ராகுல்காந்தி தகுதிநீக்கத்தை ரத்து செய்ய கோரும் பா.ஜ.க. எம்.பி. - அரசியலில் காற்று திசை மாறுகிறதா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், அபிஜீத் ஸ்ரீவஸ்தவா
- பதவி, பிபிசி நியூஸ்
'மோதி' என்ற பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை, நிறுத்தி வைத்து ஒரு நிவாரணத்தை அளித்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகாவின் கோலாரில் ராகுல் காந்தி பேசியதற்காக சூரத் நீதிமன்றம் அவருக்கு இந்த ஆண்டு மார்ச் 23 அன்று இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது .
அந்த உத்தரவுக்கு அடுத்த நாளே, இந்த விஷயத்தை அறிந்த மக்களவை செயலகம், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை ரத்து செய்தது.
ராகுல் காந்திக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது என்பதை காட்டும் முதல் வழக்கு இது எனக்கருத முடியாது.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்வீடனின் வி-டெம் இன்ஸ்டிடியூட் அறிக்கையை மேற்கோள் காட்டி, "இந்தியா இனி ஜனநாயக நாடு அல்ல," என்று ஒரு செய்தியை கோடிட்டுக் காட்டி ட்விட்டரில் ராகுல் காந்தி எழுதினார்.
இது குறித்து ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் சின்ஹா கூறுகையில், ராகுல் காந்தி மேற்கத்திய நாடுகளின் சக்திகளுடன் இணைந்து இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார் என்றார்.
கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அந்நாட்டு தலைநகர் வாஷிங்டன் டிசியில் பேசிய போது, "இந்தியாவில் ஜனநாயகத்திற்காக போராடுவது எங்கள் வேலை," என்று கூறினார்.
மேலும், அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள், இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்கப் போராடும் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதற்கு சில மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பிரிட்டன் பயணம் குறித்து இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தை அவமதித்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ராகுல் காந்தி மறுத்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியும் நிராகரித்துவிட்டது.
அப்போது பேசிய பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நக்வி, “ராகுல் காந்தி வெளிநாடு சென்று இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று கூறுகிறார். தேர்தலில் போட்டியிட்டு, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் எப்படி இதுபோன்ற தவறான தகவல்களைப் பேச முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி மீது ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு
அந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, ஜூன் மாதமே, ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்து ஸ்மிருதி இரானி பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அப்போது அவர் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்த சந்திப்பில் பேசிய அவர், ஒரு படத்தைக் காட்டி, "ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணத்தின் இந்தப் படத்தில் சுனிதா விஸ்வநாதனுடன் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு ஜார்ஜ் சோரஸுடன் தொடர்பு உள்ளது. ஜார்ஜ் சோரஸ் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்பது முன்னரே வெளிவந்துள்ளது," என்று தெரிவித்தார்.
ஜார்ஜ் சோரஸின் அமைப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையுடன் தொடர்பு இருப்பதாகவும் ஸ்மிருதி இரானி கூறினார்.
இத்துடன், “ராகுல் காந்தி அவருடன் என்ன பேசினார் என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், ANI
தற்போது ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பாஜக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால், ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவரை நாடாளுமன்றத்தில் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று நிராஹுவா என்று அழைக்கப்படும் ஆசம்கர் பாஜக எம்.பி. தினேஷ் லால் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பா.ஜ.க.வினர் இதற்கு முன் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ராகுல் காந்திக்கு, 'பப்பு' என்ற அடைமொழியைக் கொடுத்து, தொடர்ந்து அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?
ராகுல் காந்திக்கு எதிரான பாஜகவின் இது போன்ற செயல்பாடுகள், இப்போது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா சவுத்ரி கூறுகையில், "ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விதம் சாதாரண மக்களுக்கு பிடிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மக்கள் கவலைப்படவில்லை, ஆனால் ராகுல் காந்தி விஷயத்தில் பொதுமக்களிடம் பாஜகவுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளது என சொல்ல முடியும். எனவே பாஜகவின் இந்த அதீத செயல்பாடு ஏதோ ஒரு இடத்தில் தோற்றுவிட்டது," என்றார்,"

பட மூலாதாரம், ANI
ராகுலை நாட்டின் ஹீரோவாக்கிய பாஜக.
மறுபுறம், மூத்த பத்திரிக்கையாளர் அசோக் வான்கடே கூறுகையில், "ராகுல் காந்தியை நாட்டின் ஹீரோவாக்கியது பாஜக என்று சொன்னால் அது மிகையாகாது. முன்பு அவரை 'பப்பு, பப்பு' என்று சொல்லி பிரதமர் நரேந்திர மோதி அவமானப்படுத்தினார். ராகுல் காந்தி காங்கிரஸ் பிரச்சாரகராக இருந்தால், அது பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்றும், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டால் பாஜக வாழ்நாள் முழுவதும் வெற்றி பெறும் என்றும் அவர் மீது குறிவைத்துத் தாக்கினார்," என்றார்.
