப்புக்காக ஒட்டுநர் பக்கத்திற்கும் பின்னால் பயணிகள் பக்கத்திற்கும் நடுவில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ஜன்னால் உள்ளிருந்து திறக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தது. அது அவர்கள் இருவரின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டது.” என்றார்.

வீரப்பன்

பட மூலாதாரம், SIVASUBRAMANIAM

படக்குறிப்பு, வீரப்பனின் மீசையை எடுக்கச்சொன்ன செந்தாமரைக்கண்ணன்

வீரப்பன் மீசையை எடுக்கச்சொன்ன செந்தாமரைக்கண்ணன்

வீரப்பனுடன் தொடர்பில் இருந்து அவரை வெளியே கொண்டு வருவதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ளவர்கள்போல வீரப்பனுடன் பேசிக் கொண்டிருந்தவர் யார் என்ற முரண் குறித்து பேசிய செந்தாமரைக்கண்ணன், ஆரம்பத்தில் இருந்தே வீரப்பனுடன் தான் தான் பேசிக்கொண்டிருந்ததாக கூறுகிறார்.

“வெள்ளத்துரை, கடைசி ஆபரேஷனுக்கு ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் வரவழைக்கப்படுகிறார். ஆனால், அதற்கு முன்பிருந்தே வீரப்பனுடன் உரையாடலில் இருந்தது நான் தான். அது நேரடியான உரையாடல் கிடையாது. தூதுவர்கள் மூலமாகவும், கடிதம் மூலமாகவும், நான் தான் பேசிக்கொண்டிருந்தேன். அப்படியான உரையாடலின்போது, அவரை மீசை எடுக்கச்சொன்னதே நான்தான்,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

நீங்களே சொன்னீர்களா எனக்கேட்டபோது, “நமக்கு அவர் மீசை வைத்திருப்பதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது. அவர்தான் கேட்டார். நான் காட்டிற்குள் இருந்து வெளியே வருவதால், மீசை இருக்கலாமா வேண்டாமா என்று, அப்போது தான், வீரப்பன் என்றாலே அந்த மீசை தான். நீங்கள் மருத்துவமனைக்கு போக வேண்டும், பின் அங்கிருந்து கப்பலில் இலங்கை செல்ல வேண்டும், அதனால், மீசையை எடுத்துவிட்டால், யாரும் அவ்வளவு எளிதில் உங்களை அடையாளம் காண முடியாது எனக்கூறினேன். அதன்படி, அவர் மீசையை எடுத்துள்ளார்,” என விளக்குகிறார் செந்தாமரைக்கண்ணன்.

மேலும் பேசிய அவர், “அவரை எங்கள் குழுவில் உள்ள யாரும் ஒரு முறைக்கூட நேரில் பார்த்ததில்லை. ஆபரேஷன் குக்கூன் முடிந்ததும், உடலைப் பார்த்து எங்களுக்கே அவர் மீசை இல்லாமல் அடையாளம் தெரியவில்லை. உண்மையில் இது வீரப்பன்தானா என்ற சந்தேகம் எங்கள் குழுவிலேயே பலருக்கு இருந்தது. ஆனால், எங்கள் அதிரடிப்படையில் வீரப்பனின் அண்ணன் மகன் பணியில் இருந்தார். அவர்தான், ‘ஆமா, இது எங்க சித்தப்பன் தான் சார்’ என உறுதிப்படுத்தினார்,” என விளக்கமளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: