தன்பாலின ஈர்ப்பாளர் ஒரே நேரத்தில் துணைவன், மனைவி இரு உறவுகளையும் தொடர்வது எப்படி?

தன்பாலின ஈர்ப்பாளர்கள்
    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தென்னிந்தியாவின் கிராமப்புறங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி வாசகர்களுக்குத் தெரிவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பிபிசி இந்தக் கட்டுரையை வெளியிடுகிறது.

ஆந்திர மாநில சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் வசிக்கும் இருவருடன் பிபிசி பேசியது.

அவர்களில் ஒருவர் ஆண், பெண் இரு பாலினத்தவர்கள் மீதும் ஈர்ப்பு கொண்ட இருபால் ஈர்ப்பாளர். மற்றவர் ஆண்கள் மீது மட்டுமே ஈர்ப்புகொண்ட தன்பால் ஈர்ப்பாளர்.

அவர்களில் ஒருவரான பாஸ்கருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். உடலுறவு என்று வரும்போது மனைவியுடன் இருக்கும்போது ஆணாகவும், இன்னொரு ஆணுடன் இருக்கும்போது பெண்ணாகவும் அவர் செயல்படுகிறார்.

பிபிசி சார்பில் அவரிடம் முன்வைத்த கேள்விகளும் அதற்கு பாஸ்கர் அளித்த பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

கே: ஆண்களிடம் ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதை நீங்கள் முதன்முதலில் உணரத் தொடங்கியது எப்போது?

ப: நான் பள்ளியில் படிக்கும்போது அது தொடங்கியது. அந்த வயதில் பெண்களிடம் நேசத்துடன் இருப்பது என்பது பிரச்னையை ஏற்படுத்தும் அல்லவா?

அதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கும் விதமாக ஆண் நண்பர்களுடன் பழகக் தொடங்கினேன். வகுப்பறையில் ஒருமுறை, ` உன் உதடுகள் நன்றாக இருக்கிறது` என்று ஒரு பையன் சொன்னான். அதன் பிறகு படிப்பதற்காக என்று சொல்லி நாங்கள் வெளியே வருவோம்.

பரீட்சை நேரங்களில் இருவரும் வெளியில் சென்று படிப்போம். அப்படி இருக்கும்போது ஒருமுறை நாங்கள் இணைந்தோம். அப்படியே அது தொடர்ந்தது. பிறகு அதற்கு அடிமையானேன். ஆண்களுடன் அவ்வாறு ஈடுபடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆண்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்தது.

கே: உங்கள் துணையை எப்படி சந்திப்பீர்கள்?

கல்லூரியில் படிக்கும்போது நாங்கள் அடிக்கடி சந்திப்போம். நாங்கள் படிக்க அல்லது வேலை செய்ய வெளியே செல்வோம். இருவரும் சிறுவர்கள் என்பதால் யாரும் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை.

நாங்கள் உள்ளூர் என்பதால், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் குறித்து நன்கு தெரியும். அப்படிபட்ட மலைகள், வயல்வெளிகள், அடர்ந்த மரங்கள் உள்ள பகுதிகளுக்குச் சென்று உடலுறவில் ஈடுபட்டோம்.

எனக்கென்று இப்போது ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதேபோல் அவருக்கும் தொழில் இருக்கிறது. நாங்கள் இருவரும் எப்போதாவது சந்திக்க விரும்பினால், ஒன்று நான் அவர் இடத்திற்குச் செல்வேன் அல்லது அவர் என்னைத் தேடி வருவார்.

கே: உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களைச் சந்தேகிக்க மாட்டார்களா?

இல்லை. அவர்களுக்குத் தெரிந்தால் கஷ்டப்படுவார்கள் என்பதால் அவர்கள் முன் நான் அப்படி நடந்து கொண்டதில்லை.

அந்த ஆண் யார் என்று கேட்டால், அவன் நெருங்கிய நண்பன் என்று மட்டும் சொல்வேன் அவ்வளவுதான், வேறு கேள்விகள் கேட்க மாட்டார்கள்.

ஒருவேளை அவருக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்கலாம். இருந்தாலும் அது பற்றி என்னிடம் கேட்டால் நான் வெளிப்படையாகவே தீவிரமாக அதில் ஈடுபடத் தொடங்கிவிடுவேனோ என்ற பயம் காரணமாக அவர்கள் என்னிடம் எதுவும் கேட்காமலும் இருக்கலாம்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

கே: உங்கள் திருமண வாழ்க்கையிலும் ஏதேனும் பிரச்னை உள்ளதா?

எனக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. பட்டப்படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டேன், திருமண வாழ்க்கை நன்றாகத்தான் செல்கிறது.

எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எனக்கு ஆண், பெண் இருபாலர் மீதும் ஈர்ப்பு உண்டு. அதனால், என் மனைவியுடன் இருப்பதைப் போன்றே என் துணைவருடனும் இருக்கிறேன்.

கே: கிராமப்புறங்களில் உள்ளவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?

நான் வேறு மாதிரியாவன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். யாருக்காவது பாலுணர்வு ஏற்படும்போது, பெண் கிடைக்கவில்லை என்றால் என்னைப் பற்றித் தெரிந்துக்கொண்டு என்னிடம் வருகிறார்கள்.

கிராமங்களில், இதுபோன்ற விஷயங்கள் விரைவாக மற்றவர்களுக்குத் தெரிந்து விடுகிறது. மதுபோதையில் இருக்கும்போது ஒரு சிலர் தங்கள் ஹீரோயிசத்தை வெளிப்படுத்த, "அவனை நான் அப்படிச் செய்தேன்" என்று கூறிக் கொள்கின்றனர். இதனால் கிராமங்களில் இதுபோன்ற தகவல்கள் உடனே பரவி விடுகிறது. நகரங்களில் அத்தகைய பிரச்னை இல்லை.

கே: உங்களைப் போன்றவர்கள் வாழ்க்கையில் என்ன கஷ்டங்களை எதிர்கொள்கின்றீர்கள்?

இந்த விஷயம் வெளியே தெரிந்த பின்னர், ஒருசிலர் கட்டாயப்படுத்தி என்னைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எனக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்கிறேன். ஆனால், பிடிக்காத ஒருவருடன் நேரத்தைச் செலவிடுவது என்பது கடினமானது. இரண்டு மூன்று பேர் வந்து என்னைப் பிடித்து இழுத்துச் சென்று தவறாக நடந்துகொண்டனர்.

இவ்வாறு நம் மீது அவர்கள் பலத்தைச் செலுத்தும்போது காயம் ஏற்படுகிறது. காயம் எப்படி ஏற்பட்டது என்பதை மருத்துவரிடம்கூட சொல்ல முடியாது.

முன்பெல்லாம், மருத்துவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேச முடியாத நிலை இருந்தது. இப்போது எங்களுக்கு என்று தன்னார்வ நிறுவனங்கள் உள்ளன. ஏதாவது நடக்கும்போது அவர்களிடம் சொன்னால், அவர்கள் அதைப் பார்த்து சரியான சிகிச்சையைப் பெற உதவுகிறார்கள்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

கே: தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்கள் பிறரை திருமணம் செய்துகொள்வது குறித்து உங்களின் கருத்து என்ன?

ஆணான உங்களுக்கு வேறு ஒரு ஆண் மீது விருப்பம் இருந்தால் பெண்ணை திருமணம் செய்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். மருந்து, மாத்திரை மூலம் ஒன்றிரண்டு மாதங்களுக்கு உங்கள் மனைவியைத் திருப்பிப்படுத்த முடியும்.

ஆனால், வாழ்நாள் முழுவதும் மனைவியை திருப்திப்படுத்த முடியாது. இதனால், இருவருக்கும் பாதிப்புதான். சமூகம் எதாவது நினைக்கும் என்று பயந்து திருமணம் செய்தால் வாழ்க்கையே வீணாகிவிடும்.

கே: தன்னை ஒரு பெண்ணாக உணரும் தன்பாலினத்தவர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்?

நாம் யார் மீது விருப்பம் கொள்கிறோமோ அவர்களுடன் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல மனிதர் கிடைத்து, நீங்கள் அவருடன் வாழ விரும்பினால், எல்லாவற்றையும் துறந்துவிட்டு அவருடன் இருப்பது நல்லது. அதற்குப் பிறகு வேறொருவருடன் தொடர்பில் இருக்க வேண்டாம்.

கே: தன்பாலின தம்பதிகள் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறார்கள்?

பொதுவாக தங்கள் துணையை நண்பராக அழைப்பது வழக்கம். ஆனால், அவர்களுக்கு இடையே நட்பைத் தாண்டிய நெருங்கிய உறவு இருக்கிறது. ஒரு சிறிய கருத்து வேறுபாடுகூட இருவரில் ஒருவரின் வாழ்க்கையை பாதித்துவிடும். சமூகத்தால் ஆணாக அவர் பார்க்கப்படுவதால் வெளியிலிருந்து எந்த ஆதரவும் கிடைப்பதில்லை.

திருமணமான பெண்கள், தங்கள் கணவரால் ஏமாற்றப்படும்போது சமூகத்தில் இருந்து ஆதரவு கிடைப்பது போல், தன்பாலின தம்பதிகளுக்கும் சட்ட ஆதரவு தேவை. எங்களுக்கு துணை நிற்கும் சட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்.

கே: தன்பாலின ஈர்ப்பாளர்கள் சட்டங்களின் மூலம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

பொதுவாக, விவாகரத்து பெற்ற பெண் தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுகிறார். அதேபோல், எங்களின் துணைவர் ஏமாற்றினால் எங்களுக்கும் நிவாணரம் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அப்படி நடந்தால், பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு எங்களுக்கும் கிடைக்கும். மேலும், இதன்மூலம் மீண்டும் ஒருவர் ஏமாற்ற மாட்டார். நமது துணைவர் மோசடி நபர் என்று தெரிந்தால் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்துகொள்வது, மனரீதியாக பாதிப்பை எதிர்கொள்வது போன்றவற்றுக்கு உள்ளாகின்றனர்.

இதுவே திருமண பந்தம் என்றால் நாம் தைரியமாக நமது உரிமைக்காக குரல் கொடுக்கலாம். அனைவருக்கும் நீதி வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை, எனவே எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

கே: தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் உங்களுக்கு என்ன லாபம்?

தன்பாலின திருமணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கும். அப்போது எந்த பிரச்னையும் ஏற்படாது, இழிவாகப் பார்க்கப்படும் நிலையும் மாறிப்போகும்.

கே: நீங்கள் வேறொரு ஆணுடன் இப்படிப்பட்ட உறவை வைத்திருப்பது உங்கள் மனைவிக்குத் தெரியுமா?

அவருக்கு அதுபற்றி தெரியாது, தெரிந்தாலும் நான் சமாளித்துவிடுவேன்.

கே: உங்கள் மனைவி, துணைவர் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ​​பலரும் பொதுவாக மனைவிக்கு பதிலாக துணையிடம் திரும்புவார்கள். துணையிடம் ஆர்வம் இருப்பதால் மனைவி இருந்தாலும் துணையுடன் உறவைத் தொடர்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை நான் எதிர்கொண்டால் என்னால் சமநிலைப்படுத்த முடியும். என்னால் இருவரையும் சமமாக பாவிக்க முடியும்.

கே: உண்மையை மறைத்து திருமணம் செய்தது தவறாகத் தோன்றவில்லையா?

எனக்கு திருமணத்தில் ஆர்வம் இருந்ததால் அப்படி எந்த குற்ற எண்ணமும் வரவில்லை. திருமண வாழ்க்கையில் நியாயமாக இருப்பதாகக் கூறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

என்னை நான் நன்றாகப் புரிந்து வைத்துள்ளேன். என்னால் இரண்டையும் சமாளிக்க முடியும். அதனால் திருமணம் செய்து கொண்டேன்.

சொல்லபோனால், திருமணத்திற்கு முன்பு எனக்கு ஒரு காதலி இருந்தாள். அவர் திடீரென இறந்துவிட்டதைத் தொடர்ந்து நான் வேறு திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட தன்பாலின ஈர்ப்பாளர்களில் பாஸ்கர் ஒருவர் மற்றவர் முகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

முகமதுக்கு 22 வயது. அவருக்கு ஆண்களிடம் மட்டுமே ஈர்ப்பு உண்டு.

முகமது இப்போது முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். அவர் திருநங்கையாக தன்னை காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், பெண்கள் மீது தனக்கு விருப்பமே இல்லை என்று கூறுகிறார். அவருக்கு ஆண் நண்பரும் உள்ளார். பிபிசியின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கே: இந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது உறவினர் பாலியல் தொடர்பான வீடியோக்களை என்னிடம் காண்பிப்பார். அதைப் பார்க்கும்போது எனக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது, இதை நாம் செய்துபார்த்தால் என்ன என்று தோன்றியது. அதன்படி, அந்த உறவினருடன் அது தொடங்கியது.

கே: உங்களுக்கு ஏன் ஆண்கள் மீது ஆர்வம் ஏற்படுகிறது?

பெண்களைப் பார்க்கும்போது எனக்கு அக்கா, தங்கை, அம்மா என்றே தோன்றுகிறது. நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது முதல்முறையாக அந்த அனுபவம் கிடைத்தது. அதற்கு பின்னர், ஆண்கள் மீதான ஆர்வம் அதிகரித்தது. ஆண்களுடன் இருக்கவே விரும்பினேன். இது வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குச் சொல்லவும் நான் விரும்பவில்லை.

கே: உங்கள் துணையுடனான உறவு எப்படி இருக்கிறது?