ஆனால் ராகுல் காந்தி தனது நடை பயணத்தின் மூலம் இவை அனைத்திற்கும் பதிலளித்தார். அவர் தீவிர அரசியல் செய்ய விரும்புவதாகவும், கடினமாக உழைக்கும் ஆற்றல் அவருக்கு இருப்பதாகவும், நாட்டு மக்கள் அவரை நேசிக்கிறார்கள் என்றும் அந்த நடைபயணத்தின் போது காட்டினார்.
பாரத் ஜோடோ யாத்திரை முடிந்த உடனேயே மக்களவையில் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசை சுற்றி வளைத்த ஆக்ரோஷம், வரும் காலங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதைக் காட்டுவதாக அவர் கூறினார்.
'மோதி' என்ற வார்த்தை தொடர்பாக கோலாரில் ராகுல் காந்தி பேசியதற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இது அவரது அரசியல் எதிர்காலத்தில் பெரும் கேள்விக்குறியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், ANI
ராகுல் காந்தி மீண்டும் மக்களவைக்கு வந்தால்?
மக்களவைக்கு ராகுல் காந்தி திரும்புவது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா சவுத்ரி கூறுகையில், "மக்களவைக்கு அவர் திரும்பும் பட்சத்தில், அரசியல் ரீதியாக ராகுல் காந்தி மீண்டும் முக்கிய பங்கு வகிப்பார். ஆனால் இது புதிய எதிர்க்கட்சி கூட்டணியான 'இந்தியா'வில் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். இந்தியா கூட்டணியைப் பொறுத்தளவில் ராகுல் காந்தியின் வருகை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஆனால் மீண்டும் ராகுலை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற பாஜக முயலும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் மையப்புள்ளியாக மாறுவார்," என்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேச வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும்?
இதுகுறித்து அசோக் வான்கடே கூறியபோது, “பாரத் ஜோடோ யாத்திரை முடிந்த உடனேயே மக்களவையில் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பேசி ராகுல் காந்தி மத்திய அரசை சுற்றி வளைத்த ஆக்ரோஷம், வரும் காலங்களில் பாஜக எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. அதே போல் தான் இனிமேலும் ராகுல் காந்தி பேசுவார்," என்றார்.
"இப்போது ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன் மீண்டும் மக்களவைக்கு வந்தால் மணிப்பூரில் இருந்து வந்திருப்பதாகத் தெரிவித்து, அதே ஆக்ரோஷத்துடன் வார்த்தைகளை முன்வைப்பார். அங்குள்ள நிலவரத்தை பார்த்துவிட்டு வந்துள்ளார்."
இதுபோன்ற சூழ்நிலையில், 2024 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ராகுல் காந்தி மிகப்பெரிய தடையாக இருப்பார்.
"ராகுல் காந்தியை அவமதிக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அப்படி முயன்றால், அதை ஏதிர்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு அதிகரித்து வருகிறது. மேலும் பாஜகவின் ஏற்றுக்கொள்ளும் தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுவே எதிக்கட்சியினர் குறித்த பிரதமரின் கவலையை அதிகரித்துள்ளது. எங்கெல்லாம் தேசிய ஜனநாயக கட்சியைப் பற்றிய பேச்சு எழுகிறதோ, அங்கெல்லாம் புதிய கூட்டணியான இந்தியா பற்றிய பேச்சுகள் எழுகின்றன."

பட மூலாதாரம், Getty Images
அசோக் வான்கடே உறுதியாகக் கூறுகிறார், "ராகுல் காந்தி ஒருபோதும் 'பப்பு' அல்ல. அவர் அப்படி உருவாக்கப்பட்டார். இதில் பாஜகவின் கை ஓங்கி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களின் கையும் இதில் இருக்கிறது."
“இன்று, ஹிண்டன்பர்க், மணிப்பூர் போன்ற பிரச்னைகள் தலைதூக்கும்போது, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, சீனா, கொரோனா தொற்று, விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு எதிராக சட்டமியற்ற முயன்றது போன்றவை குறித்த கேள்விகள் அனைத்தும் மிகவும் வலிமையாக முன்வைக்கப்படும்."
“காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்த கருத்துகளுக்கு ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதற்குப் பிறகும் அவர் குடும்ப அரசியல் செய்கிறார் என விமர்சிக்கப்பட்டு வருகிறார். தற்போதைய நிலையில், ராகுல் காந்திக்கு எதிராகப் பேச பாஜகவிடம் எதுவும் இல்லை. அதனால் இது ஒன்றைத் தவிர வேறு எதையும் அக்கட்சியினர் பேசமுடியாது."

பட மூலாதாரம், ANI
சட்டமன்றத் தேர்தலும், பாஜகவின் தற்போதைய நிலையும்
நாட்டில் சில மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்ற கேள்வி பொதுவெளியில் எழுந்துள்ளது.
இது குறித்து நீரஜா சவுத்ரி கூறிய போது, “காங்கிரஸின் மையப் பொறுப்புக்கு ராகுல் காந்தி வந்தவுடன், புதிய கூட்டணியான ‘இந்தியா’வின் பலவீனம் வெளிவரும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால், பாட்னாவில் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்போவதாக ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் கார்கேவும் அப்போதே உறுதியளித்தனர். அதே போல் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் விருப்பம் எதுவும் தனக்கு இல்லை என்றும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அது குறித்து முடிவு செய்யலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்," என்றார்.
தொடர்ந்து பேசியபோது, "ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிச்சயமாக காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால், இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு ராகுல் காந்தி தான் காரணம் எனக்கூற முடியாது. அது அங்குள்ள உள்ளூர் தலைவர்களின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி," என்கிறார் நீரஜா சவுத்ரி.
இது குறித்து அசோக் வான்கடே கூறுகையில், "இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக மன உறுதியுடன் களமிறங்குகிறது. மத்தியில் காங்கிரஸின் தலைமை வலுவாக இருக்கும் போது, கீழ் மட்டத்திலும் ஒற்றுமை அதிகரிக்கும். அதற்கு நல்ல உதாரணம் இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா தேர்தலில் தெரிந்தது." வரும் காலங்களில், "தெலுங்கானாவில் காங்கிரசின் பலம் அதிகரிக்கும் என்பதையும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில், பா.ஜ.க.-வின் பலம் அதிகரிக்கும் என்பதையும் நாம் மறுக்கமுடியாது," என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், "பா.ஜ.க.வின் கட்சிக் கட்டமைப்பு பலவீனமடைந்து வருவதாக கூறுகிறார்கள். மோதியின் பெயருக்கு கிடைத்துவந்த ஆதரவு தற்போது எல்லா வகையிலும் குறைந்து வருகிறது. கட்சியின் அடிமட்டத்தில் வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள் தொடங்கி, உள்ளூர் தலைவர்கள் வரை பாஜகவுக்காக வேலை செய்தாலும் அவர்கள் சோர்வடைந்துள்ளனர். தங்களை தலைவர்கள் அவமதிப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், பாஜகவிடம் ஒரு தொய்வு காணப்படுகிறது," என்றார்.
நீரஜா சவுத்ரி கூறுகையில், "மாநிலங்களில் காங்கிரஸின் வெற்றிக்கு அங்குள்ள உள்ளூர் தலைமைதான் காரணம். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளார். மத்திய பிரதேசத்தில் கமல்நாத் இருக்கிறார். அங்கே உள்ளூர் தலைமை வலுவாக உள்ளது. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே காணப்படுகிறது," என்றார்.

பட மூலாதாரம், ANI
2024 மக்களவைத் தேர்தலில் என்ன தாக்கம் இருக்கும்?
அசோக் வான்கடே தொடர்ந்து பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி சட்டமன்றத் தேர்தல் நடந்தால், எந்த முடிவு வந்தாலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாதிப்பு ஏற்படும். கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வியும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்," என்றார்.
2024 தேர்தலுக்கு முன் 'இந்தியா' கூட்டணி முழு ஒற்றுமையைக் காட்டி, நன்கு ஆலோசித்து வேட்பாளர்களை நிறுத்தினால், அது வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நீரஜா சவுத்ரியும் ஒப்புக்கொள்கிறார்.
ஆனால் அதே நேரத்தில், "எதிர்க்கட்சிகள் நன்றாக செயல்பட்டாலும், பாஜகவுக்கு 60-70 இடங்கள் மட்டும் தான் குறையும். அவர்கள் கூட்டணி அமைத்து கூட ஆட்சி அமைத்துவிடுவார்கள். இருப்பினும் பாஜக மிகப்பெரிய கட்சியாக இருக்கும். அவர்களுக்கு 38 இடங்கள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியிலும் கட்சிகள் உள்ளன. பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டாலும், யார் பிரதமர் என்பதை தற்போது கூறமுடியாது," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
'இந்தியா'-வின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவாரா?
வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தால், 2024ல் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வருவாரா?
இந்தக் கேள்வி குறித்து அசோக் வான்கடே தெளிவாக கூறிய போது, "எந்த ஒரு சூழ்நிலையிலும் ராகுல் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டார்கள். முடிவுகள் வரும்போதுதான் யார் பிரதமர் என்பது முடிவு செய்யப்படும். எண்களின் அடிப்படையில்தான் அது நடக்கும். அமைச்சரவையில் யார் இருப்பார்கள் என்பதும் அப்படியே முடிவு செய்யப்படும்," என்றார்.
"தற்போது, பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இல்லாத பல மாநிலங்களில், காங்கிரஸ் கட்சிக்கு நேரடி போட்டியாக இருந்த பல கட்சிகள், 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ளன."
"இந்தியா கூட்டணியைப் போலவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் முரண்பட்ட கட்சிகள் ஒன்றாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அரசியலில் அறம் என்பது எங்கும் இல்லை என்பதால் நிலைமை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறது."
காங்கிரசுக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைத்தால், அந்த சூழ்நிலையில், ராகுல் பிரதமர் வேட்பாளராக முடியுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அசோக் வான்கடே, "காங்கிரஸ் 200 இடங்கள் பெற்றாலும், காங்கிரஸ் தரப்பில் இருந்து ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வரமாட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த முறை மன்மோகன் சிங் பெயர் வந்தது போல், இந்த முறை வேறு ஒருவரின் பெயர் வரும்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