எனது துணை ஒரு பெரிய நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக இருக்கிறார். அவரை அடிக்கடி சந்திக்க முடியாது. விடுமுறை நாட்களில் அவர் வரும்போது அறை எடுத்து தங்குவேன். மற்ற நாட்களில் எல்லோருடனும் சகஜமாக இருப்பேன்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

கே: கிராமப்புறங்களில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

கிராமங்களைவிட நகரங்களில் இப்படி சந்திப்பது மிகவும் சுலபம். யாருக்கும் தெரியாத பல பகுதிகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்தால் ரூம் எடுத்துக் கொள்வோம், நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.

எனது கிராமத்தில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். என் மைத்துனர் என்னை பகலில் பள்ளியில் விடுவதற்காக அழைத்துச் செல்வார். அதனால் கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள மரங்கள் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று என்னுடன் நெருக்கமாகப் பழகுவது, உடலுறவில் ஈடுபடுவது போன்றவற்றை அவர் செய்து வந்தார்.

கே: நீங்கள் மருத்துவரிடம் சென்றால், அவர்கள் உங்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பார்கள்?

அரசு சாரா அமைப்புகளின் உதவி இருப்பதால் மருத்துவமனைக்குச் செல்லும்போது மரியாதையுடன் நடத்தப்படுகிறோம்.

மற்றவர்களை நடத்துவது போன்றே எங்களையும் நடத்துகின்றனர். வரும் நாட்களில் திருமணம் செய்துகொள்ளலாம், இல்லையென்றால் இப்படியே இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையோடு இருங்கள் என்றும் அறிவுரை கூறுகிறார்கள்.

கே: நீங்கள் எப்போதாவது திருமணம் பற்றி யோசித்திருக்கிறீர்களா?

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு இது அனைத்திலும் இருந்து விலகி, சமூகத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நபராக இருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றினால், செய்துகொள்வேன்.

இதுவரை எனக்கு பெண்கள் மீது எந்த உணர்வும் இல்லை. வீட்டில் உள்ளவர்கள் எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் என் உணர்வுகளையெல்லாம் அந்தப் பெண்ணிடம் பகிர்ந்துகொண்டு அதன் பின்னர் திருமணம் செய்துகொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

கே: உங்களுக்கு பெண்களுடன் நட்பு இருக்கிறதா?

நான் இதுவரை எந்த பெண்ணுடனும் பழகவில்லை. பெண்களுடன் பழக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்ததில்லை.

கே: உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இது குறித்து தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?

எங்கள் வீட்டில் தன்பால் ஈர்ப்பு என்றால் என்னவென்று தெரியாது. ஒருமுறை நான் பையங்களுடன் நெருக்கமாக இருப்பதை என் அம்மா பார்த்துவிட்டார். இது தவறு என்று என்னிடம் எச்சரித்தார்.

ஆனால், நான் முழுமையான உறவில் ஈடுபடுகிறேன் என்பது அவருக்குத் தெரியாது. நான் 10வது வரைதான் கிராமத்தில் படித்தேன். பின்னர் அந்த ஊருக்குச் செல்வதில்லை.

கே: அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

அரசாங்கம் எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பினால், விரும்பியவர்களுடன் நாங்கள் இருப்பதற்கு அனுமதித்தாலே போதும். ஒரு அடையாளத்தைக் கொடுத்து இருவரும் சேர்ந்து வாழ நீதிமன்றமும் துணை நிற்க வேண்டும். சமூகமும் எங்களுக்குத் துணை நிற்க வேண்டும்.

பாஸ்கர் மற்றும் முகமது இருவரும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) தங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவாக நிற்கின்றன என்று கூறினர்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்
படக்குறிப்பு, ஜெயன்னா - மதனப்பள்ளி கிராம மறுசீரமைப்பு சங்கத்தின் இயக்குநர்

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு உதவும் அமைப்புகள்

மதனப்பள்ளி கிராம மறுசீரமைப்பு சங்கம் என்பது கிராமப்புறங்களில் வாழும் தன்பாலின ஈர்ப்பு சமூகத்தினரின் நலனுக்காகச் செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பு.

கிராமப்புற மறுசீரமைப்பு சங்கம் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. பொதுவாக ஒருவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பரிசோதனையின்போது, பாதுகாப்பான உடலுறவுக்காக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஜெல், ஆணுறை போன்றவற்றை விநியோகிக்கிறது.

அந்த அமைப்பின் இயக்குநர் ஜெயன்னா பிபிசியிடம் பேசியபோது, "நான் இந்த நிறுவனத்தில் 2004 முதல் பணிபுரிந்து வருகிறேன். இந்த 20 ஆண்டுகளில் சுமார் 3400 தன்பாத ஈர்ப்பாளர்களை அடையாளம் கண்டுள்ளோம்.

இப்போது அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கி வருகிறோம். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை வழங்கி வருகிறோம். குழுவாக இல்லாமல் தனித்து இருப்பவர்களை அடையாளம் காண்பது கடினம்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: